வெள்ளி, 4 மார்ச், 2022

அதே மார்ச் 5

2017ன் மார்ச் 5 

இதே நாளின்
இதே பின்னிரவில் 
அப்பாவை இழந்தவனாகி நின்றிருந்தேன் 

மருத்துவமனையின் தனியறையில் 
ஓரு வெள்ளைத் துணிக்குள் 
அடைபட்டிருந்த 
 அவ்வளவு பெரிய ஆகிருதியை 
அப்பா என்று நம்ப முடியவில்லை 
அதனால் 
அழவும் தோன்றவில்லை 

இறப்புப் பதிவில் கைகள் நடுங்கக் 
கையெழுத்திடும் போது 
முதலெழுத்தாக 
நின்றவர் சிரித்தார் 
அப்போதும் அழவில்லை 

அமரர் ஊர்தியின் 
படுக்கை விரிப்பை 
நேர் செய்துவிட்டு 
அவரைத் தூக்கிக் கிடத்திய போதும் 
கால்மாட்டில் அமர்ந்து 
வழியெல்லாம் நள்ளிரவின் 
திசைகளை வெறித்தபடி 
உலகின் மிக நீண்ட 
பயணத்தைக் கடந்தேனே அப்போதும் 
 கனத்துக்கிடந்த நெஞ்சு 
துளி நீரை வெளித்தள்ளவில்லை 

ஊரின் தெருவெல்லையில் 
ஊர்தியை நிறுத்தி இறங்குகையில் 
தலைவிரி கோலமாய் 
அம்மாவைக் கண்டேனே 
அப்போது உடைந்தது - ஓர் 
அணைக் கட்டு 

இப்போதும் பெருகியோடிக் 
கொண்டிருக்கிறதே 
அப்படி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக