சனி, 4 ஏப்ரல், 2020

இனிய உதயம் இதழில் ஐந்து கவிதைகள்

இந்த மாத இனிய உதயம் இதழில் எனது ஐந்து கவிதைகள் வெளியாகியுள்ளன உங்களின் வாசிப்புக்கு எளிமையாக இங்கு ...

கவிதை # 1

இந்தக் கவிதைக்குக் கண்ணீர் முகம்
ஒரு கண்ணீர்த் துளியை நீ காணச்
சகிய மாட்டாய் எனில் முகம் திருப்பிக் கொள்

இந்தக் கவிதைக்கு கண்ணீரின் புலம்பல் குரல்
ஒரு புலம்பல் ஒலியை உன்னால் கேட்கவே முடியாது
உன் காதுகளை மூடிக் கொள்ளலாம்

இந்தக் கவிதைக்கு கண்ணீரின் பாவனை
ஒரு சவளைப் பிள்ளையின் கையேந்துதலைப் போலான
இதன் பாவனை உன்னைத் துன்புறுத்தக் கூடும்
நீ புறக்கணிக்கலாம் மறுதலிக்கலாம்

ஆனால் 
உன்னிடம் சொல்ல மிகக் கடைசியாக
என்னிடம் ஒன்று உள்ளது

ஒரு கண்ணீர்த் துளி
யார் விரலும் துடைக்காது
யார் காதுகளிலும் விசும்பாது
யார் கண்களின் இரக்கப் பார்வையும் படாது
யார் கைக்குட்டையையும் நனைக்காது
அப்படியே உலர்ந்து போவதென்பது
அத்துணை துயர் மிகுந்தது


கவிதை # 2

அப்பாவின் மறைவுக்குப் பிறகு
அம்மா அடிக்கடி
கோவில்களுக்குச் செல்வதை
கைபிசைந்தபடிப் பார்க்கிறேன்
தூரம் பக்கம் என
விரும்பிய கோவில்கள் அனைத்துக்கும்
சென்று வருகிறாள்
குல தெய்வக் கோவிலுக்குச் சென்றுவந்து
ஆண்டுகளாகின்றன என அங்கலாய்த்தவளை
ஒரு முறை அழைத்துச் சென்றேன்
மரங்களடர்ந்த வனத்திடை
வீற்றிருக்கும் குல தெய்வத்தைக் காண
யாரும் அதிகம் வந்திடாத
அந்தத் திறந்த வெளிக் கோவிலில்
நடப்பட்டிருந்த
கற்சாமிகளைக் கண்கொட்டாது பார்த்து
கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டவள்
ஒரு நீண்ட பாறையின் மீது அமர்ந்து
இது தான்
அப்பாவும் நானும் கல்யாணம் கட்டிக்கிட்ட இடம்
என்றாள் கண்கள் பனிக்க
சற்றுத் தள்ளி நின்று பார்க்க
அவளருகில் அப்பா அமர்ந்திருந்தார்
புது மஞ்சளும் குங்குமமும் மினுங்க
அவ்வளவு ஒளி கூடி அமர்ந்திருந்த
அம்மாவின் அருகில்

கவிதை # 3

கடும் கோடைப் பகலில்
மழைப் பாடலொன்றைத்
தொலைக்காட்சியில்
கண்ட மகள்
மழை வேண்டுமெனக் கேட்டழுகிறாள்

கோடையில் மழை வராது
என்பதைச் சொல்லி சமாளிக்க இயலாமல்
குளியலறை ஷவர்
சல்லடைத் தூறல் 
என விதம் விதமான
விஞ்ஞான முயற்சிகளிலும்
தோற்று
கடைசியில் சரணடைந்தேன்

மழையைத் தொலைத்துவிட்டேன்
என்று அழத் துவங்கினேன்
என்னைச் சமாதானம் செய்ய வந்தவள்
மழையை எங்கே தொலைத்தீர்கள்
என்று கேட்க
புதிதாகக் கட்டப்பட்ட
நான்கு வழிச் சாலையைக் காட்டினேன்

கவிதை # 4

எல்லா அதிகாலைகளிலும்
ஏதோ ஒரு முருகன் பாடலுடன்
கடையைத் திறந்து விடுவார்
டீக்கடை செல்வராசண்ணன்

செளந்தரராஜனோ கேபி.சுந்தராம்பாளோ
அவரை இயக்கத் துவங்குவார்கள்

நெற்றி நிறைய விபூதியுடன்
சவ்வாது மணம் கமழ
ஐந்து மணிக்கே
முதல் டீயை ஆத்தத் துவங்கி விடுவார்

வெள்ளிக்கிழமைகளில்
முதல் போணிக்கு
சக்கரைப் பொங்கல் இனாம் உண்டு

பச்சைக் குழந்தைகளுக்கும்
பச்சை உடம்புக்காரிகளுக்கும்
ஆண்டாண்டுகளாய்
அரைக் காசுக்கும் கால் காசுக்கும்
பால் ஆற்றிக் கொடுப்பவர்

கடையெங்கும் பழைய காலண்டர்
அட்டைப் புகைப்படத்தில்
விதம் விதமான முருகன்கள்
புன்னகைப்பர்

நாலு தங்கைகளைக்
கரையேற்றுவதிலேயே
நாற்பது வயதை விழுங்கிவிட்டவர்
ஐம்பதின் தொடக்கத்திலும்
பிரம்மச்சாரியாகவே 
இன்னும் டீ ஆத்திக் கொண்டிருக்கிறார்
என
ஊர் உச்சுக் கொட்டும்

காலண்டர் முழுக்க
வள்ளி தெய்வானை என
குடும்ப சகிதம்
அருள் பாலிக்கும் அந்தக் குமரனுக்கு
செல்வராஜண்ணனை 
அடையாளம் தெரிவதேயில்லை
ஐம்பது ஆண்டுகளாக

கவிதை # 5

யாரிடமாவது சொல்லி அழ வேண்டும்
போல இருக்கும் துக்கத்தை
இறுகப் பற்றிக் கொண்டு
அலை பேசியைத் தேய்த்தால்
அகர வரிசையில் துவங்கி
அஃர வரிசை வரைக்கும்
துக்கங்களாக இருக்கின்றன
துக்கம் 1 துக்கம் 2 துக்கம் 3
எனவும்
சின்ன துக்கம் பெரிய துக்கம்
எனவும்
துக்கம் பழையது துக்கம் புதியது
துக்கம் ஏர்டெல் துக்கம் வோடபோன்
துக்கம் அக்கா துக்கம் அண்ணா
எனவும்
பதிந்து கிடக்கும் வித விதமான
துக்கங்கள்
சேர்ந்து பெருந் துக்கமாக
விழி பிதுங்கி
வெளி வராமல்
உள்வாங்கும் கடலென
சடக்கென உள்ளேகி
தொண்டைக் குழி இறங்கி
அடி வயிற்றுக்குள் அமிழ்ந்து விடுகிறது
துக்கத்தின் கண்ணீர்


நன்றி : இனிய உதயம் இதழ், திரு.ஆரூர் தமிழ்நாடன் ஐயா



10 கருத்துகள்:

  1. ஐந்து கவிதைகளும் அற்புதம். வாழ்த்துகள் பூபாலன்

    பதிலளிநீக்கு
  2. பூபாலன், உங்கள் சமூக சிந்தனையும் அதன் வெளிப்பாடாக செயலாற்றிட உங்கள் கவிதை வரிகளும் மிகவும் அருமை.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. பூபாலன், உங்கள் சமூக சிந்தனையும் அதன் வெளிப்பாடாக செயலாற்றிட உங்கள் கவிதை வரிகளும் மிகவும் அருமை.
    வாழ்த்துகள்.

    மங்கையர்க்கரசி தலைமைச் செயலகம்

    பதிலளிநீக்கு
  4. "மழையை எங்கே தொலைத்தீர்கள்
    என்று கேட்க
    புதிதாகக் கட்டப்பட்ட
    நான்கு வழிச் சாலையைக் காட்டினேன்"
    - தொலைத்த மழைக்கான வரிகள்☺️👍👌

    பதிலளிநீக்கு
  5. அருமை நண்பரே கவிதைகள் அனைத்தும் இரசித்து படிய்தேன்.

    வாழ்த்துகள்...
    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு