வியாழன், 24 டிசம்பர், 2015

உலகத்தமிழ்ப் பண்பாட்டு மைய விருது - எனது மகிழ்வுரை

மேடையிலும் அவையிலும் அமர்ந்திருக்கும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய சான்றோர்கள் அனைவருக்கும் என் அன்பான காலை வணக்கம். இது என் வாழ்வின் மிக முக்கியமான உன்னதமான தருணம்.இந்தத் தருணம் உட்பட என் பயணத்தின் மிக முக்கியமான தருணங்களை எனக்கு என் தமிழும் கவிதையுமே தந்திருக்கின்றன. அன்னைத் தமிழையும் கவிதையையும் வணங்கி என் மகிழ்வுரையைத் துவங்குகிறேன். இந்தத் தருணத்தில் நான் நிறையப் பேருக்கு என் நன்றியைச் சொல்லியாக வேண்டும் நன்றி மறத்தல் நன்றன்று.

உலகத் தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் இந்த ஆண்டுக்கான சிறந்த இளம் படைப்பாளிக்கான விருது எனக்கு, எனது " பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு " கவிதை நூலுக்காக வழங்கியிருக்கிறார்கள். உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் நிறுவனர் டாக்டர் நல்லபழனிச்சாமி அய்யா அவர்களை வணங்கி மகிழ்கிறேன். மருத்துவச் சேவை தவிரவும் தமிழுக்கு நீங்கள் செய்யும் சேவைகள் அளப்பரியன. தங்களைப்போன்றோர்களால் எங்களைப் போன்றோர் உற்சாகமாக எழுத வாய்ப்பளிக்கிறீர்கள். பாரதிய வித்யாபவன் தலைவர் அய்யா கிருஷ்ணராஜ வானவராயர் அவர்களின் கரங்களிலிருந்து விருதைப் பெற்றது கூடுதல் சிறப்பு. அவரை அன்புடன் வணங்கி மகிழ்கிறேன். இந்த விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த நடுவர் குழுவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றியும். வானம்பாடி இயக்கத்தின் மூலம் புதுக்கவிதையில் நீங்காத வரலாற்றுப் பாதையை உருவாக்கிய பொள்ளாச்சியின் இலக்கிய அடையாளம் அய்யா கவிஞர் சிற்பி அவர்களை அன்புடனும் நன்றியுடனும் வணங்கி மகிழ்கிறேன். எனக்கு, பொள்ளாச்சி இலக்கியவட்டத்துக்கு எல்லா விதங்களிலும் அவர் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றி. உலகத் தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் அறங்காவலர்கள் முனைவர் இரா.கிருஷ்ண மூர்த்தி,பேராசிரியர் ப.க. பொன்னுசாமி,டாக்டர் தவமணி தேவி பழனிசாமி ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றி.

தமிழறிஞர் விருது பெற்ற பேராசிரியர் கா. செல்லப்பன் அவர்களையும், இதழியல் விருது பெற்ற முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் அய்யா அவர்களையும் வணங்கி வாழ்த்துகிறேன்.

எனது இந்த விருதை எனக்காகவே தன் வாழ்நாட்களை வகுத்துக்கொண்ட என் பெற்றவர்களுக்கு நான் அர்ப்பணிக்கிறேன். நான் கவிதை எழுதவும், வாசிக்கவும், வாழவும் அவர்கள் தந்த சுதந்திரம் அளப்பரியது. நான்காம் வகுப்புப் படிக்கும் காலத்திலேயே வெறும் பாடப்புத்தகங்களை மட்டும் படிக்காமல் அதைத்தாண்டியும் கதைப்புத்தகங்களையும் நான் படித்த போது கொஞ்சமும் கண்டிக்காமல் அவர்கள் என்னை வளர்த்த விதம் ஆகட்டும், மிகவும் வறுமையான காலங்களிலும் அவர்களது கஷ்டங்களை எனக்குக் கடத்தாமல் என்னைக் காப்பாற்றியதாகட்டும், என் கல்லூரிக் காலங்களில் எனக்குக் கல்விக் கட்டணம் 9000 ரூபாய். அதைக் கட்டப் பணம் இருக்காது. ஆனால், பணம் கட்ட தாமதமோ சிரமமோ ஆகிவிடக் கூடாது என்பதற்காக கல்விக்கட்டணம் கட்ட பத்து நாட்கள் முன்னரே வட்டிக்குப் பணம் வாங்கி வைத்து விடுவார் பள்ளிக்கூடப் படிப்பின் வாசனையே இல்லாது போன என் அப்பா. அன்றிலிருந்து இன்று வரைக்கும் எனக்காகவே உழைத்து எனக்காகவே வாழ்ந்து வரும் என் அம்மா, அப்பாவுக்கு இந்த விருதைச் சமர்ப்பித்து மகிழ்கிறேன்.

தொடர்ந்து இலக்கியம் கவிதைகளில் நான் பயணிக்க நிறைய வார இறுதி நாட்களைத் தியாகம் செய்தாக வேண்டிய சூழலிலும் எனக்காக அத்தனை குடும்ப வேலைகளையும் கவனித்துக் கொண்டு என்னை இயங்கச் செய்யும் என் மனைவிக்கும், என்னை என் கவிதைகளுக்காக கூடுதலாய் நேசிக்கும் என் மகளுக்கும் என் அன்பு. பள்ளியில் சேர்ந்து ஐந்து வருடங்களில் முதல் முறையாக எனக்காக இன்று விடுப்பு எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார் என் மகள் தனிக்‌ஷா பாரதி என்பது கூடுதல் மகிழ்ச்சி.

என் சிறு வயதில் எனக்குக் கவிதைகளின் மீது மையல் வரக் காரணமாக இருந்தவர்கள் பாரதியும், என் தமிழாசானும் இவர்களுடன் என் மாமா ச.தி.செந்தில்குமாரும் தான். எங்கு பயணமாக இருந்தாலும் என்னைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்லும் என் மாமா பயணத்தில் நிச்சயம் எனக்கொரு புத்தகம் வாங்கிக் கொடுப்பார். இப்படியாக என் வாசிப்பை வளர்த்தும், அன்று முதல் இன்று வரை எனது எல்லா இலக்கிய மற்றும் சமூக செயல்பாடுகளில் முதல் ஆளாக எனக்குத் தோள் கொடுத்து ஆதரவாக என்னுடனே பயணிக்கும் என் மாமாவுக்கும், நான் எதைச் செய்தாலும் அது அற வழியில் நல்லதாகவே இருக்கும் என நம்பி எப்போதும் எனக்குத் துணை நிற்கும் தம்பி கார்த்திக்கும் இந்தத் தருணத்தில் நன்றி.

எனது முதல் கவிதைத் தொகுப்பு பொம்மைகளின் மொழி 2010 ல் வெளியானது. 2001 லிருந்து எனது கவிதைகள் பல்வேறு சிற்றிதழ்களிலும், 2007 லிருந்து எனது கவிதைகள் ஆனந்தவிகடன், கணையாழி,கல்கி,போன்ற ஜனரஞ்சக மற்றும் இலக்கிய இதழ்களிலும் தொடர்ந்து வெளிவந்த போதெல்லாம் என்னை ஒவ்வொரு முறையும் உற்சாகப் படுத்தி ஊக்கப்படுத்தியவர் சிந்தனைக்கவிஞர் கவிதாசன் அய்யா அவர்கள். எனது கவிதைகளைத் தொகுப்பாகப் போடச் சொல்லி அவர் சொன்ன போது தொகுப்பு போடும் அளவுக்கு பொருளாதார ரீதியாக நான் தயாராகவில்லை என்று சொன்னவுடன் தனது சொந்தச் செலவில் எனது பொம்மைகளின் மொழி தொகுப்பை சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அய்யா தான் கொண்டு வந்தார். அன்று முதல் இன்று வரை என் மீதும் என் எழுத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டு எனது எல்லா இலக்கியச் செயல்பாடுகளிலும் என்னை ஊக்கப்படுத்தி வரும் அவருக்கு எனது நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

நான் பணிபுரியும் ரூட்ஸ் குழும நிறுவனர் அய்யா கே,ராமசாமி அவர்கள் நான் இப்போது வாழும் நல்ல வாழ்வில் பெரும்பங்கு வகிக்கிறார். அவரை நன்றியுடன் வணங்கி மகிழ்கிறேன்.

பொள்ளாச்சி இலக்கிய வட்டம் எனது வாழ்வின் மிக முக்கிய அங்கம். கடந்த 2013ஆம் ஆண்டு இப்படி ஒரு அமைப்பைத் துவங்க வேண்டும் அதற்கு நீங்கள் தான் தலைவராக இருக்க வேண்டும் என்று நான் கேட்ட போது மறுக்காமல் ஏற்றுக் கொண்டு அன்று முதல் இன்று வரை பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் தலைவராக, எங்களுக்கு நல்ல ஆசானாக, நண்பனாக என பல பரிமாணங்களிலும் என்னை வழி நடத்தும் கவிஞர் க.அம்சப்ரியா அவர்களுக்கு எனது பேரன்பும் ப்ரியங்களும். இந்த விருதை நான் பெற அவரும் ஒரு முக்கியக் காரணி. அவர்தான் எனது தொகுப்பையும் சேர்த்து உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் அறிவிப்பைப் பார்த்துவிட்டு விருதுக்கு அனுப்பி வைத்தவர். பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வெறும் இலக்கியக்கூட்டங்களை மட்டும் நடத்தாமல் சமூகப் பணிகள் பலவற்றைச் செய்து வருகிறது. இப்போது கூட கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் உள்ளிட்ட மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சுமார் இரண்டரை லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களைத் திரட்டி அனுப்பியிருக்கிறோம். கவிஞர் அம்சப்ரியா அவர்களின் தலைமையில் இளைஞர்கள் கூடி பில்சின்னாம்பாளையம் கிராமத்தை மது இல்லாத கிராமமாக மாற்றவும் அறிவார்ந்த இளைஞர்களை உருவாக்கவும் போராடி வருகிறார். இப்படியாக பொள்ளாச்சி இலக்கியவட்டத்தை தனது தலைமையில் மிக நேர்மையாகவும் வீரியத்துடனும் வழிநடத்தும் கவிஞர் அம்சப்ரியா அவர்களுக்கு நான் தரும் உறுதிமொழி எப்போதும் இதே அன்புடனும் ஆவலுடனும் சுறுசுறுப்புடனும் இலக்கியப் பணிகளை மேற்கொள்வோம் என்பதே.

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் மிக முக்கியமான பணிகளை எங்களோடு தோளோடு தோளாக நின்று சுமக்கும் இனிய நண்பர் சோலைமாயவன், புன்னகை ஜெயக்குமார்,அறவொளி அவர்கள், உமா அறவொளி அவர்கள், த.வாசுதேவன், ஆன்மன்,இரா.பானுமதி,இன்பரசு,மலையப்பன்,பொள்ளாச்சி அபி,  உள்ளிட்ட எங்கள் ஆலோசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு.

எனது முதல் கவிதையை நான் அச்சில் பார்த்தது நான், என் மாமா உட்பட ரூட்ஸ் மல்டிக்ளீன் நிறுவன நண்பர்களுடன் இணைந்து நாங்களே துவங்கிய இளைய வேர்கள் என்ற சிற்றிதழ் மூலமாகத்தான். அச்சில் வந்த எனது முதல் கவிதைக்கு முதல் வாழ்த்து வந்தது அஞ்சல் அட்டை வடிவத்தில் புன்னகை இரமேஷ் அவர்களிடமிருந்து. அதன் பின்னர் எனது கவிதைகள் தொடர்ந்து புன்னகை சிற்றிதழிலும் வெளியாகின. புன்னகை சிற்றிதழில் வெளியான ஒரு கவிதையைத்தான் எழுத்தாளர் சுஜாதா ஆனந்த விகடன் இதழின் கற்றதும் பெற்றதும் பகுதியில் தனக்குப் பிடித்த சிறந்த கவிதையாகக் குறிப்பிட்டுப் பாராட்டினார். இதன் மூலம் எனது கவிதைகள் மீது ஒரு வெளிச்சம் வந்தது. அன்று முதல் இன்று வரை எங்களது அனைத்து செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருக்கும் புன்னகை இரமேஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.


எனது பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு கவிதைத் தொகுப்பின் தயாரிப்பு வேலைகளில் நான் இருந்த போது, எனது கவிதைகளைத் தேர்ந்தெடுப்பதில் பெரும் உதவியாக இருந்த எனது இரண்டு நண்பர்களில் ஒருவர் அனாமிகா இங்கு இருக்கிறார். இன்னொருவரான ப.தியாகு இங்குதான் அரூபமாக இருந்து கண்கள் விரிய என்னை வாழ்த்திக் கொண்டிருப்பார் என நினைக்கிறேன். தனது எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை என்ற அற்புதமான கவிதைத் தொகுப்பால் இலக்கியத்தில் இடம் பிடித்து 36 வயதிலேயே அவசரப்பட்டு இவ்வுலகை விட்டு வெளியேறிவிட்ட தியாகுவிற்கு எனது நன்றிகளைக் காற்றில் சொல்லியனுப்புகிறேன்.

எனது செயல்பாடுகளை ஊக்கப்படுத்தி என்னோடு இருக்கும் கோவை இலக்கிய சந்திப்பு முன்னோடி நண்பர்கள் எழுத்தாளர் இளஞ்சேரல் , பொன் இளவேனில், யாழி ஆகிய மூவருக்கும் நந்தலாலா இணைய இதழ் ஆசிரியர் கவிஞர் வைகறை அவர்களுக்கும் நான் என் நன்றிகளை நட்பாகக் காணிக்கையாக்குகிறேன்.

எனது கவிதைகளை தீவிரமாக நேசிக்கும் செலினா,கிருத்திகா, அனிதா, அஸ்வினி,கோகிலா மற்றும் அனைத்து பொள்ளாச்சி இலக்கியவட்ட நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

என்னை வாழ்த்தும் பொருட்டு வேலை நாளிலும் இங்கு வந்து என்னை வாழ்த்திக்கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் கீதாப்ரகாஷ், இலக்கியன் விவேக் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

எனது இந்த நூலுக்கு முகப்பு அட்டையை அற்புதமாக வரைந்து மதிப்புக்கூட்டிய ஞானப்ரகாசம் ஸ்தபதி, வடிவமைத்த பாலா, எனது நூலை வெளியிட்டு அதைப்பற்றிய ஒரு அற்புதமான அறிமுக உரையைத் தந்த நான் மதிக்கும் கவிஞர் நண்பர் இளங்கோ கிருஷ்ணன், முதல் படியைப் பெற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் எங்கள் அனைவரின் நூல்களிலும் ஐம்பது ஐம்பது பிரதிகளை வெளியிட்ட அன்றே விலை கொடுத்து வாங்கிக் கொண்ட அறம் கிருஷ்ணன். நூல் வடிவமைப்பிலும் அதை அச்சிட்டுக் கொண்டு வருவதிலும் அலைந்த நண்பர் நிலாரசிகன்,

சிறு வயதில் எனது கற்பனை வளம் பெருக மிக முக்கியமாக இருந்தவை கதைகள் தான். என் அப்பத்தா எனக்குச் சொன்ன கதைகளில் இருந்த நீதியும் , கற்பனை வளமும் தான் என்னை இன்னும் கதைகளையும் கவிதைகளையும் வாசிக்கத் தூண்டியது. காட்சி ஊடகங்களால் தர முடியாத கற்பனை வளத்தையும் நன்னெறிகளையும் கதைகளின் வழியாகத் தான் குழந்தைகளுக்குத் தர முடியும். இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்கு தாத்தா பாட்டிகளின் கதைகள் கிடைப்பதில்லை. ஆனால் அவை மிகவும் அவசியம். ஆகவே குழந்தைகளுக்கு நல்ல கதைகளைச் சொல்லுங்கள் அவர்களையும் கதைகள் சொல்லச் சொல்லுங்கள்.

ஒரு இளைஞனாக , கவிஞனாக நான் பெருமிதம் கொள்ளும் தருணம் இது. இது இளைஞர்களின் காலம் சென்னை, கடலூர் வெள்ளத்தின் போது இடர்களைக் களைய இணைய இளைஞர்கள் படை மிகப்பெரிய சக்தியாக ஒருங்கிணைந்ததை நினைத்துப் பெருமைப்படுகிறேன். அதே வேளையில் பெண்களை மிகக் கேவலமாச் சித்தரித்து பீப் பாடல்கள் வெளியிடும் கொண்டாட்ட இளைஞர்களும் இருக்கிறார்கள் என்பதை மிக வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். ஒரு கவிஞனாக நான் துணுக்குற்று ஆத்திரம் கொண்டேன் பீப் பாடலைக் கேட்டபோது. ஒரு திரைப்படம் என்பது ஆயிரம் பொதுக்கூட்டங்களுக்குச் சமம் என்று அறிஞர் அண்ணா சொன்ன கூற்றை நினைத்துப்பார்க்கிறேன். அத்தனை சக்தி வாய்ந்த சினிமா ஊடகத்தை நாம் ஆக்கப்பூர்வமான நல்ல பொழுது போக்குகளுக்குப் பயன் படுத்த வேண்டும். எதை வேண்டுமானாலும் எழுதலாம், எதை வேண்டுமானாலும் பேசலாம் என இருக்க முடியாது. அறிவார்ந்த , கலாச்சாரத் தொன்மை வாய்ந்த சமூகம் நம்முடையது. இந்த மண்ணில் பிறந்து கொண்டு இப்படிப் பட்ட பாடல்கள் சினிமாக்கள் என அத்துமீறல்கள் எங்கு நடந்தாலும் அதை எதிர்த்துக் கிளம்பும் முதல் குரல் நம் போன்ற இளைஞர்களின் குரலாகத்தான் இருக்க வேண்டும். படைப்பாளர்கள் தங்களது படைப்பை சுய தணிக்கை செய்துகொள்வது அவசியம் என்பது எனது கருத்து.

இந்த விருதும் இன்றைய நிகழ்வும் இனி நான் செய்யும் இலக்கிய மற்றும் சமூகப் பணிகளுக்கு நிச்சயம் ஒரு உந்து சக்தியாக இருக்கும் எனவே இந்த விருதை எனக்கு வழங்கிய உலகத்தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் நிறுவனர், அறங்காவலர்கள், தேர்வுக்குழு உள்ளிட்ட அனைவரையும் மீண்டும் ஒருமுறை நன்றியுடன் வணங்குகிறேன்.

கடைசியாக

எமக்குத் தொழில் கவிதை; நாட்டுக்குழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல்.

இது சுப்ரமணிய பாரதி தனக்குத் தானே தந்து கொண்ட தன்னிலை விளக்கம் மட்டுமல்ல. அவன் வழித்தோன்றிய பல்லாயிரம் கவிகளுக்கும் இளவல்களுக்கும் சேர்த்தே தான் எழுதி வைத்துப் போனான். அது தான் என் சொல்லும்

எமக்குத் தொழில் கவிதை; நாட்டுக்குழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல்.

நன்றி. வணக்கம்.

8 கருத்துகள்:

  1. சிறப்பு.
    வாழ்த்துக்கள்ண்ணா..
    தங்கத்தமிழ் போல் வளரட்டும் தங்கள் கவிதைகளும்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோ..தாங்கள் விருது பெறும் விழாவில் பங்குபெற்று நேரில் வாழ்த்சத் துடித்து,வாய்ப்பற்ற எண்ணற்ற நெஞ்சங்களில் என்னுடையதும் ஒன்று.இக்கட்டுரையை வாசிக்கும் இக்கணத்தில் இமையோரம் கசியும் சில துளிகள் ஆழிப் பேரன்பை உரைத்த நிறைவு தந்தது..தொடரட்டும் உங்கள் இலக்கிய,சமூகப்பணிகள்,வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  3. அருமை பூபாலன்.யார் பெயரும் விட்டுப்போகாமல் நன்றி சொல்லியிருப்பது பெருமைபட வேண்டிய பண்பு.கண்களின் ஒரத்தில் ஓரு துளி கண்ணீரை வழிய செய்தது.வாழ்த்துக்கள்.தொடருங்கள்.வாழ்க்கைபயணம் இனிமையாக இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  4. அண்ணா ,
    ரொம்ப சந்தோஷமா இருக்கு ..
    தங்கள் பாதை மேலும் சிறக்கட்டும் ..
    உங்கள் வழியில் எங்கள் விழிகள் எப்போதும் காத்திருக்கும் ..
    வாழ்த்துக்கள் வாழ்க்கை மிளிர *

    அன்பு தம்பி
    Srinivashaprabhu

    பதிலளிநீக்கு