வியாழன், 17 மார்ச், 2022

கவிதை ரசனை

 ஒவ்வொரு மாதமும் கொலுசு - பல்சுவை மாத இதழில் கவிதை ரசனை எனும் பகுதியில் நான் ரசித்த கவிதைகள் குறித்தான அனுபவத்தை சிறு தொடராக எழுதி வருகிறேன்.. உங்கள் வாசிப்புக்கு இங்கே ...


கவிதை ரசனை - இரா.பூபாலன்

 

இந்த மாதம் ரசித்த கவிதைகள்

 

இந்த மாதம் இரண்டு கவிதைகளைப் பார்க்கலாம். இரண்டுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இரண்டும் இயற்கையப் பாடுவன. இயற்கையின்  ஒற்றைக் கணத்தை உறைவிக்க முயல்வன. ஒன்று முதிர்மரமொன்று உதிர்த்த இலை.. இன்னொன்று பசுந்தளிர் ஒன்று உதிர்த்த இலை. இரண்டிலும் பச்சையம் செழித்துக் கிடக்கிறது ...

 முதல் கவிதை கவிஞர் தேவதேவன் அவர்களுடைய ஒளி நடம் எனும் கவிதை. சன்னல் வழி நுழையும் ஒரு ஒளிக்கீற்றைப் பார்க்கும் கவிஞரின் கண்கள் அதைத் தத்துவ விசாரணை செய்கிறது. சற்று நேரத்திற்கொருமுறை ஒரு பேரொளியை வீசிவிட்டு வீசிவிட்டுப் போவது யார் என்கிற கேள்வியில் ஒளி சன்னலின் வழி வந்து வந்து மறையும் காட்சி கண்முன்னே விரிகிறது. அது அவருக்கு காற்றில் ஒளி நிகழ்த்தும் நடனமாகப் படுகிறது. அந்த ஒளியை சுந்தரி ஊர்வசி நாட்டியப் பேரொளி என வர்ணிக்கிறார். அழகியல் பார்வை இது. கொஞ்சம் அறிவியல் பார்வையும் இருக்கிறது கவிதையில். இந்த ஒளிநடனத்தை நிகழ்த்துவது யாது? வானமா?கதிரா?காற்றா? என்கிற விசாரணைகள் கவிதைக்குள் நிகழ்கின்றன. இவ்வளவு பேரழகை இன்னார் என்று எப்படிச் சொல்வேன் என்கிற வியப்போடு முடிகிறது கவிதை. சன்னலுக்குள் நுழைந்து விடுகிற ஒற்றை ஒளிக்கீற்றின் சிறு ஒளியை ஒரு சூரியனளவு பேருரு கொள்ளச் செய்து ரசிக்கிறது கவிதை. இயற்கையின் ஒவ்வொரு இணுக்கிலும் கவிதையைத் துளிர்க்கச் செய்ய முடியும் என்பதற்கு இந்தக் கவிதை சாட்சி.

 

       ஒளி நடம்
 
வேகம் கொண்ட காற்றில்
ஜன்னல் வழியாய் ஒளிரும்
ஓர் ஒளிநடம்
 
அவன் அறைக்குள்ளே
சற்று நேரத்திற்கொருமுறை
ஒரு பேரொளியினை
வீசிவிட்டு வீசிவிட்டுப் போவது யார்?
 
யார் இந்த நடன சுந்தரி ?
ஒளி உடல்கொண்ட ஊர்வசி ?
நாட்டியப் பேரொளி ?
 
வானமா ?
வானத்துக் கதிரவனோ ?
கதிரோ ?
காற்றோ ?
காற்றசைக்கும் மரக்கிளையோ ?
மரமோ ?
தாய் மண்ணோ ?
 
அய்யோ,
இப்படியொரு நாட்டியப் பேரழகியை
இன்னார் என எப்படிச் சொல்வேன் ?

 

- தேவதேவன்

- “ ஏஞ்சல் - தொகுப்பிலிருந்து

தொகுப்பைப் பெற தொடர்புக்கு : சந்தியா பதிப்பகம் , 044 24896979

 

 இரண்டாவது கவிதை, சமீபத்தில் மிகச்சிறப்பாக கவிதையில் இயங்கி வரும் கவிஞர் கார்த்திக் திலகனுடையது... இயற்கையின் மடியில் நிகழும் ஒரு குட்டி உறக்கம் தான் இந்தக் கவிதை.

 

யாருமற்ற மலையடிவாரத்தில் கயிற்றுக்கட்டிலில் அரைத்தூக்கத்தில் இருக்கிறது இந்தக் கவிதை. முதல் இரு வரிகள் தன்னிலை விளக்கம் என்றாலும் அது ஓர் ஏகாந்தத்தை நிறைக்கிறது மனமெங்கும். உடல் சதுரங்களை பூமி எண்ணிக் கொண்டிருக்கிறது என்பது எதிர் கற்பனை. வெயில் நாணயங்களின் ஓசை என்பதோர் அழகான படிமம். மரமே உன் இலைகளுக்கும் அதன் பச்சை நிறத்துக்குமிடையில் நான் கொஞ்சம் தூங்கிக் கொள்ளட்டுமா என்பது இக்கவிதை அழகியல் நிகழ்த்தும் உச்சம். இன்மையில் உறங்க நினைக்கும் இருப்பின் வேண்டுதல் அது. சிலைக்கு அதன் மீதான நம்பிக்கைக்கும் இடையில் கடவுள் தூங்குவதைப் போல என்பது பேரெழில் கொஞ்சும் உருவகம்.

 

      உறக்கம்

 

ஆளரவமற்ற மலையோரம்

அரைத்தூக்கத்தில் இருக்கும்

மரத்தினடியில் கயிற்றுக்கட்டிலில்

நான் படுத்திருக்கிறேன்

கயிற்றினால்

சட்டமிட்டுத் தெரியும்

என் உடல் சதுரங்களை

பூமி எண்ணிக் கொண்டிருக்கிறது

கிளைவழியே கீழே சிதறும்

வெயில் நாணயங்களின் ஓசை

என்னைத் தூங்கவிடவில்லை

மரமே மரமே

உன் இலைகளுக்கும்

அதன் பச்சை நிறத்துக்கும் இடையில்

நான் கொஞ்சம்

தூங்கிக் கொள்ளட்டுமா

ஒரு சிலைக்கும்

அதன் மீது படிந்திருக்கும்

நம்பிக்கைக்கும் இடையில்

கடவுள் தூங்குவதைப் போல

 

- கார்த்திக் திலகன்

 - “ விண்ணைச் சூடியாடும் இரு நீல வளையங்கள்தொகுப்பிலிருந்து

தொகுப்பைப் பெற தொடர்புக்கு : படைப்பு பதிப்பகம் , 94893 75575

 இயற்கை ஒரு பெருங்கவிதை. அதன் ஒவ்வொரு அசைவிலும் கவிதைக்கான கரு கொட்டிக்கிடக்கிறது. இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கையே கவிதைதான்.

  ஒவ்வொரு மாதமும் வாசித்த புத்தகங்களிலிருந்து நேசித்த சில கவிதைகளை வாசகரகளுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் - இரா.பூபாலன்

 


1 கருத்து: