தன்னந்தனிமை
தனிமையால்
பதற்றத்துக்குள்ளாகிறது.
இந்த வாழ்வு
சுற்றிலும்
யாவும் நிகழ்ந்து கொண்டிருக்க
தான் மட்டும்
உறைந்து போய்விட்ட
இந்தத் தனிமைக்கு
சவ விழிகள்
தனிமையின் பல்லாயிரம்
கண்களும் குருடாகிவிட
பல நூறு காதுகளும்
செவிடாகி விட
ஒரே ஒரு
இதயம் மட்டும் சதா துடித்துக் கொண்டிருக்கிறது
அதி வேகமாக
தனிமையை
அழகான சித்திரமாக்க
நேர்த்தியான கவிதையாக்க
ஒரு சுவையான பதார்த்தமாக்க
அழகான கலையாக்க
அர்த்தமான சொற்களாக்க
நினைவிலாவது
யாராவது வேண்டியிருக்கிறது
யாருமற்றிருப்பது
எதுவுமற்றிருப்பது
எப்படி தனிமையாகும்
தனித்திருப்பது மட்டுமா தனிமை
அது
தன்னை தனக்குள்ளேயே
சதா சுழல விடல்
தன்னையே
மீட்டுக் கொடுத்தல்
தன்னிடமே தன்னை
தற்காத்துக் கொள்ளல்
யாருமற்ற எதுவுமற்ற
தனிமையில்
சகலமுமிருக்கிறது
வாழ்வை சாவை
இன்மையை இருப்பை
கனவை நனவை
புரிந்து கொள்ள
புரிந்து கொண்ட யாவற்றையும்
அழித்துக் கொள்ள
அவசியமாயிருக்கிறது
ஒரு
தனிமை
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குகவிதைகள் சிறப்பு 👏👏👏💐💐💐