பொள்ளாச்சி இலக்கிய வட்டம் அழைப்பிதழைக் கொடுப்பதற்காகவும், தோழியின் புகைப்படம் ஒரு சிற்றிதழில் வெளிவந்திருப்பதைத் தருவதற்காகவும் முதன் முறையாக ஒரு தோழியின் வீட்டிற்குச் சென்றேன். தோழி கல்லூரி இரண்டாமாண்டு மாணவி. அவரும் தாயாரும் வரவேற்று உபசரித்தார்கள். தோழியைப் பற்றி எதுவும் தெரியாததால் பிறகு கேட்டபோது சொன்னார். அவர் தந்தை இவருக்கு ஐந்து வயது இருக்கும் போதே ஒரு விபத்தில் இறந்து விட்டதாகவும் அவரின் முகத்தைக் கூடப் பார்த்ததில்லை எனவும் அம்மா தனி மனுஷியாகவே தன்னை வளர்த்ததாகவும் சொன்னார். மனம் கனத்தது. தோழிக்காக ஒரு கணம் வருந்தினாலும் அடுத்த கணம் என் நினைவில் வந்தது அந்தத் தாயின் முகம். கணவன் இறந்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் அவர் ஒரு பெண்குழந்தையோடு எப்படி இப்பெருவாழ்வை எதிர் கொண்டிருப்பார்? என்னதான் கணவர் அரசுப்போக்குவரத்து ஊழியர் என்றாலும் அவருக்கு இழப்பீடும்,ஓய்வூதியமும் கிடைக்கிறது என்றாலும். அந்த அம்மா இழந்தது கணவனை மட்டுமா.? தன் இளமையை, தன் வாழ்வின் மிக முக்கியத்தருணங்களிலான சந்தோசங்களை அல்லவா..?
இதுதான் நமது குடும்ப அமைப்பின் மகத்துவம். குடும்பம் என்ற அமைப்பு நமது நாட்டில் வெறும் உறுப்பினர்களால் நிர்மாணிக்கப் பட்டதன்று. அன்பு,கருணை, தியாகம், சகிப்புத்தன்மை என்று இன்னும் பல கலவைகளால் ஆனது. அதைத்தான் இப்போது நாம் மோகித்துக் கிடக்கும் மேற்கத்தியக் கலாச்சாரம் சிதைக்கவும் சிதறுண்டு போகவும் வைக்கிறது.
அடிப்படையில் நாம் அன்பினால் கட்டமைக்கப்பட்டவர்கள். அதனாலேயே இப்படியான எத்தனையோ அம்மாக்கள், அப்பாக்கள் தங்கள் குழந்தைகளுக்காக தங்களின் சகலத்தையும் இழந்தும் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்...
அவர்களால் தான் இன்னும் நம் கலாசாரத்தின் மீது அனைத்து நாடுகளுக்கும் நம்பிக்கை இருக்கிறது.
குறிப்பு :
அந்த அம்மா வீட்டுக்கு அருகிலேயே ஒரு குடிசைத்தொழிலாக நகை வேலை செய்யுமிடத்துக்கு வேலைக்குச் செல்கிறார். அவருக்கு உதவியாக தோழியும் பத்து குழந்தைகளுக்கு மாலை வகுப்புகள் எடுக்கிறார் என்பதும் கொஞ்சம் ஆறுதலாகவும் இருக்கிறது.
இனி எப்போது தோழியைப் பார்த்தாலும் அவர் முகத்தில் அவர் அம்மாவின் முகம் என் நினைவில் வந்து நிற்கும்...
என்ன சொல்ல?
பதிலளிநீக்கு