" கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி " - மகாகவி பாரதி
மகாகவி பாரதியின் வரிகளுக்கு இணங்கி, மகாகவியைத் தன் ஆசானாகக் கொண்டு வாழ்க்கையையே கவிதையாக, கவிதையையே வாழ்க்கையாக வாழ்ந்து வருபவர் கவிஞர் சிற்பி அவர்கள்.
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இன்று அகவை 85.
இருபதுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள், பத்துக்கும் மேற்பட்ட உரைநடை இலக்கிய நூல்கள் , பத்துக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், மேலும் புதினங்கள், நாடகங்கள், சிறுவர் இலக்கிய நூல்கள், இலக்கிய வரலாற்று நூல்கள் என தன் பரந்துபட்ட எழுத்துகளால் ஒரு மாபெரும் எழுத்து உலகத்தைக் கட்டமைத்து தமிழின் மிக முக்கியமான கவியாகவும் எழுத்து ஆளுமையாகவும் , முன்னோடியாகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர்.
மொழிபெயர்ப்புக்கு ஒரு முறை, சுய படைப்புக்கு ஒரு முறை என இரண்டு முறை சாகித்திய அகாடெமி விருது பெற்ற பொள்ளாச்சியின் மிகப்பெரிய இலக்கிய அடையாளம் இவர். அது மட்டுமல்லாது , இவரால் அடையாளம் காணப்பட்டு அங்கீகாரம் செய்யப்பட்ட எழுத்தாளர்களின் எண்ணிக்கை இவர் அகவையினும் அதிகம் இருக்கும். எந்தப் பிரதிபலனும் இல்லாது இவர் செய்யும் தமிழ்ப்பணிகளில் இளையவர்களை கவிதைக்குள் இழுத்து வருவதும் ஒன்று. நதி என்றைக்கு பிரதிபலனை எதிர் பார்த்திருக்கிறது. அது ஓடிக் கொண்டிருக்கிறது தன் பாதையில்...
அவர் பிறந்த மண்ணில் வாழ்வதற்கும், அவர் வாழும் காலத்தில் வாழ்வதற்கும், அவர் அருகாமையில் இருந்து அவரை ரசிப்பதற்கும் பெரும் பேறு பெற்றவனாயிருக்கிறேன்.
நம் காலத்தின் மகத்தான ஆளுமை அவர். ஊரடங்குக் காலம் இல்லாமல் போயிருந்தால் இந்த எண்பத்து ஐந்தாவது பிறந்தநாளை நாம் மிகச் சிறப்பாகக் கொண்டாடி இருப்போம் ஒரு கவிதைத் திருவிழாவாக. இப்போதும் இணையம் வழியாக பேச்சு எழுத்து என கவிஞர் சிற்பியைக் கொண்டாடி வருகிறோம்.
கவிஞர் சிற்பி மகத்தான கவிஞர். மிகச் சிறந்த எழுத்தாளர் என்பதில் எள்ளளவும் மாற்றுக் கருத்து இல்லை. அதைத் தாண்டி நான் அவரிடம் வியந்து பார்ப்பது அவர் ஒரு தீவிர வாசகர். சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரைக்கும் நீண்டு பரந்தது அவரது வாசிப்புப் பரப்பு. அவரது கைகளுக்கு வந்து சேரும் எல்லாப் புத்தகங்களையும் அவர் வாசித்து விடுகிறார். அவருடன் உரையாடும் பொன் தருணங்களில் அவரது வாசிப்பின் எல்லைகளை உணர முடியும்.
தமிழ் இலக்கியங்கள், மலையாள இலக்கியங்கள், ஆங்கில மற்றும் பிற மொழி இலக்கியங்கள் என ஒரு தகவல் சுரங்கமாக அவர் நம்மோடு உரையாடும் போது நம் முன் ஒரு மலைச் சூரியன் போல ஒளிர்வார். நாம் கண்கள் கூச அவரது உரை வெள்ளத்தில் மிதக்கலாம்.
இன்றைய நவீன கவிஞர்கள் எழுத்தாளர்கள் வரைக்கும் அனைவரது படைப்பையும் வாசித்துவிடுகிற அவர் இளைஞர்களின் சிறந்த கவிதைகளை தன்னுடன் அழைத்துச் செல்ல தயங்கியதே இல்லை.
பொள்ளாச்சி இலக்கிய வட்ட நண்பர்கள் இணைந்து ஐயாவின் பிறந்தநாளுக்கு அவரது கவிதைகளை வாசித்தும், அவருக்காக நாங்கள் கவிதை எழுதி வாசித்தும் எங்கள் அன்பை ஒரு காணொலியில் காட்டியிருக்கிறோம். அவசியம் முழுதும் பாருங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக