செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

கல்யாண்ஜி கவிதைகள்@

கூண்டுக் கிளிகள்
காதலில் பிறந்த
குஞ்சுக் கிளிக்கு
எப்படி எதற்கு
வந்தன சிறகுகள் ?

 @

உன் வரிகள்
தட்டையானது
மூன்றாம் நான்காம் பரிமாணமற்றது.
தரிசனமற்றது
எந்தப் பக்கம் சாய்வென்று இடத்தை காட்டாதது.
கிழிக்கும் முள்ளின்
அழகை பாடுவது.
தொங்கும் புள்ளியற்ற
வெறும் சித்திர வரிசை.
கோஷம் எதுவும் போடாமல்
கோஷத்திற்கு எதிர் கோஷம் தேடாமல்
நடைபாதையில் நின்று ஊர்வலம் பார்ப்பது.
சுவடற்றது.
சரித்திரம் சொல்லும்
இயக்க விதிகளுக்கு
இணங்காதது.
காலம் திணிக்கும்
பொறுப்புகளைப் புறக்கணிப்பது.
வீட்டு வேலி மூங்கிலில்
மத்தியானம் உட்கார்ந்திருக்கும்
மீன்கொத்தி போல
இடம் பொருள் ஏவல் அற்றது.
வாஸ்தவம்
எல்லாவற்றுடன்
இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
என் வரி
உண்மையானது.
பாசாங்கற்றது

@

இத்தனை வருடங்களும்
இதன் நிழல்வாங்கி
இதன் பழம் தின்னும்
பறவைகள் பார்த்து
இதன் துளிரில் துளிர்த்து
சருகில் சரசரக்க நடந்து
திரிகிறவன் எனினும்
இந்த மரத்தை முழுதாகப்
பார்த்ததில்லை என்று புரிய
நேற்றுவரை ஆயிற்று
ஆயுசு போதாது
ஒருமரம் பார்க்க
 

@

உன்னுடைய கைகள் தானே
யாருடைய கைகளோ போல
பார்க்கிறாயே – என்றான்
என்னுடைய கைகளைத் தான்
வேறு யாருடைய கைகளையோ போல
பார்க்கிறேன்.
என்னுடையதை
என்னுடையதாகப் பார்ப்பதில்
என்ன இருக்கிறது

 @

தானாய் முளைத்த
செடி என்றார்கள்
யாரோ வீசிய
விதையிலிருந்து தானே

 @

யாராவது ஒருவர் –
குடித்துவிட்டு விழுந்து கிடக்கிறார்கள்.
யாராவது –
திறக்காத கடைவாசலில் தூங்குகிறார்கள்.
செருப்புத் தைக்கக் கொடுத்துவிட்டுக்
காத்து நிற்கிறார்கள்.
வெற்றிலைச் சாற்றைப் பாதையில் துப்புகிறார்கள்.
யாராவது ஒருவர்
தலைக்குவைத்த பூவைத்
தவறவிடுகிறார்கள்.
அழுது கலங்குகிற பெண்ணிடம்
ஒதுங்கி நின்று பேசுகிறார்கள்.
சாதுவாக வருகிற கருப்புப் பசுவுக்குத்
தேவைக்கதிகமாகப் பயப்படுகிறார்கள்.
யாராவது ஒருவர் –
தொலைபேசியில் சத்தமாகப் பேசுகிறார்கள்.
தேய்த்து அடுக்கிய சலவை உடைகளைச்
சூடாக ஏந்திப் போகிறார்கள்.
என்னைப் போல
யாராவது ஒருவர் -
பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருக்கிற
சிறுவர் இருவரில்
சின்னப் பையனின் தலையை வருடுகிறார்கள்.
 
@

புத்தரைப் போல
நின்று பார்த்தேன்
கூடவில்லை
புத்தரைப்போல
அமர்ந்து பார்த்தேன்
இயலவில்லை,
சுலபம் தான் என்று
புத்தரைப் போலச்
சிரிக்க முயன்றேன்
புத்தர்தான் சிரித்துக்
கொண்டிருந்தார்
என்னைப் பார்த்து
இப்போதும்

@

கருக்கலில் வானம்
கணக்கெடுத்துவிட்டுச் சொன்னது –
வந்தவை எல்லாம்
திரும்பவில்லை

வைகறை
எண்ணிமுடித்துவிட்டுச் சொன்னது
கூடு திரும்பியவைகளில்
கொஞ்சம் குறைகிறது
 
பகலும் இரவும்
துக்கித்து நிற்பதோ
காணாமற்போன பறவைகள் குறித்து
 
@
 
சரிந்த பிறகும்
 
தானாக
அந்தத் தண்னீர்க் குவளை சரிந்து
தரையில் பெருகியது நீர்
நானாக மீண்டும் ஒரு
குவளையைச் சரித்தேன்
சரிந்த பிறகும் அழகாய்ப் பெருக
நீராக இருக்க வேண்டும்
அதுவும் தரையில்

 @

 நகர்வு

ஆற்றில் குளிப்பவர் எல்லோர்க்கும்
பிடித்திருக்கிறது
அசைந்து மிதந்துவரும் பூவை
அது தங்களுக்கு என்று
நினைத்து நீந்துகிறார்கள்
அதன் திசையில்
பூவோ நகர்கிறது
நீச்சல் தெரியாது
ஆறு பார்த்து அமர்ந்திருக்கும்
சிறு பெண் நோக்கி

 @

கஸல்

நான் இப்பொழுது
ஒரு கஸல் பாடிக்கொண்டிருக்கிறேன்
குரல் ஹரிஹரனுடையது
வரிகள் அப்துல் ரகுமானுடையது
கண்ணீர் மட்டும் என்னுடையது

 @

 என் தந்தை தச்சனில்லை
எழுதுகிறவன்
எனக்கு மரச்சிலுவை அல்ல
காகிதச் சிலுவை
உயிர்த்தெழுதல் மூன்றாம் நாளல்ல
அன்றாடம்
 

@

நிறைய நட்சத்திரங்களைப்
பார்ப்பதற்கு
நிறைய இருட்டையும்
பார்க்க வேண்டியது ஆகிறது

 

 -      கல்யாண்ஜி

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக