வியாழன், 31 ஜனவரி, 2013

நூல் விமரிசனம் : தேவதைகளின் மூதாய் கவிதைத் தொகுப்பு: கவிஞர் த.விஜயராஜ்

நூல் விமரிசனம் 

தேவதைகளின் மூதாய்

  • கவிதைத் தொகுப்பு: கவிஞர் த.விஜயராஜ்

பிரபஞ்சத்தின் எல்லா அணுக்களிலும் உள்ளது கவிதைக்கான பாடுபொருள்.

பாடு பொருள் தேர்விலும்,சொற்களைக் கையாளும் சூத்திரத்திலும்,கவிதையை வழி நடத்தும் கைங்கர்யத்திலும் உள்ளது கவிஞரின் தனித்துவமும் வெற்றியும்.மரபுக் கவிதையோ,புதுக் கவிதையோ, நவீன அதி நவீனக் கவிதையோ, கவிதைப் படுத்தலுக்கான விதிமுறைக்குள் எப்போதும் வந்து விடுவன சில.

வண்ணத்துப் பூச்சி எப்போதும் கவிஞர்களின், காதலர்களின் ஆதர்ஷமாய் வடிவெடுக்கிறது. வண்ணத்துப் பூச்சியுடன் உறவு கொண்டாடாமல் பால்யமோ,காதலோ,கவிதையோ அநேகமாய் இருப்பதேயில்லை யாவர்க்கும்.

விதிமீறல் இருப்பின்,அவர்கள் வாழ்க்கைப் புத்தகத்தின் வசந்தப் பக்கத்தைப் படிக்கத் தவறிவிட்ட துர்பாக்கியசாலிகள்.

கவிஞர் விஜயராஜ்க்கு சொற்கள் கூடி வந்திருக்கின்றன. தேவதைகளின் மூதாய் என இவர் சொல்லும் வண்ணத்துப் பூச்சி தன் மென் சிறகுகளசைத்து தொகுப்பின் பக்கங்களெங்கும் படபடத்தபடி இருப்பது பரவச அனுபவம்.

ஒரே பொருளைப் பாடுவதில், அதிலும் புத்தகம் முழுதும் உள்ள கவிதைகள் அனைத்தும் ஒன்றையே பாடுவதில் வரும் அயர்ச்சி தவிர்க்கவியலாததாகி விடுகிறது. இருப்பினும், அவ்வயர்ச்சியைப் போக்கி விடுவது அடுத்தடுத்த கவிதைகளின் அடர்த்தியான சொற்கள்.

" அடுக்கக சன்னல்கள்

திறந்திருக்கின்றன

அடுக்ககப் பூந்தொட்டிகள்

மலர்ந்திருக்கின்றன

வருவதாக இல்லை

ஒரேயொரு வண்ணத்துப் பூச்சியும்"


இது ஒரு வலி, இது ஒரு கவலை, இது ஒரு ஏக்கம். இதைக் கவிதைப் படுத்துதல் எல்லாருக்குமானதாகிறது.


" தனித்தனியாகப்

பெயர் சூட்டுங்கள்

எல்லா வண்ணத்துப் பூச்சிகளுக்கும்"


ஒரு குழந்தையின் வேண்டுகோளாக,


" ஒரு ஊர்ல ஒரு வண்ணத்துப் பூச்சியாம்

அநத வண்ணத்துப் பூச்சிக்கு...

இப்படியாகவும்

கதைகள் சொல்லுங்களேன் குழந்தைகளுக்கு"


ஒரு குழந்தைக்கான வேண்டுகோளாக,


" உன் சிறகு

என் வானம்

வா பற..."


காதலாக,


" உனக்குப் பரிசளிக்க

எதுவுமில்லை என்னிடம்

கொஞ்ச நேரம்

அவ் வண்ணத்துப் பூச்சிகளைப் பார்"


ரசனையாக,


என எல்லாக் குடுவைகளிலும் தன்னை நிறைத்துக் கொள்கிற சிறு நதியின் துளி நீர் இவை.

வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளேறி அடர்வனத்தின் யவ்வனதினூடே பயணிப்பது அத்தனை சுகமாயிருக்கிறது. தொகுப்பை மூடி வைத்த பிறகும் அதன் சிறகுகள் நமக்கு சுகந்தக் காற்றை வீசியபடியே இருக்கின்றன...

வாழ்த்துவோம் கவிஞரை....




தொகுப்பு : தேவதைகளின் மூதாய்

ஆசிரியர் : கவிஞர் த.விஜயராஜ்

வெளியீடு : அகரம், எண் 1, நிர்மலா நகர்,தஞ்சாவூர் - 613007
விலை : Rs.70/-

தொடர்புக்கு : 9787853434


 நன்றி : கருந்துளை நவ -திசம்பர் '12

வெள்ளி, 18 ஜனவரி, 2013

நீ இல்லை ...

என்னிடமே கொட்டித்
தீர்க்கிறேன் என்
கோபங்களை.

எனக்குள்ளேயே அழுது
தீர்க்கிறேன் என்
கண்ணீரை.

என் தோளிலேயே
சாய்ந்து கொள்கிறேன்
நாதியற்று.

நீ எனக்கானவள் 
இல்லை என்று
முடிவான பின்பு

வேறு யாரிடம்
சொல்லி அழ என் சோகங்களை..?

இருப்பினும்
உனக்கே உனக்கான
என் காதலையும்
கருணையையும்
யாரிடத்தும் காட்டவியலவில்லை
என் உட்பட..

திங்கள், 10 டிசம்பர், 2012

கருந்துளை - சிற்றிதழ்

நண்பர்களின் உந்துதலாலும், உதவியாலும், கருந்துளை வெளியாகி விட்டது. நிறைய இடங்களுக்கு சென்று சேர்ந்து விட்டது. அனைத்துப் பக்கங்களிலிருந்தும் ஆதரவுக் குரல்களும், அனுதாபக் குரல்களும், பாராட்டுக்களுமாக வந்து கொண்டிருக்கிறது.

தீராத அலுவல் வேலைகளினாலும், தேர்வுகள் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்ததாலும் முழு வீச்சாக இதழ் பணிகளில் இயங்க முடியாத போதும் நண்பர்ௐகளின் உதவியால் இதழ் முழுமையாக வந்திருப்பது மிகுந்த மன மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

நண்பர்கள் தொடர்ந்து நன்கொடை, சந்தா என்று இப்போதே தங்களது அன்பைத் தந்து கொண்டிருக்கிறார்கள்.

முதல் இதழ் சற்று தாமதமாக வந்துள்ளது. நண்பர்கள்,விமர்சகர்கள் அனைவருக்கும் இதழ் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

இதழ் வேண்டுவோர் எனது எண் 9842275662-ஐ தொடர்பு கொள்ளலாம்.

அடுத்த இதழுக்கான வேலைகள் இப்போது துவங்கி விட்டன. நண்பர்கள் தங்கள் படைப்புகளை உடனே அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதழ் முகவரி : கருந்துளை,எண்-8,ராசா மில் சாலை,பொள்ளாச்சி

மின்னஞ்சல் : karundhulai@gmail.com

அன்பு கூர்ந்து நண்பர்களுடன் இச்செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சிற்றிதழ் நடத்துவதின் அவசியங்களையும், அதை தொடர்ந்து இயக்குவதின் சிரமங்களையும் உணர்ந்து நீங்கள் எங்கள் இலக்கியப் பணி தொடர வாழ்த்தி உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்..

 -  இரா.பூபாலன்








வெள்ளி, 9 நவம்பர், 2012

தீபாவளி

இந்த தீபாவளி
மிகுந்த சத்தங்களுடனும்
ஆரவாரங்களுடனும்
அதீத வலியுடனுமே
வந்திருக்கிறது ...

வழக்கமாக
வெளியில் ஒலிக்கும்
சத்தங்கள்
சந்தோஷம் தரும்.

இம்முறை
அணுகுண்டுகளும்
ஆயிரம் வாலாக்களும்
வெடித்துக் கொண்டிருப்பது
மனதுக்குள்.

சிவகாசியில் வெடி விபத்து
ஈழத்துக் கண்ணீர்
என எல்லாம் சேர்ந்து
நெஞ்சை அழுத்த
எதைக் கொண்டாடுவது..?