ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூடப் பிறந்தவனா ..?

சென்ற வாரம், ஒரு வாட்சப் குழுவில் சிறு பிரச்சினை. தோழர் ஒருவர், குழுவில் உள்ள தோழிக்கு இரண்டு மூன்று முறை அழைத்துத் தொந்தரவு செய்துள்ளார். நள்ளிரவும் ஒரு முறை அழைத்துள்ளார்.  தோழி என்னிடம் முறையிட்டதும், அவரை அழைத்துப் பேசி இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள் என்று எச்சரித்தேன். அவர் தெரியாமல் நடந்துவிட்டது நள்ளிரவில் தானாக அழைப்பு சென்றுவிட்டது என்று சொன்னார்.
பிரச்சினை அதுவல்ல ..

அவரிடம் இது குறித்துப் பேசும்போது அவர் சொன்ன ஒரு வார்த்தை        " தோழர், என்னை என்ன அந்த மாதிரி ஆள்னு நினைச்சுட்டிங்களா ? நானெல்லாம் அக்கா தங்கச்சி கூடப் பிறந்தவன். அப்படியெல்லாம் தப்பா நடக்க மாட்டேன் " என்றார்.

இதுதான் ஒரு வாரமாக மண்டைக்குள்ளேயே எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இதே சிந்தனையாகவே இருக்கிறது. யாராவது எதாவது பெண்களிடம் தவறாக நடக்கும்போது பொதுவாக நாம் திட்டுவது நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கலயா என்றுதான். இந்தப் பொதுப்படையான கருத்தில் இச்சமூகம் என்ன நம்புகிறது.? அக்கா தங்கச்சி கூடப் பிறந்தவன் பெண் பிள்ளைகளின் கஷ்டம் அறிந்து அவர்களை மரியாதையாக நடத்துவான் என்றா.? அல்லது அனைத்துப் பிள்ளைகளையும் தனது அக்கா, தங்கச்சி போலத்தான் எண்ணுவான் என்றா ?

அப்படியானால், அக்கா தங்கச்சி  கூடப் பிறக்காமல் தன்னந்தனியனாகவோ அல்லது ஆண்களுடன் பிறந்தவர்களுக்கோ பெண்களின் மீதான பார்வை தவறாக இருக்கும் என்றா எடுத்துக் கொள்வது?

ஒரு நாளைக்கு எத்தனை பாலியல் வன்கொடுமைகள், பெண் சித்திரவதைகள், கொலைகள், பெண்கள் மீதான அவதூறுகள், மோசடிகள், பித்தலாட்டங்கள் என பெண்கள் மீது எத்தனை லட்சம் ஆண்கள் பாய்கிறார்கள். அவர்களெல்லாம் அக்கா தங்கச்சி கூடப் பிறக்காதவர்கள் மட்டும் தானா.

எங்காவது புள்ளி விவரங்கள் கிடைக்குமா எனத் தேடிப்பார்த்தேன். பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை. பொறுமையும் இல்லாததால் விட்டுவிட்டேன்.
சமீபமாக நான் கண்ட , கேட்ட , படித்த செய்திகளை மனக்கண்ணில் ஓட்டிப்பார்த்தேன்.

அக்கா, தங்கச்சி, அம்மா என பெண்களுடன் வாழ்ந்தவர்கள் தான் அனேகம் பேர் பிறழ்ந்துள்ளார்கள். ஏன் ? தந்தையே மகளுக்கு, அண்ணன் தங்கைக்கு, தம்பி அக்காவுக்கு, தாத்தா பேத்திக்கு என அனைத்து வகை ஆண் உறவுகளும் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாலியல் தொந்தரவு தாண்டியும், திராவகம் வீச்சு, திருமண மோசடி, கொலைகள் என எல்லாப் புள்ளி விவரங்களிலும் அக்கா தங்கச்சி கூடப் பிறந்தவன் பல்லிளிக்கிறான்.

அக்கா தங்கச்சி கூடப் பிறந்தால் மட்டும் போதுமா ..? பெண்களின் கஷ்ட நஷ்டங்கள் புரிந்து விடுமா .? அல்லது அக்கா தங்கச்சி கூடப் பிறக்காத ஒருவனால் பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாதா ..?

அக்கா, தங்கச்சி என யாருடனும் பிறக்காத தனியன் தான் நான். அதனாலேயே சிறு வயது முதல் பெண்குழந்தைகள் மீது தனி ஈர்ப்பு. பக்கத்து வீட்டுத் தோழர்கள் , தோழிகள் எப்போதும் என்னுடனே விளையாடி என் வீட்டிலேயே இருப்பார்கள். என் சக வயது தோழன்களை நான் வாடா போடா என்று அதட்டும் போது எதுவும் கண்டுகொள்ளாத அம்மா. என் சக வயது வகுப்புத் தோழியோ அல்லது என்னை விடவும் இளைய பிள்ளையையோ வாடி போடி என்று சொன்னாள் ஒப்புக் கொள்ள மாட்டார்.
“ அதென்ன , பொட்டப்புள்ளைய வாடி, போடினு மரியாதை இல்லாம கூப்பிடற, பேர் சொல்லியாச்சும் கூப்பிடு " என அதட்டுவார். அந்த விதையாகக் கூட இருக்கலாம். பெண்கள் மீது ஒரு மரியாதையுடனும், கொஞ்சம் எட்ட நின்றும் பழகுவதற்கு என்னைப் பக்குவப் படுத்தியது.

சிறு வயது முதலே தனியாயிருத்தல் கொஞ்சம் கொடுமையாகவும் கொஞ்சம் இனிமையாகவும் இருந்தது. சுகன்யா, சியாமளா என்ற பக்கத்து வீட்டு தனா அக்காவின் குழந்தைகள் எப்போதும் என்னுடனே இருப்பார்கள். சாப்பிட மட்டுமே அவர்கள் வீட்டுக்குப் போவார்கள். அதன்பின்னர், சித்தி மகள் நித்யாவை கைக்குழந்தையிலிருந்து ஐந்து வயதுவரை, சாப்பிட வைப்பது குளிக்க வைப்பது முதல் அனைத்தையும் நான் எட்டாம் வகுப்புப் படிக்கும் காலத்திலேயே செய்து அவளை வளர்த்தியிருக்கிறேன். இப்படியான அனுபவங்களும் எப்போதும் பெண் குழந்தைகளின் மீது ஒரு பிரியம் வரக் காரணமாயிருக்கலாம்.

அப்படி ஒரு குழந்தைதான் காயத்ரி. எப்போதும் எங்கள் வீட்டில் என்னோடும் ஆத்தாவோடும் தாயம் விளையாடிக் கொண்டும், பல்லாங்குழி விளையாடிக் கொண்டும் இருப்பாள் விடுமுறை நாட்களில். அவளுக்கு ஏழு வயது இருக்கும் அப்போது. எப்போதும் தனது தம்பி கார்த்தியை கூடவே கூட்டிக் கொண்டு திரிவாள். எங்களோடு தாயம் விளையாடும் போது கூட கார்த்தியைத் தன் மடியில் படுக்க வைத்து உறங்க வைத்துக் கொண்டே விளையாடுவாள். அவன் உறக்கத்திலேயே சிறு நீர் கழித்துவிடுவான் அவள் ஓடிப் போய் அவள் வீட்டில் மாற்று உடை எடுத்து வந்து இவனையும், தரையையும் சுத்தம் செய்து உடை மாற்றிவிடுவாள். தம்பி மீது அவ்வளவு பாசம். கார்த்தியும் அவளைப் பிரிந்து இருக்கவே மாட்டான். ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் காயத்ரிக்குத் திருமணம் ஆனது. எங்களால் போக முடியவில்லை. அம்மா மட்டும் போய் வந்தார். போன மாதம் கார்த்தி ஊர் முழுதும் பிரபலமாகிவிட்டான். ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணைக் காதலித்து அவளுடன் ஏற்பட்ட தகராறில் அவளைக் கொன்று விட்டானாம். கேட்டதும் பயங்கர அதிர்ச்சி. அதற்கும் முன்னரே சில பெண்களுடன் தொடர்பிருந்திருக்கிறது எனவும் பேசிக் கொள்கிறார்கள். அவன் பாசக்கார , நேர்மையான அக்காவுடன் பிறந்து அவளது கண்காணிப்பிலேயே வளர்ந்தவன் தான். இப்படி பல கதைகள் நம்மிடம் உள்ளன.

பெண் பிள்ளைகள் உள்ள வீட்டுக்கு எப்போதும் தனி அழகு கூடும். அவள் ஒரு ஆணை நிச்சயம் பக்குவமானவனாக வளர்ப்பதில் தனிக் கவனத்தோடு இருப்பாள் தான். ஆனால், ஒருவன் பக்குவமானவனாக வளர அது மட்டும் போதுமா?

அக்கா தங்கச்சி கூடப் பிறப்பது மட்டும் ஒரு ஆண் நல்ல ஆணாக வளர்வதற்கான சாத்தியங்களைத் தந்துவிடுமா என்ன ..?

நன்றி : கொலுசு மின்னிதழ்
http://www.kolusu.in/kolusu/kolusu_apr_16/index.html#p=44 

4 கருத்துகள்:

  1. உண்மைதான்..சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் எல்லோரையும் மாற்றி விடுகின்றன...

    பதிலளிநீக்கு
  2. //அக்கா தங்கச்சி கூடப் பிறப்பது மட்டும் ஒரு ஆண் நல்ல ஆணாக வளர்வதற்கான சாத்தியங்களைத் தந்துவிடுமா என்ன ..?
    பொதுவாக நாம் திட்டுவது நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கலயா என்றுதான்.//
    அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள்.
    அம்மா அப்பா சிறுவயதில் இருந்து சொல்லிக் கொடுக்கும் பெண்களுக்கும் சம மதிப்பு தரவேண்டும் என்ற உண்மையே நல்ல சிந்தனைகளை உருவாக்கும்.
    ஆனா நாட்டில் உள்ள பெரும்பாலானவர்களின் சிந்தனை போக்கு நீ ஆம்பிளை சிங்கமடா! ஆண் புலியடா! பெண் என்பவள் ஒடுங்கி,ஒடுக்கபட்டு தான் இருக்கணும், என்ற சிந்தனை போக்கே அதற்க்கு மதவாதிகளின் ஆசீர்வாதமும்,பெண்கள் மீதான வன்கொடுமைகள் பெரும்பான்மையானவற்றுக்கு காரணமாகிறது.

    பதிலளிநீக்கு
  3. நியாயமான கேள்வி! அக்காதங்கை கூட பிறந்தவர்களை விடவும் உடன் பிறக்காதவர்கள் தான் அதிகமாய் பெண்களை மதிக்கவும், நேசிக்கவும் செய்கின்றார்கள். அக்கா த்ங்கையோடு பிறந்தவனுக்கோ அவள் அருமையும் தெரிவதில்லை,அன்பும் புரிவதில்லை.விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால் தவறுகள் நடக்க சூழ்னிலையும் மன வக்கிரங்களும் காரணமே தவிர உடன் வளர்ப்பும் பிறப்பும் அல்லவே! அப்படி என பார்த்தால் அம்மா வயிற்றில் பிறந்தவனால் பெண்ணை துன்புறுத்த முடியுமோ? பல நேரங்களில் பெண்ணால் தான் பெண் துன்புறுகின்றாள்!

    பதிலளிநீக்கு