ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

தனிமையின் கண்களுக்கு ஒளியூட்டல்

இந்த மாத கொலுசு மின்னிதழில் எனது இரண்டு கவிதைகள் காணொலியாக வெளியாகியுள்ளன..

வாசிக்கவும், பார்க்கவும் இங்கு ...

https://youtu.be/fuRx2A1EqDo

கவிதை ஒன்று

தனிமை
வரம் சாபம் என
யாவரும் மதில்மேல் பூனையாகியிருக்க
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாகியிருக்கிறது
தனிமை

தனிமையின் மிகப்பெரிய கதவுகளை
இந்தக் காலம்
திறந்து விட்டிருக்கிறது
மற்றமையின் கதவுகள்
ஒவ்வொன்றாய் அடைத்துக்கொண்டபோது
இந்தக் கதவுகள் திறந்து கொள்வது
இயல்பு தான்

தனிமையின் வாசலுக்கு
வந்து சேர்பவற்றில்
யாவும் இருக்கின்றன

மிக அதிகமாகக் குரூரம் படையெடுக்கிறது
வெறுமனே கடந்து போகும்
சிற்றுயிர் ஒன்றின் தலை திருகி
நசுக்கி ரசிக்கிறது தனிமை

கண்காணிக்கும் கண்களைப் பற்றிய
பயமேதுமின்றி
அந்தரங்கங்களை அலையேற்றி
விடுகின்றது 

ஒப்பனைகளின் அவசியமற்றுப் போன
தனிமை
தனது சிரங்குகளை கீறிச் சுகம் காண்கிறது
நிணவாடையையும் ரசித்துத் தொலைக்கிறது

ஒரு சாத்தானைப் பழக்கப்படுத்துவது
போல இருக்கிறது
ஒரு தனிமையை
நல்லூழின் பக்கமாகத் திசை திருப்புவது

ஒரு வெறிநாயைக் கட்டிப் போடுவது போல
தூணில் கட்டி
பயந்து பயந்து
அதன் முன்னர்
அறத்தைப் பிசைந்து ஊட்டுகிறேன்

குருதி, மாம்சம் , என பழக்கப்பட்ட அது
மிக மெதுவாக
அறத்தின் பக்கமாக வர
கொஞ்சம் காலமாகும் தான்

ஒரு வளர்ப்பு மிருகத்துக்கான
பக்குவம் வந்த பின்பு
இசை
புத்தகம்
ஓவியம்
என்று ரசனையின் பக்கம்
அதைத் திருப்பியிருக்கிறேன்

இப்போதெல்லாம்
வாலைக் குழைத்தபடி
இந்தப் பத்துக்குப் பத்து
அறையைச் சுற்றி சுற்றி வருகிறது
யாதொரு குறையுமின்றி

பாருங்களேன்
அது இப்படி ஒரு
சுமாரான கவிதையைக் கூட
எழுதப் பழகிவிட்டிருக்கிறது இப்போது


கவிதை 2

தனிமையின் கணங்கள்
இருள் நிறைந்தவை

கடவுள் சிலைகளின்
கண் திறத்தல் போல
சில சடங்குகள்
இருக்கின்றன
தனிமையின் கண்களைத் திறப்பதற்கு

தனிமையின்
கண்களுக்கு ஒளியூட்டுவது
தனிமைக்கு உண்மையில்
இருட்டைப் பழக்குவது தான்

முதலில் முரண்டு பிடிக்கும்
பின்பு அது
கைகளில் அடைபட்ட
சிறு பறவையைப் போல
பழக்கமாகி விடக் கூடியது

தனிமைக்கு
ஒளியை அறிமுகப் படுத்துங்கள்
நிறங்களை அறிமுகப் படுத்துங்கள்
முதலில் கருப்பு
பின்பு நீலம்
பச்சை சிவப்பென

தனிமைக்கு
மெல்ல மெல்ல
வெளிச்சத்தைப் பழக்கப்படுத்துங்கள்
தனிமையிடமிருந்து
தப்ப
நமக்கு வேறு வழியில்லை

எப்போதாவது வாய்க்கும் தனிமைக்கும்
எப்போதும் உடன் இருக்கும்  தனிமைக்கும்
நம்மை நாம் ஒரு ஒளிக் கீற்றென
அறிமுகமாகிக் கொள்வோம்

தவறிவிட்டால்
தனிமையின்
அந்தகாரத்துக்குள்
நம்மை நாம் தொலைத்துவிடுவோம்

நீங்களும் உங்கள் கவிதைகளை கொலுசு இணைய இதழுக்கு படைப்பாகவோ, காணொலியாகவோ, ஒலிப்பதிவாகவோ அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி


சனி, 4 ஏப்ரல், 2020

இனிய உதயம் இதழில் ஐந்து கவிதைகள்

இந்த மாத இனிய உதயம் இதழில் எனது ஐந்து கவிதைகள் வெளியாகியுள்ளன உங்களின் வாசிப்புக்கு எளிமையாக இங்கு ...

கவிதை # 1

இந்தக் கவிதைக்குக் கண்ணீர் முகம்
ஒரு கண்ணீர்த் துளியை நீ காணச்
சகிய மாட்டாய் எனில் முகம் திருப்பிக் கொள்

இந்தக் கவிதைக்கு கண்ணீரின் புலம்பல் குரல்
ஒரு புலம்பல் ஒலியை உன்னால் கேட்கவே முடியாது
உன் காதுகளை மூடிக் கொள்ளலாம்

இந்தக் கவிதைக்கு கண்ணீரின் பாவனை
ஒரு சவளைப் பிள்ளையின் கையேந்துதலைப் போலான
இதன் பாவனை உன்னைத் துன்புறுத்தக் கூடும்
நீ புறக்கணிக்கலாம் மறுதலிக்கலாம்

ஆனால் 
உன்னிடம் சொல்ல மிகக் கடைசியாக
என்னிடம் ஒன்று உள்ளது

ஒரு கண்ணீர்த் துளி
யார் விரலும் துடைக்காது
யார் காதுகளிலும் விசும்பாது
யார் கண்களின் இரக்கப் பார்வையும் படாது
யார் கைக்குட்டையையும் நனைக்காது
அப்படியே உலர்ந்து போவதென்பது
அத்துணை துயர் மிகுந்தது


கவிதை # 2

அப்பாவின் மறைவுக்குப் பிறகு
அம்மா அடிக்கடி
கோவில்களுக்குச் செல்வதை
கைபிசைந்தபடிப் பார்க்கிறேன்
தூரம் பக்கம் என
விரும்பிய கோவில்கள் அனைத்துக்கும்
சென்று வருகிறாள்
குல தெய்வக் கோவிலுக்குச் சென்றுவந்து
ஆண்டுகளாகின்றன என அங்கலாய்த்தவளை
ஒரு முறை அழைத்துச் சென்றேன்
மரங்களடர்ந்த வனத்திடை
வீற்றிருக்கும் குல தெய்வத்தைக் காண
யாரும் அதிகம் வந்திடாத
அந்தத் திறந்த வெளிக் கோவிலில்
நடப்பட்டிருந்த
கற்சாமிகளைக் கண்கொட்டாது பார்த்து
கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டவள்
ஒரு நீண்ட பாறையின் மீது அமர்ந்து
இது தான்
அப்பாவும் நானும் கல்யாணம் கட்டிக்கிட்ட இடம்
என்றாள் கண்கள் பனிக்க
சற்றுத் தள்ளி நின்று பார்க்க
அவளருகில் அப்பா அமர்ந்திருந்தார்
புது மஞ்சளும் குங்குமமும் மினுங்க
அவ்வளவு ஒளி கூடி அமர்ந்திருந்த
அம்மாவின் அருகில்

கவிதை # 3

கடும் கோடைப் பகலில்
மழைப் பாடலொன்றைத்
தொலைக்காட்சியில்
கண்ட மகள்
மழை வேண்டுமெனக் கேட்டழுகிறாள்

கோடையில் மழை வராது
என்பதைச் சொல்லி சமாளிக்க இயலாமல்
குளியலறை ஷவர்
சல்லடைத் தூறல் 
என விதம் விதமான
விஞ்ஞான முயற்சிகளிலும்
தோற்று
கடைசியில் சரணடைந்தேன்

மழையைத் தொலைத்துவிட்டேன்
என்று அழத் துவங்கினேன்
என்னைச் சமாதானம் செய்ய வந்தவள்
மழையை எங்கே தொலைத்தீர்கள்
என்று கேட்க
புதிதாகக் கட்டப்பட்ட
நான்கு வழிச் சாலையைக் காட்டினேன்

கவிதை # 4

எல்லா அதிகாலைகளிலும்
ஏதோ ஒரு முருகன் பாடலுடன்
கடையைத் திறந்து விடுவார்
டீக்கடை செல்வராசண்ணன்

செளந்தரராஜனோ கேபி.சுந்தராம்பாளோ
அவரை இயக்கத் துவங்குவார்கள்

நெற்றி நிறைய விபூதியுடன்
சவ்வாது மணம் கமழ
ஐந்து மணிக்கே
முதல் டீயை ஆத்தத் துவங்கி விடுவார்

வெள்ளிக்கிழமைகளில்
முதல் போணிக்கு
சக்கரைப் பொங்கல் இனாம் உண்டு

பச்சைக் குழந்தைகளுக்கும்
பச்சை உடம்புக்காரிகளுக்கும்
ஆண்டாண்டுகளாய்
அரைக் காசுக்கும் கால் காசுக்கும்
பால் ஆற்றிக் கொடுப்பவர்

கடையெங்கும் பழைய காலண்டர்
அட்டைப் புகைப்படத்தில்
விதம் விதமான முருகன்கள்
புன்னகைப்பர்

நாலு தங்கைகளைக்
கரையேற்றுவதிலேயே
நாற்பது வயதை விழுங்கிவிட்டவர்
ஐம்பதின் தொடக்கத்திலும்
பிரம்மச்சாரியாகவே 
இன்னும் டீ ஆத்திக் கொண்டிருக்கிறார்
என
ஊர் உச்சுக் கொட்டும்

காலண்டர் முழுக்க
வள்ளி தெய்வானை என
குடும்ப சகிதம்
அருள் பாலிக்கும் அந்தக் குமரனுக்கு
செல்வராஜண்ணனை 
அடையாளம் தெரிவதேயில்லை
ஐம்பது ஆண்டுகளாக

கவிதை # 5

யாரிடமாவது சொல்லி அழ வேண்டும்
போல இருக்கும் துக்கத்தை
இறுகப் பற்றிக் கொண்டு
அலை பேசியைத் தேய்த்தால்
அகர வரிசையில் துவங்கி
அஃர வரிசை வரைக்கும்
துக்கங்களாக இருக்கின்றன
துக்கம் 1 துக்கம் 2 துக்கம் 3
எனவும்
சின்ன துக்கம் பெரிய துக்கம்
எனவும்
துக்கம் பழையது துக்கம் புதியது
துக்கம் ஏர்டெல் துக்கம் வோடபோன்
துக்கம் அக்கா துக்கம் அண்ணா
எனவும்
பதிந்து கிடக்கும் வித விதமான
துக்கங்கள்
சேர்ந்து பெருந் துக்கமாக
விழி பிதுங்கி
வெளி வராமல்
உள்வாங்கும் கடலென
சடக்கென உள்ளேகி
தொண்டைக் குழி இறங்கி
அடி வயிற்றுக்குள் அமிழ்ந்து விடுகிறது
துக்கத்தின் கண்ணீர்


நன்றி : இனிய உதயம் இதழ், திரு.ஆரூர் தமிழ்நாடன் ஐயா



வியாழன், 20 பிப்ரவரி, 2020

உலக தாய் மொழிகள் தின வாழ்த்துகள்


அந்தச் சொல்லிற்கு வயது
ஒரு பத்தாயிரம் ஆண்டுகள்
அந்தச் சொல்லுக்கு நிறம்
மண்ணில் ஊறி மட்கி இறுகிய கருப்பு
அந்தச் சொல்லின் திண்மை
வைரத்தின் கெட்டி
அந்தச் சொல்லின் சுவை
வியர்வைக் கரிப்பு
அந்தச் சொல்லை தொன்மையான
நாகரீக எச்சமொன்றாக
அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்தோம்
அந்தச் சொல்லின் உடலெங்கும்
கண்கள்
அவை இந்த உலகைத் தனது
கருணையால் ஆசீர்வதித்துக் கொண்டிருந்தன
அந்தச் சொல்லை
கொஞ்சம் உடைத்தால்
ஒரு சொல்லின் அழகை
இன்னொரு சொல் விஞ்சியபடி
ஒரு லட்சம்
சொற்கள் பிறந்தன
வெகு சிலருக்கே அந்தச் சொல்லின்
வலிமை புரிந்தது
அச்சொல் ஆயதமானது
ஒரு சொல் ஒரு உலகத்தைப் படைக்கும்
என்பதை நாங்கள் உணர்ந்து
தொழுதோம்
அதன் பரிசுத்த அழகை தரிசித்த போது
அதன் கூரொளியில் நாங்கள் கொஞ்சம்
திடுக்கிட்டுத்தான் போனோம்
அந்த வெளிச்சம் தான்
எங்களை எங்களுக்குக் காட்டியது
பின்னர் தான் அது எங்கள் வாழ்வின் ஒளியானது
அந்தச் சொல் தான் ஒரு தூரிகையாகி
என்னை உங்கள் முன்
வரைந்து கொண்டிருக்கிறது இப்போது.
அது எங்கள் தாய்ச் சொல்
நான் அதன் பிள்ளை
நான் அதன் காதலன்

- இரா.பூபாலன்

நன்றி :
சாகித்ய அகாடெமி
மற்றும் கொலுசு மின்னிதழ் சனவரி 2020




ஞாயிறு, 17 நவம்பர், 2019

நடுநிசி உலா சிற்றிதழில் எனது ஐந்து கவிதைகள்

பொள்ளாச்சியிலிருந்து நண்பர் குமாரராஜன் நடுநிசி உலா என்ற பெயரில் ஒரு சிற்றிதழைத் துவங்கியுள்ளார் ...

முதல் இதழில் எனது ஐந்து கவிதைகள் வெளியாகியுள்ளன .. உங்கள் வாசிப்புக்கு இங்கு ..

1)

தனது பிரம்மாண்ட மாளிகையின்
உப்பரிகையில் நின்றபடி
தேசத்தின் சகல கோணங்களையும்
பார்வையிடுகிறார் அரசர்
ஒரு தீபாவளித் திருநாளில்

வானெங்கும் வானவேடிக்கைகள்
வண்ண வண்ணமாக
வெடித்துச் சிதறுகின்றன
வலுத்துப் பெய்கிறது
மழை
சாலையெங்கும்
ஊர்ந்து கொண்டிருக்கின்றன ரதங்கள்
தெருக்களில் களிநடனமாடிக்கொண்டிருக்கின்றனர்
மக்கள்
தனது கொற்றத்தின் கீழ்
செழித்து நிற்பதாக தேசத்தைப் பற்றிய
வரலாற்றுக் குறிப்பொன்றை
எழுதி வைத்துவிட்டுப்
புளகாங்கிதப் புன்னகை பூக்கிறார் அரசர்

பட்டாசு ஆலை வெடிவிபத்தில்
கருகிய குடும்பமும்
வெள்ளப் பெருக்கில் இழுத்துச்
செல்லப்பட்ட குடிகளும்
ஆழ்துளைக் கிணறொன்றில்
சிக்கிக் கொண்ட
சிறுவனொருவனின் கதறலும்
குடிச்சாலைக்கு வெளியே
அடிபட்டுச் செத்துக் கிடந்தவர்களும்
வழக்கம் போலவே
அவைக் குறிப்பிலிருந்து
நீக்கப்பட்டிருந்தனர்


2)

ஒரு புத்தகத்தை
அதன் நடுப்பக்கத்திலிருந்து
வாசிக்கத் துவங்கினேன்
முன்புறம் ஒரு பக்கம்
பின் புறம் ஒரு பக்கம்
என
இடதும் வலதுமாக
பக்கங்களைப் புரட்டி
வாசிக்க வாசிக்க
எனக்குள் சொற்கள் விரியத் துவங்கின
நானவற்றை வரிசைக்கிரமமாக
அடுக்கிக் கொண்டேன்
இடைவெளிகளில்
கொஞ்சம் முன்காலத்துக் கதைகளை
சொருகிக் கொள்வது நலமென்றானது
முதல் பத்து பக்கங்களையும்
கடைசி பத்து பக்கங்களையும்
நெருங்குவதற்குள்
நிறுத்தம் வந்து விட
அவசர அவசரமாக இப்போது
அந்தப் புத்தகத்தைப் பற்றிய
அறிமுக உரையை
உங்கள் முன் ஆற்றுவது .....

3)

ப்ரியத்தின் இரண்டு
முனைகளும்
எவ்வளவு கூரானவை
நட்ட நடுவில்
அதைப் பற்றிக் கொண்டிருக்கும் வரை
அது நமக்குத் தெரிவதேயில்லை
இந்தப் புறமும்
அந்தப் புறமும்
சற்றே சறுக்கினால் போதும்
பின்பது
ரத்தத்தைப் பார்க்காமல் போகாது

4 )

வகுப்பறை சன்னலுக்கு வெளியே
சாலையில் நடுங்கியபடி
நிற்கிறது ஒரு சிறு விலங்கு
பள்ளி வளாக மரங்களில்
பசியில் கரைந்து கொண்டிருக்கின்றன
காக்கைகள்
நீரின்றி பட்டுப் போய்க்
கிடக்கின்றன தாவரஙகள்

படம் வரைந்து பாகம் குறித்துக்கொண்டிருக்கிறது
பாடம்

5)

நிகழ்காலம் மூன்று நாட்கள்

ஒரு குழந்தையின்
உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம்
ஒரு மாணவியின்
வன்புணர்வுக்குப் போராடிக் கொண்டிருக்கிறோம்
ஒரு அநீதியை
ஒரு அதிகார ஆதிக்கத்தை
ஒரு சாதிக் கலவரத்தை
ஒரு அடக்குமுறையை
ஒரு சமூகக் குற்றத்தை

பொறுத்துக் கொள்ளமாட்டாமல்
போராடத் துவங்குகிறோம்
முதல் நாளில் தீயெனத் துவங்கும்
நம் கோபம்
அடுத்த நாளில் கங்கெனக்
கனன்றுகொண்டிருக்கிறது
மூன்றாம்நாளில் அதன் மீது
யாரோ நீர் தெளித்துவிடுகிறார்கள்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

நிகழ்காலத்தின் காலம் வெறும்
மூன்றுநாட்கள் தாம்


நடுநிசி உலா இதழ் வேண்டுவோர் தொடர்பு கொள்ள :

குமாரராஜன் : 9488382644

படைப்புகள் அனுப்ப மின்னஞ்சல் : nadunisiyula@gmail.com





வெள்ளி, 15 நவம்பர், 2019

எனது பெயர் ஒரு தற்கொலைக் கருவி



எனது பெயரில் இருந்திருக்கிறது
எனது மரணம்
பாருங்கள் அது எப்படி உங்களைக் கண்டு
அஞ்சி நடுங்குகிறது

பாருங்கள் அது எப்படி உங்களை
மன்றாடுகிறது
பாருஙகள் அது உங்கள்
மனசாட்சியை
ஒரு மில்லிமீட்டர் கூட
அசைக்கத் திராணியற்று விசும்புகிறது
அதை நீங்கள்
வாழ்க்கையின் குறுகலான விளிம்புக்கு
விரட்டிக்கொண்டே இருக்கிறீர்கள்

என் பெயரின் பொருட்டு
நீங்கள் என் சுதந்திரங்களைப்
பறித்தீர்கள் நீங்கள் என் கல்வியை
மறுத்தீர்கள்
நீங்கள் என்னை ஒரு
தீவிரவாதி என வரைந்து காட்டினீர்கள்
நீங்கள் என்னை தேசத் துரோகி என்றீர்கள்
நீங்கள் என்னை
நாடு விலக்கச் சொன்னீர்கள்

எதுவுமே செய்ய இயலாத
எனது பெயரை
இன்றொரு தூக்குக் கயிற்றில்
கட்டித் தொங்க விட்டிருக்கிறேன்
நீங்கள் உங்கள்
குறுக்குக் கயிறைத் தடவித் தடவிப்
பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்





வெள்ளி, 1 நவம்பர், 2019

சின்னஞ்சிறிய மரணம்

இந்த மாதம் கொலுசு மின்னிதழில் எனது ஏழு கவிதைகள் வெளியாகியுள்ளன... 

உங்கள் வாசிப்புக்கு இங்கே ..

1)

மிகச் சிறியது  மரணம்
ஆழ்துளைக் கிணறொன்றில்
இரு கைகளை உயரத் தூக்கியபடி
குறுகிக் கிடக்கிறது
வாழ்வை யாசித்துக்கொண்டு
அரசும் அதிகாரமும்
மொத்த மனுசங்களின்
மெத்தனமும்
ஒரு ரொட்டித் துண்டென
அதன் உயிரை நீட்டி நீட்டிப் பார்க்கிறது
எட்டும் தூரத்தில் இருந்து
எட்டாத ஆழத்தில் அது
தன்னை உட்செலுத்திக் கொண்ட போது
இன்னும் சின்னதாகிப் போனது.
மரணம் எவ்வளவு சிறியதென்றால்
நமது கண்களுக்குத் தெரிந்து 
விடாத அளவு

2)

மிகச் சிறியது நம் துயர்
விளம்பர இடைவேளைகளில்
வாசலுக்கு ஓடிப் போய்
வாங்கி வைத்திருக்கும்
வண்ண வெடிகளை
கொளுத்திவிட்டு
தொலைக் காட்சித் திரைக்குத்
திரும்பி வந்து
கன்னத்தில் கை வைத்து அமர்ந்து கொள்கிறது
37 ஆவது அடியில் சுழலும்
ரிக் எந்திரம்
இன்னும் அறுபது அடிக்கு சுழல வேண்டும்
இன்னும் எத்தனை விளம்பர இடைவேளைகள்
இன்னும் எத்தனை தீபாவளிகள்

3 )

இன்னும் மூடப்படாமல் கிடக்கின்றன
தோண்டி வைக்கப்பட்ட சவக்குழிகள்
நீர் செத்த நெடுங்குழிகள்
வாய் பிளந்து காத்திருக்கின்றன
செல்லங்களே
ஓரமாய்ப் போங்கள்
மரணத்தோடு விளையாட வேண்டா
அது எங்கள் அரசாங்கத்தின் வேலை

4 )

சின்னஞ்சிறிய சவப்பெட்டி
ஒன்று தயாரான போது
கடவுளின் கதவுகள் திறந்துகொண்டன
கொடுமை என்னவெனில்
எத்தனை சவப்பெட்டிகளுக்குப் பின்பும்
அவரது கண்கள் தாம் திறக்கவேயில்லை

5 )

டிஜிட்டல் இந்தியா

எங்கள் அரசர் எங்கள் தேசத்தை
கணினி மயமாக்கிவிட்டார்
எங்கள் காலைக் கடன்களுக்காக
கணினிக் கக்கூஸ்கள் தயாராகிவிட்டன
எங்கள் வங்கிகள் கணினி மயமாகிவிட்டன
நாங்கள் கண்காணிக்கப் படுகிறோம்
எங்கள் மளிகைக் கடைகள் கணினிமயமாகிவிட்டன
பணத் தாள்களுக்கு அங்கு வேலையே இல்லை
எங்கள் சுடுகாடுகள் கணினி மயமாகிவிட்டன
எங்கள் பிணங்கள் தாமாகவே எரிந்துவிடும்
எங்கள் உலகில்
இன்னும்
மனித மலத்தை அள்ளவும்
மரணக் குழிகளுக்குள் புகவும்
தான் ஒரு கணிப்பொறியைக்
கண்டுபிடிக்க இயலவில்லை

6) 

அச் சிறுவனைப் பார்த்து கடவுள் கேட்டார்
இன்னும் நீ ஏன் கைகளைத் தூக்கிக்
கொண்டே இருக்கிறாய் ?
நான் எனது மரணக் குழிக்குள்
இப்படித்தான் கிடந்தேன் 
இப்படித்தான் நீங்கள் 
என்னைக் கைவிட்டீர்கள் 
உங்கள் கரங்கள் 
எனது கரங்களுக்கு நீளும் என்று நீட்டியபடியே இருந்தேன் நீங்கள் என்னைக் கைவிட்டீர்கள் 

இனி என் அம்மாவுக்கு இச் சிறுகையால் அளாவிட முடியாது
என் அண்ணனை அணைத்துக்
கொள்ள முடியாது
அப்பாவின் விரல்களைப் 
பற்றிக்கொள்ள முடியாது
எனது கைகளை மடக்க இயலாது
எனது கைகள் அழுகி விட்டன இப்படியேதான் எனது கைகள்
 புதைக்கப்பட்டன
நீங்கள் என்னைக் கை விட்டீர்கள்

இப்படியே தான் நான் இங்கும் 
இருக்க முடியும் என்றான்

கடவுள் தனது பன்னிரு கைகளையும்
கத்தரித்துக் கொள்ளத் துவங்கிவிட்டார்... 

7 )

கடைசியாக ஒரு 
சின்னஞ் சிறிய சவப்பெடிக்குள்
சின்னஞ்சிறிய மரணத்தை
அடைத்துப் புதைத்தனர்
அது 
மிகச் சிறியதாக்கி விட்டது
இந்த பூமியை 


கொலுசு மின்னிதழில் வாசிக்க :

http://kolusu.in/kolusu/z_want_to_see_book.php?parameter=52K4K2613









Show quoted text

புதன், 23 அக்டோபர், 2019

மரப்பாச்சியின் கனவுகள்

கடந்த 13.10.2019 அன்று கவிஞர் யாழினிஸ்ரீ அவர்களின் மரப்பாச்சியின் கனவுகள் நூல் வெளியீட்டு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.நானும் கவிஞர் சோலைமாயவன் அவர்களும் சென்றிருந்தோம்.

யாழினிஸ்ரீ  பத்து வயதுவரை எல்லா குழந்தைகளும்போல இயல்பாகத் தான் இருந்தார். பத்து வயதில் ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவால் உடல் முழுவதும் செயலற்றுப்போனது. நடக்க இயலாது. சக்கரநாற்காலி தான். அவரது அம்மா தான் யாழினியின் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறார் கழுத்தைக் கூட அசைக்க முடியாது. இந்தச் சவால்களுக்கிடையில் கவிதைகள் எழுதி அதைத் தொகுப்பாக வெளியிடுவது மிகப்பெரிய சவால்.

கவிஞர் குட்டிரேவதி சென்னையிலிருந்து வந்திருந்து நூல் வெளியிட்டு அழகான வாழ்த்துரையை வழங்கினார். நூல் குறித்த வாசகப் பார்வையை நிஷா வழங்க, கவிஞர் யாழியும் நானும் வாழ்த்துரை வழங்கினோம். இந்த நூலை சிறப்பாக வெளிக் கொண்டு வந்த ஜீவாவும் பேசினார். நிகழ்வை கவிஞர் தனசக்தி ஒருங்கிணைத்தார். பொன்னுலகம் குணா நன்றியுரை வழங்கினார்.




ஒரு புத்தகத்தை விலை கொடுத்து வாங்கி வாசிப்பதும், வாசிப்பவர்களுக்குப் பரிசளிப்பதும் மிகச் சிறந்த செயல். அதிலும் யாழினிஸ்ரீ போன்றோரின் முயற்சிகளை ஊக்குவிப்பதும் மிக முக்கியமானது. அதன் பொருட்டு யாழினியின் மரப்பாச்சியின் கனவுகள்  தொகுப்பை நண்பர்கள் தயவு செய்து வாங்கி வாசியுங்கள் …

நூல் குறித்த வாசிப்பனுபவம் விரிவாக எழுதுகிறேன்

புத்தகத்தின் விலை ரூ.50/-

தொடர்பு கொள்ள வேணடிய அலை பேசி எண்கள்
70104 84465 , 88707 33434,
80569 72399, 97152 89560

கவிஞர் குட்டி ரேவதி நூல் வெளியீட்டுக்குப் பிறகு யாழினிஸ்ரீயைப் பற்றி எழுதியிருக்கிறார் அதை வாசிக்க கீழே சொடுக்கவும்


யாழினிஸ்ரீயின் நேர்காணல் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது அதை வாசிக்க கீழே சொடுக்கலாம்