ஞாயிறு, 12 ஜூலை, 2020

நா.முத்துக்குமார் எனும் பாதியில் முடிக்கப்பட்ட கவிதை

நா.முத்துகுமார்


தமிழ்மொழிக்கு ஒரு சாபம் உண்டு தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள்; கவிஞர்களை காலம் இளம் வயதிலேயே இழுத்துக்கொள்வது தான் அது. மகாகவி பாரதியின் காலம் வெறும் 39 ஆண்டுகள் தான். எழுத்தாளர் புதுமைப்பித்தன் வெறும் 42 ஆண்டுகள் தான் வாழ்ந்தார். பாடலாசிரியர்  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வெறும் 29 வயதில் மறைந்து போனார்.  இளம் வயதிலேயே இவர்கள் காலமாகிப் போனாலும் காலத்தால் மறக்க முடியாத , காலத்தினால் அழிக்க முடியாத மகாசக்தியாக இன்றும் இவர்களது எழுத்துகள் நின்று பேசுகின்றன.  இவர்கள் இன்னும் பலகாலம் வாழ்ந்திருந்தால் இவர்கள் படைப்பு இன்னும் எவ்வளவு குவிந்திருக்கும் என்கிற ஏக்கமும் எதிர்பார்ப்பும் தமிழ் வாசகர்களை இன்றளவும் தொந்தரவு செய்கின்றன.

இந்த வரிசையில் ( இந்த வரிசை என்பது இளவயது இயற்கையெய்தியவர்களின் வரிசை என்று கொள்க; பாரதியோடோ, புதுமைப்பித்தனின் படைப்புகளோடோ அல்லது பட்டுக்கோட்டையின் பாடல்கோடோ ஒப்புமைப் படுத்த அவசியமில்லை. அவர்களின் உயரமும் தமிழ் இலக்கியத்துக்கான பங்களிப்பும் வேறு என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன் )  சமகாலத்தில் நான் வெகுவாக ரசித்த கவிஞர் நா.முத்துக்குமாரும் நாற்பத்து ஒரு ஆண்டுகள் தான் இந்த நிலத்தில் வாழ்ந்து போனார். ஆனாலும் அவரின் கவிதைகள் பாடல்கள் உரைநடை என அவருடைய எழுத்துகள் காலத்துக்கும் அவர் தந்து போன பொக்கிஷங்கள். எண்பதுகளின் மத்தியில் பிறந்த அவரது கவிதைகள் எண்பதுகளின் அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டவை. எண்பதுகள் எழுத்துலகில் பொற்காலம் தான். புதுக்கவிதை பெரும் வீச்சுடன் இயங்கிய காலம். நவீன கவிதை புது வெளிச்சத்தைக் கொண்டு வந்த காலம். இந்த இரண்டுக்கும் இடையில்  ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டவை தொண்ணூறுகளில் எழுத வந்த நா.முத்துக்குமாரின் கவிதைகள். 

நா.முத்துக்குமாரின் அத்துணை கவிதைகளையும் வாசித்திருக்கிறேன். அவரது கவிதைகளை புதுக்கவிதைக்கும் நவீன கவிதைக்குமான ஒரு பாலமாகப் பார்க்கிறேன். புதிதாக எழுத ஆசைப்பட்டு வந்த மாணவர்கள் நண்பர்கள் பலருக்கு அந்தப் பாலத்தைக் காட்டியிருக்கிறேன். பரிசளித்திருக்கிறேன்.

நியூட்டனின் மூன்றாம் விதி, பட்டாம்பூச்சி விற்பவன் இரண்டும் நான் சிலாகித்த இரு பெரும் கவிதைத் தொகுப்புகள் அவருடையன. 

கணையாழி இதழ் விழா ஒன்றில் எழுத்தாளர் சுஜாதா பேசிய போது, “கணையாழி இதழில் வர்ற கவிதைகளைக், கடந்த 10 வருஷமா நான்தான் தேர்ந்தெடுத்துட்டு வர்றேன். இந்தக் கணையாழி இதழில் கூட ஒரு கவிதை வந்திருக்கு. தமிழில் வெளிவந்த சிறந்த 25 கவிதைகளை பட்டியலிடச் சொன்னால் ‘தூர்’ கவிதையை அதில் நான் சேர்ப்பேன்” என்றார். நா.முத்துக்குமாருக்கு அது மிகப்பெரிய வெளிச்சத்தைக் கொடுத்தது.அந்தக் கவிதை :


        தூர்

வேப்பம் பூ மிதக்கும்
எங்கள் வீட்டு கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்துக்கு ஒரு முறை
விஷேசமாக நடக்கும்.

ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்...

கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,
துருப்பிடித்தக் கட்டையோடு
உள் விழுந்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்...
எடுப்போம் நிறையவே                                                                             
‘சேறுடா சேறுடா’ வென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

படை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேலே வருவார்.

இன்று வரை அம்மா
கதவுக்குப் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்.

கடைசி வரை அப்பாவும்
மறந்தேப் போனார்
மனசுக்குள் தூர் எடுக்க

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நா.முத்துக்குமாரின் பயணம் ஏறு முகம் தான்.  சிறந்த கவிதைகளைப் படைத்தார் அதனினும் சிறப்பான திரைப்பாடல்களை எழுதினார். புகழின் உச்சிக்குச் சென்றார்.

நியூட்டனின் மூன்றாம் விதி தொகுப்பின் தலைப்புக் கவிதையே அழகானது. அடுக்குமாடிக் குடியிருப்பின் அவஸ்தைகளைச் சொல்ல முயன்ற கவிதை.


நியூட்டனின் மூன்றாம் விதி

மேல் வீட்டுக்காரன்
என்கிற உரிமையில்
நீ கைப்பற்றும் சுதந்திரம்
அதிகப்படியானது.

உன் ஒவ்வொரு அசைவும்
பூதாகரமாய் ஒலிக்கிறது
கீழ்த்தளச் சுவர்களில் 
.
திட்டமிட்டு நகர்த்தும்
சாமார்த்தியமும் உனக்கில்லை.

பாக்கு இடிக்கும் பாட்டி;
சச்சதுர அம்மியில்
சார்க் புர்ரக்கென்ற
குழவி நகர்த்தும் அம்மா;
ஏதேதோ பாட்டுக்கெல்லாம்
எம்பிக்குதிக்கும் குழந்தைகள்;
என
உன் உறவுகள் கூட
உன்னைப் போலவே.

உன்னைப் பழிவாங்கும் விதமாக
என்னால் முடிந்தது ஒன்றுதான்.
எனதருமை மேல்தளத்து நண்பா…

தலையணையையும் மீறி
உன்காதுகளில்
சுழன்று கொண்டிருக்கும்
என் மின்விசிறி.

அடுக்குமாடிக்காரனின் அவஸ்தைகள் போலவே எதிர்வீட்டுக்காரனோடு 
அனுசரித்துத் தான் வாழவேண்டிய நிலையையும் கவிதையாக்கியிருப்பார் இப்படி

புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரன்
எங்களிடமிருந்து பறிக்கிறான்
பூனை வளர்க்கும் சுதந்திரம்

நா.முத்துக்குமாரின் கவிதைகள் எளிமையானவை. ஆனால் அழகானவை. 
அட என ஆச்சர்யம் கொள்ளவும், அச்சச்சோ என ஆதங்கப்படவும் என 
ஏதோ ஒரு உணர்வுச் சுழலுக்குள் நம்மை இழுத்து விடுவன. 

குறுங்கவிதைகளிலும் அவர் சிறப்பான கவிதைகளைத் தந்துள்ளார். 

உள்ளும் புறமும்

அப்பாவின் சாயலில் உள்ள
பெட்டிக் கடைக்காரரிடம்
சிகரெட் வாங்கும்போதெல்லாம்
விரல்கள் நடுங்கின்றன

இது நா.முத்துக்குமாரின் பிரபலமான கவிதை. இது தரும் உணர்வு அவ்வளவு அனுக்கமானது. எண்பதுகளின் மற்றும் தொன்னூறுகளின் பதின் வயதுச் சிறுவர்களின் அனுபவ ஊறல்களில் இந்நினைவு ஊறிக் கிடந்திருக்கும். 

கூர்வாள்
 
நான் ஏன் நல்லவனில்லை
என்பதற்கு மூன்று காரணங்கள்.
 
ஒன்று
நான் கவிதை எழுதுகிறேன்.
 
இரண்டு
அதைக் கிழிக்காமலிருக்கிறேன்.
 
மூன்று
உங்களிடம் அதைப்
படிக்கக் கொடுக்கிறேன்

இந்தக் கவிதையும் , இவர் எழுதிய பொண்டாட்டி தாலியை அடகு வைத்து புத்தகம் போட்ட கவிதையும் எண்பதுகளின் ஏன் இப்போதைய வரைக்கும் இலக்கியவான்களின் நிலையைக் காட்டும் கண்ணாடி எனலாம்.

பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணடிகள்.

இது இவரது சிறப்பான ஹைக்கூக்களில் ஒன்று. இந்தக் கவிதை உருவாக்கித் தரும் காட்சி பிம்பங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சலூன்கடைக் கண்ணாடியில் தெரியும் நம் உருவத்தை முதன்முதலில் பார்த்த போது வந்த பரவசத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது. நெடுங்கவிதைகளோடு குறுங்கவிதைகளிலும் அழகியலையும் காட்சிப் படிமங்களையும் கொட்டித் தந்திருக்கிறார். 

பொருட்படுத்தா மனிதர்களை
நாற்றத்தால் அறைந்தது
குடல் சரிந்த நாய்.

சாலையில் நாம் கவனிக்காது கடந்து செல்லும் நிகழ்வுகளுக்கான எதிர்வினை இந்தக் கவிதை. 

முதல் காதல்

காற்றில் பறந்து
பறவை மறைந்த பிறகும்
கிளை தொடங்கிய
நடனம் முடியவில்லை!

இவர் கவிதைகளில் இவர் கட்டமைக்கிற காட்சிகள், இவர் உருவாக்கித் தருகிற மனித பிம்பங்கள், கதை சொல்லும் பாங்கில் கட்டமைக்கப்படுகிற கவிதை மொழி என எல்லாமே மிக எளியன. 

கவிதைகளில் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். இவரது திரைப்பாடல்களின் இலக்கிய ரசனையைப் பற்றி எழுதினால் பக்கம் பக்கமாக எழுதலாம்.

இவரது கவிதை நடைக்கு நெருக்கமாக அமைந்த உரைநடைத் தொகுப்புகளான வேடிக்கை பார்ப்பவன் மற்றும் அணிலாடு முன்றில் கட்டுரைத் தொகுப்புகளும் அற்புதமான வாசிப்பு அனுபவத்தைத் தருவன.

வாழ்ந்த சொற்ப காலத்திலும், அழகான கவிதைகளையும் அதனினும் மிக அழகான திரைப் பாடல்களையும் எழுதி, மிக வேகமாக இந்த பூமியை விட்டுப் புறப்பட்டுவிட்ட நா.முத்துக்குமார் எனும் கலைஞன் மீது மிகப்பெரிய ஆதங்கம் வருகிறது.

இன்னும் கொஞ்ச வருடங்கள் இருந்திருக்கலாம் முத்துக்குமரா…

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்


இரா.பூபாலன்
12-07-2020

சனி, 13 ஜூன், 2020

மெய்யுறுதல் கவிதைத் தொகுப்பு

நேற்று அலுவலக வாசலுக்கே வந்து தனது மெய்யுறுதல் கவிதைத் தொகுப்பை அன்புடன் தந்துவிட்டுப் போனார் கவிஞர் பொன் இளவேனில்.

 290 பக்கங்கள் உள்ள கனமான தொகுப்பு. இந்தத் தனிமைக் காலம் தந்த  அனுபவங்களை தினம் தினம் பதிவு செய்த கொரானா கால கவிதைகள் இவை.

கிட்டதட்ட 166 கவிதைகள்... இரண்டு மாதங்களுக்குள் கிடைத்த தனிமையிலும் மன எழுச்சியிலும் எழுதிய கவிதைகள்.. இந்தக் காலத்தின் அரசியலை, சமகால நிகழ்வுகளை, தனிமைக்காலம் தரும்  அக உணர்வுகளை, இந்தக் காலகட்டத்தில் நடந்தேறிய கூத்துகளை என யாவற்றையும் தனக்கே உரித்தான நையாண்டியும் நயமும் கூடிய மொழியில் பதிவு செய்து இருக்கிறார் கவிஞர் பொன் இளவேனில்.

எழுத்தாளர் இளஞ்சேரல் எழுதி இருக்கும் நீண்ட அணிந்துரையும் அட்டகாசம். 

தொகுப்பின் ஒரு கவிதை இங்கு ...

கைவிடப்பட்டவர்கள்

நெடுஞ்சாலையில் யாருமில்லை
கைவிடப்பட்டவர்களின்
வழியாக அமைந்திருந்தது
கைகளிலும் தோள்களிலும்
குழந்தைகளையும் 
மூட்டை முடிச்சுகளையும் 
அள்ளிக் கொண்டு நடந்தார்கள்
எல்லா உயிர்களும்
பொருள்களான போதும் 
அவர்கள் நடந்தார்கள் 
யாரார் எங்கு எங்கு என்று 
யாருக்கும் புரியாமல் 
நடந்தார்கள் 
பசியின் கடவுள்கள் 
அழைத்த இடம் எதுவென்று
யாருக்கும் தெரியவில்லை தூரத்திலிருந்து கைவிட்டவர்களைப்  போல
அரசர்களைப் போல
கடவுள்களைப் போல 
பார்த்துக் கொண்டிருக்கிறோம்


வெளியீடு

அகத்துறவு, கோவை

நூல் வேண்டுவோர் தொடர்பு கொள்ள

கவிஞர் பொன் இளவேனில்
96296 46320

நண்பர்கள் அவசியம் வாங்கி வாசியுங்கள்

புதன், 3 ஜூன், 2020

கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள் - இனிய உதயத்தில்

இந்த மாத இனிய உதயம் இதழில் கவிஞர் சேலம் ராஜா எழுதிய கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள் கவிதை நூலுக்கான எனது வாசிப்பு அனுபவம் வெளியாகியுள்ளது
உங்கள் வாசிப்புக்கு இங்கு

முதல் கவிதைத் தொகுப்புக்கான கவிதைகளை நாம் பால்யத்திலிருந்து தொகுக்க ஆரம்பிக்கிறோம், பள்ளிக்கூடங்களில் கொஞ்சம், இளமைக் கொண்டாட்டங்களில் கொஞ்சம், பதின்பருவக் காதலில் கொஞ்சம், இளமைக் கோபத்தின் கங்குகளில் கொஞ்சம், நெகிழும் அன்பில் கொஞ்சம் என பக்கங்களாகத் தொகுக்கப்படுகின்றன பெரும்பாலும். முதல் தொகுப்புக்கென தயாரான கவிதைகளில் பெரும்பான்மையைத் தவிர்க்க இயலாது நம்மால். ஆனால் எவ்வளவு கவிதைகளை இரக்கமின்றி தவிர்த்துவிட்டு நமது நிகழ்கால கவிதைப் போக்குடன் ஒன்றிய கவிதைகளை கவனத்தில் கொள்கிறோமோ அவ்வளவு நல்லது முதல் கவிதைத் தொகுப்புக்கு. சேலம் ராஜாவின் முதல் தொகுப்பு கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள் இவற்றின் எல்லா சாதக பாதகங்களுடனும் தொகுக்கப்பட்டிருக்கின்றது. காதல், அரசியல், சமூகம், நட்பு, குழந்தைமை, தத்துவம், கிராமம் என பல பாடுபொருட்களினாலான கதம்பக் கவிதைத் தொகுப்பு. 

கவிதையில் அரசியலை எங்கிருந்து துவக்குவது. ? முதல் வரியிலிருந்து தான். கவிதைத் தொகுப்பில் அரசியலை எங்கிருந்து துவங்குவது ? முதல் கவிதையிலிருந்து தான்.

அழகிய 
கோபுரத்தில் தொடங்கி
அம்பேத்கர் சிலையோடு
முடிந்து விடுகிறது
எங்கள் ஊர்

என்கிற முதல் கவிதையோடு துவங்குகிறது கவிஞர் சேலம் ராஜாவின் கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள் கவிதைத் தொகுப்பு. மேட்டுக்குடியின் அழகிய கோபுரத்தில் தொடங்கி தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியின் அம்பேத்கர் சிலையோடு முடிகிறது எங்கள் ஊர் என்கிறார். அழகிய கோபுரம் ஒரு சாராரைக் குறிக்கும் குறியீடாகவும் அம்பேத்கர் சிலையை ஒரு சாராரின் குறியீடாகவும் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்தக் கவிதை நமக்கு நமது ஊரை, மாநிலத்தை, நாட்டை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக இருக்கிறது. ஊரின் / நாட்டின் முதன்மையாக மேட்டுக்குடி தான் இருக்கிறது கடைக்கோடியில் தள்ளப்பட்டிருக்கிறது தாழ்த்தப்பட்டவர்களின் இருப்பிடமும் இருப்பும். எல்லா நலத்திட்டங்களும் வளர்ச்சிப் பணிகளும் மேலும் மேலும் கோபுரங்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல, சேரிகள் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன. ஒரு யானையின் மிடுக்கோடு மேட்டுக்குடியில் துவங்கும் நலத்திட்டங்கள் ஊரின் கடைக்கோடிக்கு வரும் போது தேய்ந்து தேய்ந்து ஒரு சிற்றெரும்பைப் போல ஒரு சிறு துளியாகிப் போகிறது. இந்தக் கவிதையின் பின்புலத்தில் இப்படியான கொடும் வரலாற்றுக் காட்சிகள் ஒளிந்திருக்கின்றன. அவற்றைன் மீது கொஞ்சம் வெளிச்சத்தைப் பாய்ச்சத்தான் இந்தக் கவிதை.

கருப்பி கவிதையின் நாயகி நம் எல்லோருக்கும் நெருங்கிய தோழி. 
“ பீரியட்ஸ் டைம் டா வயிறுவலி முடியல, நாப்கினே நனஞ்சிடுச்சு “ என்று எந்த சங்கோஜமுமின்றி நம்மிடம் சொல்லத் தெரிந்தவள். காதுகளுக்கு வார்த்தைகளை ஊட்டுபவள் என்கிற தலைப்பே கவிதையாக இருக்கிறது. தலைப்புக் கவிதையான கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள் ஒரு ஞாயிற்றுக் கிழமையின் கவிச்சி வாடையை நம் நாசித்துவாரங்களுக்கு அருகில் அழைத்து வருபவை.

ஒரு கிராமத்துக் கவிஞன் தனது வயல்வெளிகளின் மத்தியில், மனிதர்களின் மத்தியில் என எடுத்துக்கொண்ட சொற்களையும், கருவையும் கவிதையாக்கியிருக்கிறார் இந்தத் தொகுப்பின் அநேகப் பக்கங்களில்.இந்தத் தொகுப்பிலும் நாம் அநேகம் புலங்கிடாத சில புதிய கிராமத்துச் சொல்லாடல்களை அறிந்து கொள்ள முடிகிறது. போடுவாசி, வல்லி, நரூசு, என அடிக்குறிப்புகளுடன் சில சொற்கள் நமக்கு அறிமுகமாகின்றன.


சேலத்துக்கும் எடப்பாடிக்கும் தூரமில்லை என்றும், சுவாதிகள் நந்தினிகள் விஷ்ணுப்ரியாக்களெல்லாம் தெய்வத் தவறுகள் என்றும்  அரசியல் பேசும் கவிதைகளும் இவரது தார்மீக அறச்சீற்றத்தைத் தாங்கியிருக்கின்றன.
அப்பாவைப் பற்றிய சில கவிதைகளும் நெகிழ்வானவை.
உயிரின் துடிப்பு

வலிமைமிகு உடலுடன்
உலக உருண்டையை ஒருவன்
தூக்கிச் சுமந்தபடி இருக்கும்
அட்லஸ் சைக்கிளைத்தான் அப்பா வைத்திருந்தார்
தன்னைக் கவனித்துக் கொள்கிறாரோ இல்லையோ
தினமும் அதிகாலையிலேயே
சைக்கிளுக்கு எண்ணெய் விட்டு
அப்பா சைக்கிள் துடைக்கும் பிம்பத்தில் தான்
நான் விழிப்பேன்
துடைத்து முடிந்த கையோடு
பெரியசாமி கடைக்குத் தேநீர் பருக
சென்று வந்த பின் என்னை
முன்பக்கக் கம்பியில் அமர்த்தி
பள்ளிக்கு அழைத்துச் செல்வார்
அப்பொழுதெல்லாம்
“ ப்பா வேகமா போப்பா “ என்று கூச்சலிடுவேன்
அவரின் இதயத் துடிப்பை
என் செவி உணரும்
புதிதாக நான் வாங்கிய
இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து வந்தவர்
“மெல்லப் போப்பா” என்றார்
இப்போது அவரின் இதயத் துடிப்பை
என் செவி உணரவில்லை

 மகன் தந்தைக்காற்றும் நன்றியாக தந்தையை நகர் உலா அழைத்துச் செல்லும் மகனுக்கும் அப்பாவுக்குமான பிணைப்பை நெகிழ்ந்து சொல்லியிருக்கிறார். மெல்லப் போப்பா என்பது அனைத்து அப்பாக்களின் குரலாக ஒலிக்கிறது. அனைத்து மகன்களுக்குமான கவிதையாக இருக்கிறது இந்தக் கவிதை.

அழுதுகொண்டே இருக்கும் ஆட்டுக்குட்டிக்கு புதுச் சட்டை வாங்கி வரச் சொல்லும் காயத்ரி அருள் பாலிக்கும் கவிதைகளின் குழந்தைமை அழகாயிருக்கின்றது.  மேலும்,

உன் 
கரம் பிடித்த
தூரம் வரை தான்
எனக்குப்
பாதையிருந்தது

என்று காதல் பேசும் கவிதைகளும் காமம் பேசும் கவிதைகளும் அதிகம் இருக்கின்றன. நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன் என்பது எளிய ஒப்புதல் வாக்குமூலம் தான். அதை உலகக் காதலர்கள் அனைவரும் ஒரு நாளில் சொல்லிவிடுகிறார்கள் தான். உலகக் கவிஞர்கள் எல்லோரும் ஒரு கவிதையிலேனும் எழுதி விடுகிறார்கள் தான். நாம் அதே உணர்வை அதே சொற்களில் எப்படி வெளிப்படுத்தியிருக்கிறோம் என்பதில் இருக்கும் பரிமாணங்கள் தான் காதல் கவிதைகள் இத்தனை ஆண்டுகாலம் தொடர்ந்து எழுதப்பட்டு வருவதற்கும் வாசிக்கப்பட்டு வருவதற்குமான நம்பிக்கையைத் தருகின்றன். உனது கரம் பிடித்து வரும் தூரம் வரை தான் எனக்கு வாழ்க்கைப் பாதை இருக்கிறது என்பது அழகிய சொல்லாடல். அதன் பின் இருப்பது கல்லும் முள்ளும் நிறைந்த ஒரு வழித்தடமாக இருக்கலாம். இருப்பேன் ஆனாலும் உன் கரம் பற்றிப் போகும் போது தான் எளிதான பயணமாக இந்த வாழ்க்கை இருக்கும் என்கிற வாக்கு மூலம் இந்தக் கவிதை.

முதல் கவிதைத் தொகுப்பை எப்போதும் கசக்கிடாமல் கைகளில் ஏந்திக் கொள்வது புதியவர்கள் கவிதைக்குள் பயந்திடாமல் நுழைய வழிவிடுவதற்கான தார்மீகப் பொறுப்பு. எப்போதும் அதைச் செய்தே வந்திருக்கிறேன். இந்த முதல் தொகுப்பும் அழகான கவிதைகளுடன், ஆங்காங்கே மின்னலென மிளிரும் சில வரிகளுடன், புருவத்தை உயர்த்தும் சில சிந்தனைகளுடன் ஒரு நல்ல தொகுப்பாகிக் கை சேர்ந்திருக்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள் ராஜா.. உங்களின் சித்திரக் குறிப்பை உங்களின் கவிதைகளே எழுதிக் கொள்ளும்.



வெளியீடு : இடையன் இடைச்சி நூலகம், சில்லாங்காட்டுப் புதூர் , ஈரோடு பேச: 98412 08152
ஆசிரியர் : கவிஞர் சேலம் ராஜா , பேச : 91599 19739
விலை : ரூ 100



செவ்வாய், 5 மே, 2020

வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் - சட்டகத்துக்கு வெளியே வரையப்பட்ட ஓவியம்

கவிஞர் இசையின் வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் தொகுப்பு குறித்த எனது வாசிப்பனுபவக் கட்டுரை கனலி இதழில் வெளியாகியுள்ளது
கட்டுரை இங்கே உங்களின் வாசிப்புக்கு ....

வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் - சட்டகத்துக்கு வெளியே வரையப்பட்ட ஓவியம்


இசை : தற்கால தமிழ்க்கவிதையின் மிக முக்கியமான முகம். இவரது உறுமீன்களற்ற நதி பரவலாக கவனத்தையும் பல விருதுகளையும் குவித்த தொகுப்பு, அதன் பின்னர் வந்த சிவாஜி கணேசனின் முத்தங்கள், அந்தக்காலம் மலையேறிப்போனது, ஆட்டுதி அமுதே ஆகிய கவிதைத் தொகுப்புகளும் முக்கியமான கவிதைத் தொகுப்புகள் தாம். அவரது உய்யடா உய்யடா உய், அதனினும் இனிது அறிவனர் சேர்தல், லைட்டா பொறாமைப்படும் கலைஞன், பழைய யானைக் கடை போன்றவை கவிதையியல் கட்டுரைத் தொகுதிகள். இவ்வாறு தொடர்ந்து கவிதையும் கவிதை சார்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கும் இசை அவர்களின் சமீபத்திய தொகுப்பு நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன். நாம் இப்போது பேசப் போவது அதற்கு முந்தைய தொகுப்பான வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் தொகுப்பைப்பற்றி.

இசையின் கவிதைகளின் தனித்தன்மை அல்லது ஒழுங்கு என்னவென்றால் பகடி மொழி.
ஆம், அவரது கவிதைகள் பகடி பேசுகின்றன. பகடி என்பது நக்கல், கிண்டல் , கேலி,எள்ளல்,நையாண்டி என நிறையச் சொற்களின் மேம்பட்ட வடிவம். ஆனால் இந்தச் சொல்லுக்கெல்லாம் இல்லாத ஒரு கிறக்கமும் பகடிக்கு உண்டு தான்.

நகையுணர்வு என்பது நவீன வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த வாழ்வு தரும் அழுத்தங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள அது வசதியான ஒன்றாகவும் இருக்கிறது. ஏன் வடிவேலு என்னும் திரைமொழிக் கலைஞன் நம் காலத்து நாயகனாக இருக்கிறார் என்று யோசித்தாலே போதும் என நினைக்கிறேன்.


நமக்கு வடிவேலு நமது அன்றாடங்களின் அத்தியாவசியமான ஒரு கலைஞனாகிவிட்டார். பள்ளிகளில், கல்லூரிகளில், கார்ப்பரேட் நிறுவனங்களில், அரசியலில், ஆன்மீகத்தில் என அத்துணை இடங்களிலும் வடிவேலு மீம்களாக சிரித்தபடியிருக்கிறார்.

தமிழ்த் திரையுலகில் பகடி தவிர்க்கமுடியாத அங்கம். எம்.ஆர் ராதா போல மக்களை, அரசியலை எள்ளி நகையாடியவர்களிலிருந்து வடிவேலு வரைக்கும் நாம் குறிப்பிட்டுச் சொல்ல மிக முக்கியமான ஆளுமைகள் திரையில் இருக்கிறார்கள். நமது கலைகளில், கூத்தில், நாடகங்களில், எல்லா இடங்களிலும் பகடிக்கென ஒரு விதூசகன் இருந்திருக்கிறான். பிரம்மாண்டமான சர்க்கஸ் நிகழ்வுகளில் கோமாளிகள் சிங்கங்களை விடவும் ஈர்ப்பான கதாநாயகர்களாக இருந்திருக்கிறார்கள் எல்லாக் காலங்களிலும்.

நமது இலக்கியத்திலும் பகடி சங்கம் முதல் நவீனம் வரை தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது. இது குறித்து தமிழ்க் கவிதைகளில் விளையாட்டு என்ற பொருளில் பழைய யானைக் கடை என்ற ஒரு கட்டுரைத் தொகுப்பையே இசை எழுதியிருக்கிறார். நவீன கவிதைகளில் பல்வேறு கவிஞர்கள் பகடி மொழியைக் கையாண்டிருக்கிறார்கள் என்றாலும் இசையின் மொழி தனித்துவமானது. இசை தனது கவிதைகளை வாழ்க்கைக்குள்ளிருந்து தான் எடுக்கிறார்.
                     அருகிலிருந்து பார்க்கும்போது வாழ்க்கை சோகமானது; ஆனால், தொலைவிலிருந்து பார்க்கும்போது நகைச்சுவையானது. - சார்லி சாப்ளின்
இதே கருத்தை சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் தென்னாட்டு சார்லி சாப்ளின் என்று புகழப்பட்ட நாகேஷ் அவர்களது குரலில் கேட்டிருக்கிறேன். வாழ்க்கையில் பிரச்சினை என்பது ஒரு சின்ன கல் மாதிரி அதை நாம் கண்ணுக்குப் பக்கத்துல வச்சு பார்த்தோம்னா உலகத்தையே மறைச்சுடும்,  அதையே கொஞ்சம் தூரமா தள்ளி வச்சு பார்த்தால் அது எவ்வளவு சிறியது என்று புரிந்துவிடும், அதையும் தாண்டி அதைத்தூக்கி நம் காலடியில் போட்டுவிட்டோம் என்றால் அதை நாம் சட்டை செய்யவே மாட்டோம், மிதித்துவிட்டுப் போய்க்கொண்டே இருப்போம் என்கிறார். உண்மைதான்
  

இசையின் இந்தக் கவிதை இதைத்தான் பேசுகிறது

நான் உன்னிடம்
எவ்வளவோ சொன்னேன்
உண்மையை
அவ்வளவு பக்கத்தில் போய்ப் பார்க்காதே என்று
இப்போதோ
தலை வெடித்துச் சாகக் கிடக்கிறாய்

உண்மைதான் , உண்மையை, சத்தியத்தை, நெருங்கி விடவே கூடாது. 2014 ன் இறுதியில் நான் ஒரு கவிதை எழுதினேன். நெருங்கிப் பழகினால், நொறுங்கி விடுகிறது, பெரிய மனிதர்களின் மீதான பிம்பம் என்று. இன்று வரைக்கும் அப்படித்தான் தொடர்கிறது. ஒரு குறிப்பிட்ட இடைவெளி விட்டுத்தான் உண்மையைத் தொடரவேண்டும் போல.

அவ்வளவுதான்
பாத்ரூமென்றால் அப்படித்தான்
எப்படி கழுவினாலும் அழுக்கு நீங்காது
எவ்வளவு நறுமணமூட்டினாலும்
நாற்றம் போகாது

சோப்பென்றால் அப்படித்தான்
எவ்வளவு கவனமாக இருந்தாலும்
கைகளில் நிற்காது

நாமென்றால் அப்படித்தான்

நழுவிக் கீழே விழுந்து விட்டால்
எடுத்து
ஐந்துவிநாடிகள் ஓடும்நீரில் காட்டிவிட்டு
தொடர்ந்து  தேய்க்க வேண்டியதுதான்

இசை, இப்படித்தான் நாம் நினைப்பதை எழுதுகிறார், அன்றாட நிகழ்வுகளிலிருந்து அவர் கவித்துவத்தைக் கண்டெடுக்கிறார். நமது சறுக்கல்களிலிருந்து நம்மைத் தேற்ற ஒரு வீராவேசம் கொப்பளிக்கும் தன்னம்பிக்கைக் கட்டுரையோ, கதையோ தேடிப்போக அவசியமில்லை, இந்தக் கவிதை அதைச் செய்யும், கொஞ்சம் நம்மையே சுயபகடிக்கு ஆளாக்கி.

பகடி செய்தல் அவரது பிரத்யேக பாணி என்றாலும் அவரது கவிதைகளில் எப்போதும் மறை பொருளாயிருக்கும் மனிதமும் அன்பும் இசை வெளியே சொல்லி விட்டிருக்காத ஒரு அற்புத மொழி.

போலீஸ் வதனம்

நான்குமுனைச் சந்திப்பொன்றில்
ஒரு போலீஷ்காரரும் ஒரு குடியானவனும்
கிட்டத்தட்ட மோதிக் கொண்டனர்.
குடியானவன் வெலவெலத்துப் போனான்
கண்டோர் திகைத்து நின்றனர்
அடுத்த கணம் அறைவிழும் சத்தத்திற்காய்
எல்லோரும் காத்திருக்க
அதிகாரி குடியானவனை நேர்நோக்கி
ஒரு சிரி சிரித்தார்.
அப்போது வானத்தில் தேவர்கள் ஒன்று கூடும் 
ஓசை கேட்டது.
“ நகையணி வதனத்து ஒளிநறுங்கீற்றே ! “
 என  வாழ்த்தியது வானொலி.
 போலீஸ் தன் சுடரை
 ஒரு கந்துவட்டிக்காரனிடன் 
பற்ற வைத்து விட்டுப்போனார்.
 அவன்
ரோட்டோரம் கிடந்து பழம் விற்கும் கிழவியிடம் 
கந்து வசூலிக்க வந்தவன்.
கிழவி தலையைச் சொரிந்த படியே
“ நாளைக்கு... “ என்றாள்.
 ஒரு எழுத்து கூட ஏசாமல் தன்  ஜொலிப்பை
அவளிடம் ஏற்றிவிட்டுப் போனான் அவன்.
அதில் பிரகாசித்துப் போன கிழவி
இரண்டு குட்டி ஆரஞ்சுகளை சேர்த்துப் போட்டாள்.
அது ஒரு குப்பைக்காரியின் முந்தானையில் விழுந்தது.
எப்போதாவது ஆரஞ்சு தின்னும் அவளை
ஒரு பிச்சைக்காரச் சிறுமி வழிமறிக்க
அதிலொன்றை  ஈந்து விட்டுப் போனாள்.
சிறுமியின் காலடியில்
நாய்க்குட்டியொன்று வாலாட்டி மன்றாடியது.
அதிலொரு சுளையை எடுத்து
அவள் அதன் முன்னே எறிய
சொறிநாய்க் குட்டி
அந்த "ஒளிநறுங்கீற்றை“ லபக்கென்று  விழுங்கியது.

இந்தக் கவிதை நமது முகத்துக்கும் ஒரு ஒளி நறுங்கீற்றை பச்சக்கென ஒட்டி விடுகிறது. இந்தக் கவிதையைப் படித்த கணம் ஒரு வெளிச்சம் நமது முகத்தில் பரவுவதை நாம் உணர முடியும்.  ஒரு சம்பவம் தான், அதை இசை ஊதிப் பெரிதாக்குகிறார், அதிலிருந்து வாழ்வின் எதார்த்தத்தை உறிஞ்சி எடுக்கிறார் நம்மைப் போலவே. ஆனால் தனது பிரத்யேக மொழிதலின் மூலமாக அவர வேறோர் உயரத்தில் நிற்கிறார்.

எனக்கு மிகப் பிடித்த ஒரு கவிதை இந்தத் தொகுப்பில் இருக்கிறது

சின்ன குலுங்கல்

உலகம்
ஒரு சின்ன  குலுங்கு குலுங்கிவிட்டு
இயல்புக்கு திருப்பி விட்டது.
சேதாரம் ஒன்றும் பெரிதாக இல்லை.
ஒரே ஒரு கண்ணாடி டம்ளர் உடைந்து விட்டது
எதில் அருந்தினால்
உன் தாகம் தணியுமோ
அந்தக் கண்ணாடி டம்ளர்.

எப்போதும் நமது வண்டிதான் பஞ்சர் ஆகும், எப்போதும் நமது கைப்பை தான் தொலைந்து போகும், நேர்முகத்தேர்வில் நமது முறையின் போது தான் நமக்கு ஒண்ணுக்கு முட்டிட்டு வரும், இப்படி எல்லாமே எனக்கு மட்டுமே ஏண்டா நடக்குது ஆண்டவா என நான் கேட்டுக் கொள்ளும் ஒவ்வொரு தருணமும் இந்தக் கவிதையின் தருணம் தான்.

பகடியில், கவிதையில் சமூகத்துக்கான மொழி, சமூகத்துக்கான குரல் இல்லையா என்று கேட்பார்கள். இசையின் கவிதை அதையும் தான் கேட்கிறது. அதையும் தான் பகடி செய்கிறது.

இரண்டு வழிகள்

பொதுவழியும்
சிறப்பு வழியும்
ஒன்றாகும் இடத்தில்
என்னய்யா இரைச்சல்?
பொது வழியும் சிறப்பு வழியும்
ஒன்றாவதால்
எழும் இரைச்சல்.
                            
இது அரசியல் கவிதையா என்றால் ஆம் என்பேன். சமூகக் கவிதையா என்றால் அதற்கும் ஆம் என்பேன். அரசியல் கவிதையும், சமூகக் கவிதையும் பெருங்குரலில் தான் பேச வேண்டுமா ? கரகரத்த தன் குரலில் அதிரக் கத்த வேண்டுமா ? அப்படி இல்லாமலும் இருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து. ஆகவே தான் இந்தக் கவிதையை அந்த வரிசையில் வைத்துப் பார்க்கிறேன்.

வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் என்கிற இந்தத் தொகுப்பின் கவிதைகள் அனைத்தும் வாழ்க்கைக்கு உள்ளிருந்து எடுக்கப்பட்டவை தாம். ஆனால் வாழ்க்கைக்குள்ளேயே அந்தந்தச் சூழலின் சூட்டுக்குள்ளேயே இல்லாமல் தள்ளி நின்று பேசுகிறது. வாசிக்கவும் பத்திரப்படுத்திக் கொள்ளவுமான ஒரு தொகுப்பு.

வெளியீடு : காலச்சுவடு
விலை : ரூ 100
கவிஞர் இசையின் தொடர்புக்கு : isaikarukkal@gmail.com

கனலி இதழில் வாசிக்க :