வியாழன், 31 ஜனவரி, 2013

நூல் விமரிசனம் : தேவதைகளின் மூதாய் கவிதைத் தொகுப்பு: கவிஞர் த.விஜயராஜ்

நூல் விமரிசனம் 

தேவதைகளின் மூதாய்

  • கவிதைத் தொகுப்பு: கவிஞர் த.விஜயராஜ்

பிரபஞ்சத்தின் எல்லா அணுக்களிலும் உள்ளது கவிதைக்கான பாடுபொருள்.

பாடு பொருள் தேர்விலும்,சொற்களைக் கையாளும் சூத்திரத்திலும்,கவிதையை வழி நடத்தும் கைங்கர்யத்திலும் உள்ளது கவிஞரின் தனித்துவமும் வெற்றியும்.மரபுக் கவிதையோ,புதுக் கவிதையோ, நவீன அதி நவீனக் கவிதையோ, கவிதைப் படுத்தலுக்கான விதிமுறைக்குள் எப்போதும் வந்து விடுவன சில.

வண்ணத்துப் பூச்சி எப்போதும் கவிஞர்களின், காதலர்களின் ஆதர்ஷமாய் வடிவெடுக்கிறது. வண்ணத்துப் பூச்சியுடன் உறவு கொண்டாடாமல் பால்யமோ,காதலோ,கவிதையோ அநேகமாய் இருப்பதேயில்லை யாவர்க்கும்.

விதிமீறல் இருப்பின்,அவர்கள் வாழ்க்கைப் புத்தகத்தின் வசந்தப் பக்கத்தைப் படிக்கத் தவறிவிட்ட துர்பாக்கியசாலிகள்.

கவிஞர் விஜயராஜ்க்கு சொற்கள் கூடி வந்திருக்கின்றன. தேவதைகளின் மூதாய் என இவர் சொல்லும் வண்ணத்துப் பூச்சி தன் மென் சிறகுகளசைத்து தொகுப்பின் பக்கங்களெங்கும் படபடத்தபடி இருப்பது பரவச அனுபவம்.

ஒரே பொருளைப் பாடுவதில், அதிலும் புத்தகம் முழுதும் உள்ள கவிதைகள் அனைத்தும் ஒன்றையே பாடுவதில் வரும் அயர்ச்சி தவிர்க்கவியலாததாகி விடுகிறது. இருப்பினும், அவ்வயர்ச்சியைப் போக்கி விடுவது அடுத்தடுத்த கவிதைகளின் அடர்த்தியான சொற்கள்.

" அடுக்கக சன்னல்கள்

திறந்திருக்கின்றன

அடுக்ககப் பூந்தொட்டிகள்

மலர்ந்திருக்கின்றன

வருவதாக இல்லை

ஒரேயொரு வண்ணத்துப் பூச்சியும்"


இது ஒரு வலி, இது ஒரு கவலை, இது ஒரு ஏக்கம். இதைக் கவிதைப் படுத்துதல் எல்லாருக்குமானதாகிறது.


" தனித்தனியாகப்

பெயர் சூட்டுங்கள்

எல்லா வண்ணத்துப் பூச்சிகளுக்கும்"


ஒரு குழந்தையின் வேண்டுகோளாக,


" ஒரு ஊர்ல ஒரு வண்ணத்துப் பூச்சியாம்

அநத வண்ணத்துப் பூச்சிக்கு...

இப்படியாகவும்

கதைகள் சொல்லுங்களேன் குழந்தைகளுக்கு"


ஒரு குழந்தைக்கான வேண்டுகோளாக,


" உன் சிறகு

என் வானம்

வா பற..."


காதலாக,


" உனக்குப் பரிசளிக்க

எதுவுமில்லை என்னிடம்

கொஞ்ச நேரம்

அவ் வண்ணத்துப் பூச்சிகளைப் பார்"


ரசனையாக,


என எல்லாக் குடுவைகளிலும் தன்னை நிறைத்துக் கொள்கிற சிறு நதியின் துளி நீர் இவை.

வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளேறி அடர்வனத்தின் யவ்வனதினூடே பயணிப்பது அத்தனை சுகமாயிருக்கிறது. தொகுப்பை மூடி வைத்த பிறகும் அதன் சிறகுகள் நமக்கு சுகந்தக் காற்றை வீசியபடியே இருக்கின்றன...

வாழ்த்துவோம் கவிஞரை....




தொகுப்பு : தேவதைகளின் மூதாய்

ஆசிரியர் : கவிஞர் த.விஜயராஜ்

வெளியீடு : அகரம், எண் 1, நிர்மலா நகர்,தஞ்சாவூர் - 613007
விலை : Rs.70/-

தொடர்புக்கு : 9787853434


 நன்றி : கருந்துளை நவ -திசம்பர் '12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக