விதி
அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
அலைமோதிக் கரைகிறது.
எனக்கதன் கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை தெரியவில்லை
❤
ஆளிருக்கும் வீட்டில்
அழைப்பு மணி
அமுக்கி விட்டு
ஓடுவதில்
குழந்தைகளுக்கிருக்கும்
பரபரப்பே
கவிதையில்
கவிஞர்களுக்கு
❤
சாப்பாடில்லாத பிள்ளைகள்
சாப்பாடில்லாத பிள்ளைகள்
புழுதிக் காலுடன்
அடுப்பெரிகிறதை
வந்து வந்து பார்த்து
விளையாடப்போகும்,
பசியை வாசல்ப்படியிலேயே
விட்டுவிட்டு.
❤
யாரால் செமிக்க முடியும்
ஜெயிலுக்குப் பொறத்தால
நடக்கும் கல்யாணங்களில்
தோட்ட வேலைக்கைதிகள்
மாத்திரம்
வேலியருகே வந்து
இட்லியக் கெஞ்சி வாங்கி
மறைச்சபடி
உள்ளே ஓடற ஓட்டத்தை
யாரால்
செமிக்க முடியும்
❤
ஒரே மாதிரி
பிள்ளைகளின் பசியடக்க
புதிய வசவுகள் தேடி
மூலையடைவாள்,அம்மை.
பீடிகள் தேடிச்சலித்து,
யூனிபாரத்தை தேடச்சொல்லி
அன்பாய்க் கூப்பிடுவான்
‘ஒரே மாதிரி’வசவுகளில்
அழவும் மரத்துப்போன
பிள்ளைகளை
அப்பன்.
❤
என்பிலதனை
புழுவெனச்
சொருகிய வார்த்தைகளுடன்
தூண்டிலிட்டுக் காத்திருக்கிறான்.
கள்ளப்பட்டுப் போன மீன்கள்
எல்லை தள்ளி
வளைய வருகின்றன.
எல்லை தாண்டியோரின்
எலும்புகளை
குறிப்பாய் முதுகெலும்புகளை
வலையினடியில்க்
கனத்துக்காய்க் கோர்த்து
வீசுவோருண்டென
அவை பேசிக் கொள்வதைக்
கேட்க விடுவதில்லையவனது
‘ஞாபகங்களை அழிக்கும்
ஒரே ஞாபகமான பசி’
புழுவெனச் சொருகிய்
வார்த்தைகள்
மிதக்கிறது
தென்கடலெங்கும்
அவன் கை விட்ட
தூண்டிலுடன்...
❤
பயணம்.
கூட்டிலிருந்து
தவறி விழுந்த
குஞ்சுப்பறவை
தாயைப்போலவே
தானும் பறப்பதாய்
நினைத்தது.
தரையில் மோதிச்சாகும்வரை.
❤
அவளின் பார்வைகள்
காயங்களுடன்
கதறலுடன் ஓடி
ஒளியுமொரு பன்றியைத்
தேடிக் கொத்தும்
காக்கைகள்
❤
தொலைவில் புணரும்
தண்டவாளங்கள்
அருகில் போனதும்
விலகிப் போயின
❤
எச்சியிலைத் தொட்டியில்
ஏறிவிழும்
தெருநாயின்
லாவகம் எனக்கொரு
கவிதை தரப்பார்க்கிறது
❤
கரித்துண்டொன்றை
தரையில் பைத்தியக்
கிறுக்கலாய்ப் படம்
போட்டுச் சாகடிக்கிறேன்
எரித்துக்கொள்வதைவிட இது
எவ்வளவோ மேல்
❤
கூட்டிலிருந்து
தவறிவிழுந்த
குஞ்சுப்பறவை
தாயைப் போலவே
தானும் பறப்பதாய்
நினைத்தது
தரையில் மோதிச்சாகும்
வரை
❤
பகலின்
வெளிச்சத்திற்கேற்ப
தன் ஒப்பனைகளைக்
கலைத்துக் கலைத்து
மாற்றி மாற்றி
அழகு காட்டுகிறது
பிரகாரச் சிலை
வெளிச்சத்திற்கேற்ப
தன் ஒப்பனைகளைக்
கலைத்துக் கலைத்து
மாற்றி மாற்றி
அழகு காட்டுகிறது
பிரகாரச் சிலை
❤
மரங்கள்
நிழல் விரிப்பது
உதிர்ந்த
பூக்களுக்காகத்தான்
மனிதன் எதைத்தான்
பறித்துக் கொள்ளவில்லை
❤
எல்லாக் கிளைகளிலும் இலை
ஏதாவது சில கிளைகளில்
பூ
யார் கண்களிலும் படாமல்
வேர்
❤
பயணத்தில்
ஜன்னல் ஓரம்
கண் மூடிக்
காற்று வாங்குபவன்
போல்
கிடக்கிறான்
பனிப் பெட்டிக்குள்
பின்னகரும் மரங்கள்
போல வந்து
சாத்துயர் கேட்டுப்
போகிறார்கள்
❤
கனியாகப் பார்த்தால்
வியாபாரி
விதையாகப் பார்த்தால்
விவசாயி
வேராகப் பார்த்தால்
தத்துவவாதி
பூவை பூவாகவே
பார்த்தால்
படைப்பாளி
❤
நின்று பார்ப்பவனுக்குத்தான்
சித்திரம் வரைந்து காட்டுகிறது
இயற்கை
❤
மிகச்சிறந்த படைப்புகள்!
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை...இதில் ....மரங்கள்
பதிலளிநீக்குநிழல் விரிப்பது
உதிர்ந்த
பூக்களுக்காகத்தான்
மனிதன் எதைத்தான்
பறித்துக் கொள்ளவில்லை.....மிகவும் ரசித்தேன்.
அத்தனை கவிதைகளும் அருமை சார்
பதிலளிநீக்குபசித்த பிள்ளைகளின் பிம்பங்கள் விழிநீரால் மறைகின்றன.
பதிலளிநீக்குசாத்துயர் கேட்க வருபவர் பற்றி அன்றி மற்றவை ஏதும் பாதிக்காத தூரம் சென்றவரை சன்னலரோ காற்று வாங்கும் பயணியாய் அநித்ய ஒப்புமை ..
ஒவ்வொரு தனிப்பட்ட கவிதையும் சிறப்பு
சிறப்பான தேர்வு...
பதிலளிநீக்கு