புதன், 8 ஏப்ரல், 2015

மரக்கட்டைகளினும் மலிவானது மனித உயிர்

செய்தி : செம்மரக்கட்டை கடத்தியதாக 20 தமிழர்களை ஆந்திர காவல்துறையினர் திருப்பதி வனப்பகுதியில் சுட்டுக் கொன்று விட்டனர்



செம்மரக்கட்டை கடத்தினதுக்கு என்கெளன்டரில் இருபது உயிரை எடுக்கும் அளவுக்கு அரக்கத்தனமான சூழலில்தானா வாழ்கிறோம்.?

தீக்காயங்கள் தெளிவாகப் புகைப்படத்தில் தெரிகின்றன ,  இவர்களை முன்னமே கைது செய்து கைகள் கட்டப்பட்டு அழைத்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. ஆக இது திட்டமிட்ட கொலையா.? பதறுகிறது மனம்.

என்னதான் கடத்தலில் ஈடுபட்டிருந்தாலும் விசாரணையெல்லாம் இல்லாமல், யாரிடமும் உத்தரவு வாங்காமல் எடுத்த எடுப்பிலேயே டொப் டொப்பென்று சுட்டுவிட முடியுமா. முழுப்பூசணியை சோற்றில் ஏனடா மறைக்கீறீர்கள்.

கொலைபாதகம் செய்பவனுக்கே மரண தண்டனை வேண்டாம்னு போராடிட்டு இருக்கும் சூழலில் இருபது உயிர்களை ஈவு இரக்கமே இல்லாம எடுக்கும் உரிமையை இவர்களுக்கு யார் தருவது.

செம்மரக்கட்டைகளைக் கடத்துவது குற்றம் தான். ஆனால் அதற்கு இதுதான் தண்டனையா. நாட்டில் போதை கடத்தல் , ஆள் கடத்தல், உடல் உறுப்புகள் கடத்தல் என கோடிகளில் புழங்கும் பெரிய முதலைகளை விடுத்து அன்றாடம் காய்ச்சிகளின் மீது தானா உங்கள் வன்மம் வெளிப்பட வேண்டும்.
இது ஒன்றும் ஆரோக்கியமான சூழலாக இல்லை. அச்சமூட்டும் ஒரு சூழலில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உண்மையில் நம் ஒவ்வொருவரின் குரல்வளையை நோக்கியும் குறி பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது ஒரு துப்பாக்கி. எப்போது எந்தக் காரணத்துக்காக நாம் சுட்டு வீழ்த்தப்படுவோம் என்பது தெரியாது.

இலங்கையில் இனப்படுகொலையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் உயிர்கள் பறிக்கப்பட்டுவிட்டன. இங்கும் அந்த வன்கரங்கள் தமிழர்களின் மீது பாய்வது மகாக் கொடுமை. தமிழர்கள் என்று மட்டுமில்லை. இது ஒரு மிகப்பெரிய மனித உரிமை மீறல்.

மனித உரிமை அமைப்புகள், தமிழ் அமைப்புகள் என அனைவரும் ஒன்று கூட வேண்டிய சமயம். முக்கியமாக ஆந்திராவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பறந்து பறந்து நடிக்கும் திரைத்துறையினர் வாய்திறப்பார்களா பார்க்கலாம். ( எல்லாத்துக்கும் இவர்களிடம் கருத்து கேட்பதும் தப்பு தான்)

1 கருத்து: