திங்கள், 20 ஏப்ரல், 2015

பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் இருபத்தி நான்காவது சந்திப்பு

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் இருபத்தி நான்காவது இலக்கிய சந்திப்பு சென்ற ஞாயிற்றுக் கிழமை(19.04.2015)  பாலக்காடு சாலை, நகரமன்ற ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

எப்போதும் போல படித்ததில் பிடித்தது என்பது முதல் அமர்வு. வாசகர்கள் யார் வேண்டுமானாலும் தாங்கள் படித்த கதை, கவிதை சம்பவங்கள் எது குறித்தும் பேசலாம். அதில், ச.தி.செந்தில்குமார் அவர்கள் இளஞ்சேரல் அவர்களின் கருட கம்பம் நாவல் வாசிப்பனுபவத்தை சிலாகித்துப் பேசினார். தான் வாசித்த நாவல்களில் மிக முக்கியமானதானதாக் குறிப்பிட்டார். கனகீஸ்வரி எனது கவிதைத் தொகுப்பான பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு நூலிலிருந்து தான் ரசித்த இரண்டு கவிதைகளைக் குறிப்பிட்டுப் பேசினார். பின்னர் எழுத்தாளர் ஜெயகாந்தனின் நினைவலைகளில் சி.நா.மலையப்பன், பொள்ளாச்சி அபி , அம்சப்ரியா ஆகியோர் பேசினர்.











பின்னர் நிகழ்ச்சி எனது வரவேற்புரையுடன் தொடங்கியது. எழுத்தாளர் இரா.தட்சிணாமூர்த்தி அவர்கள் எழுதிய வகுப்பறைக்கு வெளியே என்ற நூலை புன்னகை ஜெயக்குமார் அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். ஜெயக்குமார் ஆசிரியர் என்பதால் அந்தக் கட்டுரைகளின் தாக்கம் அவரது பேச்சில் வெளிப்பட்டது. ஒரு ஆசிரியரின் மிக முக்கியக் கடமை மாணவனுக்கு வகுப்பறைக்கு வெளியே என்ன கற்பிக்கிறார் என்பதில் இருக்கிறது என்று பேசியது அருமை.

கவிஞர் கடங்கநேரியான் எழுதிய " யாவும் சமீபத்திருக்கிறது" என்ற கவிதை நூலை மழைக்காதலன் அவர்கள் அறிமுகம் செய்து வைத்துப்பேசினார். மழைக்காதலன் சில கவிதைகளைக் குறிப்பிட்டு பாராட்டவும் சில கவிதைகளை விமர்சித்தும் பேசினார். கடங்கநேரியானிடம் இன்னும் எதிர்பார்ப்பதாகக் கூறி முடித்தார்.

திணை காலாண்டிதழை க.அம்சப்ரியா அறிமுகம் செய்தார். சிற்றிதழ்களின் தேவை, அவற்றின் நிலை குறித்தும் தனது சிற்றிதழ் அனுபவங்கள் குறித்தும் பேசினார். திணை ஏழாவது இதழின் கதைகள், கட்டுரைகள் , தலையங்கம் , கவிதைகள் அனைத்தையும் குறிப்பிட்டுப் பேசினார்.

நட.சிவக்குமார் தனது உரையில் போலந்து நாட்டுக் கதை உட்பட மூன்று நல்ல சிறுகதைகளை சுவை படச் சொல்லி பேசியது சிறப்பாக அமைந்தது.

கவிஞர் கலைவாணன் எழுதிய " ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் " என்ற நூலை நாணற்காடன் அறிமுகம் செய்தார். நாணற்காடன் தனது உரையில் " நாவிதர்கள் போன்ற விளிம்பு நிலை மக்களின் வாழ்வை இந்த நூல் படம்பிடித்துக் காட்டுகிறது. இந்தக் கவிதைகளைப் படித்து முடிக்கும் போது நமக்கு நாவிதர்கள் மேல் பரிதாபம் வரவில்லை மாறாக நமக்கு குற்ற உணர்ச்சி மேலோங்குகிறது. அதுவே இந்த நூலின் வெற்றியாகும். “என்றார்.

கவிஞர் கலைவாணன் பேசுகையில் முன்பு பண்டுவம் ( மருத்துவம்), முண்டிதம்(அழகுக்கலை),இங்கிதம்(சடங்குகள்),சங்கீதம்(இசை) என நால்விதம் தெரிந்தவன் நாவிதன். இன்று கையில் சவரக்கத்தியோடும், வெறும் சடங்காற்றுபவனாகவும்நின்று கொண்டிருப்பதன் வலி தான் வார்த்தைகளாகி இந்தக் கவிதைகளை எழுதியிருக்கிறேன். ஆண்டாண்டுகளாக அடக்குமுறைக்கு ஆட்பட்ட ஒரு இனத்தின் வலிகளையே நான் பதிவு செய்திருக்கிறேன் என்று பேசினார்.

எழுத்தாளர் இமையம் எழுதிய சிறுகதைத் தொகுப்பான சாவு சோறு நூலை பேராசிரியர் ராம்ராஜ் அறிமுகம் செய்து பேசினார். ராம்ராஜ் ஒரு நேர்த்தியான  கதை சொல்லி. அவரிடம் கதை கேட்கும் போது நாமும் குழந்தையாகிவிடுவோம் அல்லது நம்மை அவ்வாறாக உணர்ந்தே அவர் கதைகளைச் சொல்வார். இமையத்தின் எழுத்துகள் எடிட்டிங் உட்பட அனைத்து அழகுபடுத்தலுக்கும் உட்பட்டு ராம்ராஜின் வார்த்தைகளாக வரும்போது கதைக்குள் நாம் நம்மை மறந்து உலவுகின்றோம்.


நிகழ்ச்சியில் தற்காலக் கல்வி முறையில் மாற்ற வேண்டியவை என்ற தலைப்பில் மாணவர்கள், வாசகர்கள் பேசி விவாதித்தனர்.

மேலும், மாணவர்கள், கவிஞர்கள் கலந்து கொண்ட கவியரங்கம் சிறப்பாக நடந்தது. கவிஞர்கள் கனகீஸ்வரி, செளவி, உதயசங்கர்,மெளனம் ரமேசு,அபூர்வ ஹரணி, நிவேதா,சிதம்பரநாதன் அனைவரும் கவிதை வாசித்தனர்.

கவிஞர் அம்சப்ரியாவின் நன்றியுரையோடு விழா இனிது  முடிந்தது.

பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் செய்தி மடல் வெளியிடப்பட்டது. உங்கள் பார்வைக்கு ..

https://www.dropbox.com/s/kwpz7poqbsctz9i/Seythimadal%2016.pdf?dl=0


அடுத்த நிகழ்வு முழுநாள் நிகழ்வாக, குழந்தைகள் கலைக் கொண்டாட்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மே 17.. தயாராக வேண்டும்.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக