திங்கள், 13 ஜூலை, 2020

மனிதம் போற்றும் ஒரு கிராமத்து நதி -

பொள்ளாச்சி கம்பன் கலைமன்றம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, கவிஞர் சிற்பி கவிதைகளில் மனித நேயம் எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வாசித்துள்ளேன்... 

இங்கு கேட்கலாம்


அல்லது இங்கேயே வாசிக்கலாம் 😊

சிற்பி கவிதைகளில் மனித நேயம்

கவிஞர் எழுத்தாளர் சாகித்ய அகாடெமி விருதாளர் எங்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கான இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் நல்வழிகாட்டி, எங்களின் முன்னத்தி ஏர் கவிஞர் சிற்பி ஐயா அவர்களின் கவிதைகளில் மனித நேயம் என்பது இங்கு நான் பேசவிருக்கும் தலைப்பு

பல லட்சம் சொற்களைக் கூர் தீட்டி, பல்லாயிரக்கணக்கான கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும், இன்ன பிற இலக்கிய ஆக்கங்களாகவும் இந்தத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு ஒரு கொடையெனத் தந்திருக்கும்.. தந்து கொண்டிருக்கும் 85 வயதைத் தொடவிருக்கும் கவிக்கோ சிற்பி அவர்களின் கவிதைகள் பற்றி  நான் எனது பார்வையில்
பகிர்கிறேன்.

மலையாளக் கரையில் விதையாகி தமிழ் நிலத்தில் செழித்து வளர்ந்த சிற்பி எனும் பெருமரம் தனது நறுநிழலால் தமிழ் இலக்கியத்தை 85 ஆண்டுகளாக ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறது. இப்பெரு மரத்தின் நிழலினிது, பூ இனிது, காய் பழம் இலை கிளை என யாவும் இனிது. நிழல் இனிது என்பதை எடுத்துச் சொல்வது போலானது நான் எடுத்துக் கொண்ட தலைப்பு. தனது கவிதைகளை ஒரு பிரம்மாண்ட வெளியில் கட்டமைத்துக் கொண்ட கவிஞர் சிற்பியிடம் மனிதம் போற்றும் சொற்கள் அதிகம் என்பதும் உண்மைதான் இயல்பாகவே.

இங்கு முதலில் மனிதம் என்ற சொல் எப்படிப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பதே ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய ஒன்றாயிருக்கிறது. காரணம், அறம், வள்ளுவம், கற்பு, ஆண்மை  போன்ற சொற்கள் எப்படி மேலோட்டமாகப் புரிந்து கொள்ளப்பட்டதோ அப்படியே மனித நேயம் என்ற சொல்லும் மேலோட்டமாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. மனிதநேயம் என்ற சொல்லுக்கான பரவலான நமது புரிதல் என்பது சக மனிதன் பால் அன்பாய் இருப்பதும், தன்னினும் கீழுள்ள மனிதனுக்கு இரங்குதலும் என மனிதனைச் சுற்றியே இருக்கிறது.. தமிழ்க் கவிதை அவ்வளவு குறுகலாகச் சிந்தித்தது இல்லை காக்கை குருவி எங்கள் சாதி என்றும், உயிர்களிடத்து அன்பு வேண்டும் என்றும், உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் என்றும்  பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் எனவும் தமிழ்க் கவிதைகள் சக மனிதர்களுக்கு மட்டுமல்லாது சக உயிரினங்கள் யாவற்றுக்கும் இரங்கி வந்திருக்கிறது. நானும் மனிதநேயம் என்பதை மனிதம் என்று தான் புரிந்து கொள்கிறேன். மனிதம் என்பதை சக உயிரினங்கள் மற்றும் நிலம் ,நிலத்தின் அஃறிணைகள் அனைத்தின் மீதும் பெருக்கெடுக்கும் அன்பு என்று தான் புரிந்து கொள்கிறேன். தமிழ் மரபை மாறாது கடைபிடிக்கும்  சிற்பி எனும் மகாகவிஞனின் கவிதைகளில் சக மனிதர்கள் மீதும் சக உயிரினங்கள் செடி கொடிகள் மீதும் மேலும் இந்த பூமியின் மேல் இருக்கும் இயற்கையின் படைப்புகள் அத்துணையின் மீதும்  பெருக்கெடுக்கும் அன்பு குறிப்பிடத்தக்கது.

ஒரு கவிஞன் காலத்தின் சகல மாற்றங்களையும் சவாலாக ஏற்றுக் கொண்டு எல்லாக் காலத்திலும் தன் கவித்துவத்தின் உச்சியில் அமர்ந்து ஆட்சி செய்வதை கவிஞர் சிற்பியிடம் வியந்து பார்க்கிறேன் எப்போதும்.  மரபுக் கவிதைகளில் புலமை பெற்று, புதுக் கவிதைகளில் புதுப் புது பாதைகள் சமைத்து இன்றைய நவீன கவிதை வரைக்கும் தனது கவிதைகளை காலத்தின் ஓட்டத்திற்கு ஈடாக நகர்த்தியபடியே சிற்பி எனும் கிராமத்து நதி பெருக்கெடுத்துப் பாய்ந்து வந்திருக்கிறது.

என்னிலிருந்து .....
என் அந்தரங்கங்களின்
ஊற்றுக்கண் திறந்து
என் மார்புகள்
புல்லரித்து
என் ரத்தக் குழாய்களில்
புல்லும் பூவும் மணந்து
என்னை முழுக்காட்டி
என்னையே கரைத்துக் கொண்டு..
அங்கிருந்து வருகிறது
இந்த நதி

என்று தன் கிராமத்து நதியின் மீதான காதலைக் காத்திரமாகச் சொன்னவர். தனது மண்ணையும் மண்ணின் சகல உயிர்களின் மீதும் அளவிலா நேசம் கொண்டிருக்கிறார். கிராமத்து நதியின் சுவையையும், தண்மையையும் தமிழ் இலக்கியம் காலத்துக்கும் மறக்காது.

பூக்கள்
பகலிலும் எரியும் விளக்குகள்
காய்கள்
மரத்தின் இளம் சேய்கள்
கனிகள்
வரும் சந்ததியின்
தாய்கள்

என்று சொன்னவர்; இலைகளை

அது நம் ஆடை
அது நம் உணவு
அது நம் கூரை என்று மரத்தையே கொண்டாடுகிறார் ( பூஜ்யங்களின் சங்கிலி )

ஒரு மரத்தை அது தரும் நிழலுக்காக மட்டுமல்லாது இலை,கிளை,வேர் என்ன சகலத்தையும் கருணைக் கண்களோடு பார்க்கும் கவிதைகள் கவிஞர் சிற்பி அவர்களுடையது.

எறும்புகள் போகும் வழியில்
ஒரு சின்ன வெடிப்பு
இறங்கி ஏறினால்
இரை நழுவிப் போகுமே
என்ன செய்தன எறும்புகள் ?

என்று எறும்புகளுக்கும் இரங்க கவிஞர் சிற்பியால் முடிகிறது.

அணு என்கிற அறிவியல் உண்மையையும் புரிந்து கொண்ட கவிஞர் சிற்பி இவ்வுலகின் ஒவ்வொரு அணுவையும் எவ்வளவு நேசிக்கிறார் என்று பாருங்கள்

கருமூலம் வந்தவர்க்கெல்லாம்
உயிரின்
திருமூலம் தெரிந்து விடாது
அணுக்களால் ஆனது
அண்டப் பெருவெளி
அணுக்களால் ஆனவை
கோள்கள் விண்மீன்கள்
அணுக்களால் ஆனவை
உலகம் உயிர்கள்
ஓரறிவுள்ளவை
ஆறறிவுள்ளவை
எல்லாம் அணுத்திரள்
கலவை அளவால்
உருவமும் குணமும்
செயலும் திறனும்
மாறுபட்டுள்ளன.
பிறப்பில் உயிர்ப்பதும்
இறப்பில் கரைவதும்
அணுக்களாகவே.
சுருங்கி விரியும்
அண்டப் பெருவெளியில்
பிறப்பும் இறப்பும்
ஆக்கமும் அழிவும்
அதன் விளையாட்டே
இதுதான் மூலம்!
இதுதான் மூலம்!
எல்லா உயிரையும்
உயிரில்லாப் பொருளையும்
நேசித்திருப்பதே
அணுக்கள் சொல்லும்
அர்த்தமுள்ள மதம்
அணுக்களே மூலம்
பரமாணுக்களே
அவற்றின் மூலம்
சூக்கும அணுக்களே
அவற்றுக்கும் மூலம்
அணுக்கள் அன்றி
யாரும் அசைய முடியாது
இதுதான் மூலம்!
இதுதான் மூலம்!

இவ்வுலகின் ஒவ்வொரு அணுவையும் இவ்வளவு நேசிப்பவரின் கவிதைகளில் நிறைந்து கிடக்கும் மனிதத்தை நான் வெறும் மனிதநேயம் என்று மட்டும் எப்படி எடுத்துப் பேசுவது. அது அந்தச் சிறிய எல்லைக்குள் அடங்கிவிட முடியாதது அல்லவா ?

 
மனிதன் பிறக்கு முன்
இந்த பூமி
பூச்சிகள், பறவைகள்
புற்கள், பூண்டுகள்
யானைகள், புலிகள்
மான்களுக்குத்
தானே சொந்தம்
 
அவற்றின் வாழ்விடம்
அவற்றின் தடங்களை
ஆக்கிரமித்திருப்பது
மனிதனே நீ அல்லவா ?

என்று இரங்குகிறார் கவிஞர். இந்த பூமி மனிதர்களுக்கானது மட்டும் என்றும் மூர்க்க வெறியோடு மனித இனம் காடுகள் மலைகள் வனஉயிரிகள் என அனைத்தையும் வேட்டையாடி தன் கோர நாக்குகளை சுவையூட்டிக் கொண்டிருப்பதை பதைபதைப்புடன் கேள்வியாக்கியிருக்கிறார் கவிஞர்.

வனத்தின் பேருயிரி என்று கவிஞர் வியந்து பார்க்கும் யானையப் பற்றிய கவிதையில்

துவண்ட தும்பிக்கை நீட்டி
அற்பக் காசுக்குப்
பிச்சை எடுப்பதும்
 
சர்க்கஸ் கூடாரத்தில்
சவுக்கடிச் சத்தத்தில்
கேலிக் கூத்தாய்
முக்காலி மீது
கூனிக் கூனிக்
குறுகி உட்கார்வதும்
 
காட்டின் கம்பீரத்துக்கு
வாய்த்த விதியா ( கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை )

என்று அங்கலாய்க்கிறார். காட்டின் கம்பீரம் யானை, நாட்டில் அதை ஒரு விளையாட்டுப் பொருளாக்கி விட்டோமே என்று வேதனைப் படுகிறார். வேடிக்கை பார்க்கும் பல்லாயிரக் கணக்கான கண்களில் வேதனையும் கண்ணீரும் பெருக்கெடுப்பது கவிதைக் கண்களில் தாம்.

மதக் கலவர
வன்புணர்வில்
பிறந்த குழந்தைக்கு
யார் கடவுள் ?

மனிதனுக்கும் இரங்குகிறார் இப்படி. மனிதன் தன்னையே இழிவாக்கிக் கொள்ளும் செயலில் பிறந்த ஒரு குழந்தைக்கு யார் கடவுள் என்று கேட்டபடியே உண்மையில் யார் கடவுள் ? எது மதம் ? என்கிற கேள்வியையும் முன் வைக்கிறார்

ஆதிவாசியைப் பற்றிய கவிதை ஒன்றில்

மலசன்,காடன், வேடன்
எல்லாம் நீங்கள் இட்ட பெயர்கள்
நீங்கள் அறிவீர்களா
கானுயிர் அனைத்துக்கும்
பெயர் வைத்த பெரிய மனிதன் அவனென்று

கேட்கிறார். நாம் புழங்குகின்ற பெயர்களில் பலவற்றை அவன் வைத்தான். அவனுக்கு இழிபெயரை நாம் வைக்கிறோம் என ஆதங்கம் கொள்கிறார்.

காணாமல் போன உனக்காக
காடுகள் காத்திருக்கும்
அருவிகள் புரண்டு அழும் என எங்கோ மரீஷியஸ் தீவில் வாழ்ந்து அழிந்து போன டோடோ பறவைக்காக கவிஞர் சிற்பியின் கவிதை இரங்குகிறது

தண்ணீர் சிநேகிதங்கள் எனும் கவிதையில் கவிஞரின் மீன்களின் மீதான அன்பும் அனுக்கமும் கூட காட்சியாகியிருக்கும்

சின்ன வயதில்
சிற்றாறு கூட்டி வைத்த
என் தண்ணீர் சிநேகிதங்கள்
ஓடும் நதி மீன் பண்ணையில்
ஒரு மீன் அடிவயிறு மிதக்கச்
செத்து மிதந்தாலும்
அன்றைக்கு முழுப் பட்டினி நான்
 

பறவைகள்,விலங்குகள், ஊர்வன, பறப்பன என உயிர்களிடத்தெல்லாம் இவ்வளவு அன்போடு இருக்கும் கவிஞர் மனிதர்களிடத்தும் மாறா அன்போடு இருக்கிறார் அழித்து வரைய முடியாத சித்திரம் என அம்மாவைக் குறிப்பிடும் இவர் அம்மாவை பல கவிதைகளில் நாயகியாக்கியிருக்கிறார், மனைவியையும் சம அளவில் கொண்டாடியிருக்கிறார். மற்ற உறவுகளையும் நண்பர்களையும் சான்றோர்களையும் தனது கவிதைக்குள் கொண்டு வந்து அமர்த்தியிருக்கிறார்.

ஒரு கவிஞன் தன் முற்காலத்தைத் தொழுதலும், சமகாலத்தைக் கவனப்படுத்தலும், எதிர்காலத்துக்கான சிந்தனைகளை விதைத்தலும் என தனது கவிதைகளை ஒரு வித்தையாக செய்யும் கலையை கவிஞர் சிற்பியின் கவிதைகளில் காண்கிறேன். ஆகவே தான் அவர் முன்மாதிரியாகவும் முன்னோடியாகவும் இருக்கிறார்.

சிற்பி எனும் தமிழ்ப் பெரும் கடலில் அவர் கொட்டி நிறைத்திருக்கும் செல்வம் அளப்பரியன. அவசரத்திலும், பத்து நிமிடம் பேச வேண்டும் என்கிற கால அவகாசத்திலும் நான் மிகச் சொற்பமான முத்துகள் சிலவற்றை எடுத்து உங்கள் முன் நீட்டியிருக்கிறேன். அதனால் என்ன தேனின் சுவையை உணர தேன் கூட்டின் மொத்தத் தேனையும் ருசிக்காவிட்டாலும் ஒரு துளித் தேன் போதும் தானே மொத்தமாக உணர. இங்கு நான் பகிர்ந்து கொண்ட கவித்தேன் துளிகள் போல ஒரு அடைத் தேன் இருக்கிறது கவிஞர் சிற்பியின் எழுத்துகளாக.

காலத்துக்கும் வாசித்துக் கொண்டாட வேண்டிய மகா கவிஞனின் கவிதைகளையும் மானுடம் போற்றும் மகத்தான மனிதனின் ஈர மனதையும் நாம் இன்னும் இன்னும் கொண்டாட வேண்டும் என வாசகர்களிடம் கேட்டுக்கொண்டும், இன்னும் பல்லாண்டு தமிழ்ப்பணியாற்ற கவிஞர் சிற்பி அவர்கள் நலமுடன் வாழ வேண்டிக் கொள்கிறேன்

நன்றி

13 கருத்துகள்:

  1. அருமை. கவிக்கோ சிற்பி அவர்களை மீண்டும் நினைவுகூர வைத்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. மதக் கலவர
    வன்புணர்வில்
    பிறந்த குழந்தைக்கு
    யார் கடவுள் ? அருமையான வரிகள்.

    பதிலளிநீக்கு
  3. தலைமுறைகள் தாண்டி அண்ணனின் கவிதைகள் பாதிப்பது மகிழ்ச்சி. ஒரு கையில் நீங்கள் நீட்டிய பேழையிலிருந்து ஒரு முத்தையும் மறுகையில் நீட்டிய கிண்ணத்திலிருந்து ஒரு தேக்கரண்டி தேனும் எடுத்துக்கொண்டேன். பகிர்வுக்கு நன்றி பூபாலன்.

    பதிலளிநீக்கு
  4. // தேனின் சுவையை உணர தேன் கூட்டின் மொத்தத் தேனையும் ருசிக்காவிட்டாலும் ஒரு துளித் தேன் போதும் தானே // oomm sirappu....Rasiththen

    பதிலளிநீக்கு