மனிதன் குகைகளில் வாழ்ந்த காலம் முதலே தனி ஒருவன் அல்லன். சக மனிதன் அருகில் இருந்த வரைக்கும் அவன் உறவுக்காரன் தான். உறவுமுறைகள் வகுத்துக்கொண்ட பின்பும் அவன் குடும்ப உறவுக்குள் நுழைந்த பின்பும் இன்னும் பலப்பட்டான். ஒவ்வொரு உறவுக்கும் ஒவ்வொரு மதிப்புண்டு. உயிரும் உடலும் அளித்த தாய் தந்தையர் தலையாய உறவானது மனிதன் ஆறாவது அறிவை ஆழமாகப் பயன்படுத்தத் துவங்கிய போது தான். தந்தை என்கிற உறவு ஒவ்வொரு மனித வாழ்விலும் மிக முக்கியமானது. உலகின் பல வெளிச்சங்களைக் காட்டிக் கொடுப்பவர் அப்பா தான்.
அப்பா ஓவ்வொரு மனிதனுக்கும் முதல் ஆசான்; முதல் கதாநாயகன்; முதல் நண்பன். அப்பாவைப் பற்றிய கவிதைகள், கதைகள் தமிழ் இலக்கியப் பரப்பில் அதிகம் வெளியாகியும் கொண்டாடப் பட்டும் இருக்கின்றன. 95 வயதான தனது அப்பாவுடனான ஒரு மகனின் அனுபவங்களையும், தந்தைமையின் மகத்துவத்தையும் , தனது கிராமத்தின். அழகையும், கிராமத்து வாழ்க்கையின் மேன்மையையும் மிக அழகாக கட்டுரைகளாக வடிவரசு எழுதி வெளியிட்டிருக்கும் நூல் தான் ஐயா என்கிற 95 வயது குழந்தை எனும் 102 பக்க அளவிலான கையடக்க சிறு நூல்.
மிகப்பெரிய குடும்பத்தின் பொறுப்புள்ள தலைவனாக, தந்தையாக, இயற்கை வைத்தியத்தையும், இயற்கையையும் இயல்பிலேயே தெரிந்து கொண்டிருப்பவராக, மூலிகைச் செடிகளை, மரங்களை அதன் பயன்களை அறிந்தவராக, சக மனிதர்களின் மீது அளவு கடந்த அன்பு கொண்டவராக,
ஊர் மதிக்கும் வெள்ளந்தி மனிதராக தனது தந்தையை நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் வடிவரசு.
இந்த அனுபவக் கட்டுரைகளில் முதலானதும், முத்தாய்ப்பானதும் தனது
வயதான தந்தையின் ஆசையை இன்ப அதிர்ச்சி கொடுத்து நிறைவேற்றியது. ஐயாவுக்கு ஆகாய விமானத்தில் ஒரு முறை போய் விட வேண்டும் என்பது நெடுநாள் ஆசை, தமிழகத்தின், திருவண்ணாமலை மாவட்டத்தின் தென்கோடி கிராமமான திருவடத்தனூர் கிராமத்தில் வாழ்ந்து வரும் அவரை அவரது 94ஆவது வயதில் கடைசி மகன் வடிவரசு அவர்கள் சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்தில் அழைத்து வந்து அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி, திரும்பும் போது அம்மாவின் ஆசைப்படி இரயிலில் அழைத்துச் சென்றும், அவர்கள் விரும்பிய கோவிலுக்கு அழைத்துச் சென்றதுமான நினைவுகளை மிக நெகிழ்ச்சியாகப் பதிவு செய்திருக்கிறார்.
ஐயா , பல ஏக்கர் சொத்தாக இருந்த மேட்டு நிலங்களை இல்லாதவர்களுக்கு தானமாகக் கொடுத்துவிட்டு மிச்சமிருக்கும் சிறு நிலத்தில் விவசாயமும் வீடுமாக வாழ்ந்து வருபவர். தனது மகனை வறுமையிலும் கல்லூரி அனுப்பிப் படிக்க வைக்கிறார். மகன் வளர்ந்து ஒரு மென்பொருள் நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்தில் இருக்கும் போதே தான் பத்திரிகை துறையில் வேலை செய்ய விருப்பம் தெரிவித்த போது மனதுக்குப் பிடித்ததைச் செய் என்று அனுமதி அளிக்கிறார், அந்த வேலையையும் விட்டுவிட்டு சினிமாவில் பாட்டெழுதப் போகிறேன் என்றால் அப்போதும் மனதுக்குப் பிடித்ததைச் செய் என்கிறார், தனக்கு விருப்பமான பெண்ணைக் காதலிப்பதைச் சொன்னால் அப்போதும்
மனம் கோணாமல் உனக்கு விருப்பமானதைச் செய் என்று வாழ்த்துகிறார். இப்படி
ஒரு அப்பா அதுவும் பெரிய படிப்போ, நவநாகரீக வளர்ச்சியோ அடைந்திடாத ஒரு கிராமத்து மனிதர் இவ்வளவு முற்போக்காக இருக்கிறார் என்றால் அவர் தான் கதாநாயகன். ஆம், அவர் அப்படித்தான் இருக்கிறார்.
ஆடு மாடு என வீட்டு விலங்குகளுக்கு என்ன ஆனாலும் கண்டுபிடித்து வைத்தியம் பார்த்துவிடுபவராக இருக்கிறார். ஊர் மக்கள் தங்கள் கால்நடைகளுக்கு ஏதாவது கோளாறென்றால் அவரிடம் தான் கேட்கின்றனர். மாடு மேயவில்லை எனில் தைதாலத் தழை, வீது தழை, வெள்ளை அருவு, கிளுகிளுப்பித் தழை போன்றவற்றைப் பறித்து ஒன்றாகச் சுருட்டி மடக்கி மாட்டுக்குக் கொடுத்தால் பின் எப்போதும் மேல மேய ஆரம்பித்துவிடும்
எனும் வைத்தியத்தை எந்த அகராதியிலும், எந்த வைத்திய முறைகளிலும் பார்க்க முடியாது. ஐயா அதைத் தெரிந்தவராக இருக்கிறார். நமக்கோ இந்த இலை தழைகளின் பெயர்கள் கூடப் பரிச்சயம் இருப்பதில்லை.ஐந்தாம் வகுப்பு பாஸ் ஆன தன் மகனைப் பள்ளிக்கு அழைத்துப் போய் இவன் என்ன படிச்சு கிழிச்சான்னு பாச் போட்டீங்க, ஃபெயில் போடுங்க என்று சொல்லி மீண்டும் ஐந்தாம் வகுப்பே படிக்க வைக்கும் கண்டிப்பான தந்தையாகவும் ஐயா இருந்திருக்கிறார்.
வடிவரசு இந்த நூலின் வழியாக தனது ஐயாவை மட்டும் நமக்கு அறிமுகம் செய்யவில்லை. சூரக்கொடி, ஆதண்டங்காய்,ஞானாப்பழம்,காராப்பழம், சூரப் பழம், பொரிப் பூண்டு, கெளாப்பழம் என நாம் அறிந்திடாத அல்லது மறந்துவிட்ட இயற்கையின் கொடைகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். மேலும் ஒரு கிராமத்து மூத்தோருக்குத் தெரியும் கிராமியப் பாடல்கள், சொலவடைகள், அனுபவங்கள், என பலவற்றையும் அறிமுகம் செய்வதோடு இந்தப் புத்தகம் வழியாக ஆவணப் படுத்தியிருக்கிறார்.
நாடோடிக் கதைகள், செவி வழிக் கதைகள், வாய் வழியாகவே புழங்கி வந்த மருத்துவக் குறிப்புகள் என நம் முன்னோர்களிடம் பெருஞ்செல்வமாக இருந்த பண்பாட்டு, கலாச்சாரக் கூறுகள் பலவற்றையும் நாம் இழந்து விட்டிருக்கிறோம். எங்கோ எப்போதோ அந்தச் சங்கிலி அறுபட்டுப் போய்விட்டது. உலகமயமாக்கலில், பொருள் தேடி கிராமத்து வேர்களைக் கைவிட்டு நகரத்துக்கு நகர்ந்ததில், நமது மண்ணின் பெருமைகளை உணர மறந்து நாகரீக மோகத்தில் திளைத்தது என நாம் தான் இழப்புகளுக்குக் காரணிகளாகவும் இருக்கிறோம். இன்னும் ஒரு தலைமுறை இப்படியே தாண்டிப்போனாலும் கூட நாம் இழந்தது என்ன என்பது கூட நமக்குத் தெரியாது ஒரு மாய வாழ்க்கை முறைக்கு நாம் மாறிவிடக்கூடும்.
மூத்தகுடிகளின் அனுபவங்களைக் கேட்டும், அறிவுரைகளைக் கேட்டும் நாம் நமது வாழ்வின் பல இடர்களைக் களைந்துகொள்ள முடியும் என்பதற்கு இந்த புத்தகம் சாட்சி. பெற்றோரை முதியோர் இல்லங்களில் தள்ளிவிட்டு பொருள் தேடி ஓடும் ஒரு தலைமுறை பெருகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தந்தையை, தனது கிராமத்து மண்ணை, மனிதர்களை நேசிக்கும் இப்படியான ஒரு படைப்பு மிக அவசியமானது.
காலத்திற்கும் மானுடத்துக்கும் படைப்பிலக்கியத்தின் வழி நமது மரபை ஆவணப்படுத்துதலும் நினைவு கூறுதலும் அத்தியாவசியம். சுவாரஸ்யமாகவும், நெகிழ்ச்சியாகவும் பல்வேறு தகவல் களஞ்சியமாகவும் இந்த நூலை எழுதியிருக்கும் வடிவரசு அவர்களை வாழ்த்தலாம்.
வெளியீடு : விஜயா பதிப்பகம் , கோவை 90470 87058
ஆசிரியர் : வடிவரசு, பேச : 8973882339
விலை : ரூ 80
சிறப்பான நூல் அறிமுகம். வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅழகானதோர் அறிமுகம் தந்தமைக்கு மிக்க அன்பும் நன்றியும் அண்ணா.. <3
பதிலளிநீக்குசிறப்பான நூல்
பதிலளிநீக்குசிறப்பான அறிமுகம்
பாராட்டுகள்
சிறப்பான நூல்
பதிலளிநீக்குசிறப்பான அறிமுகம்
பாராட்டுகள்
பெற்றோரின் கனவுகளை நிறைவேற்றுவோர் சிலரே. அவ்வகையில் சிறப்பாக உணர்கிறேன்.
பதிலளிநீக்கு