திங்கள், 11 மார்ச், 2024

நின் நெஞ்சு நேர்பவள் கவிதைத் தொகுப்பு நூல் அறிமுகம் - கவிஞர் இளையவன் சிவா

 நின்நெஞ்சு நேர்பவள் கவிதைத் தொகுப்பு

- இரா.பூபாலன்



பதிப்பு 2023 டிசம்பர்
பக்கம் 72
விலை ரூ 120
வெளியீடு பொள்ளாச்சி இலக்கிய வட்டம் பொள்ளாச்சி
தொடர்புக்கு : 9842275662

பொள்ளாச்சியில் செயல்படும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் என்ற இலக்கிய அமைப்பின் செயலாளர் கொலுசு இலக்கிய இதழின் பொறுப்பாசிரியர் டில்லியில் நடந்த இளம் கவிஞர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்டு கவிதை வாசித்தவர் ஏழு கவிதை நூல்களை வெளியிட்டவர் என்ற சிறப்புக்குரிய
இரா பூபாலன் அவர்களின் எட்டாவது கவிதை தொகுப்பு இது.
அம்மாவாக மனைவியாக மகளாக தோழிகளாக அக்காக்களாக என்னை நானாக்கிய பெண்கள் தான் இந்த கவிதைகள் என்று தனது முன்னுரையில் குறிப்பிடும் பூபாலன் பெண்களுக்கான கவிதைகளை எழுதி தனித் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார்.
பெண்ணின் பெருந்தக்க யாவுள என்ற மொழியின் வீரியத்தை வாழும் உயிர்களுக்குள் துடித்திடும் இதயத்தின் தன்னலமற்ற சேவையென உணர்த்திடத் துடிக்கும் வரிகளைக் கொண்டு மங்கையரின் மாண்புகளை மாலையிடுகிறது நின்நெஞ்சு நேர்பவள் கவிதைத் தொகுப்பு.
உலகத்தின் இயக்கத்திற்கு சூரியனின் மையமும் கோள்களின் நிலையற்ற நகர்தலும் காரணங்களாகச் சொல்லப்பட்டாலும் உயிர்களின் நகர்தல் தொடங்கும் புள்ளியும் தொடர்ந்து இயங்கும் புள்ளியும் பெண்ணின் கரங்களுக்குள் ஒளிந்து கிடப்பதை மறுப்பதற்கில்லை. மகளாக மனைவியாக அன்னையாக பாட்டியாக சகோதரியாக என பலவித பரிமாணங்களில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் மகளிரின் வாழ்வின் எல்லாத் தருணங்களையும் கொண்டாடித் தீர்த்திட சுழன்றிடும் கவிதைகளைக் கொண்டு அழகு பார்த்திடும் கவிஞரின் திறமைக்கு வாழ்த்துக்களும் பேரன்பும் உரித்தாகுக.
மனித வாழ்வின் நிலையாமைப் பொழுதுகளை உயிர்ப்பிக்கச் செய்து நகர்ந்திடும் தருணங்களை அர்த்தமுள்ளதாக மாற்றிடும் சக்தியும் பேராற்றலும் பெண்ணின் மனங்களுக்குள் பூத்திடும் அதிசயமாக புதைந்து கிடக்கிறது. இல்லறத்தின் சராசரி இயக்கத்தைக் கூட சிறப்பானதாக மாற்றி இமயத்தைத் தொட்டுவிடும் சாதனைகளை எட்ட வைக்கும் திறனை தங்களுக்குள் தேக்கி வைத்தே வழிநடத்திடும் மங்கையரின் வாழ்வில் வசதிகள் வளராமல் போனாலும் நிம்மதியும் ஆனந்தமும் நிலைகொண்டு நின்றிடும்.
ஆணும் பெண்ணும் சமமென்றே அறிவினை ஊட்டி வளர்த்திட்டாலும் ஏடுகளில் எழுதி உரைத்திட்டாலும் பேச்சிலும் உரையிலும் போற்றி வளர்த்தாலும் நிகழ்வுகளை கவனிக்கையில் சமத்துவத்தின் பாதையில் தடங்கல்கள் நிறைகின்றன. ஆணின் மனதில் இன்றும் கூட பெண்ணின் மனதை வாசிக்க முடியாத பக்கங்கள் நிறைகின்றன. பெண்ணை உடலை வைத்து எடை போடும் மனங்களே மிகுந்து நிற்கின்றன. கல்வியும் சிந்தனையும் இன்னும் சில ஆண்களின் மூளைக்குள் பெண்ணை போகப் பொருளாகப் பயன்படுத்திப் பார்க்கும் எண்ணத்தையே விதைக்கின்றன. விடியும் ஒவ்வொரு நாளும் செய்திகளில் கதறிடும் பெண்ணின் வலிகளை வேதனைகளை பாலியல் சீண்டல்களை வாசித்து விட்டும் கண்டும் காணாது கடந்து போகும் இன்றைய சமூகப் போக்கில் இவற்றைப் பற்றிய பிம்பங்களை உருவாக்கும் பிரச்சனைகளின் மூலத்தை ஆராய்தல் காலத்தின் அவசர அவசியமாகிறது.
கல்வி முறைக்கும் குடும்பத்தில் ஆண் பிள்ளைகளை வளர்த்திடும் விதமும் பெண் பிள்ளைகளை வளர்த்திடும் விதமும் பெண்களைப் பற்றிய சரியான புரிதல்களை விதைத்திடுதல் அவசியம். அதற்கு பெண்ணின் பரிமாணங்களை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. பெண்களின் மீதான புறச்சீண்டல்களை சமூகம் கொடுக்கும் வெளி அழுத்தங்களைப் பற்றி நம்மிடையே விசனப்படாமல் வேதனைப்படாமல் பெண்ணின் அகத்தையும் அதன் வழியே அவர்களின் வாழ்வு முறையையும் அவர்களின் மனங்களுக்குள் மலர்ந்திடும் கனவுகளின் நிகழ்வுகளையும் கவிதைகளாக்கி கல்வெட்டுகளாய் நமக்குள் புகுத்தி விடுகிறார் கவிஞர்.
எல்லா உயிர்களும் இந்த உலகின் இயக்கத்தை அதன் பேராற்றலை முதன்முதலாக அவரவர் தாயின் விழிகளின் வழியே தான் உணரத் துவங்குகின்றன. அவற்றின் வளர்ச்சியும் அவரவர் தாயின் நகர்தலுக்கேற்ப நினைவுகளை உருவாக்கி நிலை கொள்கின்றன. தாய்மையைக் கொண்டாட விரும்பாத மனங்கள் கிடையாது. ஆனால் தாய்மையின் மனமோ தன்னைத்தானே கொண்டாடி மகிழ விரும்பாது. தனக்கான வாசனையைத் தானே உணராத மலரின் புன்னகை காண்போருக்கு மகிழ்வை பிறப்பிப்பதைப் போல தனக்கான விருப்பங்களைப் புதைத்துக் கொண்டு தன்னை நம்பி நின்றிடும் குடும்பத்தின் உயர்வைக் கொண்டாடிடும் உள்ளம் தாய்மையன்றி வேறொன்றுமில்லை. அத்தகைய தாய்மையின் கரங்களைக் கைவிடாது பிடித்துக் கொள்ளும் உயிர்கள் தங்களின் வாழ்வை சிறப்பான உயரத்துக்கு எடுத்துச் சென்று விடுகின்றன.
குடும்பத்தின் உயர்வில் அன்றாட நிகழ்வுகள் இடைவிடாது நடந்தால் மட்டுமே இயக்கம் சீரான ஒன்றாக மாறி இன்பத்தைக் கொடுக்கும். இல்லறத்தை நல்லறமாக்கும் எல்லா செயல்களிலும் ஆணின் பங்கு இருக்கிறதா என்பதை பட்டியலிடுகையில் விடுபடுதல் வரலாம். ஆனால் பெண்களின் நுழைவுகள் இல்லாது பிரபஞ்சமும் அசைவதில்லை என்பதைப் போன்றே குடும்பத்தின் செயல்களும் அமைந்து விடுகின்றன.
சமையலறை என்னும் ஒற்றை அறைக்குள் சிறைப்பட்டுப் போயினும் தன்னைச் சுற்றியே வீட்டின் அசைவுகள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் தாய்மையின் நெஞ்சம் போற்றப்பட வேண்டும் பாராட்டப்பட வேண்டும். ஆனால் நம்மை நாமே கவனித்துக் கொள்ளும் உலகத்தில் இருந்து விடுபட்டு வேகமான ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கையில் நின்று நிதானித்து கவனித்துச் சொல்லும் கனிவான சொற்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
நின் நெஞ்சு நேர்பவள் நூலின் வழியே தாய்மையின் தவத்தையும் தனிச்சிறப்பையும் பேரன்பினாலும் பெரு மகிழ்வினாலும் எழுதிப் பார்த்து நிறைவு கொள்கிறது கவிஞரின் மனம். தவறு செய்யும் மனங்களை மன்னிப்பதில் தொடங்கும் பெண்களின் அன்பு வீட்டிலும் பெரியவர்களின் தவறுகளை பெரிது படுத்தாது மன்னித்தும் மறந்தும் கடந்து விடுகிறது..

"அம்மாவும் ஒரு லுங்கிச் சதுரம் தான் அப்பாவுடைய
என்னுடைய
இன்ன பிற ஆண்களுடைய
கறைகளை
மனதின் எரவானத்தில்
யாரும் பாராமல்
ஒளித்து வைத்தே இருக்கிறாள் "

என்பதான கவிதையின் வழியே தனக்கான வலிகளை வேதனைகளை குடும்பத்தில் பெரிதாக்கிடாமல் தாங்கிக் கொள்ளும் தாய் தான் எல்லா ஆண்களின் நடத்தைக்கும் அடித்தளம் இடுகிறாள்.
பொம்மைகள் மீதான நேசமும் விளையாட்டுகள் மீதான பிரியமும் வளர்ப்பு உயிரிகள் மீதான அக்கறையும் பெண் குழந்தைகளுக்கு இயல்பாகவே ஆனந்தத்தை உருவாக்கி விடுகின்றன தங்க மீன்களை வளர்க்கும் குழந்தை நாளடைவில் மீன் தொட்டிக்குள் நீந்தியுடியே தனது வாழ்வை நகர்த்துகிறது என்பதை வாசிக்கையில் இளமைப் பருவத்தின் கவலையற்ற பொழுதுக்குள் நாமும் நுழைந்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்தை விதைக்கிறது.
" எந்த ஒன்றிலும்
மிச்சமாவதை
விரும்பத்துவங்குவாள்
தனக்கென எதுவும்
தயாரிக்காதவள் "

என்ற வரிகள் நமக்குச் சொல்லும் பாடத்தை இன்றும் எல்லோர் இல்லங்களிலும் காண முடியும். விரும்பி அன்பாலும் பாசத்தாலும் சுவைபட தயாரித்த உணவைக்கூட வீட்டில் எல்லோருக்கும் பரிமாறி விட்டு மிச்சத்தை மட்டுமே ருசி பார்க்கும் எத்தனையோ பெண்கள் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இங்கே உணவு மட்டுமல்ல தனக்கான கனவுகள் தனக்கான கட்டமைப்புகள் என எதிலும் பெண்கள் தனியான அட்டவணையை அவ்வளவு எளிதில் நீட்டி விடுவதில்லை.
பொதுவெளியிலும் கையறு நிலையிலும் தவித்துக் கிடக்கும் உயிர்கள் மீதான பெண்களின் மனப்பார்வையை காட்சிப்படுத்தி இருக்கும் கவிதைகளில் உலகத்தின் மீதான பச்சையம் நிரம்பி வழிகிறது உயிர்களின் மீதான கருணையும் கை நீட்டலும் நீண்டு நெகிழ்கிறது. மருந்து வாங்கப் போதுமான பணம் இல்லாத நிலையில் கிழவி அறியாமலும் மொத்த மருந்துகளையும் கொடுத்துவிட்டு இடிக்கும் கணக்குக்கும் பிடிக்கும் சம்பளப் பணத்திற்கும் கவலைப்படாத பெண்ணின் மனதில் விளையும் அன்பே அவளுக்கான வலி நிவாரணியாக மாறிவிடக் கூடும் என்பதை ரசனையுடன் விளம்புகிறது வலி நிவாரணி கவிதை.
ஆசைகளின் கோட்டைக்குள் தனக்கு பிடித்தவற்றோடு உறவாடி விளையாடும் பெண்களின் பருவத்தில் எல்லா நாளும் சிறப்பாய் அமைவதில்லை. காலமும் பருவமும் பெண்ணை குடும்ப அமைப்பிற்குள் நுழைத்து விடுகையில் தனக்கான பிடித்தமானவைகளை தொலைத்து விட்டு ஓட வேண்டிய கட்டாயத்தில் மாட்டிக் கொள்ளும் நிலையின் கையறு கணத்தை பதிவு செய்கிறது டெய்ரி மில்க்குகளை அடுக்குபவள் கவிதை.
மகளுடனான உரையாடல்களை காட்சிப்படுத்தும் பல கவிதைகளில் சூழலியில் பார்வையும் இயற்கை வளத்தின் மீதான கவிஞரின் நேசமும் சிறப்புற வெளிப்படுகின்றன. மலைகளை காடுகளை பாதுகாக்க வேண்டிய அமைப்புகளையும் அதில் பொதிந்துள்ள நுண் அரசியலையும் பகடி செய்தும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.
இயற்கையும் பெண்ணும் சற்றொப்ப சமமானவர்கள் எனலாம். இருவருமே தனது வாழ்வை பிறருக்காக அமைத்துக் கொடுப்பதிலும் பிறரின் நலனுக்காக இடையறாது உதவுவதிலும் உழைப்பதிலும் சிறப்பானவர்களே. அதனால் தான் கவிஞரும் பெண்மையைப் போற்றும் எண்ணங்களுக்குள் இயற்கை நலத்தையும் பேணிக் காக்க அறைகூவல் விடுக்கிறார்.
"எல்லா காலங்களிலும்
மந்திரங்களால்
எங்களை காக்கிறவள்
தனக்கென ஒரு போதும்
சுழற்றியதில்லை
தன் மந்திரக்கோலை"

என்ற கவிதை வரிகளே இந்த நூலின் ஒட்டுமொத்த ஆழ்மன எண்ணத்தை விளக்கி விடுகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவரும் இன்றைய சூழலில் பெண் குழந்தைகளைப் பெற்றோரின் அச்சமும் பயமும் அதிகரித்து வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விடுமோ என்ற காலகட்டத்தில் பெண்கள் மீதான புரிதலையும் அன்பையும் நமக்குள் விதைக்கும் நின் நெஞ்சு நேர்பவள் எல்லோர் மனதிற்குள்ளும் நல்லாட்சி புரிவாள் என்பது நிச்சயம்.

- நூல் அறிமுகம் கவிஞர் இளையவன் சிவா



நின் நெஞ்சு நேர்பவள் கவிதை நூலுக்கு கவிஞர் ஜி.சிவக்குமார் நூல் அறிமுக உரை

எனது நின் நெஞ்சு நேர்பவள் கவிதை நூலுக்கு எழுத்தாளர் ஜி.சிவக்குமார் அவர்கள் எழுதிய நூல் அறிமுக உரையை இங்கு பகிர்கிறேன்... 

நின் நெஞ்சு நேர்பவள்


கவிதைகள்


- இரா.பூபாலன்

பொள்ளாச்சி இலக்கிய வட்ட வெளியீடு
பக்கங்கள் 72
விலை ரூ120
தொடர்புக்கு 9842275662

குளு குளு பொய்கள் சொல்லி எனை வெல்வாய். அது தெரிந்த போதும் அன்பே, மனம் அதையேதான் எதிர்பார்க்கும் என்று தாமரையின் திரைப் பாடல் நினைவில் உள்ளதா? பெண்களுக்கு, அது பொய்யாக இருந்தாலும், தன் அழகைப் புகழும் ஆணைப் பிடிக்கும்.
பெண்களுக்கு தன் அழகைப் புகழும் ஆணை விட, தன் வலியை உணர்ந்தவனை ரொம்பவும் பிடிக்கும்.
கவிஞர் இரா.பூபாலனின், நின் நெஞ்சு நேர்பவள் என்கிற இந்தத் தொகுப்பு அந்த வகையில் பெண்களுக்கும்,பெண்களின் வலிகளை உணர்ந்த ஆண்களுக்கும் மிக மிக நெருக்கமான ஒன்றாக இருக்கும்
அப்பாவின் குளியலறை எரவானத்தில் பத்திரப்படுத்தி இருந்த அப்பாவின் பழைய லுங்கிச் சதுரங்கள்,இன்று பஞ்சடைக்கப்பட்ட பாதுகாப்பான நாப்கின்களாக மாறியிருக்கலாம்.ஆனால்,வலி மாற்றமின்றி அப்படியேதானே தொடர்கிறது.அந்தத் துணிகளில் படாமல் போன செந்துளிகளில் ஒரு துளி நான் என்று சொல்லும் பூபால வார்த்தைகளை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்?
குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளுக்காக தன் கைவளை ஒன்றை மந்திரக்கோலாக மாற்றி, எதை எதையோ தந்து, தனக்கென ஒருபோதும் மந்திரக் கோலை சுழற்றிக் கொள்ளாத, விளையாட்டுகளிலும்,வாழ்விலும் தோற்றுத் தோற்று அப்பாவையும், நம்மையும் ஆளாக்குகிற அம்மாவைப் பற்றி ஆயிரக்கணக்கான கவிதைகள் எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. மழையைப் போலவே, அவையும் ஒரு போதும் வாசிக்கச் சலிப்பதில்லை.
எந்த ஒன்றிலும்
மிச்சமாவதை
விரும்ப துவங்குவாள்
தனக்கென எதுவும்
தயாரிக்காதவள்
இது அம்மா.
கோபமென்றால்
எதையாவது உருட்டுவாள்
நிலம் அதிர நடப்பாள்
முந்தைய நாள்
விருப்பப்பட்டு கேட்ட உணவை
சமைத்து வைத்துவிட்டு
இது மனைவி.
நீங்கள் சொல்வது உண்மைதான் பூபாலன்.தாயோ,மனைவியோ. பெண்கள் அப்படித்தான். அவர்களால் அப்படித்தான் இருக்க முடியும்.
உடற் கூராய்வு அறைக்கு வெளியே அப்பாவுக்கு வலிக்காம ஊசி போடுங்க என்று சொல்கிற சிறு பெண், பழைய நெகிழிப் போத்தலொன்றில், நிகழ்காலத்தைப் பூக்கும் செடி வளர்ப்பவள், பணப் பற்றாக்குறையால் இரண்டு நாளைக்கு போதும் என சொன்ன முதுமகளிடம் தனது சம்பளத்தில் பிடிக்கப்பட போகும் தொகையும் சேர்த்து மொத்த மருந்துகளையும் தரும் மருந்து விற்பனை கடைப் பணிப் பெண், மழையை கைகளில் ஏந்தி செடி மீது தெளிக்கும் தொடர் விளையாட்டை அத்தனை மகிழ்ச்சியோடு விளையாடுப்வள், இன்னும் குழந்தை இல்லையா என்ற கேள்வியை அப்புறம் வேறு என்ன என்று சிரித்த திசை மாற்றுகிறவள், ஒரு நிறை குப்பி தூக்க மாத்திரைகளை விழுங்குவதற்கு முன் கணம் மேலெழும்பி வந்த ஒரு முகத்தை முதலில் விழுங்குகிறவள், சில நாட்கள் உடனிருந்து ஒரு கடும் கோடை காலத்தை ஆணுக்கு பரிசளித்து சென்றவள்,
இப்படி கவிதைகளில் இரத்தமும் சதையுமாய் உயிர்ப்போடு நம் முன் அசையும் எத்தனை எத்தனை பெண்கள்.
இத்தனை பெண்களால் சூழப்பட்டிருக்கும் பூபாலன் அதிர்ஷ்டசாலி பூபாலனைச் சூழ்ந்திருக்கும் பெண்களும் அதிர்ஷ்டசாலிகள் தான்
அப்பாவுக்கு மகளுக்குமான உரையாடல்களாய் அமைந்த கவிதைகள் மிக அழகாக இருக்கின்றன.இந்த கவிதையைப் பாருங்கள்
மலைக் கோயில்
எப்பொழுதிருந்து இருக்கிறது அப்பா?
நாம் பிறப்பதற்கு முன்பிருந்து..
மலை எப்போதிருந்து
இருக்கிறது அப்பா?
கடவுள் பிறப்பதற்கு
முன்பிருந்து.
இப்படி ஒரு தகப்பனைப் பெற்ற குழந்தை மிகத் தெளிவாக மிகச் சரியாக வளரும்.
இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும்
சாலையில் கடக்கும்
ஏதோ ஒரு புல்லட் சத்தத்துக்கும்
சேலையைச் சரி செய்து கொள்வாள்
கண்ணாடியை ஒரு முறை
பார்த்துக் கொள்வாள்
நாக்கைக் கடித்துக் கொண்டு
நிகழ் காலத்திற்கு மீள்வாள்.
இந்தச் சிறு கவிதையில் விரிகிற பெருங் கதையை நீங்களும் உணர்கிறீர்கள் தானே?
முழு ஆடையும் உடுத்தி
முகமெங்கும் வண்ணம் தீட்டி
சலங்கைகள் அதிர
மேடையில் ஏறும் கணத்தில்தான்
சுண்டியிழுக்கிறது வயிறு
நாட் கணக்கு பிசகி
எதிர்பாராத கணத்தில் பொங்கத் துவங்கி விட்டது
மாதாந்திரச் சிவப்பு
என்று துவங்குகிற,குங்குமத்தில் சிரிக்கும் காளி, கவிதையை உயிர் நடுங்காமல் உங்களால் வாசித்துக் கடந்து விட முடியுமா?
சொல்லாமல் வந்துவிட்ட விருந்தாளியாய் குருதி பெருகும் போதும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட மேடையில், துளிச்சிவப்பும் மேடையில் தெறித்திடக் கூடாது என்ற அச்சத்துடன் அவள் ஆடித்தானே தீர வேண்டியிருக்கிறது. இது மேடையில் ஆடுபவர்களுக்கு மட்டும் தானா? வீட்டிலும், அலுவலகத்திலும் இருக்கும் பெண்களுக்குமானதுதானே?
தொகுப்பின் கவிதைகளை,இது நாள் வரை என் வாழ்வில் நிறைந்திருந்த,நிறைந்திருக்கும் பெண்களையெல்லாம் நினைத்தபடிதான் வாசித்தேன்.தொகுப்பை வாசிக்கிற யாரும் அதைத்தான் செய்வார்கள்.
எங்கிருந்தோ ஒரு பெண்ணின் வழியாகத்தான் இங்கு வந்தோம். அவளால்தான் ஆளானோம்.அம்மாவென்றும்,பாட்டியென்றும், அத்தையென்றும்,சகோதரியென்றும், தோழிகள் என்றும், காதலியென்றும், மனைவியென்றும், பிள்ளைகளென்றும், பேத்திகளென்றும், பெண்ணோடு தோன்றி, பெண்ணோடு வாழும் இந்த வாழ்வில், நம்மில் எத்தனை பேர் பெண்களுக்கு அவர்கள் தந்ததில் ஒரு சிறு துளியையாவது திருப்பித் தந்திருக்கிறோம்? இந்த தொகுப்பின் வழி இரா. பூபாலன் அதை நிறைவாகச் செய்திருக்கிறார்.

நூல் அறிமுகம் : கவிஞர் ஜி.சிவக்குமார்




இந்த நூல் அறிமுகம் புக்டே இதழிலும் வெளியானது..

வாசிக்க :

புதன், 28 பிப்ரவரி, 2024

சலுகை விலையில் எனது கவிதை நூல்கள்

 வணக்கம்,

எனது ஹோ என்றொரு கவிதை, நின் நெஞ்சு நேர்பவள் ஆகிய இரண்டு கவிதை நூல்கள்  பத்மஸ்ரீ கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களால் வெளியிடப்பட்டன. 

250 ரூபாய் மதிப்புள்ள இரண்டு நூல்களும்  சலுகையில் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. வேண்டும் நண்பர்கள் 98422 75662 எனும் எனது எண்ணுக்கு கூகுள் பேவில் தொகை அனுப்பிவிட்டு, வாட்சப்பில் முகவரி அனுப்புங்கள். புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்




செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

எனது இரண்டு கவிதை நூல்கள் வெளியீட்டு விழா அழைப்பு

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

வரும் ஞாயிறு பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 116ஆவது சந்திப்பில் எனது இரண்டு கவிதை நூல்கள் வெளியீடு.. என்.ஜி.எம் கல்லூரியில் காலை 10 மணிக்கு நிகழ்வு...
அவசியம் வருக... அன்புடன் அழைக்கிறோம்...





ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

தேநீர்க் கவிதைகள் - பொற்றாமரை இதழில்

இந்த மாத பொற்றாமரை இணைய இதழில் எனது நான்கு தேநீர்க் கவிதைகள் இடம் பெற்றுள்ளன..



தேநீர் # 1


தேநீரைப் பற்றி
எழுதப்பட்டிருக்கின்றன ஓராயிரம் கவிதைகள்
தேநீர் அழகிய ஓவியங்களாகி
ஆவி பறக்கிறது
தேநீர்க் கோப்பையோடு
புகைப்படங்களைப் பகிர்ந்து
கொண்டாடுகிறார்கள் நண்பர்களின் சந்திப்புகளை
தேநீர் தயாரிப்பிலும்
பரிமாறலிலும்
முதல் மிடறு உறிஞ்சலிலும்
ஒரு தியானம்
இருப்பதாய்
சீனத்து யாத்ரீகன் ஒருவன்
சதா உரைத்துக்கொண்டே யிருக்கிறான்

தேநீரையே விரும்பாத
ஒருவன் கைகளில்
மணந்துகொண்டிருக்கும்
காபிக் கோப்பையிலும்
இருக்கத்தான் செய்கிறது
ஆவி பறக்கும் ஒரு வாழ்வு


*****

தேநீர் # 2


ஒரு கோப்பைத் தேநீர்
அது ஒன்றுதான் கூலி
அந்தக் கோப்பையின் விளிம்பில் தான்
சாக்கடையைத் தூர் வாருவார்
பத்துத் தேங்காயை உரிப்பார்
பத்திருபது குடம் நீர் சேந்துவார்
சோர்வின் பொழுதில்
கொட்டாங்கச்சிக் கோப்பையில்
அருளப்படும் தேநீரை
குத்தவைத்து அமர்ந்து
குடிப்பார் மாரியண்ணன்

பிறகான மாலைப் பொழுதில்
குலுக்கலில் விழுந்த
எவர்சில்வர் டம்ளரில்
கருப்பட்டிக் காப்பி கலந்துவைத்துக்
காத்திருந்த இரவில்
மாரியண்ணன்
வெறிகொண்டு புணர்ந்த கதையை
செல்வியக்கா
இட்டேரியில் வள்ளியக்காவிடம்
கிசு கிசுத்த பூரிப்பில்
இட்டேரிக் கள்ளிகள் நூறு நூறாய்ப் பூத்தன


*****

தேநீர் # 3


என் தேநீரின்
நிறம்
வடிவம்
சுவை
திடம்
எல்லாமும் மாறிவிட்டிருக்கின்றன
இன்னும் மாறாதது
கை பட்டுவிடாமல்
நிரப்பக் காத்திருக்கும்
தனிக்குவளை தான்


*****

தேநீர் # 4


கொஞ்சம் கூடுதல் இனிப்புடன்
இரண்டே துளிகள்
எலுமிச்சைச் சாறு பிழிந்த
ஒரு குவளை கருந்தேநீர்
பின்
தாராளமாக எறிந்துவிடு
உன் கடைசிச் சொல்லை.


*****

வியாழன், 1 பிப்ரவரி, 2024

கனவின் இசைக்குறிப்பு - நூல்வெளியீட்டு விழா

 கடந்த ஞாயிறு கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் எழுதிய கனவின் இசைக்குறிப்பு புத்தக அறிமுக விழா புதுக்கோட்டையில் நடந்தது..




முந்தைய நாள் வேலை, அடுத்த நாள் காலையில் கோவை இலக்கிய சந்திப்பில் சோலைமாயவன் நூல் அறிமுக விழா இவற்றையெல்லாம் கணக்கில்கொண்டு காலையில் கிளம்பி, இரவு திரும்பிவிடுவது என திட்டமானது. நானும், சோலைமாயவன் இருவரும் மகிழுந்திலேயே சென்றுவிட்டோம்..

காலையில் 4 மணிக்கு சத்தமில்லாமல் எழுந்து, 4.30க்கே மிக வேகமாகக் கிளம்பிவிட்டேன்... 5 மணிக்கு சோலைமாயவனை வீட்டில் சென்று அழைத்துக்கொள்வது திட்டம். யாருடைய தூக்கமும் கெட்டுவிடக் கூடாது என்பதால் விளக்கு கூட போடாமல் சத்தமில்லாமல் மாடியிலிருக்கும் படுக்கையறையிலிருந்து கீழே வந்து குளித்து கிளம்பிவிட்டு, மாடியில் சென்று கீழ் வீட்டுச் சாவியை வைத்துவிட்டு, வாசல் கதவையும் பூட்டி சாவியை உட்பக்கம் வீசிவிட்டு வண்டியை எடுத்த பின்பு ஞாபகம் வருகிறது புத்தகத்தை எடுக்கவில்லை...
அதிகாலை, சத்தமில்லாமல் வாசல்கதவைத் திறந்து, மேல்வீட்டுக்குச் சென்று சாவியெடுத்து, கீழ் வீட்டைத் திறந்து புத்தகத்தை, தண்ணீர் போத்தலை எடுத்துக்கொண்டு , மேலே போய் சாவியை வைத்துவிட்டு மெதுவாக , மிக மெதுவாகக் கதவைச் சாற்றிவிட்டு, கீழே வந்து, வாசல் கதைவைச் சாத்திவிட்டு வண்டியைக் கொஞ்ச தூரம் ஓட்டியவுடன் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்ற சிந்தனை வந்தவுடன் நினைவுக்கு வந்தது பணப்பையை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தது..
வண்டியைத் திரைப்படங்களில் திருப்பதுபோல கிறீச்செனத் திருப்பி மீண்டும் வாசல் கதவைத் திறந்து, மேலே போய்.. சத்தமில்லாமல்... ஐயோடா .. மீண்டும் கிளம்பிவிட்டேன்...
இந்த முறை வாகனத்துக்கு பொள்ளாச்சி வந்து எரிபொருள் நிரப்பும் போது கவனித்தேன்.. அங்கு போய் உடை மாற்றிக்கொள்ளலாம் என சாதுர்யமாகத் திட்டமிட்டு உடை எல்லாம்ச் சரியாக எடுத்தவன் பெல்ட் எடுக்க மறந்துவிட்டேன்... மறுபடியுமா ? மறுபடி வண்டியைத் திருப்ப முடியாது எனவே அரைஞாண் கயிறு வைத்து சமாளித்துக்கொள்ளலாம் என்று சமாதானம் செய்துகொண்டேன்... நல்லவேளையாக பேன்ட் சரியாக நின்று கொண்டது.. ஒரு வழியாக சோலைமாயவன் வீட்டுக்கு வந்து சேரும் போது மணி 5.30 .. அரைமணி நேர தாமதம்..
இருந்தும் வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு விரைந்தோம்.. வழியெங்கும் பேசிக்கொண்டு வந்ததால் களைப்பு தெரியவில்லை.. காலை உணவுக்கு மணப்பாறையில் நிறுத்தும் தருணத்தில் மணவை இலக்கிய வட்ட நண்பர்களைச் சந்தித்துவிட்டுச் செல்லலாம் என தோழர் Ashraff Ali அவர்களுக்கு அழைத்தால், அவர் அப்போது தான் திருச்சிக்குச் சென்றுகொண்டிருப்பதாக அங்கலாய்த்தார். இருப்பினும் மணவை இலக்கிய வட்டத் தலைவர் தோழர் தமிழ் மணியை வந்து எங்களைச் சந்திக்கும்படி சொல்லி இருந்தார்... வழியில் தோழர் தமிழ் மணியைச் சந்தித்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு சில புத்தகங்களைக் கொடுத்தோம் அவர் பழங்களைப் பரிசளித்தார்..

வரும் வழியில் நிறைய அழைப்புகள் வீதி நிகழ்வு என்றவுடம் எப்போதும் முதலில் நினைவுக்கு வரும் Devatha Tamil Geetha, தோழர் Kasthuri Rengan, தோழி Revathi Ram என ஒவ்வொருவராக அழைத்து சாப்பிட்டீர்களா, சாப்பிட இங்கு வாங்க என்று அழைத்தபடி இருந்தார்கள்..
எனக்கு நான் எழுதிய யாரவது சாப்பிட்டாயா என்று கேட்டால் பதற்றமாகிவிடுகிறேன் எனும் கவிதை நினைவுக்கு வந்தது.. புதுக்கோட்டை இப்படித் தான். அது எப்போதும் சொல்வது போல புத்தகக் கோட்டை மட்டுமல்ல, கவிதைக் கோட்டை மட்டுமல்ல, அன்பின் கோட்டையும் கூட..
அங்கு கிளம்பிய வண்டி பின்பு புதுக்கோட்டை தாஜ் சிற்றரங்கத்தில் வந்து தான் நின்றது.. நிகழ்ச்சி தொடங்கவும் வந்து சேரவும் சரியாக இருந்தது.. வந்த உடனே முதலில் சந்தித்தது முத்துநிலவன் ஐயாவைத் தான்.. வாஞ்சையுடன் கைகுலுக்கி வரவேற்றார். யாழியை, சுரேஷ் சூர்யாவை, ரேவதியை, கஸ்தூரி ரங்கனை என அனைவரையும் பார்த்துவிட்டு உள்ளே சென்றதும் கவிஞர் தங்கம்மூர்த்தி ஐயா உற்சாகமாக வரவேற்று இறுக அணைத்துக்கொண்டார். அவரது புதிய கட்டுரைத் தொகுப்பான சொற்கள் மீட்டிய மாய இசையை அன்புடன் கொடுத்தார். அதில் முதல் கட்டுரையே என் கவிதைகளைப் பற்றியது.. பின்னர் எழுதுகிறேன் அதை..
உள்ளே நுழையும் போதே தோழர் ஸ்டாலின் சரவணன் Stalin Saravanan அலைபேசியில் அழைத்து இன்றைய நிகழ்வுக்குத் தான் வரமுடியாததைச் சொன்னார்..
அமர்ந்தவுடன் அருகிலமர்ந்திருந்த மருத்துவர் Dhakshana Moorthy அறிமுகம் செய்துகொண்டு தான் எனது கவிதைகளின் விசிறி என்று சொன்னதோடு எனது புலி துரத்திக்கொண்டோடும் கவிதையைச் சொன்னார்... மிகுந்த மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது..
நிகழ்வு தொடங்குகிறது..
தங்கம்மூர்த்தி ஐயா, முத்துநிலவன் ஐயா, சுரேஷ் சூர்யா, ஜெயா அம்மா என நிறைய பேர் ஒரு தொகுப்பைப் பேசுகிறார்கள்.. பகீர் என்றிருந்தது....
வரவேற்புரை பேசிய நண்பர் ஸ்ரீமலையப்பன் Srimalaiyappan Balachandran உற்சாகமாகத் தொடங்கிவைத்தார்... தலைமை உரை கவிஞர் தங்கம்மூர்த்தி சிறப்பான உரையை நிகழ்த்தினார். விக்ரமாதித்யன், இசை என கவிஞர்களின் கவிதைகளை மேற்கோள் காட்டிப் பேசினார்... மைதிலியின் கவிதைகளைக் குறிப்பெடுத்து வந்து அர்ப்பணிப்புடனும் தயாரிப்புடனும் அவர் பேசியவிதம் ஆச்சர்யத்தைத் தந்தது. என்ன ஒரு குரல்வளம், என்ன ஒரு நினைவாற்றல்.. அதெல்லாம் நன்றாகவே இருந்தது ஆனால் இந்தத் தொகுப்புக்கு சம்பந்தமே இல்லாத மதிக்குமார் தாயுமானவனின் யாமக்கோடங்கி தொகுப்பிலிருந்து ஒரு கவிதையை வாசித்தது தான் எனக்கு திக்கென்றாகிப் போனது. காரணம் முந்தைய இரவு அந்தத் தொகுப்பைப் படித்து அதிலிருந்து ஒரு கவிதையைச் சொல்லி தான் இந்த உரையை ஆரம்பிக்க நினைத்தேன்.. சோலி முடிஞ்ச்... எனது உரையிலும் இதைக் குறிப்பிட்டேன். நான் குறித்து வைத்திருந்த சில கவிதைகளை ஐயா சொன்னதும் நான் மடித்து வைத்திருந்த பக்கங்களை நீக்கிவிட்டேன்...
நூல் அறிமுக உரையாற்றிய கவிஞர் சுரேஷ் சூர்யா Suresh Suriya நன்றாகப் பேசினார். பாட்டெல்லாம் பாடி அசத்தினார். தான் எடுத்த புகைப்படம் என்று சொல்லி புத்தனின் கைகளை கவிஞர் மைதிலிக்குப் பரிசளித்தார் அழகான புகைப்படம்.
வாழ்த்துரை வழங்க வந்த மருத்துவர் ச. தெட்சிணாமூர்த்தி Dhakshana Moorthy ஒரு நீண்ட சிறப்புரையையே வழங்கினார்.. மைதிலியின் கவிதைகளைக் குறிப்புகள் ஏதுமின்றி மனனமாகப் பேசியது வியப்பில் ஆழ்த்தியது. கனவின் இசைக்குறிப்புக்கு மார்க்ஸ் எங்கல்ஸிடமிருந்தெல்லாம் மேற்கோள்கள் எடுத்துப் பேசினார்... அவரிடம் நிகழ்வு முடிந்ததும் பேச நினைத்தேன். பேசிவிட்டு அவசரமாகக் கிளம்பிவிட்டார். அவரும் தன் பங்குக்கு நான் குறித்து வைத்திருந்த சில கவிதைகளைப் பேசிவிட்டார்.
அடுத்துப் பேசிய கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுடைய இணையரும் கவிஞருமான அஞ்சலி அம்மா Anjalii Moorthy ஆற்றியது பேரன்பின் மிகையுரை.. கவிஞர் மைதிலி அவர்களின் கவிதைகளை அப்படிச் சிலாகித்துப் பேசினார். புதுக்கோட்டையிலேயே இப்படி ஒரு கவிதைத் தொகுப்பு வரவில்லை என நெக்குருகிப் பேசினார்..
அடுத்துப் பேசியா கவிஞர் இரா.ஜெயா அம்மா பகிரப்படாத முத்தம் என்கிற ஒரு கவிதையை சிலாகித்துப் பேசினார். அதுவும் நான் குறிப்பெடுத்து வைத்திருந்த கவிதை.. ஹ்ம்ம்ம்
அடுத்து நான் பேச வேண்டும்.. ஏற்கனவே நேரம் கடந்துகொண்டிருக்கிறது.. எனக்கு ஒதுக்கப்பட்ட அரை மணி நேரத்தைப் பேச முடியாது. எனவே பதினைந்து நிமிடத்தில் பேசி முடித்துவிடலாம் என நினைத்து எழுதி வந்த குறிப்புகளை மனதிற்குள்ளேயே சுருக்கி, திருத்தி ஒருவழியாக 17 நிமிடங்களில் பேசி முடித்தேன்...




அடுத்து நிறைவுரையாற்றிய முத்துநிலவன் ஐயா குறைவாகவும் அல்லாமல் நிறையவும் அல்லாமல் சரியாக கவிதைகள் குறித்துப் பேசினார்...
ஏற்புரையாற்றிய கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சியோடும் தனது அன்பையும் நன்றியையும் ஒருவர் விடாது அனைவருக்கும் பகிர்ந்துகொண்டார்... பேசிய அனைவரும் , அவரது கவிதைகளை விடவும் அவருடைய மற்றும் அவரது இணையர் கஸ்தூரி ரங்கன் இருவருடைய இலக்கியப் பங்களிப்பு, அன்பு, சமூக அக்கறை இதுகுறித்தே அதிகம் பேசினர். அவ்வளவு தூரம் சிறப்பாக அன்பு செய்தும், செயலாற்றியும் வருகின்ற இணையரை நானும் வாழ்த்துகிறேன்..
நன்றியுரையாற்றிய Devatha Tamil Geetha சுருக்கமாகவும் அழகாகவும் முடித்துக்கொண்டார்..
தொகுப்புரையாற்றிய கவிஞர் ரேவதி ராம் ஒவ்வொருவரையும் அவர்களது கவிதைகளைச் சொல்லி அழைத்தது அழகு.. தயாரிப்புடன் வந்திருந்தார்..
புகைப்படங்களை மிக அழகாக Sbp Bala எடுத்துக்கொண்டிருந்தார்
நிகழ்வில் நான் பெரிதும் விரும்பும், மதிக்கும் எழுத்தாளர்கள் பலரைச் சந்திக்க வாய்த்தது. அண்டனூர் சுரா Andanoor Sura, கவிஞர் விஜய் ஆனந்த், எழுத்தாளர் பாஸ்கர் , அமிர்தா தமிழ் என எல்லோரையும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி..
ஐஸ்வர்யா உணவகத்தில் சிறப்பான உணவை உண்டுவிட்டு.. பேக்கரி மகாராஜ்ஜில் வீட்டுக்கு புட்டிங் கேக் வாங்கிக்கொண்டு வாகனத்தைக் கிளப்பிவிட்டோம்... புதுக்கோட்டை, பேக்கரி மகராஜ் எல்லாம் வைகறையை நாள் முழுதும் நினைவிலேயே வைத்திருந்தது.. அவரது மனைவி நிகழ்வுக்கு வருவார் என எதிர்பார்த்தேன்.. அவசரமாகக் கிளம்பியதால் சந்திக்கவும் இயலவில்லை..
ஒரு நிறைந்த இலக்கிய நிகழ்வுக்குச் சென்று திரும்புகிற உற்சாக மனநிலையோடு வாகனம் பொள்ளாச்சிக்குக் கிளம்பிவிட்டது...
பின்குறிப்பு :
நான் நிகழ்வில் அவசர அவசரமாகப் பேசிய உரை இதோ உள்ளது.. கண்டு களிப்பீராக..