திங்கள், 1 செப்டம்பர், 2014

லிப்ட் கொடுக்கிறேன் வருகிறீர்களா ..



முந்தாநாள் ஞாயிற்றுக் கிழமை. காலை முதல் இரவு வரை வண்டியிலேயே சுற்றும் படி நிகழ்ச்சிகள் இருந்தன. அதற்கான திட்டமிடல்கள் சரியாகச் செய்து வைத்திருந்தேன். காலையில் பொள்ளாச்சியில் புன்னகை ரமேஷ் அவர்களின் மகள்களுக்கு காது குத்து விழா, முடித்துவிட்டு கோவை இலக்கிய சந்திப்பு, அதை முடித்து விட்டு மதியம் கோவை அருகம்பாளையம் கிராமத்தில் இருக்கும் உறவினரைப் பார்க்கச் செல்ல வேண்டும். உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். ஆக, காலை முதல் மாலை வரை சரியாக இருக்கும்.


காலை 8.30க்கு கிளம்பி பொள்ளாச்சி போனேன். காதுகுத்து விழா முடிய 10 ஆகி விட்டது. அவசரமாகக் கிளம்பி இலக்கிய சந்திப்புக்குச் செல்கிறேன். எப்படி வேகமாகப் போனாலும் 11 ஆகிவிடும். அதற்கும் மேல் தாமதமாகப் போகக் கூடாது. வண்டி கோவில்பாளையத்தைத் தாண்டும் போது ஒரு மனிதர் லிப்ட் கேட்டுக் கையசைத்தார். மிக நல்ல உடை, பின்புறம் தொங்கவிடப்பட்ட பை அனைத்தையும் வைத்து அவரை ஒரு விற்பனைப் பிரதிநிதியாக யூகம் செய்து கொண்டேன். வயது 40 தான் இருக்கும். சரி எங்காவது பக்கத்தில் தான் போவார் என்று நினைத்து ஏற்றிக் கொண்டேன். ஏறியதும் எங்கு போக வேண்டும் எனக் கேட்டதற்கு கிணத்துக்கடவு என்றார். ஒரு கணம் அதிர்ச்சியாகிவிட்டேன். கோவில் பாளையத்துக்கும் கிணத்துக்கடவுக்கும் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர். இதை இவர் ஏன் நடந்து செல்லத் திட்டமிட்டார். இதற்கும் இவர் கோவில்பாளையம் பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் தான் நடந்து போய்க் கொண்டிருந்த போது என்னிடம் லிப்ட் கேட்டார். எனக்கு மனம் நிறையக் கேள்விகளால் குழப்பிக் கொண்டிருந்தது. பாவம் பேருந்துக்குப் பணம் இருந்திருக்காது என்று நினைத்துக் கொண்டேன். காலையில் ஒருவருக்கு உதவிய திருப்தியுடன் போகலாம் என்று அவரிடம் எதுவும் கேட்கவில்லை.

கொஞ்சதூரம் தான் அந்த மன திருப்தி. ஒரு கிலோமீட்டர் தூரம் கூட வந்திருக்க மாட்டோம். திடீரென கத்தினார் அய்யோ சார்... சார் என்று. பதறிவிட்டேன். சட்டென வண்டியை நிறுத்தி தலைக் கவசத்தைக் கழற்றி என்ன ஆச்சு சார். எதையாவது கீழே போட்டு விட்டீர்களா என்றேன். இல்லை சார் ஏன் இப்படி வேகமாகப் போகிறீர்கள் மெதுவாகப் போங்கள் என்றார். கடுப்பாகி விட்டது. இதற்கும் 70 கி.மீ வேகத்தில் தான் போய்க் கொண்டிருக்கிறேன். கடுப்பைக் காட்டாது வண்டியைக் கிளப்பி, நல்லா பிடிச்சு உக்காருங்க எனக்கு அவசரம் ஒரு மீட்டிங்குக்குப் போய்க்கொண்டிருக்கிறேன் இந்நேரம் ஆரம்பித்திருப்பார்கள் என்று சொல்லிவிட்டு ஓட்டினேன். மீண்டும் கத்துகிறார். என்ன இப்படி பிரேக் போடறீங்க, ஏன் இத்தன வேகமா ஓட்டறீங்க மெதுவாப் போங்க என்றார்.இல்லை சார் எனக்குக் கொஞ்சம் அவசரம் அதும் இல்லாம 70ல் தான போறேன் என்றேன். கொஞ்ச தூரத்தில் மீண்டும் பதற்றப் படுத்திவிட்டார். ஒரு காருக்குப் பின்னால் பிரேக் அழுத்தி நிற்கப் போகும் போது வடிவேலுவின் ஒரு படத்தில் வருவதைப் போல தோள்களைக் குலுக்கு குலுக்கென்று குலுக்கி நிறுத்தினார். சார் நான் தான் பயமா இருக்குனு சொல்றேன் திரும்ப திரும்ப வேகமா ஓட்டறீங்க, நானெல்லாம் வண்டி எடுத்தா 30க்கு மேல போக மாட்டேன் என்றார். ரொம்பக் கடுப்பாகி அதுக்கு நீங்க தள்ளிட்டு நடந்தே போகலாம் சார் என்றபடி தாமரைக் குளம் நிறுத்தம் வந்ததும் நிறுத்தி சார் இறங்குங்க பேருந்துக்குப் பணம் தருகிறேன் பேருந்தில் வாங்க என்றேன். இல்லை சார் வர்றேன் ப்ளீஸ் என்றார். பாவமாகவும் இருந்தது. ஏற்றிக் கொண்டு 50லேயே வந்தேன். பின்னிருக்கைக் கைப்பிடியை இறுகப் பற்றிக் கொண்டு அமர்ந்து வந்தார். கிணத்துக்கடவு முதல் பேருந்து நிலையத்திலேயே இறக்கி விட்டேன். விட்டதும் கேட்டார், சார், கோயமுத்தூர் போறீங்களா..?

“ ஐயோ, இல்லீங்ணா, கிழக்கால போறேன்" என்று சொல்லிவிட்டு முறுக்கினேன். அரை மணிநேரம் தாமதமாக 11.30க்குத் தான் கோவை இலக்கியசந்திப்பு அரங்கத்தில் நுழைகிறேன். ஒரு நூல் அறிமுகம் முடிந்தது, அடுத்த நிகழ்வு நடந்து கொண்டிருந்தது.


இது நமக்கு முதல் முறையல்ல, இப்படி நிறைய சம்பவங்கள் நடந்ததுண்டு. மெல்ல அசை போடுகிறேன். என்னிடம் ஒரு கெட்ட/நல்ல பழக்கம், எத்தனை அவசரத்தில் போகும் போதும் யாராவது லிப்ட் கேட்டால் நிறுத்தி ஏற்றிக் கொண்டுதான் போவேன். அப்பா அடிக்கடி சொல்வார், இரவில் யாரையும் ஏற்றாதே அதிகம் குடிகாரர்கள் தான் இந்தச் சாலையில் வருவார்கள் உனக்குத்தான் பிரச்சினை என்று. நிறுத்தி அவர்கள் அவர்கள் தானா என்று பார்த்துவிட்டு அவர்களை மட்டும் தவிர்த்து விடுவேன்.

ஒருமுறை இரவில் ஒரு இளைஞனை ஏற்றிச் சென்று இறக்கிவிட்டபின் பின்னாலிருந்த பை திறந்திருப்பதை வீட்டுக்குப் போய்த்தான் பார்த்தேன். 1000 ரூபாய் கொடுத்து வாங்கியிருந்த கால்குலேட்டர் போச்சு. நன்றாகத் தெரிந்துவிட்டது எடுத்தது அவன்தான் என்று. நல்லவேளை தோழி ஒருவர் தன்னிடம் இருந்த கால்குலேட்டரைக் கொடுத்து அப்போதைக்கு உதவினார். தேர்வு சமயம் அது, மாதக் கடைசியும் கூட. அன்றிலிருந்து லிப்ட் கொடுப்பதையெல்லாம் நிறுத்தவில்லை, லிப்ட் கொடுக்கும் போது பையை முன்னால் வைத்துக் கொள்ளப் பழகியிருக்கிறேன்.

இதையெல்லாம் பொருட்டாக எடுத்து உதவுவதை நிறுத்திவிட்டால் எப்படி ?

ஒருமுறை மாற்றுத் திறனாளி ஒருவரைப் பார்த்து நானாக நிறுத்தி பொறுமையாக ஏற்றிக் கொண்டு போனேன். கோவில் பாளையத்தில் இறக்கி விடச் சொன்னார் பேருந்து ஏறிக்கொள்வதாக. நான் , இல்லை பொள்ளாச்சி தான் போறேன் என்று சொல்லி அவர் போக வேண்டிய தேவாலயத்தின் முன்னாலேயே கொண்டு போய் இறக்கி விட்டேன். அப்போது உள்ளிருந்து ஓடி வந்த அவரது மனைவியும், குழந்தையுமாக மூவரும் நன்றி சொல்லி, நல்லவேளை சீக்கிரம் வந்தீங்க என்று அவர் மனைவி அவரிடம் சொல்லியபடி உள்ளே போனார்கள். எதற்கு அந்த நல்லவேளை என்று தெரியவில்லை. ஆனால் நாம் செய்வது மிகச் சிறிய உதவி என்ற போதும் அது அவர்களுக்கு மிக முக்கிய உதவியாகக் கூட அமைந்து விடலாம் என்பதை நினைத்தால், இது போன்ற எந்த உதவும் குணத்தையும் என்னால் கைவிட முடிவதில்லை. உதவி செய்து பல சமயங்களில் ஏமாந்து போன போதும் ...

1 கருத்து:

  1. ஆனால் நாம் செய்வது மிகச் சிறிய உதவி என்ற போதும் அது அவர்களுக்கு மிக முக்கிய உதவியாகக் கூட அமைந்து விடலாம் என்பதை நினைத்தால், இது போன்ற எந்த உதவும் குணத்தையும் என்னால் கைவிட முடிவதில்லை. // இப்படி நினைத்துத்தான் பல சமயங்களில் செய்கிறோம். சில நேரங்களில் எதிர்மறை விளைவுகள் வந்தாலும் அதற்காக செய்வதை நிறுத்தியதில்லை இதுவரை !

    பதிலளிநீக்கு