திங்கள், 14 செப்டம்பர், 2015

மீன் நிறத்திலொரு முத்தம் - சக்திஜோதி கவிதைத்தொகுப்பு வாசிப்பு அனுபவம்

மீன் நிறத்திலொரு முத்தம் - சக்திஜோதி

சக்திஜோதி அவர்களின் கவிதைத் தொகுதிகளின் தலைப்புகளுக்குள் உள்ள ஒரு தொடர்பை நான் மிகவும் ரசித்தேன். அவரது முதல் தொகுப்பு நிலம் புகும் சொற்கள், இரண்டாவது கடலோடு இசைதல், மூன்றாவது எனக்கான ஆகாயம், நான்காவது காற்றில் மிதக்கும் நீலம், ஐந்தாவது தீ உறங்கும் காடு. முதல் ஐந்து தொகுப்புகளின் தலைப்பிலும் ஐம்பூதங்களைக் கொண்டுவந்து விட்டார். ஆறாவது தொகுப்பு சொல் என்னும் தானியம், ஏழாவது தொகுப்பு பறவை தினங்களைப் பரிசளிப்பவள், எட்டாவதான இந்தத் தொகுப்பு மீன் நிறத்திலொரு முத்தம். இவற்றுக்குள்ளும் ஒரு நூலிழைத் தொடர்பு இருக்கின்றதாகத்தான் எண்ணுகிறேன். ரசனை மிகுந்த தலைப்புகளே தனித் தனிக் கவிதைகளாக இருக்கும்பட்சத்தில் கவிதைகள் நம் நம்பிக்கையை ஆழப் பெற்றுவிடுகின்றன.



தொடர்ந்து பல ஆண்டுகளாக கவிதைகளில் இயங்கி வருபவர். தனக்கென பிரத்யேகக் கவிதை மொழியைக் கொண்டுள்ளவர் என்ற சிறப்புகளுடன் இவரது கவிதைகளைக் கைகளில் எடுக்கலாம்.

இந்த உலகமே ஒரு நாடக மேடை; நாமெல்லாம் நடிகர்கள் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். நமது நாடகங்கள் நொடிக்கொரு தரம் காட்சி, மேடை,இடம் என சகலத்தையும் மாற்றிக் கொண்டே நிகழ்கின்றன என்பதுதான் நமது வாழ்வின் ஆதாரப்புள்ளி. சக்தி ஜோதியின் ஒரு கவிதையை வாசித்து விட்டு அதை நமது ஒரு முகத்துடன் பொருத்திப் பார்க்கிறேன். அந்தக் கவிதை அந்த முகத்தின் அத்தனை பாவங்களுடன் அழகாகப் பொருந்திப்போகிறது.

நகர்தலின் அடையாளம்

திரை இறக்கப்பட்டது
காட்சி முடிந்தது
கனவிலிருந்து வெளியேறுவதுபோல
பார்வையாளர்கள் நகர்ந்து சென்றார்கள்

கலைஞர்கள்
தங்கள் ஒப்பனைகள் கலைந்து
முகங்கவிழ்ந்து கண்ணீர் பெருக்கவும்
யாருமறியாது தமக்குள் சிரிப்பதுமாக
அவரவர் தங்களை
மற்றுமொரு அடையாளத்திற்குள்
புகுத்திக் கொண்டார்கள்

ஒருவரும் அறிந்திருக்கவில்லை
அடுத்த நாளின்
தங்கள் அடையாளம் என்னவென்று
ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு
முன்னுணர்ந்து நகர்தல் என்பது
அத்தனை எளிதல்ல

இந்தக் கவிதைக்கு கவிஞரின் அனுபவம் வேறானது, நான் இதை நமது இலக்கிய முகத்துடன் பொருத்திப்பார்த்துக் கொண்டேன். வார நாட்களில் வழக்கமான பணிகளுடன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நாம், வார இறுதி இலக்கியக் கூட்டங்களுக்காக முற்றிலும் வேறான நமது இன்னொரு முகத்துடன் வேறு அடையாளங்களுடன் உருமாறி கதை, கவிதை , இலக்கியம் எனப் பல்வேறு நாடகங்களை நிகழ்த்துகிறோம். பிறகு நாம் நம் வழக்கமான அடையாளத்துக்கோ அல்லது முற்றிலும் புதிய புதிய அடையாளங்களுக்கோ நம்மை மாற்றிக் கொள்கிறோம் அடுத்தடுத்த நாட்களில். வாழ்க்கை மனிதர்களுக்கு இதைத்தான் விதித்திருக்கிறது. பெரும்பாலும் நமது அடுத்த வேடம் எது என்பதை நாம் அறிந்திருப்பதே இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளை நேர்கொண்டு சடாரெனெ நாம் நமது ஒப்பனைகளை மாற்றிக் கொண்டுதான் ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறோம். அதைத்தான் பேசுகிறது இந்தக் கவிதை. இந்தக் கவிதையில் சொல்லப்பட்ட அனுபவம் பொதுவானது, அதை நமது அனுபவத்தோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளும் போது கவிதை ரசனை கூடுகிறது.

ஒரு கவிதையின் மொத்த அனுபவத்தையும் நமது அனுபவத்தோடு பொருத்தி ரசிக்கும் மனோபாவத்தைப் போல, ஒரு கவிதையின் ஒரு வார்த்தையை நாம் நமது வெவ்வேறு அனுபவங்களோடு பொருத்திப் பார்த்து உணரக்கூடும் என்பது தான் நவீன கவிதையின் புதிர்மை நிறைந்த ஒரு உத்தி. ஒரு கவிதையில் ஒரே ஒரு வார்த்தை அந்தக் கவிதையின் உயிராக இருக்கக் கூடும் எனில் அந்த வார்த்தைதான் கவிதையின்பால் நம்மை ஈர்க்கும்.

         அலைவு

அது ஒரு மாயவலை
அறிவாள் அவள்
இருந்தும்
மலர்கிறாள்
மிதக்கிறாள்
ஆட்படுகிறாள்
மேலும்
துன்புறுகிறாள்

வாழ்வின் மிகச்சாதாரணத் தத்துவத்தை சொல்லும் இந்தக் கவிதையின் மாயவலை என்னும் வார்த்தை தான் எத்தனை மாயத்தோற்றம் கொண்டது. இந்த மாயவலைக்கு நாம் என்ன உருவம் கொடுக்கிறோமோ அந்த உருவத்துக்கு உருமாறிக் கொள்கிறது இந்தக் கவிதை.
இந்த ஒரு வார்த்தையைத் தேர்ந்தெடுத்து ஆளும் உத்தி தான் கவிஞரின் வெற்றியாக இருக்கிறது. ஒரு கோடிட்ட இடத்தைக் கொடுத்து வாசகர்களை விருப்பத்துக்கு நிரப்பிக்கொள்ளச் செய்யும் உத்திதான் இது.

சக்திஜோதியின் கவிதைகளில் பெண்ணியம் மிக இயல்பாகவே வெளிப்படுகிறது. யார் குறித்தும் பெரிய குற்றச்சாட்டுகள் இல்லை. இருப்பினும் பெண்ணின் மென்னுணர்வுகள் இந்தத் தொகுப்பின் பக்கங்களில் பதிவாகியிருக்கின்றன. பெண்ணியம் பேசும் கவிதைகளுக்கென ஒரு டெம்ப்ளேட் இருப்பதாகப் பலர் குற்றம் கூறிக் கொண்டிருக்க, அவர்களுக்கு நான் சக்திஜோதியின் கவிதைகளைப் பரிந்துரைப்பேன். வலிந்து கொண்டுவந்த வார்த்தைகள் எதுவுமற்று இயல்பான வார்த்தைகளில் இயல்பான கவிதைகளைப் பெண்மொழியில் தந்திருக்கிறார். கவிதைகளில் ஆணென்ன பெண்ணென்ன, கவிதை கவிதைதான்.

காதலை, காமத்தை, முத்தத்தை அன்றலர்ந்த சிறுமலரின் மெல்லிதழ்களைப் போல மிக மென்மையாக இவர் கவிதைகளில் நிரம்பக் கையாண்டிருக்கிறார். சிறு உறுத்தலுமின்றி, செயற்கையுமின்றி ஒரு அனுபவக் கவிதையாக, கவிதை அனுபவமாக அது நிகழ்ந்திருப்பதாகவே தோன்றுகிறது.

காதல் காமம் மட்டுமல்ல, பெண்மையின் ப்ரத்யேகக் குணமான தாய்மை ததும்பும் கவிதைகளும் உண்டு. அப்படியான கவிதைகளில் ஒன்றுதான் இது



காவியா செடி

நல்லவேளை 
காவியா திரும்பிப் பார்க்கவில்லை
அவள் அப்படியெல்லாம்
திரும்பிப் பார்த்துவிடக் கூடாது என்றும்
நினைத்துக்கொண்டேன்

கிறுகிறுக்கும் பொன்வண்டைப்போல
மினுங்குபவளை மறைத்துக்கொண்டு
தளும்பும் கண்களுடன்
அவ்விடம் விட்டு நானும் நகர்ந்தேன்

சிறிய தோட்டத்தில்
அவள் நட்டுவைத்த இளம்தளிர்களுக்குத்
தண்ணீர் விடுவதைத் தவிர
இனி வேறு என்ன செய்ய


தாய்மையின் அன்பை கலங்கிய விழிகளுக்குள் கொண்டுவரும் இந்தக் கவிதையை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். ஒரு தாயாக, தந்தையாக,தோழியாக,தமக்கையாக இன்னும் என்னவெல்லாமாகவோ மாறிப்போகிறேன் நான் காவியாவுக்கு.

அநேகக் கவிதைகளில் பெண்ணின் குரலே ஒலிக்கிறது. அதுதான் அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது. ஆனாலும் அது கலகக் குரலாக, போர்க்குரலாகவெல்லாம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத ஒரு சமாதானத்தின் குரலாக, அன்பின் குரலாக, காதலின் குரலாக ஒலிப்பது ஆச்சர்யம்.

சக்திஜோதி இன்னும் இன்னும் நிறைய தொகுப்புகளைத் தரவும், கவிதைகளை வாசிக்கும்போது ஏற்படும் மன இன்பம் மட்டுமல்லாது பல காலத்துக்கு மனதின் நினைவடுக்குகளில் ஆழப்பதிந்து அவ்வப்போது நினைவுக்கு வரும் சிறந்த கவிதைகளையும் தர   மனமார்ந்த வாழ்த்துகள்.



ஆசிரியர் : சக்திஜோதி
தொடர்புக்கு : shakthijothi@gmail.com

வெளியீடு : வம்சி புக்ஸ், 19, டி.எம் சாரோன், திருவண்ணாமலை - 606 601
தொடர்புக்கு : 9445870995

நன்றி :
கோவை இலக்கிய சந்திப்பு
கொலுசு - செப்டம்பர் மாத மின்னிதழ்
kolusu.in/kolusu/z_want_to_see.php?parameter=5K5#sthash.Ejouq9Kr.dpuf 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக