வியாழன், 19 மே, 2016

மழை போலான கவிதைகள்...


நண்பர் ஃபிரோஸ்கான் ஜமால்தீன் இலங்கையில் வசிக்கிறார். சிறு வயது முதல் தீவிர இலக்கிய ஈடுபாட்டாளர். பல்வேறு விருதுகளுக்கும், தொகுப்புகளுக்கும் சொந்தக்காரர். தனது கவிதைத் தொகுப்புக்கு அணிந்துரை எழுதித் தரக் கேட்டிருந்தார். எழுதி அனுப்பியிருந்தேன். நூல் வெளிவந்துவிட்டது. அசத்தலான வடிவமைப்பு, நல்ல கவிதைகள் என மெனக்கெட்டு கொண்டுவந்திருக்கிறார்கள். வாழ்த்துகள் நண்பரே.
அவரது கவிதைத் தொகுப்பான என் முதுகுப்புறம் ஒரு மரங்கொத்திக்கு நான் எழுதிய அணிந்துரை இங்கு ...


மழை போலான கவிதைகள்...

அநாதரவாக மழை பெய்யுமா. மழை யாருக்காவது அநாதரவாயிருக்குமா அல்லது மழைக்கு யாராவது அநாதரவாக இருந்துவிட முடியுமா.? மழையுடன் முரண்பட்டுவிட்டு பிறகென்ன வாழ்வு. மழை அனைத்து உயிர்களுக்கும் ஆதரவாகத்தான் பெய்கிறது. மழை போலத்தான் கவிதைகளும். எல்லா நேரங்களிலும் மனிதத்துக்கு ஆதரவாகவே, உயிர்களுக்கு ஆதரவாகவே மழையைப் போலவே பெய்கின்றன கவிதைகள். கவிதைகளுக்கு ஒருவன் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டால் போதும்; கவிதை இறுக அணைத்துக் கொள்ளும் , வலிகளுக்கு மருந்தாகும், போராட்டக் குரலாகும், சறுக்கல்களில் தாங்கிக் கொள்ளும், அழும் வேளைகளில் அணைத்துக் கொண்டு தேற்றும்.

கவிதைகள் செய்ய வேண்டியவையல்ல, மலர வேண்டியவை அல்லது பிறக்க வேண்டியவை. வற்புறுத்தலின் பொருட்டோ, வேண்டுகோள்களின் பொருட்டோ கவிதை செய்ய முடியாது செய்தாலும் அது கவிதையாக இராது. சூழல்களுக்கு ஏற்ப அனிச்சையாக அவை கவிஞனிலிருந்து மலரும். அத்தருணம் கவிஞனும் முன் அறிந்திலன். அத்தருணத்தைத் தடுத்துவிடவும் கருவியில்லை.

ஃபிரோஸ்கான் ஜமால்தீனிடம் நிறைய சொற்கள் இருக்கின்றன. அவை கவிதைகளாக வடிவம் பெறுகின்றன இவரது தன் முனைப்பில். எப்போதும் கவிதைக்கான சொற்களுக்கு நாம் அலைய வேண்டிய அவசியம் இல்லை. நம்மைச் சுற்றிலும் நிறைந்து கிடக்கின்றன கவிதைகள். கண்டெடுக்கத்தான் கலைக்கண் தேவையிருக்கிறது நமக்கு. இவரது இந்தக் கவிதை, இயல்பான தாய்மையின் பதிவு தான். கவிதைக் கண்கள் திறந்து கொண்டதால் ஒரு தாய்மையின் சக உயிர்களின் மீதான அரவணைப்பு கவிதையாகியிருக்கிறது.

தாய்க்குணம்

கரப்பான் பூச்சி
மயிர்க்கொட்டிப் புழு
பல்லி - எனப் பார்த்து
அம்மா பயந்து கொள்ளும் பட்டியலில்
பூனையும் உண்டு
நேற்றிரவு பக்கத்து வீட்டுப் பூனையின்
பிரசவத்தின் போது
அம்மா கூடவே இருந்தாள்.
எங்க வீட்டு நாயின் பசி வேட்டைக்கு
பூனைக்குட்டிகள் ஆளாகிவிடக்கூடாது என்பதற்காய்

தாய்மையின் ஸ்பரிசத்தைத் தந்து போகின்ற எந்தக் கவிதையும் நல்ல கவிதைதான். நவீனச் சொற்களும், அடர்த்தியான உட்கட்டமைப்பும் அவசியமற்றது தான் அந்த ஸ்பரிசத்தின் முன். அப்படியான கவிதை தான் இது.

பொய்களால் தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது மனித வாழ்வு. அன்றாட நிகழ்வுகளிலும் , நமது வாக்குகளிலும் உண்மையைப் புறந்தள்ளிவிட்டு பொய் நம்மைச் சூறையாடி பல காலம் ஆகிவிட்டதல்லவா. உண்மையை மட்டுமே பேசிக் கொண்டிருப்பவன் எனச் சொல்லிக்கொள்வதில் தான் ஆச்சர்யம் அடங்கியிருக்கிறது. பொய் அத்தியாவசியமாகிவிட்டது.


நமது பொய்களை நம்பும் படி ஆக்குவதும் அவற்றை உண்மையாக்குவதும் தான் நமது வெற்றிக்கான, இருத்தலுக்கான செயல்முறை என்றாகிவிட்டது. என்றாலும், பொய்யின் கோரமுகத்துக்குப் பின் எப்போதும் ஒளிந்து கொண்டிருக்கும் உண்மையின் பயந்த முகம் சொல்லும் ஒரே ஒருவனையாவது உறுத்திக் கொல்லும்.

பச்சைப்பொய்

தீராப்பசி கொண்டலையும் நாக்குக்குப்
பொய்களைப் புசிப்பதென்றால்
அலாதிப் பிரியம்
அதுவும்
பச்சை பச்சையாகப் புசித்துவிடுவதில்
அபாரம்
புசித்தலுக்குப் பின்
தன் உதடுகளால் சொட்டும் குருதியில்
சில நேரம் காணக்கிடைக்கலாம்
பொய்களின் உண்மை முகம்

உலகின் ஆதி உயிர் எதிர்கொண்ட முதல் பெரும் சரிவு துரோகத்தில் தான் தொடங்கியிருக்கும்.
துரோகத்தின் கரங்கள் எப்போதும் நமது குரல்வளையை நெறிக்க நெருங்கியபடியே தான் இருக்கின்றன. மதியுள்ளவன் தப்பிக் கொள்கிறான். ஏமாந்தவன் இழந்து விடுகிறான். சக மனிதனின் சறுக்குதல்களுக்கும், வஞ்சிக்கபட்டவனின் தேற்றுதல்களுக்கும் நீளும் முதல் கரம் கவிதைக் கரமாக இருப்பதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது. கவிதையின் வேலையும் கவிஞனின் வேலையும் அதுதானே. இங்கு கவிஞன் அக்குணத்தை அழகாக வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.
நீட்டும் கை

ஒரு துரோகத்தின் ஆர்ப்பரிப்புக்குள்
மறைந்திருக்கிறேன்
அவற்றைத்தாண்டி
என்னை மீட்ட
யார் தான் வருவார்
அகந்தையின் ஆரவாரத்துக்கடியில்
வஞ்சகத்தின் பதுங்குகுழியினுள்
கோபத்தின் திமிறலில்
அடர்ந்த வனத்தினுள் அறியப்படாத
வண்ணத்துப்பூச்சியின் முட்டை போல
ஒளிந்திருக்கிறது அவனது ஆன்மா
பிடிவாதத்தை விட்டு வரச்சொல்லி
அடம்பிடிக்கும் தனிமையை உடைத்தெறிந்து
அவனை மீட்க
நீட்டும் கைகள் என்னுடையது.

துரோகத்துக்கு உள்ளானவனுக்கு ஆதரவாகவும், எளியோர்க்கான ஊன்றுகோலாகவும் நீளும் கவிஞனின் கைகளுக்கு பிரியமாகக் கைகுலுக்குகிறேன்.

ஃபிரோஸ்கான் ஜமால்தீனின் தொகுப்பில் நிறைய நல்ல கவிதைகள் காணக் கிடைக்கின்றன. அதை விடவும் மகிழ்ச்சியளிப்பது நல்ல கவிஞன் காணக் கிடைப்பது. கவிதைகளின் கட்டமைப்பிலும், பொருள் தேர்தலிலும், சொற்களிலும் நம்பிக்கைக்குரிய கவிஞன் தென்படுகிறான். இவை யாவற்றையும் விட பெருமகிழ்ச்சியளிப்பது இந்தக் கவிதைகளில் தெரியும் மனிதமும் அன்பும். அவை இந்தக் கவிதைகளுக்குக் கூடுதல் உயிர்ப்பைத் தருகின்றன. நல்ல கவிதைகளை இன்னு கூடுதலாக அணி செய்கின்றன.

ஃபிரோஸ்கான் ஜமால்தீன் தன்னைக் கவிதைகளின் வசம் ஒப்படைத்திருக்கிறார். கவிதைகள் இவரைக் காப்பாற்றும். நல்ல கவிதைகளின் வரம் அது.

மனமார்ந்த நல்வாழ்த்துகள் கவியே ...

4 கருத்துகள்: