நேற்று ( 05.01.2014) நண்பர் கவிஞர் ப.தியாகுவின்
" எலிக்குஞ்சுகளோடு
எனக்குக் குரோதமில்லை "
என்ற கவிதை நூல்
வெளியீட்டு விழா கோவை ரயில்
நிலையம் அருகிலுள்ள தாமஸ்
பூங்காவில் நடைபெற்றது.
தாய்
சுரேஷ் 11 மணிக்கே
அழைத்தார் வந்து சேர்ந்து
விட்டதாக. தனியாக
இருப்பாரே சீக்கிரம் போய்
விடலாம் என்றிருந்தேன்.
ஆனாலும், நம்மால்
தான் திடீரென்று கிளம்பிவிட
முடியாதே. 11.30 மணிக்கு
பொள்ளாச்சியில் ஒரு நண்பரைச்
சந்திப்பதாக ஏற்கனவே
முடிவாகியிருந்தது. 11
மணிக்கு வீட்டிலிருந்து
கிளம்பி பொள்ளாச்சிக்குப்
போய் நண்பரைச் சந்தித்துவிட்டு
அங்கு சிலபல வேலைகள் காத்திருந்ததால்
அவற்றையும் முடித்துவிட்டு
வண்டியை ஸ்டேண்டில் போட்டுவிட்டு
பேருந்தில் ஏறி அமர்ந்தவுடன்
மணியைப் பார்த்தால் 1.
மணியைப் பார்த்தவுடன்
தான் வயிறு பசிப்பதாகச்
சொன்னது. நண்பரும்
கோவை வருவதால் அவருடன் உணவை
முடித்துக்கொள்ளலாம் என்று
முடிவானது. பேருந்து
காந்திபுரம் செல்வதால்
டவுன்ஹாலில் இறங்கி சாப்பிட்டுவிட்டு
நான் நிகழ்ச்சிக்கும்,
நண்பர் ஊருக்கும்
பயணமாகிவிடலாம். பின்னால்
வரும் பேருந்தில் சோழநிலாவின்
சகோதரர் பாரதிமோகன்
வந்துகொண்டிருப்பதாகவும்
அவரை நிகழ்ச்சிக்கு அழைத்துச்
செல்லவும் சோழநிலா அலைபேசினார்.
பாரதிமோகனோடும் பேசி
ரயில்நிலையத்தில் காத்திருக்கிறேன்
என்று சொல்லிவிட்டேன்.
டவுன்ஹாலில்
இரண்டு மணிக்கு இறங்கி ஒரு
காளான் பிரியாணியைச்
விழுங்கிவிட்டுப் பேருந்திலேறி
ரயில்நிலையத்தில் இறங்கி
அந்தப்பேருந்துக்கும் அதில்
போய்க்கொண்டிருந்த உடன் வந்த
நண்பருக்கும் டாடா சொன்னேன்.
ஏனோ இரண்டாம்
இருக்கையிலிருந்த யுவதி
திரும்பி என்னை வெகுநேரம்
முறைத்தார். நல்லவேளை
பேருந்து வேகமாகச் சென்றே
விட்டது. மணி மூன்றை
நெருங்கிக் கொண்டிருக்கிறது.
நேரமே வந்து நண்பர்களுக்கு
உதவாமல் நிகழ்ச்சி நேரத்துக்கே
சரியாக வருவது உறுத்தலாயிருந்தது.
பத்து நிமிடம்
காத்திருப்பில் பாரதி மோகன்
வந்துவிட்டார்.
மிகச்சரியாக
மூன்று மணிக்கு அரங்கினுள்
நுழைகிறோம். வாசலில்
இருந்து தியாகு வரவேற்றார்.
விழா நாயகன். உடன்
வரவேற்றது வெயில்நதி ஆசிரியர்
இயற்கை சிவம்.
அவர்களிடம் அன்பைத்
தெரிவித்துவிட்டு தாய்
சுரேசிடம் நேரமே வர இயலாததற்கு
மன்னிப்பைத் தெரிவித்துவிட்டு
உள்ளே சென்றால், வா.மணிகண்டன்
மற்றும் சங்கவி சதீஷ்
அவர்களை முதன் முறையாகப்
பார்க்கிறேன். அவர்களின்
எழுத்துகளை வாசித்துவிடுவேன்.
நிஷப்தம்
வலையை நேரம் கிடைக்கும் போது
வாசித்து விடுவது வழக்கம்.
முதன் முறையாக
மணிகண்டனுடன் பேசியது மகிழ்ச்சி.
அனைவரும்
வந்து இருக்கைகள் நிறைந்தாயிற்று.
நூல் வெளியீடு
துவங்கவிருக்கிறது இப்போது
கவிஞர் தியாகு கடைசி வரிசையில்
அமர்ந்திருக்கும் என்னைப்
பார்த்து வரவேற்புரை நீதான்
நண்பா என்றார். தயாராக
வரவில்லை என்றேன், பரவாயில்லை
வா என்றார். இன்னும்
30 நொடிகள் இருக்கின்றன.
இளஞ்சேரல்
நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார்.
நான் வரவேற்புரையாற்ற
அடுத்த நிகழ்வாக நூல் வெளியீடு.
அவைநாயகன்
தலைமை வகிக்க,
கவிஞர் இளங்கோ கிருஷ்ணன்
நூலை வெளியிட கவிஞர்
வா.மணிகண்டன்
நூலைப் பெற்றுக் கொண்டார்.
கிளிக்.
அவைநாயகன்
அவர்களைத் தலைமையுரையாற்ற
அழைத்தார் இளஞ்சேரல் .
தனக்குப் பிடித்த, தொகுப்பிலிருந்த நான்கு
கவிதைகளைப் படித்துக் காட்டி
ஒரு சிறு அறிமுகவுரையைத்
தந்தார். அடுத்துப்
பேசிய இளங்கோ கிருஷ்ணன்
இத்தொகுப்பின் கவிதைகளைப்
பற்றிப் பேசப் போவதில்லையெனச்
சொல்லிவிட்டு இந்தத் தொகுப்புக்கான
கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத்
தந்த அனுபவத்தச் சொன்னார்.
200 கவிதைகளிலிருந்து
வடிகட்டி எண்பது கவிதைகளாக்கித்
தந்ததாகச் சொன்னார். என்
மனம் மீதமிருந்த 120 கவிதைகளை
நினைத்துப் பதைபதைத்தது.
ஒவ்வொரு தொகுப்பின்
போதும் நிராகரிக்கப்பட்டுவிடும்
கவிதைகள் என்ன ஆகின்றன?
அடுத்து
வா.மணிகண்டனின்
முறை, என்னைப் பேசச்
சொல்ல மாட்டார்கள் என்று
நினைத்தேன் என்று ஆரம்பித்தார்.
அப்படி எப்படி நீங்கள்
நினைக்கலாம்.? வழக்கம்
போலவே இத்தொகுப்பு இரண்டு
நாட்களுக்கு முன்புதான்
கிடைத்தது படிக்க முடியவில்லை,
வரும் போது பேருந்தில்
தான் படித்தேன் என்றார்.
இந்தக் குரல் என்
காதுகளில் எண்பத்தியாறாவது
முறையாய் விழுகிறது. OK.
பின்பும் தேவதச்சன்
சொன்ன ஒரு கூற்றைச் சொல்லி
கவிதை என்பது ஒரு காட்சியை
நான்காவது கோணத்திலிருந்து
பார்ப்பது / பார்க்கச்
செய்வது என சுவாரஸ்யம் குறையாமல்
பேசினார். இதுவரை
பேசிய யாருமே ஐந்து நிமிடத்துக்கும்
மேல் பேசவில்லை. எதிர்பாராத
ஆச்சரியமா இல்லை இது எதிர்பார்த்து
இல்லாமல் போன ஏமாற்றமா.?
இந்தக்குறையைத்
தீர்த்தது இளஞ்சேரல் அவர்கள்
தான் வழக்கம் போல தன் நான்கு
பக்கத்தில் நுணுக்கிய
எழுத்துருவுடன் அச்சிட்ட
கட்டுரையுடன் தொகுப்பு
குறித்துப் பேசினார்.
இடையில் அவரின்
பிரத்யேகமான பேனர்கள் ,
விளம்பரங்கள் மற்றும்
திறந்த நிலையில் பயணித்த
மீன்கள் துள்ளும் மெட்டடோர்
வேன் என்று கொஞ்சம் நீண்ட
உரை.
இறுதியாக
ப.தியாகு. கொஞ்சம்
உணர்ச்சிவசப் படுவேன் என்று
ஆரம்பித்து, தொகுப்பின்
உருவாக்கம் குறித்து சொல்லிப்
பின் அனைவருக்கும் தனது
நன்றிகளைப் பதிவு செய்தார்.
இடையில்,
இயற்கை சிவம் பேசினார்.
தொகுப்பு வெயில்
நதியின் முதல் வெளியீடு.
எனவே இது ஒரு நூல்
வெளியீடு மட்டுமல்ல, ஒரு
பதிப்பகத்தின்
வெளியீடும்
கூட என்றார்.
விழா
நிறைவடைந்தது. வழக்கம்
போல போடோ செஷன். அனைவரும்
புகைப்படமெடுத்துக் கொண்டோம்.
கிளிக்ஸ் ...
அனைவரிடமும்
ஐந்தைந்து நிமிடம் அன்பைப்
பகிர்ந்து கொண்டு கிளம்பிவிட்டோம்.
உக்கடத்தில் தேநீர்.
பேருந்து பொள்ளாச்சி
வருவதற்குள் இளையராஜா தாலாட்டி
தூங்கவைத்துவிட்டார்.
பின்பும் சோழநிலா,
அமசப்ரியா, கனகராஜன்
அனைவரையும் சந்தித்துவிட்டு
வீடு வருகையில் நீயா நானா
கோபிநாத் அதே கோட்டைப் போட்டுக்
கொண்டு கன்னிராசிக்கு பலன்
கேட்டுக் கொண்டிருந்தார்.
சாப்பிட்டு விட்டு
இந்தக் கட்டுரையைத் தட்டிச்சிக்
கொண்டே நினைத்தேன் இந்நேரம்
இளஞ்சேரலும் , பொன்
இளவேனுலும் பத்துப் பக்கத்துக்குத்
தயார் செய்து பதிவேற்றியிருப்பார்களென.
மணி பத்தரையான போது
பொடணியில் அறைந்தது நாளை
திங்கட்கிழமை என்ற நினைப்பு.
பிறகென்ன குட் நைட்.
பின்
குறிப்பு : புத்தாண்டிலிருந்து
என் சோம்பேறித்தனங்களைப்
புறந்தள்ளிவிட்டு இப்படி
எல்லா நிகழ்வுகளையும் பதிந்து
விடுவதாக இந்த ஆண்டும் (?)
முடிவெடுத்துள்ளதால்..
பொறுத்துக் கொள்க...
போகப் போக சரியாயிடும்...
“ எலிக்குஞ்சுகளோடு
எனக்குக் குரோதமில்லை "
அற்புதமான படைப்பு.
தொகுப்பில் எனக்கு
மிகப் பிடித்த கவிதை அனைவருக்கும்
பிடித்திருந்தது. அனைவரும்
அக்கவிதையை குறிப்பிட்டுப்
பேசினார்கள். அந்தக்
கவிதை.
கை
கொள்ளுமளவு கற்கள்
தாக்கவென
ஒரு கல்லை
மறு
கையிலேந்தி
கண்
சுருக்கி
குறி
பார்த்து நிற்கும்
சிறுவனிடம்
ஒரேயொரு
பாறை
ஓணானின்
வசம்.
நான்கு
காலிலும்
பற்றித்தூக்கி
அவனை
நோக்கி
எப்படி
எறியப் போகிறதென்றுதான்
பார்த்துக்
கொண்டிருக்கிறேன்.
அற்புதம்
தியாகு. வாழ்த்துகளும்
அன்பும்....
அருமை
பதிலளிநீக்குவாவ்.... பூபாலனுக்கு ஒரு பிளாக் இருப்பது தெரியவருவது மகிழ்ச்சியளிக்கிறது. நூல் வெளியீடு பிரியமானவர்களின் முன்னிலையில் நிகழ்ந்தது என்னை நெகிழ்ச்சியில் தள்ளிவிட்டது நண்பா, அதனால்தான் உணர்ச்சிவயப்பட்டது. நிறைவான ஒத்துழைப்பு (வருகைபுரிந்தது உட்பட) உங்களிடமும். மிக மகிழ்கிறேன் பூபாலன், இணைந்திருப்போம் நண்பா.. :)
பதிலளிநீக்குஎனது வலைப்பூவில் அதிகம் எழுதவில்லை. இனி தொடர்வேன். விழா செறிவாகவும் நிறைவாகவும் இருந்தது .. இதழ்களைக் கொண்டு சேர்க்கும் பணிகளைத் தொடருங்கள். உதவுகிறேன் இயன்றவரை
நீக்குதங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி... ஒரு நிகழ்வுக்க செல்ல இருந்தால் அதிக நேரம் இருக்க இயலவில்லை,, அடுத்த முறை சந்திப்போம் நிறைய பேசவேண்டும்... ப.தியாகுவின் கவிதைக்கு விரைவில் எனது நடையில் ஒரு விமர்ச்சனம் எழுதனும்....
பதிலளிநீக்குஎனக்கும் மகிழ்ச்சி ... விரைவில் சந்திப்போம்
நீக்கு