சனி, 22 ஆகஸ்ட், 2020

வாசகசாலை இணைய இதழில் கவிதைகள்

வாசகசாலை இணைய இதழில் எனது மூன்று கவிதைகள் பிரசுரமாகியுள்ளன

வாசிக்க : 


கவிதை # 1

மலையுச்சியில் அமர்ந்தபடி 
தனியனாய்ப் பேசிக்கொண்டிருந்தேன். 
யாருடன் பேசுகிறாய் என்றார்கள் 
என்னுடன் தான் என்றது மலை 
பாவம் அவர்களுக்கு 
அது கேட்கவில்லை 
பொருட்படுத்தாது சிரித்தபடிக் 
கிளம்பிவிட்டார்கள் 
விநோதப் பார்வைகளை 
தங்களோடே எடுத்துக் கொண்டு, 
பிறகொரு முறை நீங்கள் வந்தால் 
இந்தப் பள்ளத்தாக்கின் பச்சை பாதாளத்துக்குக் 
கொஞ்சம் செவி கொடுத்துப் பாருங்கள்
நானும் மலையும் 
பேசிக் கொண்டிருப்பது கேட்கலாம்

*******

கவிதை # 2 

என்ன செய்கிறாய் என்றொரு கேள்வி 
எப்போதும் பின் தொடர்ந்தபடியிருக்கிறது 

கண்விழித்த கணத்தில் 
எதிரில் விழும் அந்தக் கேள்விக்கு 
கண்விழித்தேன் என 
பதிலளிக்க வேண்டியிருக்கும் 

குளியலறை நீங்கியதும் 
என்ன செய்கிறாய் என்று வந்து நிற்கும் 

அலுவலகப் பணிகளுக்கிடையில் 
அரைமணிக்கொரு முறை 
திர்கொள்ள வேண்டியிருக்கும் அதை 

தேநீர் இடைவெளைகளில் 
உணவு நேரங்களில் 
நிற்கையில் நடக்கையில் 
வாகனத்தில் விரைகையில் 

என்ன செய்கிறாய் 
என்ன செய்கிறாய் 

அதன் முன் ஒரு 
அகதியைப் போல 
கை பிசைந்து நிற்பேன் 
அவ்வப்போது சினமேறி 
அதை தட்டாமாலை 
சுற்றியெறிவது போல 
எறிந்துவிடத் துடிப்பேன் 
ஆனாலும் 
ஒரு நாள் 
ஒரு பொழுது 
ஒரு முறையேனும் 
என்ன செய்கிறாய் 
எதிரில் வராமல் போனால் 
ஒரு அநாதையைப் போல 
பரிதவித்து நிற்கிறேன்

****

கவிதை # 3

நெடுங்காலம் தொடர்பு எல்லைகளுக்கு 
அப்பாலேயே இருந்தும் 
அலைபேசியில் அழித்திடவே 
முடியாத ஓர் எண் எப்போதும் இருக்கிறது 

நெடுங்காலம் ஒரு பதிவுமற்று 
வெற்றுச் சுவராய் இருந்தும் 
நட்பு நீக்கம் செய்திடாது 
இருக்கவே செய்கிறது 
ஒரு முகநூல் நட்பு 

ஒரு போதும் சென்றிடாத போதும் 
ஒரு கடிதமும் எழுதிடாத போதும் 
நினைவில் எப்போதும் இருக்கிறது 
ஒரு அஞ்சல் முகவரி 
எப்போதும் தொடர்பு கொள்ளவியலா 
தொடர்பு கொள்ள விரும்பா 
ஓர் அன்பு 
எங்கோ தொலைவில் 
இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது 

என்னைப் போலவே 
அங்கும் இருக்கும் 
தொடர்பு கொள்ளவியலா 
ஒரு அலைபேசி எண் 
ஒரு முகவரி 
மற்றும் 
சதா புலம்பல் கவிதை எழுதிக் கொண்டிருக்கும் 
ஒரு முகநூல் கணக்கை 
ரகசியமாய் வந்து படித்துச் செல்லும் 
தவிப்பின் பாதை 

*********

3 கருத்துகள்:

  1. நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க இந்த பதிவை படிக்கவும் https://www.techhelpertamil.xyz/2020/09/how-to-write-seo-friendly-blog-post-in-tamil.html இந்த பதிவானது Google Rank ல் முதலிடத்தில் உள்ளது. சந்தேகமிருந்தால் " how to write seo post in tamil " என்று தேடவும். முதலிடத்தில் நமது போஸ்ட் தென்படும். Tech Helper Tamil ஐ பாருங்கள்

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. கவிதைகள் மூன்றும் அருமையாக மீண்டும் மீண்டும் படித்து ரசிக்கத் தூண்டுகிறது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு