எனது கவிதைகள் ...
புதன், 20 நவம்பர், 2024
நின் நெஞ்சு நேர்பவள் - கவிஞர் ந.பெரியசாமி அறிமுகக் குறிப்பு
நின்நெஞ்சு நேர்பவள் - அறிமுகம் - விமர்சகர் ந.முருகேசபாண்டியன்
அண்மையில் கவிஞர் இரா.பூபாலன் வெளியிட்டுள்ள நின் நெஞ்சு நேர்பவள் கவிதைத் தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. பூபாலன் அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட பெண்கள் பற்றி கோட்டோவியமாகக் கவிதைகள் எழுதியுள்ளார்.
அன்றில் இலக்கியம் - வலையொளி தளம்
ஞாயிறு, 31 மார்ச், 2024
குமரகுரு கல்லூரியில் வாசகர் வட்டத் தொடக்கவிழா மற்றும் நூல்வெளியீட்டு விழா
கோவை - குமரகுரு கல்லூரியில் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டது. தொடக்க விழாவுக்கு நானும் கவிஞர் சுடர்விழியும் சிறப்பு அழைப்பாளர்கள். நான் கற்றனைத்தூறும் அறிவு எனும் தலைப்பிலும், கவிஞர் சுடர்விழி வாசிப்பை நேசிப்போம் எனும் தலைப்பிலும் உரையாற்றினோம்.
எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. நிகழ்வில் அவர் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வின் முத்தாய்ப்பாக இரண்டாமாண்டு காட்சித் தொடர்பியல் துறை மாணவர் மதி புகழேந்தியின் "வண்ணங்கள் வழியும் முள்நுனி" கவிதை நூல் வெளியிடப்பட்டது. நான் வெளியிட்டு உரையாற்றினேன்...
முன்பாக, நா.மகாலிங்கம் தமிழாய்வு மைய வாசகர்வட்டத்தை தொடங்க பெரும் முனைப்பும் சிரத்தையும் எடுத்த நண்பர், வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.சூர்யபிரகாஷ் புத்தகம் வெளியிடப்போவதாக சொல்லி இருந்தார். மாணவரின் புத்தகம் தானே கவிதைகள் வழக்கம் போலத்தான் இருக்கும் என எண்ணினேன். அடுத்த நாள் புத்தகம் வரத் தாமதமாவதால் பி.டி.எப் கோப்பாக அனுப்பியிருந்தார். வாசித்துப்பார்த்தேன். பல கவிதைகள் நம்பிக்கையளித்தன. பல கவிதைகள் பிடித்தமானதாக இருந்தன.
கல்லூரி மாணவரின் கவிதைகள் போலல்லாது, ஒரு முதிர்ச்சி தெரிந்தது. வாசிப்பின் ருசியறிந்தவர் என்று புரிந்தது.
நிகழ்வன்று காலையில் முகநூலில் கவிஞர் சீரன் தாபா அவ்வழைப்பிதழைப் பகிர்ந்திருந்தார். தனது நண்பனுடைய மகனின் கவிதை நூல் வெளியாகிறது என. உடனே அவரை அழைக்கச் சொல்லி பேசினேன். பின்பு தான் தெரிந்தது அவர் திண்டுக்கல் கவிஞர் வேல்முருகன் அவர்களுடைய மகன் என்பது.
கவிஞர் வேல்முருகன் உதிரும் நிழல், எழுத்துகளால் அணைத்துக்கொள்கிறேன் உன்னை என இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். அவரது மகன் கல்லூரிக் காலத்திலேயே தொகுப்பு வெளியிட்டிருப்பது சிறப்பிலும் சிறப்பு,
இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று, தொகுப்பை கல்லூரியின் தமிழாய்வு மையத்தின் பொருட்செலவிலேயே சிறப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். இதைக் கேட்டவுடன் மிகுந்த நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்தேன். இதை முன்னெடுத்த சூர்யபிரகாஷ் அவர்களுக்கும், கல்லூரி நிர்வாகத்துக்கும் எனது மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துகளும். இந்த வாய்ப்புக்காக ஏராளமானோர் காத்திருக்கிறார்கள். புத்தகம் போட பணமும், உதவியுமின்றி நிறையப்பேர் காணாமல் போயிருக்கிறார்கள். இந்த வயிதில் மதி புகழேந்திக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு உண்மையில் மகத்தானது. அவர் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு இன்னும் இன்னும் உயரவேண்டும். மதிக்கு நவீன கவிதைகளையும், நவீன கவிஞர்களையும் அறிமுகம் செய்தது பேராசிரியர் சுடலைமணி என்று மதி தனது ஏற்புரையில் குறிப்பிட்டார். அவருக்கு என் வணக்கங்கள். ஒரு நல்ல ஆசிரியரால் நிச்சயமாக மகத்தான மாற்றங்களை நிகழ்த்த முடியும்.
மதி புகழேந்தியின் சில கவிதைகள் உங்கள் வாசிப்புக்கு :
@
வரிக்குதிரை
வரிகளின் மேல்
சாலை கடக்கும்
பொழுதெல்லாம்
பியானோ வாசிக்கும்
அவள் கால்கள்
@
முட்டை வடிவ
நிலவை
அடைகாக்கத்
துடிக்கின்றன
மேகங்கள்
பிடித்திருக்கிறது
இந்த
மொட்டை மாடித்தூக்கம்
@
துறவை நோக்கி
நடக்கிறேன்
குறையவேயில்லை
தூரம்
@
எவ்வளவு தூரம்
நீந்தி வந்திருக்கும்
இந்த அலை ?
@
யாரும் அழைக்கவில்லை
என்னை
நானாகத்தான் சென்றேன்
யாரும் துரத்தவில்லை
என்னை
நானாகத்தான் வந்தேன்
@
யாரோ ஒருவர்
யாருக்கும் தெரியாமல்
அழுவதற்குத் தான்
குளியலறையில்
இத்தனை குழாய்கள்
தண்ணீருடன்
காத்திருக்கின்றன
மதி புகழேந்தியைத் தொடர்புகொள்ள : 73055 58578
நின் நெஞ்சு நேர்பவள் - கவிதை நூல் வாசிப்பு அனுபவம் - கவிஞர் செ.கார்த்திகா
கவிஞர்.இரா.பூபாலன் எழுதி கடந்த மாதம் வெளிவந்தக் கவிதை நூல்கள்.." நின் நெஞ்சு நேர்பவள்" மற்றும் "ஹோ.. என்றொரு கவிதை"
வியாழன், 28 மார்ச், 2024
உதிரிகள் இதழில் 15 கவிதைகள்
இந்த மாத உதிரிகள் இதழில் எனது 15 கவிதைகள் வெளியாகியுள்ளன..
வாசியுங்கள்...
சொற்கள்
1.
நின் நெஞ்சு நேர்பவள் - கவிதைகல் ஒரு பார்வை - கவிஞர் பொன் குமார்
நின் நெஞ்சு நேர்பவள் - கவிதைகள் - இரா. பூபாலன்- 98422 75662
ஒரு பார்வை - பொன். குமார்
கவிஞர் இரா. பூபாலன் சமீபங்களில் கவிதை உலகின் கவனத்தை ஈர்த்து வருபவர். கவிதை எழுதுவதிலும் ஒரு நிதானமான போக்கைக் கடைப்பிடித்து நல்ல கவிதைகளை எழுதி வருபவர். பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு, ஆதிமுகத்தின் காலப்பிரதி, அரூபத்தின் வாசனை, திரும்புதல் சாத்தியமற்ற பாதை, தீ நுண்மிகளின் காலம், ஹோ.. என்றொரு கவிதை என்னும் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அவரின் ஒரு புதிய கவிதைத் தொகுப்பு ' நின் நெஞ்சு நேர்பவள்'. முழுக்க பெண்களைப் பற்றியது. தாய் முதல் தோழி வரை அனைத்து உறவுகளையும் பாடியுள்ளார்.
" அம்மாவிலிருந்து தொடங்கிய இந்த உலகம் அவளையே சுற்றிச்
சுற்றி வந்தபடி அவள் தந்த, அவள் காட்டிய பெண்களின் கைகளைப்
பற்றியபடியே தான் சுழன்றுகொண்டிருக்கிறது. என் வாழ்வின் பெண்கள்
எல்லோரும் சேர்ந்து பிசைந்து உருவாக்கிய பிண்டம் தான் நான் என்பது எனக்குத் தெரியும். நாம் அனைவருமே அப்படித்தான். இல்லையென்றால் பெண்களற்ற நம் பூமி எப்போதோ கருகிப் போயிருக்கும் " என என்னுரையிலே தெளிவாக எழுதி தொகுப்பைத் தொடங்கியுள்ளார்.
அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே
என்னும் குறுந்தொகை பாடலிலின் இறுதிவரியிலிருந்து நின் நெஞ்சு நேர்பவள் என்னும் தலைப்பைத் தேர்ந்தெடுத்து பொருத்தமாக வைத்துள்ளார். குறுந்தொகையின் மீதான பற்றையும் காட்டியுள்ளார்.
அப்பாவின் பழைய லுங்கிகளை
சதுர சதுரமாக வெட்டி
குளியலறை எரவானத்தில்
பத்திரப்படுத்தியிருப்பாள் அம்மா
பால்யத்தில் நான் அவற்றைக்
கேள்விகளால் துளைத்துப்பார்த்துவிட்டேன்
உனக்கு அது தேவை இல்லாததென்ற
ஒரு பதிலில் கடந்துவிடும் அம்மாவுக்கு
ஐந்து நாட்கள் விடுமுறைக் கணக்கில்லை
சோர்ந்து படுத்து ஒரு நாளும் பார்த்ததில்லை
துணிகளில் படாமல் போன
செந்துளியின் சிறுதுளி தான்
நானெனப் பின்னாளில் அறிந்துகொண்ட போது
அம்மாவின் உடல்
வன தேவதையின் உடலெனப் பச்சையம் பூசியிருந்தது
என அம்மாவிலிருந்தே கவிதையைத் தொடங்கியுள்ளார். அம்மாதானே அனைவருக்கும் தொடக்கம். இக்கவிதையின் தலைப்பு செந்துளியின் சிறுதுளி. மாதவிடாய் காலத்தில் அம்மாவின் அவஸ்தையை உணரச்செய்துள்ளார். ஒரு மகனிடமிருந்து மறைப்பதற்கு அம்மா படும் இம்சையையும் கூறியுள்ளார். எனினும் இக்கவிதை
மனைவிக்கு
மகளுக்கு
தோழிகளுக்கு
அந்த நாட்களின் தேவைகளின் பொருட்டு
மருந்துக் கடைக்குப் போக
தேநீர் கலந்து கொடுக்க
சிறு சிறு உதவிகள் செய்ய
என்னைப் பணித்தவை
அந்த லுங்கிச் சதுரங்கள் தாம்
என தொடர்கிறது. அம்மா படும் அவஸ்தையே அம்மா பட்ட இம்சையே பின்னாளில் மனைவி, மகள், தோழிகளுக்கு உதவ காரணமாக இருந்தது என்கிறார். அம்மாவின் மூலம் பெண்களின் நிலையை உணரச்செய்துள்ளார். ஆண்களும் மாத விடாய்க் காலங்களில் உதவியாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது கவிதை. மேலும் இக்கவிதையை
அம்மாவும் ஒரு லுங்கிச் சதுரம் தான்
அப்பாவுடைய
என்னுடைய
இன்ன பிற ஆண்களுடைய
கறைகளை
மனதின் எரவானத்தில்
யாரும் பாராமல்
ஒளித்துவைத்தே இருக்கிறாள்
என நிறைவுச் செய்து அம்மாவை உயர்த்திக் காட்டியுள்ளார். அம்மா என்பவள் ஆண்களின் கறையையும் மூடி மறைத்தே வாழ்பவர் என்கிறார்.
பிள்ளைகளுடன் விளையாடுவதில் அம்மாக்களுக்கு எப்போதுமே அலாதி பிரியம். பொதுவாக விளையாட்டு என்றால் வெற்றிப் பெறுவதாகவே இருக்கும். பிள்ளைகளுடனான அம்மாக்களின் விளையாட்டில் அம்மாக்கள் தோற்கவே விரும்புவார்கள். விளையாடுவார்கள். பிள்ளைகளை வெற்றிப்பெற வைப்பதிலேயே அம்மாக்களின் குறிக்கோள் இருக்கும். பிள்ளைகளின் மகிழ்ச்சியே பெற்றவளின் மகிழ்ச்சி. 'அம்மாவுடனான விளையாட்டு ' அருமை.
அவள் தோற்றுத் தோற்றுத்தான்
ஆணாக்கியிருக்கிறாள்
என்னை
அப்பாவை
என கவிஞர் விளையாடி இருக்கிறார். கவிஞரின் விளையாட்டும் அருமை. ஒரு மகனை ஆணாக்கியிருப்பது அம்மாவின் தோல்வியல்ல. அதுவே அவளின் வெற்றி. இதுவே கவிஞரின் வெற்றி. ' பொய்ச் சிலை ' யும் அம்மாவின் வின் விளையாட்டையே காட்டுகிறது. அம்மா பொய்ச் சிலை அல்ல. மெய்ச் சிலை.
ஒரு பூக்காரியின் மீது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது ' இன்மையின் சன்னதம்'. தினமும் சாலையில் பார்க்கும் பூக்காரி பூ வாங்கக் கோரும் போதெல்லாம் வாங்காமல் செல்கிறார். ஒரு நாள் பூக்காரியைக் காணாமல் மனம் வாடுகிறார்.
நாளை அவள் வந்துவிடவேண்டும்.
யாருக்காகவாவது
ஒரு முழம் பூவை வாங்கிவிட்டால் போதும்
என்றிருக்கிறது
என எண்ணுகிறார். தினசரி காணும் பூக்காரியை ஒரு நாள் காணாத போதே அவளிடம் பூ வாங்க முடிவெடுக்கிறார். பூ விற்றால்தானே பிழைப்பு நடத்த முடியும்? பூக்காரி பெண்ணுக்கான கவிதை இது.
'யாசகம்' ஒரு நல்ல கவிதை. பேருந்தில் யாசகம் கேட்கும் சிறுமிக்கு ஒருவன் பொம்மையை யாசகம் அளிக்கிறான். பொம்மையைப் யாசகம் பெற்ற சிறுமி தனக்குக் கிடைத்த சில்லறைகளை யாரோ ஒருத்திக்கு தந்து விட்டு பொம்மையுடன் செல்கிறாள். காட்சியாக விரிகிறது கவிதை. பொம்மையும் சிறுமியும் கண்முன் காட்சியளித்துக் கொண்டே இருக்கிறார்கள். பணத்தை விட பொம்மையே சிறுமிக்கு பிடித்தமானதாக உள்ளது.
' பழைய நகைச்சுவைக் காட்சி' அம்மாவின் நினைவுக்கூர்தலான அப்பாவைப் பற்றிய கவிதை. புகைப்படம் எடுக்கும் போது புகைப்படக்காரர் சிரிக்கச் சொல்வது வழக்கம். ஆனால் அப்போதுதான் சிரிப்பே வராது. அப்புகைப்படத்தைக் காணும் போதே சிரமப்பட்டு சிரித்ததே நினைவு வரும்.
பொண்டாட்டி தான் தள்ளி நிக்கறாங்களே
என்று புகைப்படக்காரனின் நகைச்சுவைக்கு
இப்போது மீண்டும் புன்னகை சிந்தினாள்
அப்பாவோ
அந்த நகைச்சுவைக்கு
இப்போது தான்
முதன் முதலாகப் புன்னகைக்கிறார்
என்பது கவிஞரின் கவிபுனைவைக் காட்டுகிறது.
எந்த ஒன்றிலும்
மிச்சமாவதை
விரும்பத் துவங்குவாள்
தனக்கென எதுவும்
தயாரிக்காதவள்
என்னும் 'மிச்சத்தை விரும்பாதவள்' தாய்க்கு மட்டுமல்ல எல்லா பெண்களுக்கும் பொருந்தும். பெண்களின் பொதுவான குணமாகும். ஆயினும்
இரவும் பணி தொடர்வதால்
வீட்டுக்கு வர முடியாது
என்று அவர் சொன்னபின்
மிச்சமான சாப்பாட்டை
புளியூற்றி வைத்துவிடுகிறாள்
பாலை உறையூற்றி வைத்துவிடுகிறாள்
எல்லா மிச்சங்களையும்
சரிக்கட்டிவிடும் அவள்
மிச்சமிருக்கும்
இந்த இரவை எதுவும்
செய்ய முடியாமல்
பார்த்துக்கொண்டிருக்கிறாள்
என்னும் 'கையறு நிலை' யில் மிச்சமிருக்கும் இரவில் பெண்கள் படும் நிலையைக் காட்டியுள்ளார்.
மருந்தகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணின் மனிதநேயத்தையும் இரக்கக்குணத்தையும் வெளிப்படுத்தியது 'வலி நிவாரணி'. மருத்துவர் எழுதி தந்த மொத்த மருந்துகளையும் வாங்க காசில்லா ஏழை முதியோர்க்கு பாதி தொகையில் முழு மருந்தையும் தந்து உதவுகிறாள்.
இன்று மாலை
இடிக்கும் கணக்கையும்
பிடிக்கும் சம்பளத்தொகையையும் பற்றிய
கவலைகளின்றி
வலிநிவாரணிகளை அடுக்கியபடியிருக்கிறாள்
என அப்பெண்ணை போற்றச்செய்கிறார்.
அன்றாட இல்லப்பணிகளில் வலிகள் இருந்தாலும் வேதனைகள் தொடர்ந்தாலும் பெண்கள் வெளியில் காட்டிக்கொள்ளாதவர்கள் என்று கூறும் கவிதை ' வலிகளின் நழுவல்'.
மலைக்காட்டின் வாசம், யாரும் பார்த்திராதது, கடவுளுக்கு முந்தைய, நேர்த்திக் கடன், ஒரு தரம்.. இரண்டு தரம்.. மூன்று தரம்.. ஆகியவை மலை குறித்தானவை. அப்பா மகள் உரையாடல்கள் மூலம் மலையை வியக்கச் செய்கிறார்.
மலைக் கோவில்
எப்போதிருந்து இருக்கிறது அப்பா?
நாம் பிறப்பதற்கு முன்பிருந்து
மலை எப்போதிருந்து
இருக்கிறது அப்பா?
கடவுள் பிறப்பதற்கு
முன்பிருந்து
என்னும் 'கடவுளுக்கு முந்தைய' கவிதையே கவனத்தை ஈர்க்கிறது.
மகள்கள் வெகு வேகமாக
வளர்ந்து விடுகிறார்கள்
அம்மாக்களின் செருப்பை
அணிந்துகொள்ளும் அளவுக்கு.
அவர்களின் உடையையும்
அணிந்துகொள்கிறார்கள்
அம்மாக்கள் தங்கள்
அணிகலன்களை
கைப் பைகளை
பங்கிக்கொள்கிறார்கள்
கொஞ்சம் கொஞ்சமாக
அப்பாவின் மடியிலிருந்து
தூரமாகி
அம்மாவின் தோழியாகிவிட்ட
ஒரு சிறுமியை
அப்பாக்கள் கனவுகளில்
துரத்தித் திரிகிறார்கள்
என்னும் ' ஊசல் ' நெகிழ்ச்சியானது. மகளின் அபரித வளர்ச்சியைக் காட்டுகிறது. மகள்கள் வளர வளர அப்பாக்களிடமிருந்து விலகிச் செல்வதைச் சொல்கிறது. ஆனால் அப்பாக்கள் மகளை நேசிப்பவர்களாகவே இருக்கிறார்கள் என்கிறார்.
கோபமென்றால்
எதையாவது உருட்டுவாள்
நிலம் அதிர நடப்பாள்
முந்தைய நாள்
விருப்பப்பட்டுக் கேட்ட உணவை
சமைத்து வைத்துவிட்டு
என்னும் 'அவள் அப்படித்தான்' பெண்களின் பேரன்பைக் காட்டுகிறது. இங்கு அவள் அம்மா, மனைவி, மகள், தோழி என எவளாகவும் இருக்கலாம்.
பெண்கள் இட ஒதுக்கீடுக்காக போராடியும் சமூகத்தில், நாட்டில் இட ஒதுக்கீடு முழுமையாக கிடைக்கவில்லை. ஆனால் வீட்டில் சமையலறை பெண்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. மீறினால் பக்தி அறை. ஆண்கள் சமையலறை பக்கம் எட்டியே பார்க்க மாட்டார்கள். சமையலறையே அம்மாக்களின் உலகம். பணத்தைக் கூட பாதுகாப்பாக வைக்க சமையலறை பயன்படும். அம்மாவிற்கு ஏற்படும் சகலவலிகளுக்கும் சமையலறையிலேயே மருந்தும் இருக்கிறது என்கிறது 'அம்மாவை ஊறவைத்து விழுங்குபவள் ' கவிதை. சளிக்கு மிளகு, காயத்திற்கு மஞ்சள், தலை வலிக்கு சுக்கு, மாதாந்திர வலிக்கு அவள் என சமையறையிலையே சகல நிவாரணிகளும் பெண்களின் கைவசம் உள்ளன என சமையலறை உலகம் காட்டுகிறது.
புகைப்படத்தை வைத்துக்கொண்டு அம்மாவிடம் மகளும் மகளிடம் அம்மாவும் பேசி பேசி அன்புக் காட்டிக்கொள்வதை கவிஞர் ' பழைய பைத்தியங்கள்' என்கிறார். இன்னும் அலைபேசி அறியாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்பு என்பதே ஒருவித பைத்தியக்காரத் தனம்தானே..?
நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை
ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கில்லை
என கவிஞர் கந்தர்வன் எழுதி எல்லோருக்கும் விடுமுறை நாளானாலும் பெண்களுக்கு மட்டும்
இல்லை விடுதலை என்கிறார். 'எனக்கான காற்று' தொகுதியில் கவிஞர் எ. ராஜலட்சுமியும்
'எனக்கு' கவிதையில்
உனக்கு ஞாயிறு விடுமுறை
எனக்கு?
என வினா எழுப்பியுள்ளார். இதே தொனியில் இதே பாணியில் கவிஞர் கிருஸ்ணப்ரியாவும் ' அரூபப் புலம்பல்கள்' கவிதையில் ஞாயிறு அன்றும் பெண்களுக்கு ஓய்வில்லை என்கிறார்.
வீடு மொத்தமும்
தொலைக்காட்சி, அலை பேசி என்று
தன்னைப் புறக்கணிப்பதை
பொறுத்தக் கொள்ளவியலாமல்
தேம்பும் ஞாயிறு
பார்க்கத் தவறுகிறது
விடுமுறை நாளின் விசேஷ சமையலுக்காக
சமையலறையில் கட்டப் பட்டிருக்கும்
அவளை..
ஞாயிற்றுக் கிழமை என்பது அனைவருக்குமான விடுமுறை நாள். ஆனால் வீட்டுப்
பெண்மணிகளுக்கு மட்டும் விடுமுறை இல்லை. மற்ற நாளகளை விட கூடுதலாகவே
பணியாற்ற வேண்டி உள்ளது. கவிஞரும் பெண்களுக்குக் குரல் கொடுத்துள்ளார். பெண்களுக்கு
விடுதலைக் கிடைக்கும் வரை இது போன்ற குரல்கள் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்
பெண் விரும்பும் 'ஆசையாய் ஒரு நாள் ' என்று வரும் என்று வேண்டியுள்ளார் வெட்கத்தில் நனைகின்ற தொகுப்பில் கவிஞர் கிருஸ்ணப்ரியா. கவிஞர் இரா. பூபாலன் ' நகலத்து நங்கை'க்கு ஞாயிற்றுக்கிழமையும் பணி என்கிறார். இது ஒரு நகல்தான். இன்னும் அசல்கள் இருக்கின்றன.
விடுமுறை நாளொன்றின்
அதிகாலையில்
உறங்கிக் கொண்டிருந்தவனை
உலுக்கி எழுப்பினாள்
"அப்பா ரோஜா செடி எவ்ளோ அழகா
பூத்திருக்கு வாங்க பாருங்க" என்றபடி
இதழ் இதழாய் விரிந்து பூத்திருந்த
முகத்தைப் பார்த்துச் சொன்னேன்
“ரோஜா எவ்ளோ அழகு"
என்னும் கவிதையின் தலைப்பு ' ரோஜாக்களின் அழகு '. மகளுக்கு ரோஜா அழகு. அப்பாவிற்கு மகளே ரோஜா போன்ற அழகு. ஆகக் கூடி கவிதையும் அழகு.
எப்போது எதற்கு அழுதாலும்
உன்னால தான் என்பாள்
எதற்கு எப்போது
சிரித்துக் கொண்டாலும்
உன்னை நினைத்துத்தான் என்பாள்
அவள் தான்
கடைசிக் கடிதத்தின்
முதல் வரியிலேயே எழுதித் தொலைத்திருந்தாள்
என் சாவுக்கும்
அவனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென
இக்கவிதையின் தலைப்பு ' உன்னால் தான்'. தொகுப்பின் நிறைவுக்கவிதையான இது நெஞ்சில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெண்கள் ஆண்களைக் காட்டித்தருவதில்லை என்கிறார்.
கவிஞர் இரா. பூபாலனின் 'நின் நெஞ்சு நேர்பவள்' என்னும் தொகுப்பு முழுவதும் பெண்களைப் பற்றிய கவிதைகள். ஓர் ஆணின் பார்வையில் பெண்கள் குறித்து எழுதியுள்ளார். பொதுவாக பெண்கள் என்று சொல்லாமல் அம்மா, மனைவி, மகள், தோழி என வகைப்படுத்தி அவர்கள் குறித்து கவிதை இயற்றியுள்ளார். எனினும் பொதுவாக பெண்களைப் பற்றியே பேசியுள்ளது. பெண்களின் வலிகளும் உண்டு. வேதனைகளும் உண்டு. அன்பும் உண்டு. ஆதரவும் உண்டு. பண்பும் உண்டு. பாசமும் உண்டு. பெண்களின் பலபடிநிலைகளைக் கவிதையில் காட்டியுள்ளார். கவிதைகள் உரத்து பேசவில்லை என்றாலும் உண்மைகளை பேசியுள்ளன. உரத்து பேசியுள்ளன. அம்மாவிற்கு மகனாக, மனைவிக்குக் கணவனாக, மகளுக்கு அப்பாவாக, தோழிக்கு தோழனாக தன்னை முன்னிறுத்தி ஒரு கவிஞனாக வெற்றிப்பெற்றுள்ளார். கவிதையின் செய்நேர்த்தி சிறப்பு. கவிதையை வாசிக்கத் தொடங்கும் போது தெரிகிறது. தானாகவே வாசிப்பு முடிவடைகிறது. கவிதை சொல்ல வேண்டியதை மையப்புள்ளியில் இருந்து விலகாமல் சொல்லியுள்ளார். சொற்கள் சொக்கச் செய்கின்றன. வரிகள் வசீகரிக்கின்றன. பாடுபொருள் பாராட்டச் செய்கின்றன. பொள்ளாச்சி இலக்கிய வட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். கவிஞர் இரா. பூபாலன் பெண் சமூகத்தின் பெரும் அக்கறைக் கொண்டவரென உறுதிச் செய்கிறது நின் நெஞ்சு நேர்பவள் என்னும் தொகுப்பு. ஒரு கவிஞராக பெண்கள் மனத்திலும் இடம் பிடிப்பார். கவிதை உலகிலும் வலம் வருவார். அம்மாவை அவள் என்பது அன்பின் வெளிப்பாடு. " அம்மாவாக, மனைவியாக, மகளாக, தோழிகளாக, அக்காக்களாக,
தங்கைகளாக என்னை நானாக்கிய பெண்கள் தாம் இந்தக் கவிதைகள்
அவர்களை ஒன்று திரட்டி ஒரு தொகுப்புக்குள் கொண்டு வந்திருக்கிறேன். அது உங்கள் கைகளில் தவழ்கிறது. உங்கள் வாசிப்பில் அவர்கள் இன்னும் கொஞ்சம் அழகாகக் கூடும் " என அழைப்பு விடுத்துள்ளார். அழகாக்குவது வாசகர் பொறுப்பு. கடமை.
வெளியீடு
பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
9842275622