சனி, 25 ஜூலை, 2020

புலம்பெயர் வேர்களிலும் அப்பிக் கிடக்கும் மண்வாசம்

     

     நதியில் எப்போதோ மூழ்கிப்போன கூழாங்கல் ஒன்று விடும் மூச்சு, காலம் முழுவதும் நீர்க்குமிழிகளாக மேலே வந்த வண்ணம் இருக்கும். நதியறிந்த ஒன்று, கல்லறிந்த ஒன்று அந்த பெருமூச்சுகளின் வெப்பம். ஒரு வகையில் நாம் நகரத்து நதியில் அமிழ்க்கப்பட்ட கூழாங்கற்கள் தாம். நம்மை வாழ்க்கையும் பொருளாதாரமும் சேர்ந்து நகரத்துத் தெருக்களில் இழுத்து வந்து வாழ வைத்து விட்டாலும் நமது வேர்கள் ஏதோ ஒரு கிராமத்தின் சாணம் மொழுகிய வீதிகளில் தான் படர்ந்து கிடக்கும். நமது நாட்கள் நகரத்தில் நகர்ந்தாலும் நாம் வாழ வேண்டியது நாம் வாழ விரும்புவது நமது மிகப் பழைய வாழ்க்கையைத் தான். ஒரு கிராமத்தானாக இந்த வாழ்க்கையை வாழ்வது என்பது எப்போதும் கொண்டாட்டமானது. அந்தக் கொண்டாட்டத்தை, மகிழ்வை, கிராமத்து வாழ்க்கையும் கிராமத்து அசல் மனிதர்கள் தரும் மன நெகிழ்வை கவிதைகளாக நமக்குத் தந்திருக்கிறார் கவிஞர் ஆண்டன்பெனி.

Image may contain: 1 person, standing, text and outdoor

கிராமத்து மனிதர்களின் வெள்ளந்தி மனதை, மிக விநோதமான ஆனால் மிக அழகான மனித இயல்புகளை, பெயரில்லா மிக நெருக்கமான உறவுகளை, இந்தத் தொகுப்பின் வழியாக கவிஞர் அறிமுகப் படுத்துகிறார். உண்மையில் இது அறிமுகமன்று ஆவணம். ஆவணப்படுத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அடுத்த நூற்றாண்டில் நாம் இப்படியான உண்மையான மனிதர்களையும் உறவுகளையும் இழந்து விடுவோம் என்றே தோன்றுகிறது.

அங்காயி, காட்டு ரோசா, முத்துக்காள,முத்தாலம்மா,சுப்பையா,தவசி கிழவன், பூமாரி, மரிக்கொழுந்து என மிக அற்புதமான மனிதர்களின் சித்திரங்களை இந்தத் தொகுப்பு பதிவு செய்கிறது. கருப்பன், அம்மன் என நாம் தூரத்தில் பய பக்தியுடன் தள்ளி வைத்திருக்கும் கடவுள்களை வெகு நெருக்கமான கிராமத்துக் கடவுள்களாகப் பதிவு செய்கிறது, தட்டான் குழி, பாவைக் கூத்து என கிராமத்தின் நிழல் பாவிய நினைவுகளை மிக அழகாகப் பதிவு செய்கிறது. டூரிங் டாக்கீஸ், ஐஸ் வண்டி என இந்தத் தொகுப்பு நம்மை ஒரு கிராமத்துக் கூரை வீட்டின் திண்ணையில் அமர்த்தி வேப்பமரத்தின் மென் காற்றை உடலெங்கும் பரவச் செய்து மகிழ்ச்சியின் சாரலை நம் மீது தெளித்தபடியிருக்கிறது ஒவ்வொரு பக்கங்களிலும். மொத்தத்தில் இந்தத் தொகுப்பு ஒரு அழகான கிராமத்தின் அசலான மனிதர்களின் ஆவணம்.

பேச்சு வழக்கில், வட்டார வழக்கில் ஒரு முழுமையான கவிதைத் தொகுப்பு. இதில் கவித்துவத்தை விடவும் ஒரு வாழ்வியல் பதிவாகியிருக்கிறது. வாழ்வியல் கவிதையாகும் போது அதன் பயன்பாடு மிக அதிகம்.  கிராமம் என்றதும் நிலம் காட்சிப் படுகிறது. மனிதனின் ஆன்ம மற்றும் பொருளாதார பலம் நிலம். நிலத்தோடு புலர்ந்து நிலத்தோடு புதையும் வாழ்வு தான் கிராமத்து வாழ்வு. நிலத்தை இழந்து, வாழ்க்கையை இழந்து, மனிதர்களை இழந்து, உண்மையை இழந்து இந்த வாழ்க்கைக்கு வந்து சேர்ந்திருக்கிறோம் என்பது இந்தத் தொகுப்பை வாசித்து முடிக்கும் போது நம் அறிவைச் சுடும் உண்மையாக உரைக்கும். 

உறவுகளின் பலம் என்பது உறவு முறைப் பெயரில் இல்லை அதை நினைத்த மாத்திரத்தில் நம் மனதுக்குள் படரும் நம்பிக்கையின் ஆணி வேரில் இருக்கிறது. எதிர் வீட்டுக்காரனின் பெயர் கூட அறியாத நகரத்து வாழ்க்கை எங்கே ? மொத்த கிராமமும் சொந்த உறவைப் போல உறவாடி வாழ்கின்ற வாழ்க்கை எங்கே ? கவிஞர் ஆண்டன் பெனி இந்தத் தொகுப்பின் வழியாக காலச் சக்கரத்தை ஒரு சுழற்று சுழற்றி விடுகிறார். நமது காலத்தின் பொன் பரப்பில் நாம் சில கணங்கள் வாழ்ந்து திரும்பும் வரத்தை நமக்கு வழங்கியிருக்கிறார். நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது, நம்மிடம் மிச்சம் மீதியிருக்கும் கொஞ்சநஞ்ச கிராமங்களையும் , உறவுகளையும் சிதைந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதைத்தான். 

தனது முந்தைய தொகுப்புகளின் முத்திரைகளை முற்றிலுமாக மறைத்துக் கொண்டு இந்தத் தொகுப்பில் வேறு ஒரு உயரத்துக்குச் சென்றிருக்கிறார் கவிஞர். ஒவ்வொரு கவிதையிலும் ஒரு கதை இருக்கிறது, ஒரு கதாநாயகன் அல்லது நாயகி இருக்கிறார்கள். அவர்கள் நாம் பால்யத்தில் சந்தித்திருக்கக் கூடிய சாத்தியமான முகங்களோடு இருக்கிறார்கள். அவர்களை தரிசிப்பது மனதை நெகிழச் செய்கிறது.

இந்தக் கவிதைத் தொகுப்பின் பக்கங்களுக்குள் புகுந்து குதூகலமாக ஓடி விளையாடியபடி இருக்கும் சிறுவன் நான் தான். உணர்ந்து வாசித்துப் பாருங்கள் இந்தக் கவிதைகளை .. அது நீங்களாகவும் இருக்கலாம்.

தட்டான் குழி தொகுப்பிலிருந்து சில கவிதைகள் :

எந்தாயி

திலகராஜ் துணிக்கடையில
தம்பிக்குத் துணியெடுக்கலாம் அத்தேனு
மதினி சொன்னதும் ‘ஓங் கொழுந்தனுக்கு
நீ எங்கனாலும் எடும்மா’னுருச்சி அம்மா.

புருசன் கூடப்பொறந்தவன் கொழுந்தனாலும்
மதினி என்னைய தம்பினுதான் சொல்லும்
அண்ணங்கிட்ட பேசும்போதுகூடப்
பொதுவா தம்பின்னு சொல்லுமே தவிர
தவறிக்கூட உங்கதம்பின்னு சொல்லிடாது.

‘நம்ம இனத்துல புள்ள இல்லனா
ரெண்டாந்தாரம் கட்டுறதொண்ணும்
குத்தமில்லையேன்னு’ பேச்சி வந்தபெறகு
மதினி வீட்டோட பேசுனதே எம்மூலமாத்தான்.

ரெண்டாந்தாரம் கல்யாணம்
வீட்டோடனு முடிவானாலும்
மதினியோட கண்ணுத்தண்ணி
வத்துறவரைக்கும் காத்திருந்தது வீடு.

கல்யாணத்துக்குத் துணி
அம்மையார்பட்டிக் கடையிலனு முடிவானாலும்
எனக்குத் திலகராஜ் கடைதான்னு
மதினி முன்னமே முடிவு பண்ணியிருக்கும் போல.

‘ஏத்தா… இந்தத்துணி இவனுக்கு
நல்லாருக்குமில்ல’ன்னு ஆத்தா கேட்டதும்
என்னை நெஞ்சோட அணைச்சி
‘எம்புள்ளைக்கு எதுனாலும் நல்லாத்தான் இருக்கும்’னது

அண்ணாந்து பாத்தேன்
ஒசரத்துல மதினி முகம்
ஆத்தா மொகம்போலவே இருந்திச்சி.


பேச்சியம்மா ஊரு


பேச்சி ஒரு காட்டு சிறுக்கி

நெதமொரு பூத்தேடி காடெல்லாம் திரியுறவெ

புதுசாப் பூ கெடைக்கலீன்னு ஒருநா

ஊமத்தம்பூவயே வெச்சிக்கிட்டா

தலப்பூவுக்குக் காடெல்லாம் அலைஞ்சவ

சொல்லித்தான் அம்பூட்டுப்பூ

இருக்கிறதே ஊருக்குத் தெரியும்

தலயில வெக்க அதெல்லாம் லாயக்கில்லன்னு

பூக்கார ராசய்யாண்ணன் எம்புட்டுச் சொல்லியும்

காதெடுத்துக் கேக்கிலியே அவெ

பொண்ணுபாக்க வாரவுகளும்

கிறுக்கச்சியா இருப்பாளோன்னு

சொல்லிக்காமலே போயிட்டாகெ

ஆத்தா அப்பன் செத்தப்போ

அத்தன மால சாத்தியும்

அவ கொண்டாந்த பூவப் போட்ட பெறகுதான்

பொணத்தையே எடுக்கவிட்டா

தனிக்கட்டையா வாழப்பிடிக்காம

காட்டுக்குப் போனவள

ஊரே தேடியும் கெடைக்கலெ

எந்த வருசமும் இல்லாத மழயும்

அந்த வருசம் கொட்ட

காடெல்லாம் பேச்சிப்பூ வாசம்

இப்பவும் ஊருல

பேய்யுறதும் பேச்சி

பூக்குறதும் பேச்சி

வெளயுறதும் பேச்சி


இரவில் தூரமாகும் ஊர்


கோவில்பட்டியிலிருந்து

புளியங்குளம் கிராமத்திற்கு

இரவில் போவதென்றால்

பத்துக் கண் பாலத்தில்

ஒரு பேயையும்

ஒற்றைப் பனைமர முனியையும்

மஞ்சனெத்தி மரத்தில் இருக்கும் ஆவியையும்

தாவுபால வெள்ளைப் பிசாசையும் கடந்தே

இன்று வரை ஊர் வழக்கத்தில்

வெகுதூரம் பயணிக்கிறோம்


பகலில் போவதென்றால்

காலேஜ் தாண்டியதும்

ஒத்தக்கடை நிறுத்தத்தில்

வலது பக்கம் திரும்பினால்

ஊர் வந்துவிடுகிறது






3 கருத்துகள்: