செவ்வாய், 22 செப்டம்பர், 2020

வாசகசாலை இணையதளத்தில் எனது கவிதைகள்

இந்த மாத வாசகசாலை இணைய இதழில் எனது மூன்று கவிதைகள் வெளியாகியுள்ளன .. உங்கள் வாசிப்புக்கு இங்கு ..

கவிதை # 1

அப்போதுதான் முதன் முதலில்
பார்த்த அவளை அப்போதே
பின் தொடர ஆரம்பித்துவிட்டேன்

அவளை அழகு என்று சொல்வதற்கான
சொற்களை அந்தக் கணத்திலேயே
தொலைத்துவிட்டிருந்தேன்

ஊரின் மிக நீண்ட வளைவுகளில்
அவள் நடந்து கொண்டிருந்தாள்
நான் பின்தொடர்ந்து
ஓடிக் கொண்டிருந்தேன்

வெளி ஒரு கருந் திரையைப் போல
திக்கற்று நிறைந்திருந்த இரவிலும்
அவளின் ஒளிர்தலில்
எனது பாதையில் எந்த இடரலும்
இருக்கவில்லை

ஊர் எல்லைக் கண்மாயில்
நீள் கூந்தலைப் பரப்பி
அவள் குளித்தெழுந்த போது
நான் மறைந்திருந்து பார்த்தேன்
எனது சிறுவயது தேவதைக் கதைகளில்
ஒன்றுக்குள் தான்
நுழைந்து விட்டேனோ என்ற
சந்தேகம் வந்தது
அவள் குளித்தெழுந்த மறுகணம்
கண்மாய் மீண்டும்
குப்பை மேடாகி மூடிக் கொண்டது

பூந்தோட்டங்களுக்குள் புகுந்தவள்
பரந்திருந்த மலர்க் கூட்டங்களில்
வண்ணங்களைத் தேர்ந்து
சூடிக் கொண்டனள்
வழக்கம் போல அவள்
சூடி முடித்துக் கிளம்பியதும்
கருவேலமுட்களின் பீக்காடாக
மீளுருவானது பூந்தோட்டம்

கிணற்று நீரில் மிதக்கும்
நிலவை கைகளால் அசைத்து
ஒரு மிடறு நீர் குடித்தாள்
அவள் தாகம் அணைந்ததும்
கிணறு உள்வாங்கி
கட்டிடம் வெளியில் தெரியத் துவங்கியது

செங்காட்டில் வள்ளிக் கிழங்குகளை
அகழ்ந்து கூடையில் நிரப்பிக் கொண்டனள்
ஆம்
செங்காடு இப்போது
கிரீன் வேலி ரெஸிடென்சியாக
வெண்ணிற நடுகற்களோடு மீண்டது

நடந்து நடந்து
இரவின் விளிம்புக்கு வந்தவள்
ஊர் எல்லை
பேச்சி அம்மன் சிறுகோவிலுக்குள்
ஒளிக் கீற்றென நுழைந்து
சிலையாகி மீண்டும் விரல் விரித்து
நின்று கொண்டாள்

வெளிமாடத்தில் 
அணைந்து கிடந்த
அகல் விளக்கில்
என்னை சுடரேற்றி விட்டு
ஓடி வந்து விட்டேன்
நான் என் புதிய நகரத்துக்கு


கவிதை # 2

நெடுங்கவிதையொன்றிலிருந்து
வெட்டி நீக்கப்பட்ட ஒரு சொல் என் தனிமை
எதனோடும் ஒட்டாமல் 
துண்டித்துக் கிடக்கிறது

சறுக்குமரம் விளையாட நீண்ட வரிசையில் 
காத்திருந்து இடையிலேயே
இழுத்து விலக்கப்பட்ட 
சவலைப் பிள்ளை என் தனிமை
கேவி அழுதபடிக் கிடக்கிறது

மின் தொடர் வண்டியினின்று
இடறி விழுந்து
கால்கள் அரைபட்டு
அரையுடலாகத்
தண்டவாளத்தருகில்
துடிக்கும் பிண்டம் என் தனிமை
உயிர் வலியில் கதறியபடிக் கிடக்கிறது

கம்பிகள் தொய்ந்து
பரண் மேலில் கிடத்தப்பட்டிருக்கும்
ஓயாது இசைத்த வயலின் கருவி 
என் தனிமை
ஏக்கத்தின் மெளனத்தில் ஆழ்ந்து கிடக்கிறது

நாளெங்கும் வடிந்தபடியிருக்கும்
என் தனிமையின் குருதியின்
நிண வாடை தான்
என் சொற்களாகின்றன

பாருங்களேன்
இந்தக் கவிதையில்
அது
எவ்வளவு சிங்காரித்துக்கொண்டு
வீச்சம் பரப்புகிறது

கவிதை # 3

எப்போதும் 
நிறைந்தும் இரைந்தும் கிடக்கும்
எனது அறையை
மிகக் கவனமாக
ஒழுங்கு செய்கிறேன்

எப்போதும் ஒழுங்காகவே
இருப்பவர்களின் வாயில்
அரைபட்டுக் கொண்டேயிருக்கிறது
என் அறை

பழையன கழிக்கவும்
புதியன நிறைக்காமல் இருக்கவுமான
முன் முடிவுகளுடன்
ஒரு விடுமுறை நாளில்
என் அறையுடன் துவங்கியது
 சமர்

வகைகளாக
வண்ணங்களாக
பயன்பாடுகளாகப்
பகுத்து தொகுத்து
அறையை அரைவாசியாக்கி விட்டேன்

வெளியில் வீசியெறிந்துவிட்ட
 பாதி அறை மீதான
என் காருண்யம்
என்னைச் சமன் குலைக்கிறதுதான்

இருப்பினும்
இந்த அறையின்
உபயோகமற்ற அத்துணையையும்
கழித்திடத் துணிந்தவன்
கக்கடைசியில்
கடையினும் கடை உபயோகியான
என்னை
இழுத்து வெளியே எறிந்து விட்டேன்

எனது அறையில்
இப்போது அவ்வளவு ஒழுங்கு
அவ்வளவு ஒளி
அவ்வளவு தெய்வீகம்


வாசகசாலை இணையதளத்தில் வாசிக்க :

சனி, 22 ஆகஸ்ட், 2020

வாசகசாலை இணைய இதழில் கவிதைகள்

வாசகசாலை இணைய இதழில் எனது மூன்று கவிதைகள் பிரசுரமாகியுள்ளன

வாசிக்க : 


கவிதை # 1

மலையுச்சியில் அமர்ந்தபடி 
தனியனாய்ப் பேசிக்கொண்டிருந்தேன். 
யாருடன் பேசுகிறாய் என்றார்கள் 
என்னுடன் தான் என்றது மலை 
பாவம் அவர்களுக்கு 
அது கேட்கவில்லை 
பொருட்படுத்தாது சிரித்தபடிக் 
கிளம்பிவிட்டார்கள் 
விநோதப் பார்வைகளை 
தங்களோடே எடுத்துக் கொண்டு, 
பிறகொரு முறை நீங்கள் வந்தால் 
இந்தப் பள்ளத்தாக்கின் பச்சை பாதாளத்துக்குக் 
கொஞ்சம் செவி கொடுத்துப் பாருங்கள்
நானும் மலையும் 
பேசிக் கொண்டிருப்பது கேட்கலாம்

*******

கவிதை # 2 

என்ன செய்கிறாய் என்றொரு கேள்வி 
எப்போதும் பின் தொடர்ந்தபடியிருக்கிறது 

கண்விழித்த கணத்தில் 
எதிரில் விழும் அந்தக் கேள்விக்கு 
கண்விழித்தேன் என 
பதிலளிக்க வேண்டியிருக்கும் 

குளியலறை நீங்கியதும் 
என்ன செய்கிறாய் என்று வந்து நிற்கும் 

அலுவலகப் பணிகளுக்கிடையில் 
அரைமணிக்கொரு முறை 
எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அதை 

தேநீர் இடைவெளைகளில் 
உணவு நேரங்களில் 
நிற்கையில் நடக்கையில் 
வாகனத்தில் விரைகையில் 

என்ன செய்கிறாய் 
என்ன செய்கிறாய் 

அதன் முன் ஒரு 
அகதியைப் போல 
கை பிசைந்து நிற்பேன் 
அவ்வப்போது சினமேறி 
அதை தட்டாமாலை 
சுற்றியெறிவது போல 
எறிந்துவிடத் துடிப்பேன் 
ஆனாலும் 
ஒரு நாள் 
ஒரு பொழுது 
ஒரு முறையேனும் 
என்ன செய்கிறாய் 
எதிரில் வராமல் போனால் 
ஒரு அநாதையைப் போல 
பரிதவித்து நிற்கிறேன்

****

கவிதை # 3

நெடுங்காலம் தொடர்பு எல்லைகளுக்கு 
அப்பாலேயே இருந்தும் 
அலைபேசியில் அழித்திடவே 
முடியாத ஓர் எண் எப்போதும் இருக்கிறது 

நெடுங்காலம் ஒரு பதிவுமற்று 
வெற்றுச் சுவராய் இருந்தும் 
நட்பு நீக்கம் செய்திடாது 
இருக்கவே செய்கிறது 
ஒரு முகநூல் நட்பு 

ஒரு போதும் சென்றிடாத போதும் 
ஒரு கடிதமும் எழுதிடாத போதும் 
நினைவில் எப்போதும் இருக்கிறது 
ஒரு அஞ்சல் முகவரி 
எப்போதும் தொடர்பு கொள்ளவியலா 
தொடர்பு கொள்ள விரும்பா 
ஓர் அன்பு 
எங்கோ தொலைவில் 
இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது 

என்னைப் போலவே 
அங்கும் இருக்கும் 
தொடர்பு கொள்ளவியலா 
ஒரு அலைபேசி எண் 
ஒரு முகவரி 
மற்றும் 
சதா புலம்பல் கவிதை எழுதிக் கொண்டிருக்கும் 
ஒரு முகநூல் கணக்கை 
ரகசியமாய் வந்து படித்துச் செல்லும் 
தவிப்பின் பாதை 

*********

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

பொம்மைகளின் மொழி - கவிதைத் தொகுப்பு

பொம்மைகளின் மொழி - எனது முதல் கவிதைத் தொகுப்பு

முதல் காதலைப் போல, முதல் கவிதைத் தொகுப்பும் விசேசமானது

இலக்கிய உலகம் பற்றிய பரிச்சயம் அதிகம் இல்லாத  வாசகநாட்கள் அவை. வாசிப்பு, எழுத்து என்று இருந்த நாட்களில் அவ்வப்போது ஆனந்தவிகடன், கணையாழி மற்றும் பல சிற்றிதழ்களில் கவிதைகள் வெளியாகும் அவற்றை எல்லாம் முதலாவதாக எங்கள் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறைத் தலைவரும் என் நலத்தில் எப்போதும் அக்கறை கொண்டிருப்பவருமான சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களுக்கு அனுப்புவேன். மனமார வாழ்த்துவார். மற்றவர்களிடமும் என் கவிதைகள் குறித்து சிலாகிப்பார். ஒரு நாள் புத்தகம் போடு என்று அவர் சொன்ன போது; அதற்கான சூழல் இல்லை என்று நான் தயங்கியதும் தனது சொந்தச் செலவிலேயே எனது முதல் தொகுப்பு எனும் கனவை நனவாக்கிக் கையில் கொடுத்தார். தனது செலவிலேயே என் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்களை கவுரவித்து வெளியீட்டு விழாவும் நடத்தினார்.

என் நிறுவனத்தில் என் நண்பர்களே அந்தத் தொகுப்பின் பிரதிகளில் பெரும்பாலானவற்றை வாங்கிக் கொண்டனர். இலக்கிய வட்டங்களுக்கும் கடைகளுக்கும் மிக சொற்பமானவற்றையே கொடுத்தேன். 

ஒரு பிரதி கூட என் கைவசம் இல்லாத நிலையில் அந்தத் தொகுப்பு வேண்டும் என பல நண்பர்கள் இப்போது வரை கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். மறுபதிப்பு கொண்டு வரவோ, மின்பதிப்பு கொண்டு வரவோ ஆர்வமின்றி இருந்தேன். நண்பர்கள் பலரும் இந்த ஊரடங்கு காலத்தில் கிண்டில் மின்னூலாக வெளியிட, எனக்கும் இந்த யோசனை வந்தது. ஆகவே எனது முதல் தொகுப்பை மின்னூலாகக் கொண்டு வந்திருக்கிறேன்.

கீழுள்ள லிங்கைப் பின்பற்றி அமேசான் கிண்டிலில் எனது பொம்மைகளின் மொழியை வாங்கி வாசிக்கலாம். வாசியுங்கள் அந்தக் காலத்தின் நான் உங்களோடு உரையாடக் காத்திருக்கிறேன்.


இது எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான தொகுப்பு. இந்தத் தொகுப்பு எனக்குக் கொடுத்த அங்கீகாரமும் அடையாளமும் பெரிது. மேலும் இந்தத் தொகுப்பின் வழியாகத்தான் முகம் தெரியாது தொகுப்பை வாங்கி வாசித்து நண்பர்களாக ஆகிப்போன வைகறை, இயற்கை, அனாமிகா போன்ற நண்பர்கள் கிடைத்தார்கள்.

நண்பர்கள் வாங்கி வாசிக்கவும்


புதன், 5 ஆகஸ்ட், 2020

புத்த முகம் அச்சடிக்கப்பட்ட இரவு உடை - கணையாழி கவிதை

இந்த மாதம் கணையாழி இதழில் என் கவிதை வெளியாகியுள்ளது..

வாசிக்க


வியாழன், 30 ஜூலை, 2020

கவிஞர் கலாப்ரியா கவிதைகள்

நவீன கவிதை முகங்களில் மிக முக்கிய முகமான கவிஞர் கலாப்ரியாவின் பிறந்தநாளான இன்று அவரது கவிதைகள் சில இங்கு வாசிப்புக்கு ..



விதி

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
அலைமோதிக் கரைகிறது.
எனக்கதன் கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை தெரியவில்லை

❤

ஆளிருக்கும் வீட்டில்
அழைப்பு மணி
அமுக்கி விட்டு
ஓடுவதில்
குழந்தைகளுக்கிருக்கும்
பரபரப்பே
கவிதையில்
கவிஞர்களுக்கு

❤

சாப்பாடில்லாத பிள்ளைகள்

சாப்பாடில்லாத பிள்ளைகள்
புழுதிக் காலுடன்
அடுப்பெரிகிறதை
வந்து வந்து பார்த்து
விளையாடப்போகும்,
பசியை வாசல்ப்படியிலேயே
விட்டுவிட்டு.

❤

யாரால் செமிக்க முடியும்

ஜெயிலுக்குப் பொறத்தால
நடக்கும் கல்யாணங்களில்
தோட்ட வேலைக்கைதிகள்
மாத்திரம்
வேலியருகே வந்து
இட்லியக் கெஞ்சி வாங்கி
மறைச்சபடி
உள்ளே ஓடற ஓட்டத்தை
யாரால்
செமிக்க முடியும்

❤

ஒரே மாதிரி

பிள்ளைகளின் பசியடக்க
புதிய வசவுகள் தேடி
மூலையடைவாள்,அம்மை.
பீடிகள் தேடிச்சலித்து,
யூனிபாரத்தை தேடச்சொல்லி
அன்பாய்க் கூப்பிடுவான்
‘ஒரே மாதிரி’வசவுகளில்
அழவும் மரத்துப்போன
பிள்ளைகளை
அப்பன்.

❤

என்பிலதனை

புழுவெனச்
சொருகிய வார்த்தைகளுடன்
தூண்டிலிட்டுக் காத்திருக்கிறான்.

கள்ளப்பட்டுப் போன மீன்கள்
எல்லை தள்ளி
வளைய வருகின்றன.

எல்லை தாண்டியோரின்
எலும்புகளை
குறிப்பாய் முதுகெலும்புகளை
வலையினடியில்க்
கனத்துக்காய்க் கோர்த்து
வீசுவோருண்டென

அவை பேசிக் கொள்வதைக்
கேட்க விடுவதில்லையவனது
‘ஞாபகங்களை அழிக்கும்
ஒரே ஞாபகமான பசி’

புழுவெனச் சொருகிய்
வார்த்தைகள்
மிதக்கிறது
தென்கடலெங்கும்
அவன் கை விட்ட
தூண்டிலுடன்...

❤

பயணம்.

கூட்டிலிருந்து
தவறி விழுந்த
குஞ்சுப்பறவை
தாயைப்போலவே 
தானும் பறப்பதாய்
நினைத்தது.
தரையில் மோதிச்சாகும்வரை.

❤

அவளின் பார்வைகள்

காயங்களுடன் 
கதறலுடன் ஓடி
ஒளியுமொரு பன்றியைத்
தேடிக் கொத்தும் 
காக்கைகள்

❤

தொலைவில் புணரும்
தண்டவாளங்கள்
அருகில் போனதும்
விலகிப் போயின

❤

எச்சியிலைத் தொட்டியில்
ஏறிவிழும்
தெருநாயின்
லாவகம் எனக்கொரு 
கவிதை தரப்பார்க்கிறது

❤

கரித்துண்டொன்றை
தரையில் பைத்தியக்
கிறுக்கலாய்ப் படம் 
போட்டுச் சாகடிக்கிறேன்
எரித்துக்கொள்வதைவிட இது
எவ்வளவோ மேல்

❤

கூட்டிலிருந்து 
தவறிவிழுந்த 
குஞ்சுப்பறவை
தாயைப் போலவே
தானும் பறப்பதாய்
நினைத்தது
தரையில் மோதிச்சாகும்
வரை

❤

பகலின்
வெளிச்சத்திற்கேற்ப
தன் ஒப்பனைகளைக்
கலைத்துக் கலைத்து
மாற்றி மாற்றி
அழகு காட்டுகிறது
பிரகாரச் சிலை

❤

மரங்கள்
நிழல் விரிப்பது
உதிர்ந்த
பூக்களுக்காகத்தான்

மனிதன் எதைத்தான்
பறித்துக் கொள்ளவில்லை

❤

எல்லாக் கிளைகளிலும் இலை
ஏதாவது சில கிளைகளில்
பூ
யார் கண்களிலும் படாமல்
வேர்

❤

பயணத்தில்
ஜன்னல் ஓரம்
கண் மூடிக்
காற்று வாங்குபவன்
போல்
கிடக்கிறான்
பனிப் பெட்டிக்குள்

பின்னகரும் மரங்கள்
போல வந்து
சாத்துயர் கேட்டுப்
போகிறார்கள்

❤

கனியாகப் பார்த்தால்
வியாபாரி
விதையாகப் பார்த்தால்
விவசாயி
வேராகப் பார்த்தால்
தத்துவவாதி
பூவை பூவாகவே
பார்த்தால்
படைப்பாளி

❤

நின்று பார்ப்பவனுக்குத்தான்
சித்திரம் வரைந்து காட்டுகிறது
இயற்கை

❤



புதன், 29 ஜூலை, 2020

கவிஞர் சிற்பி - 85

" கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி " - மகாகவி பாரதி 



மகாகவி பாரதியின் வரிகளுக்கு இணங்கி, மகாகவியைத் தன் ஆசானாகக் கொண்டு வாழ்க்கையையே கவிதையாக, கவிதையையே வாழ்க்கையாக வாழ்ந்து வருபவர் கவிஞர் சிற்பி அவர்கள்.

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இன்று அகவை 85.

இருபதுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள், பத்துக்கும் மேற்பட்ட உரைநடை இலக்கிய நூல்கள் , பத்துக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், மேலும் புதினங்கள், நாடகங்கள், சிறுவர் இலக்கிய நூல்கள்,  இலக்கிய வரலாற்று நூல்கள் என தன் பரந்துபட்ட எழுத்துகளால் ஒரு மாபெரும் எழுத்து உலகத்தைக் கட்டமைத்து தமிழின் மிக முக்கியமான கவியாகவும் எழுத்து ஆளுமையாகவும் , முன்னோடியாகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர்.

மொழிபெயர்ப்புக்கு ஒரு முறை, சுய படைப்புக்கு ஒரு முறை என இரண்டு முறை சாகித்திய அகாடெமி விருது பெற்ற பொள்ளாச்சியின் மிகப்பெரிய இலக்கிய அடையாளம் இவர். அது மட்டுமல்லாது , இவரால் அடையாளம் காணப்பட்டு அங்கீகாரம் செய்யப்பட்ட எழுத்தாளர்களின் எண்ணிக்கை இவர் அகவையினும் அதிகம் இருக்கும். எந்தப் பிரதிபலனும் இல்லாது இவர் செய்யும் தமிழ்ப்பணிகளில் இளையவர்களை கவிதைக்குள் இழுத்து வருவதும் ஒன்று. நதி என்றைக்கு பிரதிபலனை எதிர் பார்த்திருக்கிறது. அது ஓடிக் கொண்டிருக்கிறது தன் பாதையில்... 

அவர் பிறந்த மண்ணில் வாழ்வதற்கும், அவர் வாழும் காலத்தில் வாழ்வதற்கும், அவர் அருகாமையில் இருந்து அவரை ரசிப்பதற்கும் பெரும் பேறு பெற்றவனாயிருக்கிறேன்.

நம் காலத்தின் மகத்தான ஆளுமை அவர். ஊரடங்குக் காலம் இல்லாமல் போயிருந்தால் இந்த எண்பத்து ஐந்தாவது பிறந்தநாளை நாம் மிகச் சிறப்பாகக் கொண்டாடி இருப்போம் ஒரு கவிதைத் திருவிழாவாக. இப்போதும் இணையம் வழியாக பேச்சு எழுத்து என கவிஞர் சிற்பியைக் கொண்டாடி வருகிறோம்.

கவிஞர் சிற்பி மகத்தான கவிஞர். மிகச் சிறந்த எழுத்தாளர் என்பதில் எள்ளளவும் மாற்றுக் கருத்து இல்லை. அதைத் தாண்டி நான் அவரிடம் வியந்து பார்ப்பது அவர் ஒரு தீவிர வாசகர். சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரைக்கும்  நீண்டு பரந்தது அவரது வாசிப்புப் பரப்பு. அவரது கைகளுக்கு வந்து சேரும் எல்லாப் புத்தகங்களையும் அவர் வாசித்து விடுகிறார். அவருடன் உரையாடும் பொன் தருணங்களில் அவரது வாசிப்பின் எல்லைகளை உணர முடியும்.

தமிழ் இலக்கியங்கள், மலையாள இலக்கியங்கள், ஆங்கில மற்றும் பிற மொழி இலக்கியங்கள் என ஒரு தகவல் சுரங்கமாக அவர் நம்மோடு உரையாடும் போது நம் முன் ஒரு மலைச் சூரியன் போல ஒளிர்வார். நாம் கண்கள் கூச அவரது உரை வெள்ளத்தில் மிதக்கலாம்.

இன்றைய நவீன கவிஞர்கள் எழுத்தாளர்கள் வரைக்கும் அனைவரது படைப்பையும் வாசித்துவிடுகிற அவர் இளைஞர்களின் சிறந்த கவிதைகளை தன்னுடன் அழைத்துச் செல்ல தயங்கியதே இல்லை. 


பொள்ளாச்சி இலக்கிய வட்ட நண்பர்கள் இணைந்து ஐயாவின் பிறந்தநாளுக்கு அவரது கவிதைகளை வாசித்தும், அவருக்காக நாங்கள் கவிதை எழுதி வாசித்தும் எங்கள் அன்பை ஒரு காணொலியில் காட்டியிருக்கிறோம். அவசியம் முழுதும் பாருங்கள்




காணாத புலி ஒன்று

புலியை நேரில் பார்த்திருக்கிறாயா அப்பா
என்றவள் கேட்ட போது
என் 37 வருடங்களை
நான் காணாத
வனங்களின் நாலா திசைகளிலும்
சுழற்றிப் பார்க்கிறேன்.
ஒரு முறையும்
ஒரு புலியையும்
நேரில் பார்த்ததில்லை
மகளே

காடுகளில் சுற்றித் திரிந்த
என் தகப்பனின் கதைகளை
நான் உனக்குச் சொன்ன போது
நானும் உடனிருந்திருப்பதாக
நீ ஒரு நினைவின் படத்தை
வரைந்து வைத்திருக்கிறாய்

நான் காடு புகும் காலங்களிலெல்லாம்
காடு கான்கிரீட் கலவைகளைப்
பூசியிருந்தது

புலிகளை நான்
உன்னைப் போல
தொடுதிரையிலல்லாமல்
புத்தகங்களில்
முத்தமிட்டேன் அவ்வளவே

பள்ளிச் சுற்றுலாக்களில்
பயணக்கட்டணங்கள்
புலியினும் அதிகம்
பயமுறுத்தியதை உன்னிடம்
சொல்வதற்கில்லை

நம் தேசிய விலங்கை
சரணாலயங்களின் கூண்டுகளுக்குள் கூட
பார்த்ததில்லையா என்று
மேலும் மேலும்
நீ புலி வாலைப் பிடித்திழுத்த போது
நான் புலியைப் பார்த்து
உறுமத் தொடங்கிவிட்டேன்
அது குதித்தோடி விட்டது
நம் அறையை விட்டு