சனி, 15 ஏப்ரல், 2023

அம்மா - இரண்டு கவிதைகள் - உதிரிகள் இதழ்

நண்பர் நிலாரசின் மற்றும் ராஜலிங்கம் ரத்தினம் இருவரும் ஆசிரியர்களாக இருந்து வெளிக்கொண்டு வந்திருக்கும் உதிரிகள் இதழில் எனது இரண்டு கவிதைகள் வெளியாகியுள்ளன.. வாசிப்புக்கு இங்கு ...
சிறப்பான முயற்சிக்கு
வாழ்த்துகள்
நண்பர்களே ..
உதிரிகள் இதழ் வேண்டுவோர் தொடர்புக்கு : 9791043314, 85088 33000


 கவிதை 1


அப்பாவின் பழைய லுங்கிகளை
சதுர சதுரமாக வெட்டி
குளியலறை எரவானத்தில் 
பத்திரப்படுத்தியிருப்பாள் அம்மா
பால்யத்தில் நான் அவற்றைக்
கேள்விகளால் துளைத்துப்பார்த்துவிட்டேன்
உனக்கு அது தேவை இல்லாததென்ற
ஒரு பதிலில் கடந்துவிடும் அம்மாவுக்கு
ஐந்து நாட்கள் விடுமுறைக் கணக்கில்லை
சோர்ந்து படுத்து ஒரு நாளும் பார்த்ததில்லை.
அந்தத் துணிகளில் படாமல் போன
ஒரு செந்துளியின் சிறுதுளி தான்
நானெனப் பின்னாளில் அறிந்துகொண்ட போது
அம்மாவின் உடல் ஒரு
வன தேவதையின் உடலெனப் பச்சையம் பூசியிருந்தது...

அந்த ஐந்து நாட்களின்
அவஸ்தைகளிலெல்லாம் மனைவியின் புலம்பல்களை
மடியேந்திக் கொள்கிறேன்
அவளின் வலிகளுக்கு
சொற்களால் களிம்பிட முயன்றிருக்கிறேன்
அந்நாட்களின் ஏதோ ஒரு கணத்தில்
நினைவில் வந்துவிடும்
அம்மாவின் ரகசிய நாட்களின் மீது
இன்னும் கரிசனம் குவிந்திருக்கிறது

மகளுக்கு தூமைப் பஞ்சு வாங்க
கடைகளில் நிற்கும் கணமெல்லாம்
அம்மாவின் லுங்கிச் சதுரங்களின்
கறைகள் கண்களுக்குப் புலனாகும்.

எறவானத்துச் சதுரங்களை
அவள் எப்போது துவைத்தாள்
எங்கு உலர்த்தினாள் என்பது
நான் அறிந்திடாத ரகசியம்

வயல்களில் களையெடுக்கையில்
வயிற்றில் ஊர்ந்துகொண்டிருந்த
பூச்சிகளை
எப்படி அடக்கிக் கொண்டாள்
என்பது மாறா வியப்பு

மனைவிக்கு
மகளுக்கு
தோழிகளுக்கு
என
அந்த நாட்களின் தேவைகளின் பொருட்டு
மருந்துக் கடைக்குப் போக
தேநீர் கலந்து கொடுக்க
சிறு சிறு உதவிகள் செய்ய
என்னைப் பணித்தவை
அந்த லுங்கிச் சதுரங்கள் தாம்.

சாதாரண நாட்களில்
குளியலறை எரவானத்தில்
காட்சிப்படும் அவை
விசேஷ நாட்களிலும்
விருந்தினர் வருகையின் போதும்
காணாமல் போய்விடுவது
இன்னுமோர் பேரதிசயம்

அம்மாவும் ஒரு லுங்கிச் சதுரம் தான்
அப்பாவுடைய
என்னுடைய
இன்ன பிற ஆண்களுடைய
கறைகளை
மனதின் எரவானத்தில்
யாரும் பாராமல்
ஒளித்துவைத்தே இருக்கிறாள்


கவிதை # 2


அம்மாவுடனான விளையாட்டு

அம்மாவுடன் தாயமாடுவது
சற்று சலிப்பானது
வெட்ட மறந்ததாகச் சொல்லி
என்னை ஜெயிக்க வைத்துவிடுவாள்

கண்ணாமூச்சி ஆடுவது 
இன்னும் சலிப்பு
ஒரு சுற்றில் தானே வந்து
கைகளுக்குள் அகப்பட்டுவிடுவாள்

ஒளிந்து விளையாடும் விளையாட்டில்
எப்போதும்
கதவின் பின் நிற்பாள்
அதே இடத்தில் ஒளியும் என்னை
வீடெங்கும் தேடுவதாகப் பாசாங்கு செய்வாள்

எல்லா விளையாட்டுகளிலும்
தன்னை விட்டுக் கொடுத்து
தோல்வியை அவ்வளவு 
இயல்பாக நிகழ்த்துவாள்

அவள் தோற்றுத் தோற்றுத்தான்
ஆணாக்கியிருக்கிறாள்
என்னை மேலும்
அப்பாவையும்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக