ஞாயிறு, 31 மார்ச், 2024

நின் நெஞ்சு நேர்பவள் - கவிதை நூல் வாசிப்பு அனுபவம் - கவிஞர் செ.கார்த்திகா

 கவிஞர்.இரா.பூபாலன் எழுதி கடந்த மாதம் வெளிவந்தக் கவிதை நூல்கள்.." நின் நெஞ்சு நேர்பவள்" மற்றும் "ஹோ.. என்றொரு கவிதை"




நின் நெஞ்சு நேர்பவள்..
****************************
கவிஞர் தன் வாழ்வில் தான் கண்ட, கடந்த, உடனிருக்கும் பெண்களின் அன்பை, அனுசரணையை, ஆதங்கத்தை, வலியை என எல்லா உணர்வுகளையும் கொஞ்சமும் மாறாமல் தன் எழுத்துகளில் தந்திருக்கிறார்..
தொகுப்பின் முதல் கவிதையான "செந்துளியின் சிறுதுளி‌" என்ற தலைப்பிலானக் கவிதை.. வாசிக்கையில் இன்று பணிபுரியும் இடத்தில் தண்ணீர் வசதியுடன் கழிவறை, நாப்கின் என வசதிகள் வந்துவிட்ட போதும் மாதவிடாய் நாட்கள் பெரும் அசௌகரியமான நாளாகத்தான் இருக்கிறது இன்னும்.. அப்படியிருக்கையில் தோட்டத்து வேலைக்குப் போன அம்மா.. ஓலைக் கீற்று தான் குளியலறையாக இருந்த போது எப்படி தன் மாதாவிடாயைக் கடந்து இருப்பாள் என்று நினைத்தால் இன்றும் வலிக்கிறது.. அந்த வலியை இந்தக் கவிதை இன்னும் கூட்டுகிறது.
"துணிகளில் படாது போன செந்துளியின் சிறுதுளி தான் நான்" என்று கவிஞர் தெரிந்து கொண்டது போல உண்மையை எல்லாரும் அறிந்து விட்டால் மாதவிடாய் அசூயையாகவோ தீட்டாகவோ யாருக்கும் தெரியாது.
சிறுவயதில் எல்லாப் பெண்பிள்ளைகளும் அப்பா பிள்ளைகள் தான்.. பெரும்பாலும் திருமணத்திற்குப் பிறகு நான் உட்பட பெண்பிள்ளைகள் அம்மாவோடு அதிக நெருக்கமாகிவிடுகிறார்கள்
"ஊசல்" கவிதை ,அப்பாவின் பிள்ளைகளாக இருந்து ஒரு குறிப்பிட்ட வயதிக்குப்பின் அம்மாவோடு நெருக்கமாகி விடுகிற பெண் பிள்ளைகள் பற்றியும் அம்மாற்றத்தின் போது அப்பாவின் எண்ண ஓட்டங்களைப் பற்றியும் பேசுகிறது.. .
என் சமையலறையிலும் எல்லா டப்பாக்களிலும் என் அம்மா அடைந்து இருக்கிறாள்.. அதனால் "அம்மாவை ஊற வைத்து விழுங்குபவள் "கவிதை மனதுக்கு நெருக்கமானதாக இருக்கிறது..
இப்படித் தொகுப்பெங்கும் வெவ்வேறு முகங்களுடைய பெண்களின் வாழ்வியலை ஆண்குரல் பேசுவது ஆச்சர்யமாக இருக்கிறது..ஆனால் அது இரா. பூபாலன் பூபாலன் அண்ணாவாக இருக்கும் போது ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை..
நல்ல மகனாக, கணவனாக, அப்பாவாக, தோழனாக என தன் வாழ்வில் எல்லா பெண்களிடமும் உண்மையும் நேர்மையுமாக வாழ்ந்து அவர்களின் வலிகளில் பங்கெடுத்துக் கொண்டு அவர்களின் வாழ்வில் நம்பிக்கைக்குரிய இடத்தில் நிற்கும் பூபாலன் பெண்களை எழுதுவதில்
வியப்பதற்கு ஏதுமில்லையே.. வாழ்வையே வார்த்தைகளில் கவிதையாகக் கொடுத்து இருக்கிறார்..
வழக்கம் போலவே அவரின் வளர்ப்பை நினைத்து வியக்கிறேன்..ஒரு ஆண்பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் என்ற கேள்விக்கு நான் எப்போதும் விரல் சுட்ட நினைப்பது இவரைத் தான்..
இந்தத் தொகுப்புப் பெண்களைப் பற்றியத் தொகுப்பு ...ஆண்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய தொகுப்பு..
வாழ்த்துகள் அண்ணா தொடர்ந்து எழுதுங்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக