வெள்ளி, 14 ஏப்ரல், 2023

மகிழ்ச்சியிலும் துயரத்திலும் துளிர்க்கும் துளிக்கண்ணீர் - கவிதை ரசனை 11

 மகிழ்ச்சியிலும் துயரத்திலும் துளிர்க்கும் துளிக்கண்ணீர்

 

விதை நம் மனதை எப்போதும் தொட்டுக்கொண்டிருக்கும் தென்றல். எப்போதாவது அலைக்கழிக்கும் புயல். தென்றலும் புயலுமாக மாறி மாறி கவிதை காட்டும் முகம் என்பது வாசகனுக்கு உண்மையில் பேரனுபவத்தைத் தரக் கூடியது தான். ஒரு கவிதையை வாசித்துவிட்டு துள்ளிக்குதித்துக் கொண்டாடும் மகிழ்ச்சியையும், ஒரு கவிதையை வாசித்தவுடன் எதுவுமற்று நிர்மலமான மனதுடன் உறைந்து போய் அமர்ந்துவிடக் கூடிய துயரத்தையும் நல்ல வாசக மனம் விரும்பியே அனுபவிக்கும்.  

 மகிழ்ச்சியும் துயரமும் படைப்பூக்கத்தின் பிரதான கிரியா ஊக்கிகள். படைப்பு போதையைப் போல, கண்ணீரைப் போலவும் தான்... மகிழ்ச்சியிலும் ஒருவன் போதையாயிருப்பான் , போதையைத் தேடுவான், துயரத்திலும் அப்படியே. துயரத்தில் கண்ணீர் வருவதைப் போலவே பெருஞ்சிரிப்பில் முட்டிக்கொண்டு வந்து விழும் ஒரு துளிக்கண்ணீர்.

 கவிதையில் ஆடும் தூளிகள் :

 கவிதைகளில் இரண்டு தூளிகளை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. ஒன்று நெகிழ்ச்சியில் என்னை ஆழ்த்தி அசைந்தது. இன்னொன்று அதிர்ச்சியில் அசையாமல் அப்படியே நிற்க வைத்துத. இரண்டும் மிகவும் பாதித்தவை.


முதல் கவிதை கவிஞர் ஜே.மஞ்சுளாதேவியினுடையது. இயல்பான, அன்றாடங்களின் அழகு ததும்பும் கவிதைகள் இவருடையன. கிராமங்களில், சாலைகளில், நடைப்பயணங்களில், பணியிடங்களில் , வீட்டில் என இவர் செல்லும் இடங்களிலெல்லாம் ஒரு கவிதை இருகைகளை நீட்டி குழந்தையென இவரை அழைக்கும்.. இவரும் வாரியணைத்து இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டு வந்துவிடுவார். பின்னர் அக்குழந்தைக்கு பொட்டிட்டுப் பூவைத்து சிங்காரித்து நம் முன் நிறுத்துவார். குழந்தையை யாருக்குத்தான் பிடிக்காது ?

 தொட்டில் மரம் எனும் கவிதையில் ஆடும் தூளி கிராமத்து வயல்வெளிகள் ஈரம் நிறைந்த அப்பத்தாக்களின் மனதையும், கைக்குழந்தையுடனும் களையெடுக்க வந்துவிடும் வேலையாளின் வலியையும் சேர்த்தே காட்சிப்படுத்துகிறது.

 தொட்டில்மரம்

 

வயல் ஓரத்தில்

இருக்கும் அந்தமரம்

அப்பத்தா போலவே

வயதானது

 எப்போதும் தொட்டில் குழந்தையுடன் இருக்கும்

 களை எடுப்பவளின்

முன் பக்கம் கொஞ்சம் நனையத் தொடங்கும்போதே

அப்பத்தாவுக்குத் தெரிந்துவிடும்

 போ கண்ணு புள்ளையப் பார்த்துட்டு வா

என்று அப்பத்தா அனுப்பியதும்

வா என்று

மரம்

கிளையை ஆட்டும்

 

-         ஜே.மஞ்சுளாதேவி

ரயில் கோமாளிகள்  தொகுப்பிலிருந்து, படைப்பு பதிப்பகம் – 73388 97788

 இந்தக் கவிதையில் வரும் பெண்கள் என் அம்மாவின் காலத்தின் காலடியில் என்னைக் குழந்தையெனக் கிடத்திவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். நான் அந்தக் காலத்தின் நான்கோ அல்லது ஐந்து வயதுச் சிறுவனாக செம்மண் புழுதியில் கால்களுதைத்து விளையாடிக்கொண்டிருக்கிறேன். அம்மாவோ கடலைக் காட்டில் கடலை பறித்துக் கொண்டிருக்கிறாள். அவ்வப்போது அம்மாவின் மடியில் இருக்கும் நிலக்கடலைகளைக் கொஞ்சமாக வாங்கி செம்மண் உதறி, ஓடுடைத்து உள்ளிருக்கு நிலக்கடலை முத்துகளின் சுவையில் கோடையை விரட்டியபடியிருக்கிறேன். எப்போதேனும் அபூர்வமாகக் கிடைக்கும் மூன்று முத்துகள் இருக்கும் நிலக்கடலை, கடலைக் காட்டில் எந்த அக்காவுக்குக் கிடைத்தாலும் எனக்கு அருளப்படுகிறது. வரப்போர வேப்பமரத்தில் தூளியிலாடும் அக்காக்களின் குழந்தைகளின் சிணுங்கலுக்குத் தாலாட்டுப்பாட காற்சட்டை செம்மண்ணை உதறியபடி ஓடோடிப் போகிறேன். கவிதை இப்படியாக என் பழைய காலங்களுக்கு என்னை விரட்டுகிறது... அது கவிதை.. அப்படித்தான் விரட்டும்..

 

இன்னொரு கவிதையான சூ.சிவராமனின் ஒரு கிலுகிலுப்பையின் தனிமையோ திக்கற்று அமரச் செய்துவிட்டது...

  

ஒரு கிலுகிலுப்பையின் தனிமை

 

உரத்துப் பெய்யும் மழை

ஓயாத அழுகை

தூளி நடுவே

காற்றில் ஆடும் கிலுகிலுப்பை

சவப்பெட்டியோ

மிகச் சிறியது

 

-         சூ.சிவராமன்

சற்றே பெரிய நிலக்கரித்துண்டு” – தொகுப்பிலிருந்து , கொம்பு  வெளியீடு 9094005600

 

 

கடைசி இரண்டு வரிகளின் சின்ன சவப்பெட்டி மனமெங்கும் கனக்கிறது. அதைச் சுமக்க முடியாமல் தள்ளாடுகிறேன். நகர முடியவேயில்லை... அத்தனை கனம். வெறும் காட்சி தான்... ஆனால் வாழ்நாளில் பார்த்துவிடக் கூடாத காட்சி. நினைத்தும் விடக்கூடாத காட்சி. ஒரு குழந்தையின் மரணத்தை என்றுமே நேரில் சந்தித்துவிடாத வரமொன்றைத் தா என் வாழ்க்கையே என இந்தக் கவிதையிடம் கேட்டுக்கொள்கிறேன்.

 முதல் கவிதை தந்த நெகிழ்ச்சியும் இரண்டாம் கவிதை தந்த அதிர்ச்சியும் ஓர் இரவைக் களவாடிவிடக் கூடியவை. உறக்கத்தைக் காவுவாங்கிவிடக் கூடியவை. கவிதையின் அரும்பணிகளில் ஒன்று தான் இது... கவிதைகளின் பெரும் திருவிளையாடல்களுள் ஒன்று தான் இது...

 

 இந்தக் கவிதைகள் மனதுக்குள் எப்போதோ வாசித்த ஒரு தூளியின் அசைவை அசை போட வைத்தது... அது என் நினைவுகளின் சேகரிப்பில் எப்போதும் இருக்கக் கூடிய கவிதை .. கவிஞர் ஸ்ரீ நேசனுடையது.. இந்தக் கடவுளின் தூசி அசைகின்ற போதெல்லாம் நான் மானசீகமாக ஒருமுறை கவிதையைத் தொழுதுகொள்வேன்... ஒரே ஒருமுறை ஸ்ரீநேசன் ஆட்டிவைத்துவிட்ட இந்தத் தூளியோ ஓயாது ஆடிக்கொண்டே இருக்கப் போகிறது ...

  

கடவுளின் தூளி

                  -ஸ்ரீநேசன்

 அம்மாவும் அப்பாவும்

குழந்தையுமான ஒரு குடும்பத்தை

விபத்து நடத்திக் கொன்றாள் கடவுள்

அம்மா நல்லவளாகையால்

வலப்புறமிருந்த

சொர்க்கத்துக்கு அனுப்பி வைத்தாள்

அப்பா கெட்டவன் எனச் சொல்லி

இடப்புற

நரகத்தில் தள்ளி விட்டாள்

நல்லதா கெட்டதா எனத் தெரியாமல்

குழந்தையைத் தன்னுடனே வைத்துக்

கொண்டாள்

தாய் தந்தையில்லாத ஏக்கத்தில்

அழத் தொடங்கிய குழந்தை

நிறுத்தவே இல்லை

முகிலைத் துகிலாக்கி மின்னலைக்

கயிறாக்கிப் பிணைத்து

வெட்ட வெளியில் தூளி ஒன்றைக்

கட்டிய கடவுள்

குழந்தையை அதிலிட்டுத் தாலாட்டத்

தொடங்கினாள்

சொர்க்கத்துக்கும்

நரகத்துக்குமிடையே அசைந்தது

தூளி

வலப்புறம் அம்மாவையும்

இடப்புறம் அப்பாவையும்

காணத் தொடங்கிய குழந்தை

அழுகையை நிறுத்திக் கொண்டது

அப்பாடா என ஓய்ந்தாள் கடவுள்

குழந்தையோ மீண்டும் வீறிடத்

தொடங்கியது

பாவம் கடவுள் குழந்தையை

நல்லதாக்குவதா

கெட்டதாக்குவதா

என்பதையே மறந்துவிட்டுத்

தூளியை ஆட்டத் தொடங்கி ஆட்டிக்

கொண்டே இருக்கிறாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக