திங்கள், 13 ஜூன், 2016

மதிப்பற்ற எண்கள்

கொலுசு மின்னிதழில் தேநீர் இடைவேளை கட்டுரைத் தொடரில் இந்த மாதம் நான் எழுதிய கட்டுரை ..

தேநீர் இடைவேளை # 3

மதிப்பற்ற எண்கள்


பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. முன்னெப்போதும் விட ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி விழுக்காடும்,  மாணவர்களின் மதிப்பெண்களும் கூடுதலாகிக் கொண்டே போகின்றன என்பதில் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மெத்த மகிழ்ச்சி. பத்தாம் வகுப்பா, யாரைக்கேட்டாலும் 450 மதிப்பெண்களுக்கு மேல் தான் சொல்கிறார்கள், பன்னிரண்டாம் வகுப்பென்றால் 1100க்கு மேல்.


முன்பெல்லாம் 400 க்கு மேலும், 1000க்கும் மேலும் எடுத்தாலே பெரும் சாதனையாக ஊரில் பாராட்டுவார்கள். இப்போதெல்லாம் அது  ஜூஜூபி என்று ஆகிவிட்டது. என்ன காரணம் என யோசித்தால் சில காரணிகள் சிக்குகின்றன. முன்பெல்லாம் வெறும் அரசுப்பள்ளிகள் தான் இருந்தன மேலும் அவைகளிடையே பெரும் போட்டியெல்லாம் இருந்ததில்லை. இப்போதெல்லாம் கல்வி பெரிய வியாபார வஸ்து ஆகிவிட்டதால் முக்குக்கு முக்கு ஆங்கில வழி தனியார் பள்ளிகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவைகளுக்குள் கடும் போட்டியாக இருக்கும். யாருடைய மாணவர்கள் மாநில அளவில் வருவது, நூறு விழுக்காடு தேர்ச்சி பெற வைப்பது இப்படி பல்வேறு போட்டிகள். காரணம், இதன் மூலம் கிடைக்கும் பெயரும் புகழும் தான் அவர்களது முதலீடு, இதை வைத்துத்தான் பின்னர் சேரப்போகும் குழந்தைகளை இழுக்க முடியும். ஒரு வியாபார யுத்தி. பத்து,பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகி அடுத்த நாள் செய்தித்தாளைப் பாருங்கள் 24 பக்கத்தில் 14 பக்கத்துக்கு பள்ளிக்கூட விளம்பரங்களாகத்தான் இருக்கும். எங்கள் பள்ளியில் நூறு விழுக்காடு, இத்தனை பேர் இந்தப்பாடங்களில் நூற்றுக்கு நூறு என குழந்தைகளின் புகைப்படங்களுடன் வண்ண வண்ண விளம்பரங்கள் ஜொலிக்கும்.

இவ்வளவு போட்டி நிறைந்த தனியார்ப் பள்ளிகளில், மாணவர்களை அத்தனை மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சியடைய வைக்க என்னென்ன செய்வார்கள் என்று யோசித்துப்பாருங்கள். ஒரு முறை விகடனில் நாமக்கல் பள்ளிகளையும், கோழிப்பண்ணைகளையும் ஒப்பிட்டு ஒரு பெரும் அட்டவணையோடு ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அது நூற்றுக்கு நூறு நிஜம் தான். பிராய்லர் கோழிகள் எப்படி கறிக்காக பல்வேறு நிலைகளில் கொடுமையாக வளர்க்கப்படுகின்றனவோ அப்படித்தான் மாணவர்கள் மதிப்பெண்களுக்காகக் கசக்கிப் பிழியப்படுகிறார்கள். பல பள்ளிகளில் அடித்துக் கொன்ற கதைகள் கூட இருக்கின்றன. அந்த அளவு மதிப்பெண் மோகம் கொண்டு மதிப்பெண்களின் பின்னால் அலைகின்றனர். அரசுப்பள்ளிகளில் இந்த அளவுக்குக் கொடுமை இல்லை; ஆனாலும் அரசுப்பள்ளிகளில் பெற்றோர்கள் குழந்தைகளை மனமுவந்து கொண்டுவந்து சேர்க்கும் தரம் இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறி தான். ஆனால், இப்போது பல மாற்றங்கள் உருவாகி வருகின்றன. பல அரசுப்பள்ளிகள், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பெரும் சிரத்தையுடன் சிறப்பாக இயங்கி வருவது நமக்கு நம்பிக்கையளிக்கும்படி உள்ளது.

உண்மையில் இத்தனை மதிப்பெண்கள் வாங்கி என்ன செய்கிறார்கள் , மாநிலத்தில் முதல் இடங்களில் வந்த மாணவர்கள் பிற்பாடு என்ன செய்தார்கள் என்ற புள்ளி விவரங்களெல்லாம் நம்மிடம் இல்லை. அவர்கள் வழக்கத்துக்கு மாறாக எதையாவது சாதித்திருந்தால் அது புள்ளி விவரமாகியிருக்கும். அவர்கள் மற்றவர்களைப்போலவே மருத்துவமோ, பொறியியலோ படித்து, வெளிநாட்டிலோ உள்ளூரிலோ நல்ல கார்ப்பரேட் நிறுவனத்தில் சேர்ந்து செழிப்பாக வாழ்வார்களாயிருக்கும். என்ன முதல் மதிப்பெண் பெற்றதால் அவர்களுக்கு கல்லூரியிலும் வேலையிலும் முன்னுரிமை கிடைத்திருக்கலாம். அது மட்டும் தான் மதிப்பெண்கள் தருவது.

அப்படித்தான், மதிப்பெண்களை மட்டும் வைத்துக்கொண்டு முன்னேறிவிட முடிகிறதா என்றால்.. ம்ஹூம். எனது சித்தப்பா மகள் பன்னிரண்டாம் வகுப்பில் 1143 மதிப்பெண்கள், அவளுக்கு கோவையில் உள்ள ஒரு பிரபலக் கலைக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. காரணம், சாதி அடிப்படையில்  அவளது பிரிவுக்கு ஒதுக்கப்படுவது 10 இடங்கள் தான். அதில் இவளுக்கு இடம் கிடைக்கவில்லை. இதற்கும் இவள் தான் பள்ளியிலேயே முதல் மதிப்பெண். ஆனால் இவளை விடவும் மிகவும் மதிப்பெண் குறைவாக எடுத்திருந்த சிலருக்கு இடம் கிடைத்துவிட்டது. எப்படி ..? ஒருவருக்கு அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதால் குறைந்த மதிப்பெண்ணுக்கு இடம் கிடைத்துவிட்டது. இது வரவேற்கத் தக்க ஒன்றுதான். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சில விதிகளைத் தளர்த்தியே ஆகவேண்டும். அதன் காரண காரியங்களை அலசினால் பல வரலாறுகளைப் பேச வேண்டும். பிரச்சினை அதுவல்ல; இன்னும் சிலருக்கு எளிதாக இடம் கிடைத்துவிட்டது. அதன் காரணம் பணம் மற்றும் செல்வாக்கு. இதுதான் வேதனையைத் தருகிறது. பிறகு படித்து என்ன பயன் ?

மதிப்பெண்கள் மதிப்பற்றவைகளாக மாறிவருகின்றன இந்தத் தலைமுறையில் என்பது தான் உண்மை. நேரடியாக மதிப்பிருக்கும் எண்களாகத் தெரிந்தாலும், அவற்றால் மதிப்பான சமூகம் உருவாகுவதில்லை என்பது நிதர்சனம். ஒன்பதாம் வகுப்பிலிருந்தே பத்தாம் வகுப்புப் பாடம் ஆரம்பித்துவிடுகிறது. சனி,ஞாயிறு விடுமுறை இல்லை. காலையில் 6 மணிக்கு சிறப்பு வகுப்பு துவங்கினால், இரவு 11 மணிவரை பாடம் நடத்துகிறார்கள். இதெல்லாம் எதற்காக, வெறும் எண்களுக்காக. அது தரும் புகழுக்காக. அது தரும் எதிர்காலம் என்பது கேள்விக்குறி தான்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பத்தாம் வகுப்பிலேயே முதல் மதிப்பெண் எடுத்தவன் அவன். பள்ளியிலும் அவனே முதல் இடம். சமீபத்தில் அவனது பெற்றோரைப் பார்த்தபோது சொன்னார்கள். நைஜீரியாவில் நல்ல வேலையில் குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டானாம். எப்போதாவது ஸ்கைப்பில் பேசுவான். அவ்வப்போது அலைபேசியில் பேசுவான். சென்ற மாதம் அவனது தம்பி விபத்தில் இறந்தபோதுகூட வரவில்லை என்றார்கள். எதற்கும் வரமாட்டான். அவனுக்கு இந்தியா திரும்பி வரும் எண்ணம் இல்லை என்று வருத்தப்பட்டார்கள். அவன் எடுத்த மதிப்பெண்களால் இந்த ஊருக்கு, நாட்டுக்கு, அவனைப் பெற்றவர்களுக்கு என்ன பயன் வந்துவிட்டது.

அவன் விசயமாவது பரவாயில்லை அவன் நன்றாக இருக்கிறான். பலர் அதுவும் இல்லாமல் போய்விட்டனர். நண்பன் ஒருவன் கல்லூரியில் சக வகுப்பில் ஆறு பாடங்களுக்கு ஐந்தில் கோட்டை விட்டான். இடையிலேயே நின்றுவிட்டான். கல்லூரி நிர்வாகம் வலுக்கட்டாயமாக அவனை அழைத்து வந்து பாடம் நடத்தியது. ஒவ்வொரு வகுப்பிலும் ஒன்றிரண்டு பாடங்களில் பெயிலாகி பெயிலாகி, எல்லோரும் கல்வியை முடித்துவிட்டுக் கிளம்பிவிட்ட பிறகும் மேலும் ஒரு வருடம் தேர்வெழுதித்தான் பாஸ் ஆனான். இப்போது அவன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் என்பதைக் கேள்விப்பட்ட போது அதிர்ச்சியாகிப்போனேன். கூடப் படித்த , நன்றாகப்படித்த பலரும் பல்வேறு நிலைகளில் இருக்கின்றனர். சிலர் நிரந்தர வேலையில்லாமலும், கிடைத்த வேலைக்குப் போய்க்கொண்டும் இன்னும் இருக்கின்றனர். கல்வி மட்டும் போதுமா என்னும் கேள்வி எழத்தான் செய்கிறது.

முன்பெல்லாம், தேர்வில் தோற்ற மாணவர்கள் தற்கொலை என செய்திகள் நிறைய வரும். ஆண்டுக்கு ஆண்டு அது படிப்படியாகக் குறைந்து இந்த ஆண்டு ஒரே மாணவர் தான் அந்தத் தவறைச் செய்தார் என்பது மகிழ்ச்சியான விசயம். இந்த மாற்றத்துக்கான காரணங்களாக கற்பித்தல் முறை, விடைத்தாள் திருத்தும் முறை, மதிப்பெண்கள் வழங்குதல் என பல இருப்பினும் ஊடகங்கள், மக்கள் தொடர்ந்து தேர்வில் தோற்றால் தற்கொலை செய்வது முட்டாள் தனம் என்று பல்வேறு நிலைகளில் தொடர்ந்து வலியுறுத்தி பிரச்சாரம் செய்து விழிப்புணர்வைக் கொண்டு வந்ததும் மிக முக்கியமான காரணம். அதே அளவு விழிப்புணர்வை மதிப்பெண்களின் விசயத்திலும் கொண்டுவர வேண்டும். அல்லாவிடில், அது ஒரு மனநோயாகவே மாறிவிடும் அபாயம் உள்ளது.

மேலும், நமது கல்வி முறை குறித்து எல்லோரும் கவலையில் தான் உள்ளனர். நமது கல்வி முறை அடிமைகளையும் வேலைக்காரர்களையும் உருவாகுவதாகத்தான் உள்ளது. அறிஞர்களையும், தொழில் முனைவோர்களையும், விவசாயிகளையும் உருவாக்கும் கல்வி முறை வந்தால் நமது நாடு மிகப்பெரிய சக்தியாக உலகில் உருவெடுக்கும்.

கொலுசு மின்னிதழ் வாசிக்க :

http://www.kolusu.in/kolusu/kolusu_jun_16/index.html#p=5




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக