வியாழன், 28 மார்ச், 2024

உதிரிகள் இதழில் 15 கவிதைகள்

இந்த மாத உதிரிகள் இதழில் எனது 15 கவிதைகள் வெளியாகியுள்ளன.. 

வாசியுங்கள்... 


சொற்கள்

1.


நமக்குள்
தீராச்சுனையென சுரந்துகொண்டே இருந்த
சொற்களின் ஊற்று
அடைபட்டுப் போனதொரு நாளில்
நாம்
திக்கற்று நின்றோம்
அதன் பின் பாதைகள் இல்லை எனத் 
தெரிந்த பின்பு
எனது வரைபடங்கள் மாறிவிட்டன
ஒரு புதிர்வட்டப்பாதைக்குள்
சுழன்று சுழன்று வருகிறேன்
உன் சொற்களின் பூரண ஒளியை
ஒரேயடியாய் அணைத்திருக்க வேண்டியதில்லை
நீ


2.

சொற்களுக்கு
வாசனை உண்டெனச் சொன்னவன்
அதன்
துர்நாற்றத்தை அறிந்திலன்

3.

சொற்களின் விட்டத்தில்
கட்டப்பட்ட கயிறு
கழுத்தில் இறுகியிருக்கிறது
விழி பிதுங்க
ஊசலாடியபடியிருக்கிறது
அன்பின் பிணம்

4.

சொற்களால் மலர்த்த முடிகிறது
அவை எவ்வளவு இறுகிய பாறையிலிருந்தும்
ஒரு மலரை மலரச் செய்துவிடுகின்றன

5.

ஒரு சொல்
அதற்காகத்தான் காத்திருந்தேன் யுகங்களாக
அதற்காகத்தான் அலைந்து திரிந்தேன் காலங்களாக
அதன் பொருட்டுத்தான் பைத்தியமானேன்
அதை வேண்டித்தான் பிச்சைக்காரனானேன்
அதன் காரணமாகவே நிகழ்ந்தது
ஒரு கொலை
ஒரு தற்கொலை

6.
ஒரு சொல் வெல்லும்
ஒரு சொல் கொல்லும்
ஓவ்வொரு பிறழ் சொல்லுக்கும்
அப்பா எனக்குச் சொல்லும் அறிவுரை இது
ஒரு சொல் தான்
கொன்றது அப்பாவை

7.
எதைக்கொண்டு
உன் நரைகளைத் திருத்தம் செய்கிறாய்
உன் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கிறாய்
உன் உள் ஊறும் வன்மத்தைக் கட்டி வைக்கிறாய்
உன் மனதைச் சமநிலைப் படுத்துகிறாய்
சொற்களைக் கொண்டு
வெறும்
சொற்களைக் கொண்டு

8.

அம்மா
காதலி
மகள்
சொற்கள்
சொற்கள்
சொற்கள்
வாழ்வு

9.

சொற்களின்
கடிவாளங்கள் அறுபடுகிற நாட்களில்
நிலமதிர ஓடித் திரிகின்றன
அங்குசங்கள் உடைபடுகிற நாட்களில்
மதம் பிடித்து
பேரழிவை நிகழ்த்திவிடுகின்றன
சொற்கள்
பழக்கப்படுத்தப்பட்ட 
வன விலங்குகள்
எப்போது வேண்டுமானாலும்
என்ன வேண்டுமானாலும்
நிகழலாம்

10.

காற்றில் அலைந்தபடியிருக்கின்ற
யாருடைய சொற்களோ
தனிமையின்
கொடும் பொழுதுகளில்
மீள ஒலிக்கின்றன
கண்ணீர்த்துளியின்
சிதறலோடு

11.

சொற்களின் முகத்தில்
ஒப்பனை பூசுபவர்கள் குறித்து
பயமாயிருக்கிறது
நான் அவற்றின்
பூரண ஒளியை மட்டுமே
தரிசிக்க விரும்புபவன்

12.

எதையாவது பற்றிக்கொண்டு
கரை சேர்ந்துவிடு
என்று தீயூழ் காலத்தின்
விளிம்பில் நின்றபடி
அம்மா தேம்பினாள் ஒருநாள்
நான்
அந்தச் சொற்களைப் பற்றிக்கொண்டு தான்
இத்தனை தூரம் வந்திருக்கிறேன்

13.

ஒரு சொல்லுக்கும்
இன்னொரு சொல்லுக்குமிடையில்
கட்டப்படுகிறது
ஒரு தொங்கு பாலம்
மனிதர்கள் 
இப்படித்தான் கால காலமாகப் பயணிக்கிறார்கள்

14.

ஒரு சொல்
அதன் சகல அலங்காரங்களையும்
களைந்துவிட்டு
உன் கால்களில் விழுந்து மன்றாடும் போது
தயக்கமின்றி
ஆரத் தழுவிக்கொள்
அவ்வளவு பரிசுத்தத்தை
நம் கால்களில் விழச் செய்யக் கூடாது

15.

சொற்களின்
வேர்க்கால்களில்
கொஞ்சம் ஈரம் பாய்ச்சலாம்
அவை 
நல்ல கனிகளைத் தரும்


உதிரிகள் தொடர்ந்து மிகச் சிறப்பான உள்ளடக்கத்தோடும், வடிவ நேர்த்தியோடும் வெளிவந்துகொண்டிருக்கும் சிற்றிதழ்.. இம்மாதம் கவிதைகள் சிறப்பிதழாக வந்திருக்கிறது. இதழ் முழுக்க சிறப்பான கவிதைகள் நம் வாசிப்புக்காகக் காத்திருக்கின்றன.. அவசியம் வாங்கி வாசியுங்கள்...
தொடர்பு கொள்ள :
97910 43314
85088 33000

படைப்புகள் அனுப்ப :

uthirigal@gmail.com


1 கருத்து:

  1. மிக நேர்த்தியான சொற்களால் அமைந்த கவிதைகள் சிறப்பு. வாழ்த்துகள் பூபாலன்!

    பதிலளிநீக்கு