செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

மலரினும் ...

 

மலரினும் மெல்லிய

உன் இதயத்தில்

மலையினும் பெரிதாய்

இருக்கிறது

என் மீதான உன் காதல்.

          


இதய வடிவிலான

ரோஜாப் பூவொன்றைப்

பரிச்சளிக்கிறேன்.

ரோஜாவினும் மென்மையான

இதயம் கொண்ட உனக்கு.

           

புதன், 15 பிப்ரவரி, 2012

அம்மன் கோவில்
அர்ச்சனைப் பூவை
கூந்தல் கற்றையை
ஒதுக்கி நீ
சூடிக் கொள்ளும்
நேர்த்தியைப் பார்த்து
தன் கூந்தலை
ஒருமுறை சரி
செய்து கொள்கிறாள்
அம்மன்
யாரும் அறிந்திராவண்ணம்.

திங்கள், 13 பிப்ரவரி, 2012

காதல்

இரு மனதில்
ஒரு எண்ணம்
 
இரு விழிகளில்
ஒரு காட்சி
 
இரு உடலில்
ஒரு உயிர்
 
ஒரே சொல்லில்
ஒரு வாழ்க்கை
 
 
 
 

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

சுவரெங்கும்
வண்ண வண்ண
சித்திரங்கள்
குழந்தை  கை வண்ணத்தில்.
விலை கொடுத்து
வாங்கி வந்து
சுவற்றில் மாட்டப்பட்ட
அழகிய ஓவியமொன்று
ஏங்கித் தவிக்கிறது
இப்படி இருந்திருக்கலாம் என்று.
கடவுள்களின்
நகரத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
நீ.
ஒரு வழிப் போக்கனாக
உன்னுள் நுழைந்த
நானும்
மாறியிருக்கிறேன்
கடவுளாக.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

அழுகை

 
ஓவெனக் கதறி
அழுவதைக் காட்டிலும்
அதிகம் வலிப்பது
சத்தமில்லாமல் அழுவது.
அதனினும் அதிகம்
வலிப்பது
கண்களில் நீர் வராமல்
அழுவது.

செவ்வாய், 5 ஜூலை, 2011

ரகசியம்

   
என்னிடம் சொல்வதற்கு
தன்னிடம் ஒரு
ரகசியம் வைத்திருப்பதாக
ஓடி வந்து சொல்கிறாள்
குழந்தை.
 
 
மேலும் அதை
யாரிடமும் சொல்லிவிடக்
கூடாதென
சத்தியமும் வாங்கிவிடுகிறாள்.
 
 
பின்பும் பல
பீடிகைகளுடன்
காதில் கிசுகிசுப்பாள்.
 
 
அது ஒன்றும்
அத்தனை பெரிய
பிரபஞ்ச ரகசியமாயிருக்காது.
ரகசியமே அல்ல என்று
அதைப் புறந்தள்ளவும்
முடியாத அந்த
ரகசியத்தை உங்களிடம்
என்னால் சொல்ல முடியாது
சத்தியத்தை மீறி.
நாளை அவளே
உங்களிடம் சொல்வாள்
 
 
" என்னிடம் ஒரு ரகசியம்
உள்ளது யாரிடமும்
சொல்லி விடாதீர்கள் "
என்றபடிக்கு.
 
- விகடனில் வெளியான கவிதை