புதன், 4 ஏப்ரல், 2018

கவிதையும் கானமும்

கடந்த மார்ச் 21 உலக கவிதைகள் தினத்தை முன்னிட்டு கொடைக்கானல் கோடை பண்பலையிலிருந்து தோழர் அதியமான் அவர்கள் அழைத்து ஒரு நேரலை பேட்டி தர வேண்டும் வானொலி நிலையம் வாருங்கள் என்றார். வேலை நாள் என்பதால் விடுப்பு எடுத்துக் கொண்டு செல்ல இயலவில்லை.

சென்ற வாரம் அழைத்து, பேட்டி தான் தரவில்லை, கவிதையும் கானமும் என்ற நிகழ்வு இருக்கிறது. உங்களது சில கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வாசிப்போம், அதையொட்டிய பாடல்களை ஒலிபரப்புவோம் நீங்கள் அந்தக் கவிதை சார்ந்த அனுபவங்களைப் பகிருங்கள் அலைபேசியிலேயே பதிவு செய்து கொள்கிறோம் என்றார். சென்ற செவ்வாய்க்கிழமை கவிதைகளைத் தேர்வு செய்து வைத்துக்கொண்டு நிகழ்ச்சித் தொகுப்பாளர் சுரேந்தர் அழைத்தார். இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஒலிப்பதிவு செய்துவிடலாம் என்றார். அந்தக் குறுகிய நேரத்தில் அவர் தேர்வு செய்த எனது கவிதைகளைப் பற்றிய என் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டேன். கடந்த வியாழன் ( 29.03.2018) அன்று கோடை பண்பலையில் ஒலிபரப்பானது. வேலை நேரம் என்பதால் என்னால் கேட்க இயலவில்லை.

பின்பு தொகுப்பாளர் அந்த நிகழ்ச்சியின் ஒலிப்பதிவுகளை அனுப்பி வைத்திருக்கிறார்… சுரேந்தர் அவர்களின் குரலில் எனது கவிதைகளைக் கேட்கவே அவ்வளவு இனிமையாக இருக்கிறது. நல்ல உச்சரிப்பு. மேலும் எனக்குப் பிடித்தமான பாடல்களையே தேர்வு செய்தும் ஒலிபரப்பியிருக்கிறார். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

இங்கு நான் பேசிய எனது அனுபவங்களையும் கவிதைகளையும் தட்டச்சி பதிவு செய்துள்ளேன் இருக்கட்டும் என்று. ஒலிப்பதிவையும் இணைத்துள்ளேன். வாய்ப்புள்ள நண்பர்கள் வாசித்தும் கேட்டும் விட்டு கருத்துகளையும் அன்பையும் பகிர்ந்துகொள்ளுங்கள் …

ஒலிப்பதைவைக் தரவிறக்கிக் கேட்க இங்கு சொடுக்கவும் 


கோடை பண்பலை நேயர்களுக்கு இனிய வணக்கங்கள். நான் இரா.பூபாலன். பொள்ளாச்சியிலிருந்து பேசுகிறேன். கவிதைகளின் மீது தீராக் காதல் கெண்டவன், இதுவரை பொம்மைகளின் மொழி, பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு , ஆதிமுகத்தின் காலப்பிரதி என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன். கோவை கணபதியில் உள்ள ரூட்ஸ் நிறுவனத்தில் இளநிலை மேலாளராகப் பணிபுரிகிறேன். படித்ததெல்லாம் பொறியியல் என்றாலும் சிறுவயது முதலே புத்தக வாசிப்பில் ஆர்வம் அதிகம். அதுவே தமிழ் மீதும் கவிதைகளின் மீதும் பெரும் காதலைக் கொண்டு வந்தது. பொள்ளாச்சி இலக்கிய வட்டம் என்ற அமைப்பைத் துவங்கி கடந்த ஐந்து ஆண்டுகளாக நண்பர்களுடன் இணைந்து  நடத்தி வருகிறேன். ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை எங்களது இலக்கிய நிகழ்வு நடைபெறும்.

இன்று எனது கவிதைகளில் சிலவற்றையும் அது சார்ந்த அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

மழை இந்த மண்ணின் உயிர்களுக்கெல்லாம் ஆதார சக்தி. மழைத்தூறல்கள் மண்வாசத்தைக் கிளர்த்துவது போலவே கவிஞர்களின் மன வாசத்தையும் சற்றே கிளர்த்தி விட்டு விடும். ஆகவே தான் மழைத்தூறல்கள் மண்ணை நனைக்கத் துவங்கிய மறுகணத்திலேயே கவிஞனின் மனது கவிதைகளை மலர்த்தத் துவங்கி விடுகிறது. மழையை பல்வேறு கோணங்களில் கவிதைகளாகப் படம் பிடித்திருக்கிறேன் என்றாலும் இந்தக் கவிதையில் நான் ஒரு மழை இரவின் சில நிகழ்வுகளைப் படம் பிடித்திருக்கிறேன். மழை ரசிக்கச் செய்கிறது, சபிக்கவும் செய்கிறது, குழந்தைமையை, காதலை, காமத்தை, கிளர்த்தி விடுகிறது என்கிற அனுபவம் தான் இந்தக் கவிதை.

மழையிரவு நிகழ்வுகள்

மழை கொட்டிக்கொண்டிருக்கிற
இந்தச் சாலையில்
குறிப்பிட்டுச் சொல்லும்படியாக
எதுவும் நிகழவில்லை
இவ் விரவில்

வழக்கம் போலவே
மழையை ரசித்துக்
கொண்டும், சபித்துக்
கொண்டும் கடந்து
கொண்டிருந்தார்கள் மனிதர்கள்

மெல்லிய விளக்கொளியில்
மழைக்கு ஒதுங்கிய
ஒரு ஜோடியின்
முத்தத்தை சமன்
குலைத்தபடிக் கடந்தன
வாகனங்கள்

சன்னலில் கைநீட்டி
மழையை ஏந்திக்
குதூகலித்துக் கொண்டிருந்த
குழந்தையை சிநேகத்துடன்
முத்தமிட்டுக் கொண்டிருந்தது மழை

மழைக்கு முந்திய அந்தியில்
நிகழ்ந்த பெருவிபத்தொன்றில்
அடிபட்டு
இறந்து போன
யாரோ ஒருவனின்
குருதியைச் சத்தமின்றிக்
கழுவிக் கொண்டிருந்தது
மழை

மழையின் ஓசையோடு மட்டும்
                           ( பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு )                                                       

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த நவீன உலகில், உலகமே நமது கைகளுக்குள் சுழலத் துவங்கிவிட்டதாக நம்புகிறோம். நமது தூரங்களை இணையமும் அலைபேசியும் இன்ன பிற தகவல் தொழில்நுட்பக் கருவிகளும் வெகுவாகக் குறைத்து விட்டது என்று நம்பினாலும், அது உலகின் வெவ்வேறு மூலைகளில் வெகு தூரத்தில் இருப்பவர்களை இணைத்து வைத்திருப்பதாகத் தோன்றினாலும் உண்மையில் அருகில் இருப்பவர்களைக் கூட அந்நியமாக்கி வைத்திருக்கிறது. இணையம் மற்றும் சமூக ஊடகங்கள்  ஒரு நிழல் உலகம் இங்கு பலர் பல்வேறு வகையான முகமூடிகளுடன் தான் உலவி வருகிறார்கள் . ஒரு வேளை வேற்று முகமூடியுடன் நமக்குப் பிரியப்பட்டவர்களையே நாம் எதிர்கொள்ளும் தருணம் எப்படி இருக்கும் என்பது தான் இந்தக் கவிதையின் சாரம்..

நிழல் உலகம்

உனக்குத் தெரியாமல் ஒரு
உலகில் உலவிக் கொண்டிருக்கிறேன்

பொம்மை,பூக்களின் முகங்கள்
கொண்ட அழகான பெண்களுடன்
உரையாடிக் கொண்டிருக்கிறேன்

அவர்களிடம் என்
வலிகளை, அந்தரங்கங்களைப்
பருகத் தருகிறேன்

வெயிலின் வெம்மை மறைத்த
அப் புதிய உலகில்
யாவும் மகிழ்ச்சியாகவே
நிகழ்ந்து கழிகின்றன

இளைப்பாறுதல்களும்
எல்லை மீறுதல்களும்
மலிந்து கிடக்கும்
இவ்வுலகில்

பொய் முகத்துடனும்
புனை பெயருடனும்
ஒரு வேளை
நீயுமிருக்கலாம்
என்ற எண்ணம்
வரும் போது மட்டும்
ஒரு கணம் நின்று - பின்
துடிக்கிறது இதயம்

( பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு ).


எப்போதாவது வரும்  மழையை எப்போதும் ரசிக்கும் நாம் எப்போதும் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஒளியை, வெயிலை என்றாவது சிலாகிக்கிறோமா என்றால் இல்லை. உண்மையில் வெயிலும் மழையும் பருவகாலத்தின் இரண்டு பக்கங்கள். இரண்டும் இல்லாமல் நாம் வாழ இயலாது. எப்போதும் மழைக்குப் பின் வெயிலும் வெயிலுக்குப் பின் மழையும் தேவைப்படுகிறது. இங்கு மழையையும் வெயிலையும் குறியீடாகக் கொண்டால் வாழ்வின் இன்பம் துன்பம் இரண்டையும் ஒப்பிட்டு நாம் சமமாக பாவிக்க வேண்டும் என்பதைப் பேசுகிற கவிதை இந்தக் கவிதை.

மழையும் வெயிலும்

மழையின் இரைச்சலைப் போல
எந்தச் சத்தமுமில்லாமல்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
வெயில்

மழை வருவதற்கான
அறிகுறிகள் அறிந்த
நாம் அறிந்திருக்கவில்லை
வெயிலுக்கான அறிகுறிகள்

மழையைப் போல
இரு கைகளாலும்
வாரியெடுக்க முடிவதில்லை
வெயிலை

வெயிலின் வெம்மையை
மழை போக்க
மழையின் சிலிர்ப்பை
வெயில் நீக்கவென
எப்போதும் தேவைப்படுகிறது
மழைக்குப் பின் வெயிலும்
வெயிலுக்குப் பின் மழையும்

( பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு )

ஒரு பிரிவு என்பது எந்த வகையில் பார்த்தாலும் வன்முறை தான். ஒரு நெருக்கமான உறவைப் பிரிவது என்பது உயிரை விட்டு உடல் பிரிவது போலான கொடுமை. நமது விரல்களை நமக்கு விருப்பமான விரல்களிடமிருந்து பிரித்துக் கொள்ள வேண்டும் என்பது அசாத்தியமானது. அதைச் சாத்தியப்படுத்த நாம் கல்லாக சமைய வேண்டும். இறுகி இறுகி பின் தான் பிரிவைத் தாங்கும் பக்குவத்தைக் கொண்டு வர வேண்டும் என்கிற உணர்வு தான் இந்தக் கவிதை

அத்தனை சுலபமில்லை
கோர்த்திருக்கும் விரல்களிடமிருந்து
நமது விரல்களை
சடக்கெனப் பிரித்துக்கொள்வது

கோர்த்திருக்கும் விரல்களிடமிருந்து
பிரிக்கையில் முதலில்
நாம் சமாதானம் செய்ய
வேண்டியது நம் விரல்களை

பிரிவுகளின் வலியின்றி
பிரிவின்றி வேறு வழியின்றி
நமது விரல்களை
மென்மையாக விடுவித்துக்
கொள்வது எத்தனை கொடுமை
என்ற எண்ணத்தை முதலில்
துடைத்தழிக்க வேண்டும்

அவ்விரல்கள் நமக்கு
அசூயை என்று நம் விரலுக்கு
அறிவுறுத்தல் அவசியம்

மென்மையாகப் பிரித்தெடுத்த
அடுத்த கணம்
நாம் செய்ய
மறக்கக் கூடாத ஒன்று

உடனடியாக நம்
விரல்களில் வலுக்கட்டாயமாக
ஒரு கத்தியைத் திணிப்பது தான்



நமது நிகழ்காலத்தில் நமது சமூகம் சந்தித்துக் கொண்டிருக்கிற பேராபத்து குடி. மது அமுதமா என்ன ? அது விஷம் தான். அது குடிப்பவர்களை மட்டுமா கொல்கிறது, குடும்பத்தையே கொல்கிறது, இந்தச் சமுதாயத்தையே சீரழிக்கிறது. மதுவைக் குடிக்கத் துவங்கிய கணத்தில் மனிதன் சாத்தானாக மாறிவிடுகிறான் என்கிற எனது அச்சமும், கவலையும் தான் இந்தக் கவிதையாக வெளிப்பட்டிருக்கிறது.... உண்மைதான் மனிதனை சாத்தானாக்க வந்த விஷம் தான் மது ..

சாத்தானின் கதை

யாரின் சாபமோ
திரவ வடிவில்
புட்டியடைத்துக்
கிடக்கிறது சாத்தான்

நெற்றி வியர்வை சிந்தி
சம்பாதித்த
பணம் கொடுத்து
வாங்குகிறீர்கள் சாத்தானின்
குடுவையை.

மூடியைத் திறக்கையில்
நுரை பொங்க
மகிழ்ச்சியுடன்
உங்கள் கோப்பையில்
நிறைகிறது

ஒரு மிடறு
விழுங்குகிறீர்கள்
முகம் சிவக்க
உங்கள் நரம்புகள் வழி
வேகமாக ரத்தத்தில் கலங்கி
மூளையில் கலக்கிறது
சாத்தான்.
மெல்ல மெல்ல
அதன் கட்டுப்பாட்டில் நீங்கள்
கொஞ்சம் கொஞ்சமாக
உங்கள் மூளை
சூடேற
கொஞ்சம் கொஞ்சமாக
வடிவம் மாறிக் கொண்டிருக்கிறீர்கள்
முடிவில் ஒரு
சாத்தானாக மாறிவிட்ட நீங்கள்
முதலில் என்ன செய்வீர்கள் ?


ஆதிமுகத்தின் காலப்பிரதி

மரணம் ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயக்கப்பட்டது. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையைப் பற்றிய பல்வேறு கனவுகளில் இருப்பான் இளமையில். முதுமை நெருங்க நெருங்க மரணம் பற்றிய பயம் வரும். மரணம் சமீபத்துவிடுகிற சமயத்தில் ஞானமும் கூட வரும். நிச்சயக்கப்பட்ட ஒரு முடிவை நோக்கி தான் நாம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு போகிறோம். எனது மரணத்தை நான் ஒரு புன்னகையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்கிற எனது விருப்பம் தான் எனது இந்தக் கவிதை

அகோரன்

எனது அந்திமத்தின்
கடைசிக் கணத்தில்
எதைப் பிரதிபலித்துக்
கொண்டிருக்குமென் முகம் ?

கடைசி நொடிவரை
கை பற்றி வந்த நட்பையா

நுரைத்துப் பொங்கிப்
பிரவகித்த காமத்தையா

நாட்கள் அனைத்தையும்
நகர்த்தி வந்த காதலையா

கடைசி நொடியைக்
கண்டு நடுங்குகின்ற
அச்சத்தையா

எதுவாகினும் என்
முகமப்போது ஒளிர வேண்டும்
ஒரு சிறு புன்னகையுடன்

அன்பின் நீரூற்றி ஊற்றி
கவிதைகளால்
கட்டமைத்துக் கொண்ட
இம்முகத்தின்
ஆதி அகோரத்தை
மீண்டும் எதுவும்
மேலெழுப்பி விட வேண்டாம்


காதலில் பிரிவு வந்த பிறகு வரும் இரவு நமது உறக்கத்தைப் பறித்து விடும். காதலி இல்லாத ஒரு இரவை உறக்கமாக மாற்ற பெரும் பிரயத்தனப்படும் காதலன் ஒருவனின் இரவு முழுவதுமான போராட்டம் தான் இந்தக் கவிதை

இந்த இரவைப்
புலம்பல்களாக்குகின்றேன்
அவை உன்
காலடியில் மன்றாடுகின்றன

இந்த இரவைக்
கண்களாக்குகின்றேன்
அவை உன் மேல்
கண்ணீர் சொரிகின்றன

இந்த இரவை
ஒரு பெருமூச்சாக்குகிறேன்

அப்போதும் அடங்க மறுத்த
இவ்விரவை
ஒரு நாய்க்குட்டியின் கழுத்தென
நீவிப் பார்க்கிறேன்

உறக்கமாக்க
வழிகளேதுமறியாத
நீயற்ற இந்த இரவை
வேறு வழியின்றி
ஒரு கொடுஞ்சாபமாக்கி
எனக்கே
கையளித்துவிட்டு
அமர்ந்திருக்கிறேன்
கொட்டக் கொட்ட விழித்தபடி


பேசும் சக்தி உயிரினங்களில் மனிதனுக்கு மட்டுமே கிடைத்த வரம். ஆகவே தான் அவனுக்கு பேச்சு ஆயுதம். பேச்சு என்பது குரல். குரல்கள் ஒவ்வொரு சமயங்களிலும் ஒவ்வொரு உணர்விலும் தனித்தனி ஒலியமைப்புகளில் வெளிப்படும். ஒரு குரல் நமது வலிகளைக் குறைக்கக் கூடும், ஒரு குரல் ஒரு தற்கொலையைக் கூட தடுத்து நிறுத்தக் கூடும். ஆகவே நமது பேச்சில் நமது குரலில் எப்போதும் அன்பின் ஊற்று பொங்கிப் பெருகட்டும் என்பது தான் இந்தக் கவிதையின் விருப்பம்

குரல்கள்

ஒரு குரல்
பெரும் வாதையின் ஒற்றை
நிவாரணியாகிவிடுகிறது

ஒரு குரல்
காலாதி காலக் கனவுகளின்
ஒலிரூபமாகிறது

ஒரு குரல்
பிறழ் பொழுதுகளின்
கூர் முனைகளை
மழுங்கச் செய்துவிடுகிறது

அசரீரியாகிறது ஒரு குரல்
வாழ்வாகிறது ஒரு குரல்
கள்ளத் தோணியாகிறது ஒரு குரல்

வேறு வேறு முகங்களுக்கு
வெவ்வேறு குரல்களுண்டு

ரட்சிக்கும் குரல்களுக்கு
வேறு வேறு
முகங்களில்லை

அன்பின் குரல்களுக்கு
எப்போதும் ஒரே முகம்




குழந்தைகள் நமக்குத் தரும் வரங்கள் முத்தங்கள்.. ஒவ்வொரு முறையும் வீட்டுக்குச் செல்லும் போதும் முத்தங்களால் வரவேற்பாள் மகள். அழுக்குப் படிந்து ஒரு வேலை நாளில் வீடு திரும்புகையில் ஓடி வந்து முத்தமிட வந்தவளை, இரு பாப்பா முகம் கழுவி வருகிறேன் என்று மறுதலித்து விலகினேன். அவள் முத்தத்தை வைத்துக்கொண்டு கன்னத்தில் கை வைத்தபடி காத்திருந்தாள். அந்தக் காத்திருப்பு எனக்கு கவிதையானது. அந்தக் கவிதையைத் தான் நான் எழுத்தாக்கினேன்.

வருகையை தூரத்திலேயே
பார்த்துவிட்டவள்
வாசலுக்கே ஓடி வந்து
கழுத்தைக் கட்டிக்
கொள்கிறாள்
குளித்து விட்டு வருவதாகச்
சொல்லி விலக்கி
நடக்கிறேன்

குளித்து முடித்து வரும்
வரைக்கும்
குளியலறை வாசலிலேயே
கன்னத்தில் கைவைத்துக்
காத்திருக்கிறது
ஒரு குட்டி முத்தம்



வெள்ளி, 30 மார்ச், 2018

உலகெங்கும் இட்லிகள்

நேற்று ( 30.03.2018 ) உலக இட்லி தினம் நேற்று இட்லியைப் பற்றி எழுதத் துவங்கி வேலைப் பளுவால் விடிந்து இன்றாகிவிட்டது … அதனாலென்ன தினமும் இட்லி சாப்பிடுவர்களுக்கு தினம் தினமே இட்லி தினம் தான் …


இட்லி நமது பாரம்பரிய உணவு … உலகம் முழுதும் இருக்கும் உணவு விரும்பிகளின் பட்டியலில் நிச்சயம் இட்லி இருக்கும். இந்திய வரைபடமே சிலருக்கு ஒரு பெரிய இட்லியாகத் தெரியக்கூடும்.
நம் எல்லோரின் வாழ்விலும் இட்லிகள் உண்டு. சிலருக்கு இட்லி ஆத்திகத்தைப் போல சிறு வயதில் விரும்பியோ விரும்பாமலோ அதுவே ஊட்டப்படும், வளர்ந்து விட்ட பின்பு அதன் மீது ஒரு வெறுப்பு வந்துவிடும், முதுமை நெருங்க நெருங்க நமது உடல்நலத்தின் மீது சந்தேகம் வரத்துவங்கியதும் அது நமது தவிர்க்க முடியாத துணையாகிவிடும்…

இட்லி தென்னிந்தியாவின் , தமிழகத்தின் உணவு என்று இப்போது நம்பப்பட்டாலும் அது இந்தோனேஷியாவில் இருந்து வந்த உணவு என்று சில வரலாற்றுத் தகவல்களும் உண்டு. இட்லியின் பெயர்க்காரணம் இட்டளி என்றும் இட்டரி என்றும் இட்டவித்து அளி என்று இருந்து இட்லியாக மருவியதாக கிடைக்கப்படுகின்றன.


தினமும் இட்லிகள் மலிவாகக் கிடைக்கிற இந்தக் காலம் போலல்லாமல் அந்தக் காலம் இட்லிகள் அபூர்வமான காலம். சிறுவயதில் தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழாக்களின் காலை உணவாகத்தான் இட்லி செய்வார்கள். ஆகவே இட்லி செய்கிற நாட்களே திருவிழாவாக இருக்கும் என நம்பலாம். அல்லது உறவினர்கள் வருகை என்றால் , மூலக்கடை அண்ணாச்சியிடம் சரக்குகள் கடன் வாங்கியாவது அடுப்பில் ஆவி பறக்க இட்லிகள் அவிக்கப்படும். அப்போதெல்லாம் ரேசன் அரிசியில் மாவரைத்து, ரேசன் வேட்டியை வெட்டி பாத்திரத்தில் பரப்பிச் செய்வதால் அது ரேசன் இட்லியாகத்தான் பார்க்கப்பட்டது எங்களுக்கு.
மதுரை இட்லி, செட்டிநாடு இட்லி, கர்நாடகா இட்லி,ராம்சேரி இட்லி என்று ஒவ்வொரு ஊரிலும் தனிச்சிறப்பு மிக்க இட்லிகள் தயாரானாலும் தமிழ்நாட்டின் வரலாற்றில் இட்லி என்றதும் குஷ்பு இட்லி என்ற நினைவு வரும்படி அபத்த வரலாற்றையும் தமிழன் எழுதி வைத்தது தான் வேடிக்கையாகிவிட்டது.
இட்லி நமது உணவு அடையாளமாக மாறிப்போன பின் , அவற்றுக்குக் கூடுதல் மதிப்பு கிடைத்துவிட்டது. உலகெங்கும் தமிழர்கள் வியாபித்தும் வியாபாரித்தும் இருக்கும் காரணத்தினால் உலகின் அநேகப் பகுதிகளிலும் இப்போது இட்லிகள் அவிக்கப்படுகின்றன, ருசிக்கப்படுகின்றன , சிலாகிக்கப் படுகின்றன

இட்லியை அரசியல் குறியீடாக்கி நன்கு வேகவைத்து சுடச் சுடப் பரிமாறப்பட்ட ஒரு அற்புதமான கவிதை தோழர் செ.இளங்கோவன் அவர்களது கவிதை..
இட்லிகளின்  நிகழ்காலம்

இட்லிகள் மலிவானவை
உலக அளவில் விரைவாக அழிந்துவரும்
உணவு வரிசையில் இட்லிகள் உள்ளன
அவற்றுக்குத் தாம் இட்லிகள்
அறிந்துணர்வு எப்போதும் இருந்ததில்லை

அடுத்தவன் வயிற்றில் அடித்துப்
பிழைக்க அவற்றுக்குத் தெரியாது
ரொட்டி, சப்பாத்தி , கோங்குரா சட்னி, 
தேங்காய் புட்டு,
எல்லாவற்றுக்கும் இட்லிகளைக் கண்டால் 
இளக்காரம்.
அது குறித்து இட்லிகளுக்கும் கவலையில்லை.

பசித்த வயிறுகள் தேடி
தவ ஓட்டம் ஓடிச் செல்வதே 
இட்லிகளின் வரலாறு

அண்டார்டிகா தவிர 
அனைத்துக் கண்டங்களிலும்
இப்போது இட்லிகள் கிடைக்கின்றன

தற்காலிகப் பானைகளில் உருவாகி
தமைச் செரிக்கும் நொதிப்பைகள் தேடிச் சென்று
அடைக்கலமாகி உள்ளாற்றலழிந்து
தன்னை விழுங்குபவனுக்கே
உயிராற்றல் வழங்கி
மலமாய் மிஞ்சுதலே அவற்றின் வாழ்வு.

இட்லிகள் வெதுவெதுப்பானவை
என்று கவிஞர் நா.முத்துக்குமார் 
சொன்னது பொய்.
இட்லிகள் பனிப்பாறைகளைப் போன்றவை
இட்லிகள் ஆழிசூழ் உலகனைய ஆற்றல்
நிரம்பியவை
ஒரே குறை
கோடிக்கணக்கில் வெந்துகொண்டிருக்கும்
இட்லிகளுக்கு ஒரு தேசமில்லை

இந்தக் கவிதை அவரது ஆறெழுத்து மந்திரம் எனும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்று பலராலும் வெகுவாக ரசிக்கப்பட்ட கவிதை..

இட்லியைப் பற்றிய இன்னுமொரு பேராச்சர்யம் எனக்கு என்னவெனில், சிறுவயது முதல் இன்று வரை இட்லியை உப்புமாவின் இன்னொரு முகம் போல எண்ணி வெறுக்கும் ஒருவனை இட்லியைப் பற்றியே எழுதச் செயத இட்லியை நினைத்துத்தான் ….

டாட்





வியாழன், 29 மார்ச், 2018

நூல் விமர்சனங்களுக்காக ஒரு இணைய தளம்

கொலுசு குழுமத்திலிருந்து நூல் விமர்சனங்களுக்காகவே பிரத்யேகமான தளமாக விமர்சி என்ற தளத்தில் ஒவ்வொரு மாதமும் சில நூல் விமர்சனங்களை வெளியிட்டு வருகிறோம் ..

புதிதாக நிறைய நூல்கள் வெளிவருகின்றன, அவற்றையெல்லாம் வாசகர்களிடம் அறிமுகம் செய்யவும், படைப்பாளர்களுக்கு தங்களது நூல்களைப் பற்றிய ஒரு மதிப்புரையை வழங்கிடவும் இந்த தளம் துவங்கப்பட்டது ..

இந்த மாதம் விமர்சியில் மூன்று நூல்களுக்கான மதிப்புரைகள் இடம்பெற்றுள்ளன 

கவிஞர் புன்னகை பூ ஜெயக்குமார் அவர்கள் எழுதிய " தூரிகையின் பிஞ்சுப் பாதங்கள் " கவிதைத் தொகுப்பின் மதிப்புரை வாசிக்க


http://www.vimarsi.com/vimarsi/z_download.php?id=25


கவிஞர் சாமி கிரிஷ் அவர்கள் எழுதிய " துருவேறிய தூரிகைகள் " கவிதைத் தொகுப்பின் மதிப்புரை வாசிக்க


http://vimarsi.com/vimarsi/z_download.php?id=26


கவிஞர் முருகன் சுந்தரபாண்டியன் அவர்கள் எழுதிய " இலைக்கு உதிரும் நிலம் " கவிதைத் தொகுப்பின் மதிப்புரை வாசிக்க

http://vimarsi.com/vimarsi/z_download.php?id=24


விமர்சிக்கு நூல்கள் அனுப்ப :




திங்கள், 26 மார்ச், 2018

படைப்பாளர்களுக்குப் பாராட்டு விழா

பொள்ளாச்சியில் 25.03.18 ஞாயிறு அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கிளை மாநாடு நடைபெற்றது.

நிகழ்வில் பொள்ளாச்சியில் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு நூல் வெளியிட்ட படைப்பாளர்கள் அனைவருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பொள்ளாச்சியில் 22 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த நூல்கள் குறித்த ஆய்வுரையை எழுத்தாளர் சூர்யா அவர்கள் பேசினார்.

எழுத்தாளர் கரீம், கவிஞர் க.அம்சப்ரியா, திரு.சொக்கலிங்கம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் வெளியீடாக நூல்கள் வெளியிட்ட படைப்பாளர்கள் அனைவருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

நான் நினைவுப்பரிசைப் பெற்ற போது ...



பொள்ளாச்சி த.மு.எ.க.ச வின் தலைவராக எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களும் , செயலாளராக சூர்யபிரகாஷ் அவர்களும், பொருளாளராக கவிஞர் கீதாப்ரகாஷ் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தோழர்களுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்....

ஒவ்வொரு ஊருக்கும், கிராமங்களுக்கும் , நகரங்களுக்கும் இலக்கிய அமைப்புகளின் தேவை அதிக அளவில் இருக்கிறது... தொடர்ந்து அவை செயல்படுவதன் மூலமாக, வாசிப்பையும் எழுத்தையும் பேச்சையும் இவற்றினூடாக அறத்தையும் மனித மனங்களில் வேரூன்றச் செய்யலாம்...


செவ்வாய், 20 மார்ச், 2018

ஒரு ஊர்ல ஒரு கதை இருந்துச்சாம்



ஒரு கதை சொல்லு என்று கேட்கவும்
ஒரு கதை சொல்லவா என்று சொல்லவும்
ஆட்களற்ற நகரமொன்றில்
சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது
ஒரு குட்டிக் கதை.
குட்டிக் கதையென்றால் மிகக் குட்டி அது.
முன்பெல்லாம் அந்தக் கதையைக் கேட்க
நிறையக் காதுகள் இருந்தன
வயல்வெளிகளும், மரம் செடிகளும்
மெல்ல அழிக்கப்பட்டு 
நகரமாகிவிட்டபின்பு 
அது தனித்துவிடப்பட்டது
அந்தக் கதையின் விலங்குகள் காணாமல் போய்விட்டன
அந்தக் கதையின் பறவைகள் எங்கோ பறந்து போய்விட்டன
கணினியும் தொலைக்காட்சியும் அலைபேசிகளும்
நிறைந்து விட்ட குழந்தைகளின் வாழ்க்கைக்குள்
இப்போதெல்லாம் அந்தக் கதை
நுழைய முடிவதேயில்லை.
அந்தக் கதையை வாரியணைக்க நெருங்கும்
குழந்தைகள் மிரட்டப் படுகிறார்கள்
அந்தக் கதையைச் சொல்ல முயலும்
கிழவிகள் பரிகசிக்கப் படுகிறார்கள்

நகரத்தின் நெரிசல்களிடம்
சிக்கித் தவித்து
யாருமேயில்லாத
ஒரு அலைபேசி கோபுரத்தின்
உச்சியில் அமர்ந்துகொண்ட அந்தக் கதை
இப்போது யாருக்குமில்லாமல்
தனது கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறது

" ஒரே ஒரு ஊர்ல ...."

# மார்ச் 20 - சர்வதேச கதை சொல்லல் நாள்

வியாழன், 8 மார்ச், 2018

சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்





ஒரு பாதி நிலம்
ஒரு பாதி நீர்
ஒரு பாதி ஆகாயம்
ஒரு பாதி காற்று 
ஒரு பாதி நெருப்பு  என
நம்மின் பஞ்ச பூதங்களிலும்
சரி பாதி அவள்

அவளின் இயக்குதலில் 
அவளைப் பற்றிச் சுழன்றபடியிருக்கிறது நம் பூமி

எப்போதாவது அவளுக்கு ஒரு துணை தேவை
எப்போதாவது அவளுக்கு ஒரு விரல் தேவை
எப்போதாவது அவளுக்கு ஒரு தோள் தேவை
எப்போதாவது அவளுக்கு ஒரு சொல் தேவை
எப்போதாவது அவளுக்கு ஒரு 

அப்போது மட்டும் அவளுக்கான நம்மைக் கொடுப்போம்
மற்றபடி அவள்
தனியள்

மகளிர் தின வாழ்த்துகள்






திங்கள், 5 மார்ச், 2018

அப்பாவின் நினைவுக்கு ஆண்டு ஒன்று

காடு மேடுகளிலெல்லாம்
தோளிலும் முதுகிலும் 
தூக்கிச் சுமந்த
அப்பாவை
நினைவுகளில் மட்டுமே
சுமந்தலையும் படி
விதி செய்து
ஆண்டொன்றும் ஆகிப்போனது


___________________

அம்மாவின் கருவறையிலிருந்து
வெளியேறிய கணம் முதல்
கோர்த்துக் கொண்டு உடனழைத்து வந்த
விரல்களை திடுதிப்பென்று
விடுவித்துக் கொண்டு கிளம்பிவிட்டார் அப்பா.

பணமதிப்பிழப்பு வரிவிதிப்பு
எரிபொருள் பேருந்து கட்டணம் ஏற்றம்
என என் பொடனியில் அடித்தபடியிருக்கிறது அரசு.
சகல சூழல்களிலும் உடனிருப்பேன் உடனிருப்பேன்
என்றவள்
என்றாவதொருநாள் தான் உண்மையில் இருக்கிறாள்
முதுகில் தடவிக்கொடுத்தபடியே இருந்த
கைகள்
இத்தனை காலம் வளர்த்துக்கொண்ட
நகங்களால் ஆழக்கீறி குருதிபார்க்கின்றன
ஏன் கவிதை எழுதவில்லை
எனக் கேட்டபடியிருக்கும் குரல்களுக்கான
பதிலை
எப்போதும் உச்ச வெப்பநிலையில் கொதிகொதித்தபடியே இருக்கும்
மனதின் அடியாழத்துக்குக் கடத்திவிடுகிறேன்
எல்லாவற்றிலிருந்தும் கவிதைகளின் வழியே
தப்பியோடிக் கொண்டிருந்தவன்
எல்லாவற்றிடமும் கவிதைகளின் வழியே
சிக்கிக் கொள்கிறேன்
இப்போதெல்லாம்

____________________

அப்பாவுக்கு மனிதர்களைத் தெரிந்திருந்தது யாரை விடவும்.
எங்களின் கற்பிதங்களைக் கலைத்து
யார் யார் என்னென்ன முகமூடிகளுடன் வருகிறார்கள் என்பதைத் தெளிவாக்குவார்.
அப்பாவுக்கு கடவுள்களைப் பற்றியும்
தெரிந்திருந்தது.
எந்தெந்தக் கோவிலில் எதெதற்குப் பரிகாரம்
எந்தக் கடவுளுக்கு என்ன சிறப்பு என அடுக்குவார்.
விலங்கினங்களையும் அறிந்தவர்
ஆடு எந்த நாளின் எந்நேரத்தில் குட்டி ஈனும்
மாட்டின் ஈனக் குரல் எதன் பொருட்டு
சுவர்ப்பல்லி ஏன் கத்துகிறது
காகம் ஏன் கரைகிறது என்பதாக.
மரம் செடி கொடிகளையும் இப்படித்தான்
தெரிந்து வைத்திருந்தார்.
எங்களையும் முழு முழுமையாகத் தெரிந்து வைத்திருந்தார்
எல்லாரையும் போலவே
எல்லாம் தெரிந்த அப்பாவுக்கு
எல்லாரையும் போலவே
தனது மரணம் தெரிந்திருக்கவில்லை
ஆகவே தான் அந்தக் கருப்பு இரவிலும்
கேட்டபடியிருந்தார்
" ஏம்பா, நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்கள்ல ?"