புலியை நேரில் பார்த்திருக்கிறாயா அப்பா
என்றவள் கேட்ட போது
என் 37 வருடங்களை
நான் காணாத
வனங்களின் நாலா திசைகளிலும்
சுழற்றிப் பார்க்கிறேன்.
ஒரு முறையும்
ஒரு புலியையும்
நேரில் பார்த்ததில்லை
மகளே
காடுகளில் சுற்றித் திரிந்த
என் தகப்பனின் கதைகளை
நான் உனக்குச் சொன்ன போது
நானும் உடனிருந்திருப்பதாக
நீ ஒரு நினைவின் படத்தை
வரைந்து வைத்திருக்கிறாய்
நான் காடு புகும் காலங்களிலெல்லாம்
காடு கான்கிரீட் கலவைகளைப்
பூசியிருந்தது
புலிகளை நான்
உன்னைப் போல
தொடுதிரையிலல்லாமல்
புத்தகங்களில்
முத்தமிட்டேன் அவ்வளவே
பள்ளிச் சுற்றுலாக்களில்
பயணக்கட்டணங்கள்
புலியினும் அதிகம்
பயமுறுத்தியதை உன்னிடம்
சொல்வதற்கில்லை
நம் தேசிய விலங்கை
சரணாலயங்களின் கூண்டுகளுக்குள் கூட
பார்த்ததில்லையா என்று
மேலும் மேலும்
நீ புலி வாலைப் பிடித்திழுத்த போது
நான் புலியைப் பார்த்து
உறுமத் தொடங்கிவிட்டேன்
அது குதித்தோடி விட்டது
நம் அறையை விட்டு
கவிதையை வாசிக்கையிலேயே எல்லோருக்குள்ளிருந்தும் ஒரு புலி உறுமும் சத்தம் கேட்கிறது. அறையை விட்டு ஓடினாலும், வாசித்தவர் மனசில் நீங்கள் பிடித்த வாலைப் பிடித்திழுத்த புலி இன்னமும் அசையாமல் நிற்கிறது. வாழ்த்துகள்... கவிஞரே.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குவாழ்த்துகள்
நாம் சொல்லும் கதைகளில் நம்மை கதாநாயகராக்கி விடுகின்றன குழந்தைகள்
பதிலளிநீக்குசிறப்பான பதிவு
பதிலளிநீக்கு