ஞாயிறு, 17 ஜூன், 2018

தகவு மின்னிதழ்


முகநூல் குழுக்கள் என்றாலே ஒரு ஒவ்வாமை இருந்திருக்கிறது.  அவ்வளவு ஆர்வமெல்லாம் இருந்ததில்லை. எந்தக் குழுக்களிலும் எட்டிப்பார்ப்பதும் இல்லை. சமீப காலமாக, நண்பர்களின் வாயிலாகக் கேள்விப்பட்டு படைப்பு குழுமத்தின் படைப்புகளை, செயல்பாடுகளை கவனித்தே வந்தேன். முற்றிலும் மாறுபட்ட , மேம்பட்ட ஒரு குழு. அதை ஒரு இயக்கம் என்றும் சொல்லலாம். கவிதைகளை குழுவில் வெளியிடுவது சிறந்த கவிதைகளைத் தேடித் தேர்ந்தெடுத்து கெளரவிப்பது, அவற்றை நூலாக்கி வெளியிடுவது, விருதுகள் வழங்குவது என மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது படைப்பு குழுமம்.

படைப்பு குழுமத்தின் அடுத்த பாய்ச்சலாக தகவு என்ற மின்னிதழை வெளியிட்டிருக்கிறார்கள். முதல் இதழை வாசித்தபோதே எழுதிவிட நினைத்திருந்தேன். இயலவில்லை. இப்போது இரண்டாவது இதழ் வெளியாகியுள்ளது.

ஒரு சிற்றிதழை நடத்துவது என்பது ஒரு சர்க்கஸ் சாகசக்காரனின் கம்பி விளையாட்டு போன்றது. வெறும் கைகளை நம்பி அந்தரத்தில் பல்டி அடிப்பது போன்றது. அத்தனை பிரயத்தனங்களையும் செய்து இலக்கியத்தை வளர்த்ததில் சிற்றிதழ்களின் பங்கு மிக முக்கியமானது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காலத்தில் இப்போது நிறைய மின்னிதழ்கள், இணைய இதழ்களும் சிறப்பாக சிற்றிதழின் பணிகளைச் செய்தவண்ணம் இருக்கின்றன.

படைப்பு மின்னிதழ், ஒரு அச்சு இதழுக்கான அத்தனை வடிவமைப்பு நேர்த்திகளோடும், கனமான உள்ளடக்கங்களோடும் மிகச் சிறப்பாக வெளி வந்திருக்கிறது. இதழைப் பார்த்தவுடன் கண்களில் ஒத்திக்கொள்ள வேண்டும் போல இருக்கிறது. நானும் கொலுசு மின்னிதழின் ஆசிரியராக இருக்கிறேன் என்பதால், இந்த இதழை உருவாக்க எவ்வளவு உடல் உழைப்பு, நேரம், மன உழைப்பு, பொருளாதாரம் தேவைப்பட்டிருக்கும் என்பதை என்னால் வியந்து யூகிக்க முடிகிறது.

ஜின்னா அஸ்மி உள்ளிட்ட படைப்பு மின்னிதழ் உருவாக்கத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். இந்த இதழ் அச்சு இதழாகவும் வெளிவரவேண்டும் மேலும் தொய்வின்றி மிகச் சிறப்பாக பல காலம் வெளி வரவேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்

இரண்டாவது இதழ், கவிஞர் சல்மாவுடன் நேர்காணல், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, மாணவர் பக்கம், சங்க இலக்கியம் என பிரம்மாண்டமாக வெளிவந்துள்ளது. கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி வாசிக்கலாம். படைப்புகள் அனுப்புக ...

http://padaippu.com/ta/thagavu-2



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக