ஞாயிறு, 1 ஜனவரி, 2023

கவிதை ரசனை 9


கவிதைகள்   எல்லாக் காலத்துக்குமானவை, எல்லா உணர்வுக்குமானவை. கவிதைகளில் துயரை இறக்கி வைத்துவிட முடியும்.  அவை ஆறுதலாகின்றனவா, தேற்றுகின்றனவா என்பதெல்லாம் பிறகு, நம் துயரை இறக்கிவைக்க ஓர் இடம் இருக்கிறது என்பதே மிகப்பெரிய ஆசுவாசம் அல்லவா. கவிதைகளில் தான் அனுபவித்த துயரை, தான் கண்டு, கேட்டுணர்ந்த துயரை இறக்கிவைக்கும் போது மனம் இலகுவாகிறது. அதன் காரணமாகவே நிறைய துயரக் கவிதைகள் எழுதப்படுகின்றன. கவிதையில் இறக்கிவைக்கப்பட்ட துயர் வாசகனின் மனதுக்குள் கொஞ்சம் அழகூட்டிக்கொண்டு செல்கிறது. அது மொழியின் அழகு. கலையில், துயர் என்றும் கொண்டாடப்பட்டே வந்திருக்கிறது. சரித்திரத்தில் வெற்றியைக் காட்டிலும் துயரம் காவியமாகியிருக்கிறது. துயரம் அமரத்துவமாகி விடுகிறது படைப்பாகும் போது. நமது கலை வடிவங்கள் பலவற்றிலும் சரி, படைப்புகளிலும் சரி துயரம் என்றைக்கும் நிலைத்து நிற்கும் படி ஆகிவிடுகின்றன.

 

 கவிதைகள் முழுக்க முழுக்க உணர்வுகளின் கூப்பாடு. அது சங்ககாலம் தொட்டு நிகழ்காலம் வரைக்கும்  ஒரு கண்ணியில் இணைந்திருப்பவை. இன்றைக்கு எழுதப்படும் கவிதைகளிலும் மரபின் தொடர்ச்சி ஏதாவதொரு வகையில் இருந்துகொண்டே தான் இருக்கிறது. மூதாதைகளின் குரலைத்தான் இன்றும் நாம் ஒலித்துக்கொண்டிருக்கிறோம். வடிவமும், அளவும், மாறியிருக்கக் கூடும். ஆனாலும் உணர்வு ஒன்று தான். இன்றும் பல காதல் கவிதைகளின் ஆதிப்புள்ளி ஏதேனும் ஒரு சங்கப்பாடலில் அகத்திணையில் சொல்லப்பட்டிருக்கும். மனிதனும் மனித உணர்வுகளும் பொதுவானவை எனும் போது, அவன் படைக்கின்ற கலைகளில், இலக்கியத்தின் அந்தப் பொதுத்தன்மை வந்துவிடுவது இயற்கை...

 

 குழந்தை பிறந்தவுடன் வேலைக்குச் செல்ல நிர்பந்தமாகும் இளம் தாய்மார்களின் வலியை கவிஞர் விக்ரமாதித்யனின் ஒரு கவிதை பேசி இருக்கும். எப்போதும் நினைவில் இருக்கும் கவிதை அது. பெண் வாழ்வை, பெண் வலியை பெண்ணை விடவும் யாராலும் சிறப்பாக எழுதி விட முடியாது என்று நாம் பேசிக்கொண்டிருந்தாலும் , படைப்புலகில் விதிவிலக்குகளாக சில படைப்புகள், படைப்பாளர்கள் இருந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.  ஓர் ஆணாக இருந்தும் பெண்ணின் வலியை உணர்ந்து அந்தக் கவிதையை எழுதி இருப்பார் கவிஞர் விக்ரமாதித்யன். அவரது பிரபலமான கவிதை இது

 

 

வேலைக்குப் போவாள்

பெற்றவள்

வீட்டில் இருக்கும் கைக்குழந்தை

 

கட்டிய தாய்ப்பாலை

சுவரில் பீய்ச்சிச் சிந்தவிடும்

விதி

 

-         விக்ரமாதித்யன்  

 

பெண்கள் வேலைக்குச் செல்ல , அதுவும் அலுவலகம் செல்ல ஆரம்பித்த நவீன யுகத்தில் தொடங்கியது இந்த வலி. முன்னர், பணியிடத்துக்குக் குழந்தைகளையும் தூக்கிச் செல்வது வழக்கம். காடு, வயல்களில் மரங்களில் தூளியிட்டும், மற்ற வேலைகளின் போதும் கூட  முதுகில் முந்தானைத் தூளியிட்டும் குழந்தைகளைச் சுமந்தபடி வேலை செய்ய அனுமதி இருந்தது.  தேயிலைத் தோட்டங்களிலும், ரப்பர் தோட்டங்களிலும் பணி புரியும் பெண்களின் சித்திரங்களை நாம் பார்த்திருப்பது நினைவில் வரக்கூடும்நவீன முதலாளிகள் அவ்வனுமதியை மறுத்தனர். பணியிடத்து குழந்தைகளை அனுமதிப்பதால் கவனச் சிதறலாகி வேலை பாதிக்கப்படும் எனக் கணக்கிட்டுப் பார்த்தனர். அதன் விளைவாக அந்தச் சித்திரங்கள் தற்காலத்தின் வணிகச்சூழலில் அழிக்கப்பட்டுவிட்டன.  இந்த ஒரு கவிதை மார்பு கனக்கும் பெண்ணின் வலியோடு, பெண் வரலாற்றையும் சிந்திக்க வைத்துவிடுகிறது.

 

அதே வலியை, அதே உணர்வை சமீபத்தில் வாசித்த கவிஞர் சாய் வைஷ்ணவியின் வலசை போகும் விமானங்கள் எனும் முதல் தொகுப்பிலும் வாசிக்க நேர்ந்தது. எங்கோ நினைவின் அடுக்கில் இருந்த விக்ரமாதித்யனின் கவிதையை இந்தக் கவிதை மீள் வாசிப்புக்கு அழைத்துச் சென்றது.

 

 

ஒஞ்சி உப்பி

 

சிறுகோட்டு வாயையும்

பெரும்பழ வயிற்றையும்

வீட்டில் விட்டு வந்தவளின்

ஒஞ்சி உப்பி

தானாகப் பீய்ச்சும்

வெண்பாலை

நீள்வயிறு ருசிக்க

நிறைத்துக்கொள்கிறது

அலுவலகக் கழிப்பறையின்

கட்டாந்தரைக் குழந்தை

 

-         சாய் வைஷ்ணவி

வலசை போகும் விமானங்கள் தொகுப்பு, கடல் பதிப்பகம் , 8680844408

 

 

குழந்தையை சிறுகோட்டு வாயையும், பெரும்பழ வயிற்றையும் உருவகமாக்கிக் காட்சிப்படுத்தியிருக்கிறார். ஒஞ்சி என்றால் முலை என்று பொருள்.. முலை கனத்து , தானாக வழியும் தாய்ப்பால் அலுவலகக் கழிப்பறையில் வீணாவதை , தன் குழந்தைக்கான பாலை கழிப்பறையின் தரையெனும் குழந்தைக்குப் பீய்ச்சுவதாக உருவகப்படுத்தி எழுதியிருக்கிறார். 

 

ஒரே உணர்வு தான், ஒரே துயரம் தான் கவிதையில் இரு வேறு காலகட்டத்தில் பதிவாகியிருக்கிறது. ஒரே உணர்வை எழுதும் போது இவ்வாறான ஒற்றுமைகள் படைப்புகளில் நேர்வது இயற்கைதான் எனினும் இளம் படைப்பாளர்கள் கவனமாக இருக்க வேண்டிய இடமும் இதுவாகவே இருக்கிறது.

 

 கவிதைகளில்  நிறைந்திருக்கும் துயரம் என்பது வாசகனின் மனதுக்குள் படிமமாகி விடக்கூடியது, இந்தக் கவிதைகள் தரும் வலிகளும் அவ்வாறு தான். நினைவுகளின் இடுக்குகளில் அமர்ந்து கொண்டு, அவ்வப்போது எட்டிப் பார்க்கும். ஏதாவது நிகழ்வைக் கடக்கும் போது இந்தக் கவிதைகள் முன் வந்து நின்று தங்களை அடையாளப்படுத்தும்.

 

ஒவ்வொரு மாதமும் வாசித்த புத்தகங்களிலிருந்து நேசித்த சில கவிதைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் - இரா.பூபாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக