வாழ்வென்பது வேறொன்றுமல்ல
கலையின் மகத்தான பணிகளில் ஒன்று தனிமனிதனின் தனிமைக்குத் துணையாக, ஆறுதலாக எப்போதும் உடன் வருவது. தனிமனிதனின் அகத்தேடல் தான் கலையாக புறத்தில் வெளிப்பட்டது. புறத்தே கலை நிகழ்த்தும் பணி அளப்பரியது. சமூகத்தின் சிறு துளைகளுக்குள்ளும் காற்றெனெ நுழைந்து இசையின் கொண்டாட்டத்தினைக் கொணர்வதும், ஊசியென நுழைந்து கிழிசல்களைத் தைப்பதுமாக கலை அளப்பரிய பணியைச் செய்கிறது என்பது உண்மைதான். அகத்தே கலை நிகழ்த்தும் பணியோ அற்புதமானது. ஒவ்வொரு மனிதனும் நவீன வாழ்வில் தனித்துவமாக இருக்கிறான், தனக்குள் தனியனாக இருக்கிறான். அவனுக்கு யாரையும் விட தான் எனும் ஒருவன் தேவைப்படுகிறான். தன்னையே இழந்து நிற்பவனைக் காலமும் கை விட்டுவிடும். எதை இழப்பினும், எவரை இழப்பினும் தன்னை இழக்காத வரைக்கும் ஒருவனுக்கு எதுவும் பெரிய இழப்பன்று. யாவும் மீளக் கூடியவை தான். தன்னை இழக்காது அதாவது சுயத்தை எப்போதும் பாதுகாத்து வைக்க கலை ஒருவனுக்குத் துணை நிற்கிறது.
நமது குரலைக் கேட்டுக்கொள்ளும் செவிகள் நமக்குத் தேவையாயிருக்கின்றன சமயங்களில். மறு பேச்சு, ஆதரவுக் குரல், பதில்கள் என எதுவும் தேவைப்படும் முன், நமக்குத் தேவையாயிருப்பது வெறுமனே நமது பேச்சை அல்லது புலம்பல்களைச் செவிமடுத்துக் கேட்டுக்கொள்வது தான். அதற்கான யாரும் இல்லாத போது தான் தனித்து விடப்பட்டதாக உணர்கிறோம். செடிகள், மரங்கள், ஏன் கற்கள், சிலைகள் என அஃறிணைகளோடு பேசுபவர்களையும் தனித்து காற்றோடு வெறுமையாய்ப் பேசுபவர்களையும் நாம் பார்க்கிறோம். அவர்களின் தேடல்களெல்லாம் கேட்டுக்கொள்வதற்கான செவிகள்… செவிகள் மட்டுமே.
அவ்வாறான செவிகளை யாசிக்கும் அல்லது அவ்வாறான செவிகள் அருளப்பெற்ற கவிதை ஒன்று…
என் பேச்சைப் பொறுமையாகக்
கேட்டுக்கொண்டிருக்கின்றன
இந்தக் கட்டிடங்கள்
இனி வாழ்வின் மேல்
எனக்கு ஒரு குறையுமில்லை
- கார்த்திகா முகுந்த்
- “ஒரு வெப்பமண்டலத் தாவரமாகிய நான்” எழுத்து பிரசுரம் வெளியீடு ,
செவிகள் யாவர்க்கும் தேவையெனினும் இந்திய சமூகத்தில் பெண்களின் குரல்களைப் பெரும்பாலும் யாரும் செவிமடுப்பதேயில்லை நூற்றாண்டு காலமாக. அவர்களது சொற்கள் புறம் தள்ளப்படுகின்றன, அவர்களது புலம்பல்களும் கோரிக்கைகளும் நிராகரிக்கப்படுகின்றன. இச்சூழலில், வீடுகளில் தனித்திருக்கும் அவர்களது மொழிகளைக் கேட்க ஏதாவதொன்றைக் கைப்பற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. செல்லப் பிராணிகளை, விருப்பக் கடவுளரின் சிலைகளை, தொட்டிச் செடிகளை பெண்கள் அதிகம் நேசிப்பதன் பின்பான உளவியில் இதுவாகவும் இருக்கலாம்.
“என் பேச்சைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றன இந்தக் கட்டிடங்கள்” எனும் முதல் பகுதியில் இந்தக் கவிதையின் குரலில் ஒரு வலி தென்படுகிறது. அது பெண்வலி என்பது சட்டெனப் புரிந்தும் விடுகிறது. அந்தக் குரலில் நம் அம்மாக்கள், அக்காக்கள் தென்படுகிறார்கள். அவர்களது முந்தைய நாட்களின் நினைவுகளை நமக்கு இந்தக் கவிதை காட்சிப்படுத்துகிறது. “ இனி வாழ்வின் மேல் எனக்கு ஒரு குறையுமில்லை “ என்கிற இந்தக் கவிதையின் பின்பகுதியில் ஒலிப்பது விரக்தியின் குரல். அது விரக்தியோடும், சலிப்போடும், ஒருவித எள்ளலோடும் மாறி மாறி ஒலிக்கிறது நம் காதுகளில். யாருக்கும் நாம் தனிமையை வலிந்து பரிசளித்திடக் கூடாது எனப் புரியவைக்கிறது கவிதை.
கட்டிடங்களெனும் அஃறிணைகளாவது இல்லாத செவிகளைத் திறந்து எனது சொற்களைக் கேட்டுக்கொண்டிருக்கின்றன எனும் ஆதங்கத்தின் வரைதல் தான் இந்தக் கவிதையாகியிருக்கிறது.
கேட்கும் செவிகளற்று இருப்பவர்களின் பக்கமும் கலை நகர்ந்து நிற்கும். கவிதை இறங்கி வந்து பார்க்கும். அப்படியான ஒரு கவிதை …
யாரும் எடுத்துக்கொள்ளாத ஏதாவதொன்று...
எல்லாப் பேருந்திலும் யாரும் அமராத
பக்கத்து இருக்கையுடன்
திருநங்கை ஒருவர்
எனக்காகக் காத்திருக்கிறார்...
ஒவ்வொரு பிரார்த்தனைவேளையிலும்
என் முன் வரிசையில் ஒரு குழந்தை
என்னைப்பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு வகுப்பறையிலும்
எனக்கென்று முகிழாது காத்திருப்பான்
ஒரு மெல்லக்கற்பவன்...
எனக்குப் பரிசாகத் தாம் படிக்காத
அல்லது தமக்குப் பரிசாகக் கிடைத்த
புத்தகங்களை அளித்து
தம் செலவை
மிச்சம்பிடித்துக்கொள்கிறார்கள் நண்பர்கள்...
விழாக் கூட்டத்தில்
மேடை சரியாகத் தெரியாத மூலையில்
எப்பொழுதும் எனக்கென்று
ஒரு நாற்காலி கிடைத்துவிடும்...
அதனருகில் ஒரு தொட்டிசெடியும்
சில பூக்களும் இருந்துவிடும்....
யாரும் எடுத்துக்கொள்ளாத
ஏதாவதொன்று
தினமும் எனக்குக் கிடைத்துவிடுகிறது...
அதுவே எனக்குப் பிடித்தும் இருக்கிறது!
- ப்ரிம்யா கிராஸ்வின்
“ தப்பரும்பு” , வாசகசாலை வெளியீடு, 9942633833
யாரும் எடுத்துக்கொள்ளாது தனித்துவிடப்பட்ட ஒன்றை இந்தக் கவிதை ஆதரவாக அணைத்துக்கொள்கிறது. யாரும் இல்லையென்று யாருமில்லை என ஆறுதலாகிறது.
திருநங்கைக்கு அருகில் விகல்பமின்றி அமர்ந்து கொள்கிறது, மெல்லக் கற்பவனின் மனதுக்கு நெருக்கமாகிவிடுகிறது மேலும் மேடை தெரியாத போதும் அருகிலிருக்கும் சிறு செடியை ரசித்தபடி அமைதியாகிறது இந்தக் கவிதை. கவிதையின் ஆதாரமாக இருக்கும் அன்பு எப்போதும் ஏங்கிச் செத்தபடியிருக்கும் ஒவ்வோர் உயிருக்கும் துணையாவது மட்டுமே அதன் அடிப்படை குணமாக இருக்கும்.
யாரும் இல்லாத ஒருவளாக ஒலிக்கும் கவிஞர் கார்த்திகா முகுந்தின் கவிதைக்கும், யாரும் இல்லாதவர்களுக்காக உடன் நிற்பதாக ஒலிக்கும் கவிஞர் ப்ரிம்யா கிராஸ்வினின் கவிதைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இவற்றின் அடியாழத்தில் ஒலிப்பது அன்பின் குரல். மனிதத்தின் கிளர்ந்தெழும் நறுமணம். கூப்பிடு தொலைவில் இருக்கக் கூடிய வாழ்வின் சிறு பரிணாமம்.
வாழ்வென்பது வேறொன்றுமல்ல, யாருக்காவது அன்பைத் தேக்கிவைத்தல், யாரிடமாவது அன்பாயிருத்தல், யார் பொருட்டாவது அன்பைச் சுமந்து கொண்டே அலைதல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக