சனி, 19 செப்டம்பர், 2015

கடவுள் இங்கிருக்கிறார்

நாளைய பொள்ளாச்சி இலக்கிய வட்ட நிகழ்வுக்காக
அரங்கத்தைத் தயார் செய்ய இன்று மாலை பள்ளிக்குச் சென்றிருந்தோம். பள்ளி காவலாளி வரத் தாமதமான சமயம் வாசலில் நின்று சாலையை வேடிக்கை பார்க்கலானேன். விநாயகர் சிலைகளை பெரிய பெரிய வண்டிகளில் ஊர்வலம் தூக்கிக் கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள். வண்டிகளில் எல்லோரும் வாத்தியங்களை இசைத்தபடி ஆடிப்பாடிப் போய்க்கொண்டிருந்தார்கள் முன்னும் பின்னும் காவலர்கள் பாதுகாப்புடன்.
எதேச்சையாக பள்ளிக்கூட வாசலின் இடப்புறம் பார்க்கிறேன். மூன்று சிறுவர்கள். சாலையோரம் சிறு குடில் அமைத்து அங்கேயே தங்கி பொம்மைகள் விற்கும் நாடோடி மக்களின் பிள்ளைகள். அழகாக சிறு குடில் ஒன்றை அமைத்து, குட்டி விநாயகர் சிலையை வைத்து தீபம் போட்டு அவர்களால் ஆன சில பழங்கள் மிட்டாய்களை வைத்து வழிபட ஆயத்தமானார்கள்.
ஒருவன் அந்தச் சின்னஞ்சிறு குடிலின் வாசலைக் கூட்டி, நீர் தெளித்து வண்ணப் பொடிகளால் கோலமிட, மற்றவன் பள்ளிக்குள் ஓடிச் சென்று பூக்களைப் பறித்து வந்தான். மூன்றாமவன் பூஜைக்கான ஏற்பாடுகளில் இருந்தான். பார்க்கவே மனம் பரவசமாக இருந்தது. வரிசையாக ஊர்வலம் போகும் வண்டிக்காரர்களிடம் உரக்கச் சொல்ல வேண்டும் போல இருந்தது. 
" நீங்கள் தூக்கிப் போவதாக நினைத்துக் கொண்டிருக்கும் கடவுள் உண்மையில் இதோ இந்தச் சின்னஞ்சிறு குடிலில் மிக்க மகிழ்வுடன் இருக்கிறார் "  என்று.






நாளை நிகழ்வுக்கு வரும் நண்பர்கள் இவர்களை தரிசிக்கலாம். நான் இதோ அவர்களுக்கான தின்பண்டங்களை எடுத்து வைக்கத் துவங்கி விட்டேன்.

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

முக வரி

ஒரு கேலிச் சித்திரத்தைப்
போலத்தான்
வரைந்து பழகிக்
கொண்டேன் என் முகத்தை.
நிஜத்திலும் அப்படித்தான்
இருக்குமென்பது
என் அனுமானமும் கூட
அதன் காலப்பிரதிகளைத்தான்
உங்களின் ஒவ்வொருவரின்
கைகளிலும் தந்திருக்கிறேன்
உங்கள் ஒவ்வொருவரிடமும்
ஒவ்வொரு நான்
இருப்பது பெரும்
ஆச்சர்யமல்ல என்றாலும்
உங்கள் முன்
எப்போதும் சிரித்துக் கொண்டேவோ
அல்லது
உங்களைச் சிரிக்க வைத்தபடியோ
இருக்கும் அது
உண்மையில் என்
பிரதி முகம்தான்
என்பதை மட்டும் அறிக

நீலம் நிரம்பிய கோப்பை

ஒரு கோப்பை
ஞானத்தைப் பருகிக் கொண்டிருப்பதாகச்
சொல்கிறீர்கள்
ஒரு கோப்பை
தனிமை வலிக்கான மருந்தை
அருந்துவதாகப் பாசாங்கு செய்கிறீர்கள்
அதே கோப்பை
உற்சாகத்துக்கான
ஊக்கமருந்தெனவும் பறை சாற்றுகிறீர்கள்
துரோகத்தை மறக்கவும்
காதலைக் கொண்டாடவும்
காமத்தில் திளைக்கவும்
ஒரே நேரத்தில் எப்படி
ஒரே குவளை நேர் செய்கிறது ?
நானறிவேன் அது
மெல்லக் கொல்லும்
விஷமென்று.
நீங்களும் அறிந்திருப்பீர்கள் தானே..?

திங்கள், 14 செப்டம்பர், 2015

மீன் நிறத்திலொரு முத்தம் - சக்திஜோதி கவிதைத்தொகுப்பு வாசிப்பு அனுபவம்

மீன் நிறத்திலொரு முத்தம் - சக்திஜோதி

சக்திஜோதி அவர்களின் கவிதைத் தொகுதிகளின் தலைப்புகளுக்குள் உள்ள ஒரு தொடர்பை நான் மிகவும் ரசித்தேன். அவரது முதல் தொகுப்பு நிலம் புகும் சொற்கள், இரண்டாவது கடலோடு இசைதல், மூன்றாவது எனக்கான ஆகாயம், நான்காவது காற்றில் மிதக்கும் நீலம், ஐந்தாவது தீ உறங்கும் காடு. முதல் ஐந்து தொகுப்புகளின் தலைப்பிலும் ஐம்பூதங்களைக் கொண்டுவந்து விட்டார். ஆறாவது தொகுப்பு சொல் என்னும் தானியம், ஏழாவது தொகுப்பு பறவை தினங்களைப் பரிசளிப்பவள், எட்டாவதான இந்தத் தொகுப்பு மீன் நிறத்திலொரு முத்தம். இவற்றுக்குள்ளும் ஒரு நூலிழைத் தொடர்பு இருக்கின்றதாகத்தான் எண்ணுகிறேன். ரசனை மிகுந்த தலைப்புகளே தனித் தனிக் கவிதைகளாக இருக்கும்பட்சத்தில் கவிதைகள் நம் நம்பிக்கையை ஆழப் பெற்றுவிடுகின்றன.



தொடர்ந்து பல ஆண்டுகளாக கவிதைகளில் இயங்கி வருபவர். தனக்கென பிரத்யேகக் கவிதை மொழியைக் கொண்டுள்ளவர் என்ற சிறப்புகளுடன் இவரது கவிதைகளைக் கைகளில் எடுக்கலாம்.

இந்த உலகமே ஒரு நாடக மேடை; நாமெல்லாம் நடிகர்கள் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். நமது நாடகங்கள் நொடிக்கொரு தரம் காட்சி, மேடை,இடம் என சகலத்தையும் மாற்றிக் கொண்டே நிகழ்கின்றன என்பதுதான் நமது வாழ்வின் ஆதாரப்புள்ளி. சக்தி ஜோதியின் ஒரு கவிதையை வாசித்து விட்டு அதை நமது ஒரு முகத்துடன் பொருத்திப் பார்க்கிறேன். அந்தக் கவிதை அந்த முகத்தின் அத்தனை பாவங்களுடன் அழகாகப் பொருந்திப்போகிறது.

நகர்தலின் அடையாளம்

திரை இறக்கப்பட்டது
காட்சி முடிந்தது
கனவிலிருந்து வெளியேறுவதுபோல
பார்வையாளர்கள் நகர்ந்து சென்றார்கள்

கலைஞர்கள்
தங்கள் ஒப்பனைகள் கலைந்து
முகங்கவிழ்ந்து கண்ணீர் பெருக்கவும்
யாருமறியாது தமக்குள் சிரிப்பதுமாக
அவரவர் தங்களை
மற்றுமொரு அடையாளத்திற்குள்
புகுத்திக் கொண்டார்கள்

ஒருவரும் அறிந்திருக்கவில்லை
அடுத்த நாளின்
தங்கள் அடையாளம் என்னவென்று
ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு
முன்னுணர்ந்து நகர்தல் என்பது
அத்தனை எளிதல்ல

இந்தக் கவிதைக்கு கவிஞரின் அனுபவம் வேறானது, நான் இதை நமது இலக்கிய முகத்துடன் பொருத்திப்பார்த்துக் கொண்டேன். வார நாட்களில் வழக்கமான பணிகளுடன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நாம், வார இறுதி இலக்கியக் கூட்டங்களுக்காக முற்றிலும் வேறான நமது இன்னொரு முகத்துடன் வேறு அடையாளங்களுடன் உருமாறி கதை, கவிதை , இலக்கியம் எனப் பல்வேறு நாடகங்களை நிகழ்த்துகிறோம். பிறகு நாம் நம் வழக்கமான அடையாளத்துக்கோ அல்லது முற்றிலும் புதிய புதிய அடையாளங்களுக்கோ நம்மை மாற்றிக் கொள்கிறோம் அடுத்தடுத்த நாட்களில். வாழ்க்கை மனிதர்களுக்கு இதைத்தான் விதித்திருக்கிறது. பெரும்பாலும் நமது அடுத்த வேடம் எது என்பதை நாம் அறிந்திருப்பதே இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளை நேர்கொண்டு சடாரெனெ நாம் நமது ஒப்பனைகளை மாற்றிக் கொண்டுதான் ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறோம். அதைத்தான் பேசுகிறது இந்தக் கவிதை. இந்தக் கவிதையில் சொல்லப்பட்ட அனுபவம் பொதுவானது, அதை நமது அனுபவத்தோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளும் போது கவிதை ரசனை கூடுகிறது.

ஒரு கவிதையின் மொத்த அனுபவத்தையும் நமது அனுபவத்தோடு பொருத்தி ரசிக்கும் மனோபாவத்தைப் போல, ஒரு கவிதையின் ஒரு வார்த்தையை நாம் நமது வெவ்வேறு அனுபவங்களோடு பொருத்திப் பார்த்து உணரக்கூடும் என்பது தான் நவீன கவிதையின் புதிர்மை நிறைந்த ஒரு உத்தி. ஒரு கவிதையில் ஒரே ஒரு வார்த்தை அந்தக் கவிதையின் உயிராக இருக்கக் கூடும் எனில் அந்த வார்த்தைதான் கவிதையின்பால் நம்மை ஈர்க்கும்.

         அலைவு

அது ஒரு மாயவலை
அறிவாள் அவள்
இருந்தும்
மலர்கிறாள்
மிதக்கிறாள்
ஆட்படுகிறாள்
மேலும்
துன்புறுகிறாள்

வாழ்வின் மிகச்சாதாரணத் தத்துவத்தை சொல்லும் இந்தக் கவிதையின் மாயவலை என்னும் வார்த்தை தான் எத்தனை மாயத்தோற்றம் கொண்டது. இந்த மாயவலைக்கு நாம் என்ன உருவம் கொடுக்கிறோமோ அந்த உருவத்துக்கு உருமாறிக் கொள்கிறது இந்தக் கவிதை.
இந்த ஒரு வார்த்தையைத் தேர்ந்தெடுத்து ஆளும் உத்தி தான் கவிஞரின் வெற்றியாக இருக்கிறது. ஒரு கோடிட்ட இடத்தைக் கொடுத்து வாசகர்களை விருப்பத்துக்கு நிரப்பிக்கொள்ளச் செய்யும் உத்திதான் இது.

சக்திஜோதியின் கவிதைகளில் பெண்ணியம் மிக இயல்பாகவே வெளிப்படுகிறது. யார் குறித்தும் பெரிய குற்றச்சாட்டுகள் இல்லை. இருப்பினும் பெண்ணின் மென்னுணர்வுகள் இந்தத் தொகுப்பின் பக்கங்களில் பதிவாகியிருக்கின்றன. பெண்ணியம் பேசும் கவிதைகளுக்கென ஒரு டெம்ப்ளேட் இருப்பதாகப் பலர் குற்றம் கூறிக் கொண்டிருக்க, அவர்களுக்கு நான் சக்திஜோதியின் கவிதைகளைப் பரிந்துரைப்பேன். வலிந்து கொண்டுவந்த வார்த்தைகள் எதுவுமற்று இயல்பான வார்த்தைகளில் இயல்பான கவிதைகளைப் பெண்மொழியில் தந்திருக்கிறார். கவிதைகளில் ஆணென்ன பெண்ணென்ன, கவிதை கவிதைதான்.

காதலை, காமத்தை, முத்தத்தை அன்றலர்ந்த சிறுமலரின் மெல்லிதழ்களைப் போல மிக மென்மையாக இவர் கவிதைகளில் நிரம்பக் கையாண்டிருக்கிறார். சிறு உறுத்தலுமின்றி, செயற்கையுமின்றி ஒரு அனுபவக் கவிதையாக, கவிதை அனுபவமாக அது நிகழ்ந்திருப்பதாகவே தோன்றுகிறது.

காதல் காமம் மட்டுமல்ல, பெண்மையின் ப்ரத்யேகக் குணமான தாய்மை ததும்பும் கவிதைகளும் உண்டு. அப்படியான கவிதைகளில் ஒன்றுதான் இது



காவியா செடி

நல்லவேளை 
காவியா திரும்பிப் பார்க்கவில்லை
அவள் அப்படியெல்லாம்
திரும்பிப் பார்த்துவிடக் கூடாது என்றும்
நினைத்துக்கொண்டேன்

கிறுகிறுக்கும் பொன்வண்டைப்போல
மினுங்குபவளை மறைத்துக்கொண்டு
தளும்பும் கண்களுடன்
அவ்விடம் விட்டு நானும் நகர்ந்தேன்

சிறிய தோட்டத்தில்
அவள் நட்டுவைத்த இளம்தளிர்களுக்குத்
தண்ணீர் விடுவதைத் தவிர
இனி வேறு என்ன செய்ய


தாய்மையின் அன்பை கலங்கிய விழிகளுக்குள் கொண்டுவரும் இந்தக் கவிதையை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். ஒரு தாயாக, தந்தையாக,தோழியாக,தமக்கையாக இன்னும் என்னவெல்லாமாகவோ மாறிப்போகிறேன் நான் காவியாவுக்கு.

அநேகக் கவிதைகளில் பெண்ணின் குரலே ஒலிக்கிறது. அதுதான் அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது. ஆனாலும் அது கலகக் குரலாக, போர்க்குரலாகவெல்லாம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத ஒரு சமாதானத்தின் குரலாக, அன்பின் குரலாக, காதலின் குரலாக ஒலிப்பது ஆச்சர்யம்.

சக்திஜோதி இன்னும் இன்னும் நிறைய தொகுப்புகளைத் தரவும், கவிதைகளை வாசிக்கும்போது ஏற்படும் மன இன்பம் மட்டுமல்லாது பல காலத்துக்கு மனதின் நினைவடுக்குகளில் ஆழப்பதிந்து அவ்வப்போது நினைவுக்கு வரும் சிறந்த கவிதைகளையும் தர   மனமார்ந்த வாழ்த்துகள்.



ஆசிரியர் : சக்திஜோதி
தொடர்புக்கு : shakthijothi@gmail.com

வெளியீடு : வம்சி புக்ஸ், 19, டி.எம் சாரோன், திருவண்ணாமலை - 606 601
தொடர்புக்கு : 9445870995

நன்றி :
கோவை இலக்கிய சந்திப்பு
கொலுசு - செப்டம்பர் மாத மின்னிதழ்
kolusu.in/kolusu/z_want_to_see.php?parameter=5K5#sthash.Ejouq9Kr.dpuf 

ஒரு நாய் வாங்கி வளர்க்கலாமா ..?

வழக்கம் போல பாரதியின் திருவிளையாடல் தான் இது

நேற்று ஓவிய வகுப்புக்கு பாரதியை அழைத்துப் போய் விட்டுவிட்டு புன்னகை ஆலோசனைக் கூட்டத்துக்குப் போய்விட்டேன். வகுப்பு முடிந்து சற்று நேரமாகிவிட்டது அவளை அழைக்கப்போக. போனால் வகுப்பு முடிந்து ஓவியர் வீட்டு பொமரேனியன் நாய்க்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அழைத்துக் கொண்டு வண்டியில் வரும்போது கேட்டாள்
" அப்பா நாமும் நாய் வளர்க்கலாமா ?
“ வேண்டாம் டா. நம்மாள முடியாது "
“ ஏம் பா ?”
“ நமக்கு நேரமே இருக்காது டா "
“ எனக்கு நேரம் இருக்குப் பா. நான் பாத்துக்கறேன்"
“ இல்ல டா. , நான் வேலைக்கு போயிடறேன், அம்மாவும் வேலைக்குப் போயிடறாங்க. நீ ஸ்கூலுக்குப் போயிடற. நாய்க்கு சாப்பிடக் குடுக்கனும், குளிப்பாட்டனும். நல்லா பாத்துக்கனும்.நமக்கு நேரம் இருக்காது" என்றேன்
“ அப்பா , நான் பாத்துக்கறேன். நாய நான் ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போயிடறேன் " என்றாள்.

நான் இந்த உரையாடலை நிறுத்த அறிவாளியாய், நக்கலாகச் சொன்னேன்.
“ ம்க்கும் உனக்கே ஃபீஸ் ஏகப்பட்டது போகுது. நாயை ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப்போனா அதுக்கு வேற ஃபீஸ் கட்டணும்" என்று சிரித்தேன்.

யோசிக்கவே இல்லை அவள். சட்டென பொளேரென சொன்னாளே " அப்பா, அப்படினா ஒரு ஐடியா, நாயை நீங்க ஆபீஸ் கூட்டிட்டு போயிடுங்க. நாய்க்கும் சம்பளம் தருவாங்க ல, நாய் வளர்த்துன மாதிரியும் ஆச்சு, சம்பாரிச்ச மாதிரியும் ஆச்சு " என்று.

என்ன ஒரு லாஜிக்கான கேள்வி. நாயை ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போனா ஃபீஸ் கட்டனும்னு சொல்லும்போது வேலைக்குக் கூட்டிட்டுப் போனா சம்பளம் தந்து தானே ஆகனும்..?

நான் வழக்கம் போல " பே.....” என ஆகிவிட்டேன்.

குழந்தைகள் நம்மை எளிதில் தோற்கடித்து விடுகிறார்கள். குழந்தைகளிடம் தோற்றுப்போகவே நாமும் விரும்புகிறோம். ஆனால் இப்போதைய குழந்தைகள் நிறையக் கேள்விகளை வைத்து இருப்பதைப்போலவே நமது எல்லாக் கேள்விகளுக்கும் சரியோ தவறோ ஒரு அழகான பதிலை வைத்திருக்கிறார்கள்.

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

குடி யாவற்றையும் கெடுக்கும்

கொஞ்சநாளாக . மதுவை ஒழிப்போம், பூரண மதுவிலக்கு என்ற பேச்சையெல்லாம் நம் ஊரில் கேட்க முடிகிறது. கேட்பதற்கே சந்தோஷமாகத்தான் இருக்கிறது. சசி பெருமாள் அய்யாவின் மரணத்துக்குப் பின் நிறையப் போராட்டங்கள், எதிர்க்குரல்கள். ஆனால் அரசு இது எதுக்குமே செவிமடுக்கவில்லை. முதல் அமைச்சர் ஒரு சிறு அறிக்கை கூட ஆறுதலுக்காகக் கூட வெளியிடவில்லை. என்றால், இந்த அரசும் அதிகாரிகளும் மக்களை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் மக்களின் மேல் நலன் கொண்டவர்களைத்தான் நாம் ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்கிறோமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளதல்லவா. இந்தக் கட்சியை விட்டால் அந்தக் கட்சி. பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. நமக்கு விதிக்கப்பட்டது இவ்வளவுதானா. பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று நம்பப்பட்ட விஜயகாந்த் நம்பிக்கையிழக்கும்படியாகவே நடந்து கொள்கிறார். ஒரு பக்குவப்பட்ட அரசியல்வாதி மாதிரி பேச வேண்டியதில்லை, ஒரு பக்குவப்பட்ட மனிதனாக, அனுபவசாலியாகவாவது பேசலாம். ப்ச்...

மது ஒரு உற்சாக பானம், அது சமுதாயத்தில் அத்தனை பெரிய இழப்புகளையும் மாற்றங்களையும் கொண்டு வந்து விடுமா என்று கேட்பவர்கள் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண்ணிடம் கேட்டுப் பார்க்கலாம். மதுவால் அழிந்த ஒரு மிகப்பெரிய வரலாறு தமிழ்நாடு முழுக்க இருக்கும்.

நான் வயதிலும், அனுபவத்திலும் மிகச் சிறியவன். மதுவுடன் எனக்கு நேரடி அனுபவம் இல்லை. ஆனால், நான் நேரில் கண்டு, கேட்டு, உணர்ந்த இழப்புகளே ஏராளம் ஏராளம்.

அரசு வேலையில் இருந்தும் தினமும் மது குடித்து, ஊரெல்லாம் கடன்பட்டு, வேலை பறி போய், பெரிய பள்ளியில் படித்துக் கொண்டிருந்த குழந்தைகளை வசதி குறைவான அரசுப் பள்ளிக்கு இடையில் மாற்றி கஷ்ட ஜீவனம் நடத்தி வரும் ஒரு தூரத்து அண்ணன் இருக்கிறார் எனக்கு, வீட்டு வாடகையைக் கூட ஒழுங்காகக் கொடுக்க முடியாமல் வீடில்லாமல் இப்போது எங்களது பூர்விக வீட்டில் தான் குடியிருக்கிறார்.

தினமும் 900 ரூபாய் சம்பளம் எனக்குத் தெரிந்த கொத்தனார் ஒருவருக்கு, அதுவும் 3 வருடங்களுக்கு முன்பே நான் பார்த்தது. அதில், 200 ரூபாய்க்கு சரக்கு வாங்குவதாகச் சொல்வார், சரக்குக்கு தினமும் கோழி, மீன் என்று எதையாவது வாங்குவார் மொத்தச் செலவு 500 ஆகிவிடும். மிச்சமிருக்கும் பணத்தை அவ்வப்போது ஊரிலிருக்கும் மனைவி பிள்ளைகளுக்குக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வருவார். நான் நினைத்துக் கொள்வேன் இவருக்கு குடிப்பழக்கம் மட்டும் இல்லையென்றால் எப்போதோ இவர் லட்சாதிபதியாகியிருக்கலாம் என்று. இந்த மாதிரி உழைப்பாளர்களின் உழைத்த காசெல்லாம் தான் டாஸ்மாக்கில் மணக்கிறது.


என்னுடன் ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு படித்த நண்பன் அவன். ரொம்ப நாள் போராடி ஒரு நல்ல வேலை, நல்ல சம்பளம், நல்ல மனைவி என எல்லாமே அமைத்துக் கொண்டான். குடிப்பழக்கத்தை மட்டும் விடவில்லை. நண்பர்களெல்லாம் ஒரு விநாயகர் சதுர்த்தி நன்னாளில் குடித்துவிட்டு சிலை கரைக்கப் போன ஊர்வலத்தில், டாடா சுமோவில் நண்பர்களுடன் போனவன் , ஓட்டியவனும் குடித்திருந்ததால் பெரிய விபத்தில் மாட்டி உடல் சிதைந்து செத்துப்போனான். அவனது மனைவியும் சிறு பிள்ளைகளும் அனாதையாக இருக்கிறார்கள்.

தோழி ஒருத்தி சிறு வயதிலேயே கவிதை, நடனம், நாடகம், பாட்டு என அனைத்துக் கலைகளிலும் தேர்ந்தவர். பெரிய ஆளாக வருவார் என ஊரே எதிர்பார்க்க, ஒரு குடிகார இளைஞனை தெரியாமல் காதலித்து, அவன் கல்லீரல் வெந்து செத்துப்போன பின், ஆறு வயது பெண்பிள்ளையுடன், அவள் அம்மாவுடன் ஒரு மருத்துவமனையில் சொற்ப சம்பளத்துக்கு விழுந்து விழுந்து பெருக்கிக் கொண்டிருக்கிறார்.

தெரிந்தவர் ஒருவர், ஆட்டோ ஓட்டுநர். ஆட்டோ ஓட்டுவது இப்போது தான். அவர் படிக்கும் போது அவரது லட்சியம் மருத்துவராவது என்று சொல்லித் திரிந்தார். பத்தாம் வகுப்பிலேயே பழகிக் கொண்ட குடிப் பழக்கம் மற்றும் வேறு போதைகளால் பெற்றவர்கள், சொத்து யாவற்றையும் இழந்து ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார் அதுவும் வாடகைக்கு. இன்றும் வரும் வாடகையில் சரி பாதி குடிக்கு.

மிக நெருங்கிய சொந்தம் அவன். மிக நல்லவன். குடி மட்டும் தான் அவன் பழகிய கெட்ட பழக்கம். நண்பர்களுடன் குடித்துக் குடித்து எப்படியோ பத்தாயிரம் கடன் ஆகிவிட்டது. வட்டி கட்ட முடியாமல் அது சில மாதங்களிலேயே பதினைந்தாயிரமாக வளர்ந்துவிட, வீட்டுக்குத் தெரியாமல் இருபதாயிரமாக வேறு பக்கம் கடன் வாங்கி பதினைந்தாயிரத்தைக் கடன் கட்டிவிட்டு மிச்சத்துக்கும் நண்பர்களுடன் குடித்தழித்துவிட்டான். இப்படியாக குடிக்கடன் வளர்ந்து வட்டி குட்டி போட்டு பெரிய சிக்கலில் இருந்தான்.
அங்கங்கு வாங்கிய கடனெல்லாம் மொத்தமாகக் கண்டுபிடித்தோம் ஒரு சுப நாளில். மொத்தக் கடன் தொகை ஒன்றரை லட்சம் ஆகிவிட்டது. யாருக்கும் தெரியாமல், வண்டி, வீட்டுப்பத்திரம், மோதிரம் என பலவற்றை அடமானம் வைத்திருப்பதையும் பிறகுதான் கண்டுபிடித்தோம். அவ்வளவு பணத்தைப் புரட்ட முடியாத குடும்பம். மனைவியின் தாலி, நகைகள் , கடன் என நிறையக் கஷ்டப்பட்டு கந்து வட்டிக்கு வாங்கிய பணத்தை அடைத்தோம். இப்போது எங்களது தீவிரக் கண்காணிப்பில் இருக்கிறார். இன்னும்கொஞ்சம்காலம் கவனிக்காமல் விட்டிருந்தால் எங்கு போய் முடிந்திருக்கும் என நினைக்கவே கலக்கமாக இருக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு எட்டு மணிக்கு பொள்ளாச்சியிலிருந்து வந்து கொண்டிருந்தேன். வேலியோரமாய் ஒருவர் ஆட்டம் போட்டபடிப் போய்க் கொண்டிருந்தார். திடீரென ஆடி ஆடி நடுரோட்டுக்கு வந்து என் வண்டிக்குக் குறுக்கால் விழுந்துவிட்டார். சற்றும் எதிர்பாராமல் நிலை குலைந்து விட்டேன். 100 அடிக்கு வண்டி இழுத்துக் கொண்டு போனதில் உடம்பெல்லாம் காயம். அவருக்கும் ரத்தம் வழிகிறது. ஆனால் எழுந்து தள்ளாடியபடியே நடந்து போய்விட்டார். மருத்துவச் செலவு வண்டிக்கு செலவு பத்தாயிரம் ஆனது.

சாலை விபத்துகளில் தினமும் ஆயிரக்கணக்கானோர் செத்து மடிகிறார்கள். இது தெரிந்த செய்தி தான். ஆராய்ந்து பார்த்தால் அதில் தொள்ளாயிரக் கணக்கானோரின் சாவுக்கு குடி தான் காரணமாயிருக்கும். குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, குடித்துவிட்டு பாதையில் குறுக்கில் வந்து விடுவது என எத்தனை கேள்விப்படுகிறோம். உடல் பாதிப்படைந்து, விபத்துகளால், நேரடியாக இந்த மது எத்தனை பேரைக் கொல்கிறது..? அது மட்டுமா எத்தனை குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறது, எத்தனை குடும்பங்களை தற்கொலைக்குத் தூண்டியிருக்கிறது. பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை, போன்ற பல சமூகப் பிரச்சினைகளுக்கும் பின்னணியில் மதுவும் இருக்கிறது என்பதை நாம் அறிவோம். இப்படியொரு கொடுமையான மதுவை விற்று வரும் வருமானத்தில் தான் மக்களுக்கு நலத்திட்டங்களும் இலவசங்களும் வழங்கப்படுகின்றனவாம். எனில், நாம் இலவசமாக வாங்கி வைத்திருக்கும் பொருட்களிலெல்லாம் எத்தனை பேரின் உயிரும், மானமும் இருக்கிறது பாருங்கள்.

இப்போதெல்லாம் மிக அதிர்ச்சியான செய்திகள் நிறையக் கேள்விப்படுகிறோம். ஏழாம் வகுப்பு பள்ளி மாணவன் குடித்துவிட்டு வருகிறான். குற்றச் செயல்களில் ஈடுபடுகிறான். தனியார் பள்ளி மாணவி குடித்துவிட்டு நடு ரோட்டில் தகராறு செய்கிறாள். குழந்தைக்கெல்லாம் மதுவை ஊற்றிக் கொடுத்து ரகளை செய்கிறார்கள். இப்படி தமிழனின் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் நீக்கமற்று நிறைந்துவிட்டது குடி.


பூரண மது விலக்கு என்பது சாத்தியம் தானா.? சாத்தியமில்லை என்று நினைத்தால் நாம் குடித்துக் குடித்தே நமது இனத்தை, வரலாறை, வாழ்க்கையை அனைத்தையும் அழித்துவிட வேண்டியதுதான். பூரண மது விலக்கை ஒரே இரவிலெல்லாம் கொண்டு வரச் சொல்லவில்லை. படிப்படியாகச் செயல்படுத்த ஒரு தொலை நோக்குத் திட்டத்தை வகுக்கத்தான் கேட்கிறோம். மதுவால் கிடைப்பது அபரிமிதமான வருமானம் என்றாலும், பல்லாயிரக்கணக்கான உயிர்களை, உணர்வுகளை, குடும்பங்களை அழித்து அப்படி ஒரு வருவாயை எந்த நல்ல அரசும் ஈட்ட நினைக்காது.

மாற்று வழிகளைச் சிந்தித்து செயல்பட நம்வசம் அறிஞர் பெருமக்கள், அனுபவஸ்தர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் இருக்கின்றனர். முதல் படியை மட்டும் எடுத்து வைத்தால் போதும் வெற்றிதான். மது வாழ்வில் அங்கமாகவே இருந்த, கள் விற்பனை சர்வ சாதாரணமாக இருந்த கேரள அரசே முன்மாதிரித் திட்டங்களைச் செயல்படுத்தி படிப்படியாக மது விலக்கை அமல்படுத்தி வருவதையும் கண்களால் பார்க்கிறோம்.

சிங்கப்பூர் இளைஞர் ஒருவர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், மது விலக்கு நிதி என்ற புது நிதியைத் திரட்டலாம் என ஆலோசனை சொல்கிறார். அவர்களே வெளிநாடு வாழ் தமிழர்களிடம் பல குழுக்களாக இணைந்து நிதி வசூலித்துத் தருவதாகவும் சொல்கிறார்.
என்னைக் கேட்டால், மதுக்கடைகளை மூடி விட்டு, முக்குக்கு முக்கு இருக்கும் தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்தலாம். வருமானத்துக்கு வருமானம், கட்டணக் கொள்ளையிலிருந்து மக்களைக் காப்பாற்றி , தரமான கல்வியைத் தருவதோடு கல்விச் சேவையும் செய்த மாதிரி ஆகும்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க மாநாடெல்லாம் போட்டு வருவாயைப் பெருக்கும் யுத்தியும் நன்றாகவே உள்ளது.

மதுக்கடைகளை மூடிவிட்டால், கள்ளச் சாராயம் பெருகும் என்று உதார் விடுவார்கள். அதையும் அரசு தானே கண்காணித்து தடுக்க வேண்டும். மது விதிக்கு வீதி எளிதில் கிடைப்பதால் தானே இப்படிச் சீரழிந்து கிடக்கிறோம். முதலில் கொடுப்பதை நிறுத்திவிட்டுப் பின் குடிப்பதைத் தடுக்க முனையலாம். கள்ளச்சாராயம் வீதி வீதிக்குக் காய்ச்சி விடுவார்களா என்ன..? அப்படித்தான் திருட்டுத்தனமாகக் காய்ச்சி திருட்டுத்தனமாகக் குடிப்பேன் என்று போகிறவர்கள் மிகக் குறைந்த விழுக்காடாகத்தான் இருப்பார்கள் எனவே அதைத் தடுப்பது மிகச் சுலபம் தான் அரசுக்கு. டாஸ்மாக் கடைகளை மக்கள் சூறையாடுகிறாரகள் என்று ஒவ்வொரு கடைக்கும் போலீஸ் பந்தோபஸ்து போட்டு குடிக்க வைக்கும் அரசு, கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஊருக்கு ரெண்டு காவல்காரர்களை நியமித்தாலும் நல்லது தான்.





திங்கள், 24 ஆகஸ்ட், 2015

பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் இருபத்தி எட்டாவது சந்திப்பு

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் இருபத்தி எட்டாவது இலக்கிய சந்திப்பு 16.08.2015 அன்று பாலக்காடு சாலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

காலையில் வழக்கத்தினும் நேரமாகக் கிளம்பி வழக்கத்தினும் வழக்கமான நேரத்துக்கு அரங்கம் வந்து இருக்கைகளைச் சுத்தம் செய்து தயாராகும் போது இன்றைய நிகழ்ச்சிகளின் திட்ட வடிவமைப்பு மனக்கண்ணில் ஓடியது.
மூன்று கவிதைத் தொகுப்புகள் அறிமுகம். செந்தில்பாலாவும், இராகுலனும், நறுமுகை ஜெரா மூவரும் நள்ளிரவிலேயே வந்து விட்டார்கள். சோலைமாயவன் அவர்களை அறையில் தங்க வைத்து விட்டார். காலையில் தயாராகி வந்துவிட்டார்கள்.

நிகழ்ச்சிக்காக தேனியிலிருந்து அறிவழகன், அகமது, விஜயராஜ் காந்தி வழக்கம்போல வந்துவிட்டார்கள். கோவை பேரூருக்கு பக்கமிருந்து ஹரிதா, ஈரோட்டிலிருந்து கார்த்திகா, இரவுப் பணியையும் முடித்துவிட்டு இலக்கியன் விவேக் என அத்தனை பேரும் தூரத்திலிருந்தெல்லாம் வந்திருந்தது மனதை நெகிழச் செய்தது.

பத்து மணி ஆனதும் படித்ததில் பிடித்தது ஆரம்பமானது. நல்ல கவிதைகளை, கதைகளை வாசகர்கள் பகிர்ந்து கொண்டனர். சற்று நேரத்தில் கனல்மதியும் வந்து விட நிகழ்ச்சி துவங்கியது.

கவிஞர் இரா.பூபாலன் வரவேற்றுப் பேசினார். கவிஞர் இரா.இராகுலன் எழுதிய கடவுளின் கடவுள் எனும் கவிதை நூலை கவிஞர் அம்சப்ரியா அறிமுகம் செய்து பேசினார்.










இராகுலனின் தொகுப்பு முதல் தொகுப்பைப் போல அல்லாமல் செறிவான கவிதைகளுடன் சிறப்பாக வந்துள்ளன. தமிழ்க் கவிதைச் சூழலில் இராகுலனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று சொன்னார்.
எட்டாம் வகுப்பு மாணவி கனல்மதி எழுதி வெளியிட்ட இப்படிக்கு மழை எனும் கவிதைத் தொகுப்பை நான் அறிமுகம் செய்து பேசினேன்.

கவிதைகளின் மீதான நமது ஈர்ப்பு எப்போது வருகிறது என்றால், நாம் குழந்தையாக இருக்கும் போதே துவங்கி விடுகிறது . அம்மாவின் தாலாட்டு அற்புதமான கவிதையல்லவா. அதனால் தானே தூங்குகிறோம், அதில் தானே மயங்கி உண்கிறோம். தாலாட்டில் தொடங்கும் நமது கவிதை ஸ்பரிசம் ஒப்பாரியில் முடியும் வரை கவிதை நம்மோடு பயணித்துக் கொண்டே தான் இருக்கிறது வாழ்க்கை முழுவதும்.
நாம் தான் பல நேரங்களில் பல சூழல்களில் கவிதைகளை விட்டு வெகு தூரம் விலகி வந்து விடுகிறோம். பள்ளி நாட்களிலேயே பலருக்கு கவிதைகளின் பால் ஈர்ப்பு வருவது இயல்பு. காரணம் நமது செய்யுள் பகுதிகளும், பாரதியும், பாரதிதாசனும் நம்முள் ஏற்படுத்தும் பாதிப்பினால் வருவது. பள்ளி , கல்லூரி நாட்களில் கவிதை மற்றும் இலக்கிய ஈடுபாடுகளில் தீவிரமாக இருப்பவர்களுக்கு வேறு எந்த போதையும் ஏற்பட்டுவிடாது என்னும் நல்ல விசயத்தையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஆகவே தான் வாசிப்புப் பழக்கத்தையும், இலக்கியப்பரிச்சயமும் சிறு வயதிலிருந்தே கொண்டு வர வேண்டும் என்கிறோம். பள்ளி நாட்களிலேயே கவிதை எழுதுவதும் பிற்பாடு அதை முறைப்படுத்தத் தெரியாமல், நெறிப்படுத்த ஆளில்லாமல் விட்டுவிடுவதும் நம்மில் பலருக்கு வாய்த்ததுதான்.

அப்படி இல்லாமல், எட்டாம் வகுப்பு மாணவி ஒருத்தி, அற்புதமான கவிதைகளை எழுதுவதும் அவளது பெற்றோர் அவளின் கவி நெருப்பை அணைத்திடாது ஊதி வளர்ப்பதும், எட்டாம் வகுப்பிலேயே முதல் தொகுப்பை வெளியிடச் செய்வதும் ஆச்சர்யம் கலந்த ஆனந்தத்தைத் தருகிறது. ஆம் , கனல்மதி இப்போது ஒன்பதாம் வகுப்பில் இருக்கிறார், இவர் வெளியிட்ட இந்தத் தொகுப்பு சென்ற வருடம் இவர் எட்டாம் வகுப்பு மாணவியாக இருக்கும் போதே வெளியிடப்பட்டது. இது இன்ப அதிர்ச்சியாக உள்ளது. கவிஞர் கனல் மதியை உச்சி முகர்ந்து வாழ்த்துகிறேன்.
சிறுகை அழாவிய கூழ் எத்தனை தித்திப்பாக அமிழ்தமாக இருக்கும் என வள்ளுவன் சொல்லியிருக்கிறார். இச்சிறுகை அழாவித்தந்தது உண்மையிலேயே அமிழ்தம்தான். சின்னச்சின்ன கிறுக்கல்களல்லாமல், கவிதைக்கான அத்துனை அடிப்படைக் கூறுகளையும் கொண்டு எழுதப்பட்ட இந்தக்கவிதைகளை நாம் மனமார வரவேற்கலாம் என்று சொன்னேன்.

கவிஞர் கனல்மதியின் ஏற்புரையில் தான் சிறு வயதிலிருந்தே கவிதைகளில் ஈடுபாடு வந்து எழுத ஆரம்பிக்கையில் தனது பெற்றோர்களும் ஆசிரியர்களும் தான் தன்னை ஊக்கப்படுத்தி எழுத வைத்தனர் என்றார். தான் சிறப்பாக கவிதை எழுதுவதற்கும் எழுதிய கவிதைகளை வெளிப்படுத்தவும் இரண்டு முக்கியமான காரணிகள் உண்டு அவை தமது பெற்றோரும், தான் அரசுப்பள்ளியில் படிப்பதுமே காரணம் என்றார். தனியார் பள்ளிகள் மாணவர்களை மதிப்பெண் எந்திரங்களாகத்தான் உருவாக்குகின்றன. அரசுப்பள்ளிகள் தான் மாணவர்களின் திறமைகளுக்கான சுதந்திரத்தையும் வெளியையும் உருவாக்கித் தருகின்றன எனப் பேசினார். சின்ன உருவத்துக்குள் இத்தனை பக்குவமான பார்வையா என அனைவரும் வியந்தே போனோம்.

கவிஞர் செந்தில்பாலா எழுதிய மனிதர்களைக் கற்றுக் கொண்டு போகிறவன் கவிதைத் தொகுப்பை கவிஞர் அகிலா அறிமுகம் செய்து பேசினார். அகிலா அவர்கள் செந்தில்பாலாவின் கவிதைகளோடு கோட்டோவியங்களையும் அறிமுகப்படுத்தி பேசினார்.




இளைஞர்களின் எழுச்சி நாயகன் என்னும் தலைப்பில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் நினைவேந்தல் உரையை புன்னகை ஜெயக்குமார் வழங்கினார்.

நிகழ்வில் கொலுசு என்ற இணைய இதழ் கவிஞர் அறவொளி அவர்களால் வெளியிடப்பட்டது.
நறுமுகை ஜெ.ராதாகிருஷ்ணன் அவரது சிறப்புரையில் .. நவீன கவிதை முகங்களையும், பதிப்பகங்களின் முகங்களையும் குறிப்பிட்டுப் பேசினார்.
வாசகர்கள் கவிஞர்கள் கலந்து கொண்ட கவியரங்கம் நடந்தது 20 கவிஞர்கள் கவிதைகளை வாசித்தனர்.
கவிஞர் அம்சப்ரியா அவர்களுடைய நன்றியுரையுடன் விழா இனிது முடிந்தது


செய்தி மடல் வெளியிடப்பட்டது. உங்கள் பார்வைக்கு

https://www.dropbox.com/s/8cv9g6ey5ex8kjt/PIV%20Seythimadal%2019.pdf?dl=0