திங்கள், 15 செப்டம்பர், 2014

இன்னும் மிச்சமிருக்கிறது காதல் ...



சென்ற வெள்ளிக்கிழமை மாலை உக்கடம் பேருந்து நிலையத்தில் கிடைத்த ஒரு அனுபவம் கொஞ்சம் என்னை நெகிழ்த்தி விட்டது. இது சாதாரண அனுபவமாகக் கூட இருக்கலாம்: அப்போது இருந்த எனது மன நிலையில் இது பெரிய விஷயமாகக் கூடப் பட்டிருக்கலாம். இருப்பினும் இன்னும் மனதில் அது இருக்கிறது.


பேருந்தின் சன்னல் இருக்கைக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருக்கிறேன். சன்னல் இருக்கையில் ஒரு இளைஞன்.

சன்னலுக்கு வெளியே வழக்கம் போலவே ஒரு இளைஞி. அவனது காதலி. பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


ஒட்டுக் கேட்கவெல்லாம் இல்லை. நன்றாகவே கேட்ட்து. அவர்களது உரையாடல்.

“ கார்த்தி, பாத்துப் போடா”

“ ம். சரி டி. நீ போய் சாப்பிடு”

“ பசிக்கல, நீ பாத்துப் போ, போனதும் கூப்பிடு. பழனியில இறங்கினதும் சாப்பிடு, ஜூஸ் குடி அப்பறம் அண்ணனுக்குக் கூப்பிடு, நடந்து போகாத சரியா. பாப்பாக்கு எதாவது வாங்கிட்டுப் போ. அண்ணன் கூட சண்டைக் கட்டாத என்ன சொன்னாலும் சரி பாத்துக்கலாம்னு சொல்லு”



"சரி டி, நான் பாத்துக்கறேன் நீ கிளம்பு பஸ் வந்துடும்"

"இல்லடா உன் பஸ் எடுக்கற வரைக்கும் இருக்கேன்."

இப்போது பேருந்து கொஞ்ச தூரம் முன்னால் நகர்கிறது. ஓடி வந்து மீண்டும் சன்னலுக்கு அருகில் நின்று கொள்கிறாள்.

" எப்போ டா வருவ.?"

"அட லூஸு, ரெண்டு நாள் தான் வந்துடுவேன்."

இப்போது அவள் " அச்சோ மறந்துட்டேன் நீ போய்ச் சேர மூணு மணி நேரம் ஆகும்" என்றபடி ஓடியவள் இவன் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கையில் டெய்ரிமில்க், குட் டே மற்றும் அம்மா குடிநீருடன் வந்து விட்டாள்.

இப்போது பேருந்து இன்னும் கொஞ்சம் நகர்ந்து முன்வரிசைக்கு வந்து விட்டது. அங்கும் வந்து நின்றாள். அடுத்து நகரப் போவது எங்கள் பேருந்து தான் என்பது எனக்கே கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

"உனக்கு ரொம்ப லேட்டாச்சு டி. கிளம்பு. நான் போய்க்குவேன்."

" நீ தயவு செய்து சீக்கிரம் வா டா , பாத்துப் போய்ட்டு வா " என்று அநேகமாக பத்து அல்லது அதற்கும் அதிகமான முறையாகச் சொல்லி விட்டாள்.


பேருந்து இப்போது கிளம்பி நகர்ந்து விட்ட்து, கொஞ்ச தூரம் நடந்து கையசைத்துக் கொண்டே வந்தவளைக் கடந்து வந்துவிட்டோம்.

ஒரு பத்து நிமிடம் தான் பேருந்து பேருந்து நிலையத்தில் எங்களுடன் நின்றிருக்கும், அதற்குள் இத்தனை நிகழ்வுகள்.

அவளின் முகம் அப்படி ஒளிவீசிக் கொண்டிருந்தது இப்போது என் மனதில்.

வழக்கமாக இந்தக் காட்சியில் பெண் பேருந்தில் அமர்ந்திருப்பாள். ஆண் அவளை இப்படி வழியனுப்புவதைப் பார்த்திருக்கிறேன். இங்கு இந்தப் பெண் இவ்வளவு காதலோடு இருப்பதைப் பார்க்கும் போது நல்ல காதல் இன்னும் இருப்பதை உணர வைத்த்து.


அவளது முகத்தில் ஒரு துளி கூடக் கலப்படத்தை என்னால் உணர முடியவில்லை என்பதே என்னை அவளைப் பற்றி இங்கு எழுத வைத்த்து.


பேருந்து கிளம்பி வெளியில் வந்ததுமே அவனது அலைபேசி தொடுதிரை ஒளிர்ந்தது.. அம்மு காலிங் என்று. அவளாகத்தானிருக்கும். பாத்துப் போ என்று தான் சொல்லியிருப்பாள். நான் மெல்லக் கண்மூடி ஒரு கானகத்தில் பட்டாம் பூச்சியின் பின் ஓடிக் கொண்டிருக்கும் சிறுமியொருத்தியைப் பற்றிய கனவிலிருந்தேன். வெண்ணிற உடையைத் துருத்திக் கொண்டு சிறகுகள் முளைத்திருந்த அச்சிறுமியின் முகம் அந்தக் காதலியின் சாயலிலிருந்த்து.


நான் என்னைப் பற்றிய நினைவுகளுக்கு வந்தேன்.

என்னைக் குழந்தையைப் போல பார்த்துக் கொண்ட பார்த்துக் கொள்கிற மற்றும் தன்னை ஒரு குழந்தையாக முற்றிலும் என்னிடம் ஒப்படைத்து விட்ட என் காதலியை நினைத்துக் கொள்கிறேன். மனம் நெகிழும் நிறைய சம்பவங்கள் காட்சிகளாக சட சடவென வந்து போகின்றன.


எனது நிறுத்தத்துக்குச் சற்று தூரம் முன்பு வரைக்கும் கண்களை மூடியே இருந்தேன். வேண்டுமென்றே கூட. எனது நிறுத்த்தை நெருங்கும் போது

“ கார்த்தி, எப்பவும் இதே காதலோடு சந்தோஷமாக இருங்க. மாறிடாதிங்க” என்று அவசரமாக சொல்லிவிட்டு ( நிஜமாக) வேகமாக இறங்கிவிட்டேன். என்ன நினைத்தான் , என்னைப் பார்த்தானா என்றெல்லாம் கவனிக்கவே இல்லை. வேகமாக இறங்கிவிட்டேன்

கொடுத்து வைத்த மற்றுமொருவன் ..

அவர்கள் காதலில் வென்று மிக மகிழ்ச்சியுடன் பல காலம் வாழப் பிரார்த்திக்கிறேன் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக