வியாழன், 25 ஜூன், 2015

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் இருபத்தி ஆறாவது இலக்கிய சந்திப்பு

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் இருபத்தி ஆறாவது இலக்கிய சந்திப்பு  கடந்த ஞாயிற்றுக் கிழமை (21.06.2015)  பாலக்காடு சாலை, நகரமன்ற ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

ஆரம்பமே அமர்க்களமாய், செல்வராஜ் அவர்களின் ஐந்து நிமிட தவில் இன்னிசை. அன்று வேறு நல்ல மழை. நிறைய நண்பர்கள் மழையின் காரணமாக வர முடியாமல் போனது வருத்தம்தான். நிகழ்ச்சிக்கு நானே தாமதமாகத்தான் போனேன். மழையின் காரணமாக மட்டுமல்ல, அன்று பாரதிக்குப் பிறந்தநாள். அவளும் இலக்கிய வட்டத்துக்கு வருவதாகச் சொல்லியிருந்தாள். வழக்கமாக அவளது பிறந்தநாளை குடும்பத்துடன் மட்டுமே கொண்டாடுவது வழக்கம். எட்டு வருடங்களாக அவளது பிறந்தநாள் என்று சொல்லி புகைப்படமோ அல்லது கொண்டாட்டங்களையோ முகநூலில் கூட பதிந்தது கிடையாது. இனியும் அப்படித்தான். ஆனால் இந்த முறை இலக்கிய வட்டம் இருக்கும் நாளிலே அவளது பிறந்தநாள் வந்ததால் இலக்கிய வட்ட நண்பர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கலாம் என நினைத்தேன். பொள்ளாச்சி இலக்கியவட்டமும் என் குடும்பத்தின் ஒரு நீட்சி தானே? அப்படியே செய்தேன்.

நல்ல மழை , மழை கொடுத்த சிறு இடைவெளியில் தான் வந்து சேர்ந்தோம். எங்களுக்கு முன்பே அம்சப்ரியா, சோலை மாயவன், ஜெயக்குமார் முதலானோர் அரங்கத்தைத் தயார் செய்து கொண்டிருந்தனர்.
பதாகைகளைக் கட்டிவிட்டு நாங்களும் தயார் ஆனோம்.

எப்போதும் போல படித்ததில் பிடித்தது என்பது முதல் அமர்வு. வாசகர்கள் யார் வேண்டுமானாலும் தாங்கள் படித்த கதை, கவிதை சம்பவங்கள் எது குறித்தும் பேசலாம். அதில், வாசகர்கள் சென்ற மாதத்தில் தாங்கள் படித்த  கவிதைகளை, புத்தகங்களைப் பற்றிப் பேசினர்.




பின்னர் நிகழ்ச்சி எனது வரவேற்புரையுடன் தொடங்கியது. மருத்துவர் செந்தில்குமார் எழுதிய " இயன்முறை மருத்துவம் " என்ற கட்டுரைத் தொகுப்பினை த.சபரீஸ்வரன் அறிமுகப் படுத்திப் பேசினார். இயன்முறை மருத்துவத்தின் தேவைகள் விளையாட்டுத் துறை போன்ற துறைகளில் அதிகம் இருப்பது போலவே நடை முறை வாழ்க்கையிலும் எப்படி அத்தியாவசியப் படுகிறது என்பது முதல் நிறையத் தகவல்களுடன் நூல் அறிமுகம் செய்து பேசினார்.



அடுத்து கவிஞர் வத்திராயிருப்பு கவுதமன் எழுதிய " மெல்லின தேசம்" நூலை கவிஞர் பூ.அ.இரவீந்திரன் வெளியிட கவிஞர் யாழி அவர்கள் பெற்றுக் கொண்டார்.



கவிஞர் வத்திராயிருப்பு கவுதமனின் பால்யவீதி மற்றும் மெல்லின தேசம் கவிதைத் தொகுதிகளை அறிமுகம் செய்து கவிஞர் சோலை மாயவன் பேசினார். இரண்டு தொகுப்புகளிலுமுள்ள மிகச்சிறப்பான கவிதைகளைக் குறிப்பிட்டுப் பேசிய அவர் கவுதமனின் கவிதைகளில் தெரியும் சமூக அக்கறையைப் பாராட்டி மகிழ்ந்தார்.



வத்திராயிருப்பு கவுதமனின் ஏற்புரையில் பதிப்பகங்கள் காட்டும் பாரபட்சத்தையும், கவிதைத் தொகுப்புகளுக்கான வரவேற்பையும் சற்று வருத்தமான குரலில் பதிவு செய்தார். மதுவுக்கு எதிரான தனது கவிதையை அனைவரும் பாராட்டியதைக் குறிப்பிட்டுப் பேசிய கவுதமன், மதுப்பழக்கம் தன்னை மட்டுமல்லாது, தனது குடும்பத்தையும் சமூகத்தையும் அழித்துவிடக் கூடிய ஆபத்தான பழக்கம் என்று கூறினார்.



ஒவ்வொரு மாதமும் வாசிப்பு ரசனை பகுதியில் தான் ரசித்த சிறந்த புத்தகத்தைப்பற்றி ஒருவர் பேசுவார். இம்முறை புன்னகை ஜெயக்குமார் தான் ரசித்த அசோகமித்திரன் கதைகளைப் பற்றிப் பேசினார். பின்னர் செய்திமடல் வெளியிடப்பட்டது.



கவிஞர் பூ.அ.இரவீந்திரன் எழுதிய " பெளர்ணமி இரவின் பேரலை" என்ற கவிதைத் தொகுப்பினை கவிஞர் க.அம்சப்ரியா அறிமுகம் செய்து பேசினார்.
பின்னர் ஏற்புரையாற்றிய இரவீந்திரன் அய்யா அதை ஒரு அற்புதமான சிறப்புரையாக்கினார்.


தனது அனுபவங்களைக் கவிதையாக்கம் செய்வதில் யாருடைய சிறு விமர்சனத்தையும் ஏற்றுக் கொள்கிறேன் என்றும் அவையே எனது அடுத்த படைப்புக்கான மூலம் என்றும் பேசினார். நல்ல நவீன கவிதைகளை மேற்கோள் காட்டிப் பேசிய அவர் தனது நீண்ட கவிதைப் பயணத்தை மிக அழகாக குறிப்பிட்டுப் பேசினார்.


மேலும், மாணவர்கள், கவிஞர்கள் கலந்து கொண்ட கவியரங்கம் சிறப்பாக நடந்தது. கவிஞர்கள் கிரிஜா, நாகப்பன், செளவி, யாழி, அனாமிகா,மெளனம் ரமேசு,இலக்கியன் விவேக் ,வே.கோகிலா அனைவரும் கவிதை வாசித்தனர்.





கவிஞர் அம்சப்ரியாவின் நன்றியுரையோடு விழா இனிது  முடிந்தது.



பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் செய்தி மடல் வெளியிடப்பட்டது. உங்கள் பார்வைக்கு ..

https://www.dropbox.com/s/36tlnjes0rebbn8/Seythi%20madal%2017.pdf?dl=0


மதிய உணவுக்கு சிற்றுண்டிச் சாலையில் அமர்ந்திருக்கும் போது தொடங்கிய மழை, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தட்டிக் கிளப்ப, வாசலில் அமர்ந்து மழையை மட்டுமே வேடிக்கை பார்க்கும் அந்த மணித்துளியையும் வழங்கியது மழைதான்.


1 கருத்து:

  1. வணக்கம் பூபாலன்.
    மிக அருமை. இத்தனை நாள் எப்படி தவற விட்டேன் என்று புரிய வில்லை. முறையான விழாவாக இசையுடன் நடந்திருப்பது புதுமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. இது போன்ற நிகழ்வுகள் பரவலாக்கப்பட வேண்டும். செய்தி மடல் வெளியீடு சிறப்புக்குறியது. பல சிற்றிதழளார்கள் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. திரு.ரவீந்திரன் அய்யா இணய தொடர்பு இருந்தால் தெரிவிக்க வேண்டுகின்றேன். நன்றி. வாழ்த்துக்கள்.
    கிருஷ்.இராமதாஸ், துபாய் [பெரம்பலூர்]

    பதிலளிநீக்கு