ஞாயிறு, 5 ஜனவரி, 2014

இம்மாத கணையாழி இதழிலும் எனது கவிதை பிரசுரமாகியுள்ளது...


இந்த மாதம் குமுதம் தீராநதியில் வெளியாகியுள்ள எனது கவிதை...

புத்தாண்டு இனிதாகவே துவங்கியுள்ளது இம்மாத குமுதம் தீராநதியில் எனது கவிதை பிரசுரமாகியுள்ளது ...இதோ

"எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை " - கவிஞர் ப.தியாகுவின் நூல் வெளியீட்டு விழா நினைவுக் குறிப்புகள்

நேற்று ( 05.01.2014) நண்பர் கவிஞர் .தியாகுவின் " எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை " என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா கோவை ரயில் நிலையம் அருகிலுள்ள தாமஸ் பூங்காவில் நடைபெற்றது.

தாய் சுரேஷ் 11 மணிக்கே அழைத்தார் வந்து சேர்ந்து விட்டதாக. தனியாக இருப்பாரே சீக்கிரம் போய் விடலாம் என்றிருந்தேன். ஆனாலும், நம்மால் தான் திடீரென்று கிளம்பிவிட முடியாதே. 11.30 மணிக்கு பொள்ளாச்சியில் ஒரு நண்பரைச் சந்திப்பதாக ஏற்கனவே முடிவாகியிருந்தது. 11 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி பொள்ளாச்சிக்குப் போய் நண்பரைச் சந்தித்துவிட்டு அங்கு சிலபல வேலைகள் காத்திருந்ததால் அவற்றையும் முடித்துவிட்டு வண்டியை ஸ்டேண்டில் போட்டுவிட்டு பேருந்தில் ஏறி அமர்ந்தவுடன் மணியைப் பார்த்தால் 1. மணியைப் பார்த்தவுடன் தான் வயிறு பசிப்பதாகச் சொன்னது. நண்பரும் கோவை வருவதால் அவருடன் உணவை முடித்துக்கொள்ளலாம் என்று முடிவானது. பேருந்து காந்திபுரம் செல்வதால் டவுன்ஹாலில் இறங்கி சாப்பிட்டுவிட்டு நான் நிகழ்ச்சிக்கும், நண்பர் ஊருக்கும் பயணமாகிவிடலாம். பின்னால் வரும் பேருந்தில் சோழநிலாவின் சகோதரர் பாரதிமோகன் வந்துகொண்டிருப்பதாகவும் அவரை நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லவும் சோழநிலா அலைபேசினார். பாரதிமோகனோடும் பேசி ரயில்நிலையத்தில் காத்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.

டவுன்ஹாலில் இரண்டு மணிக்கு இறங்கி ஒரு காளான் பிரியாணியைச் விழுங்கிவிட்டுப் பேருந்திலேறி ரயில்நிலையத்தில் இறங்கி அந்தப்பேருந்துக்கும் அதில் போய்க்கொண்டிருந்த உடன் வந்த நண்பருக்கும் டாடா சொன்னேன். ஏனோ இரண்டாம் இருக்கையிலிருந்த யுவதி திரும்பி என்னை வெகுநேரம் முறைத்தார். நல்லவேளை பேருந்து வேகமாகச் சென்றே விட்டது. மணி மூன்றை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நேரமே வந்து நண்பர்களுக்கு உதவாமல் நிகழ்ச்சி நேரத்துக்கே சரியாக வருவது உறுத்தலாயிருந்தது. பத்து நிமிடம் காத்திருப்பில் பாரதி மோகன் வந்துவிட்டார்.

மிகச்சரியாக மூன்று மணிக்கு அரங்கினுள் நுழைகிறோம். வாசலில் இருந்து தியாகு வரவேற்றார். விழா நாயகன். உடன் வரவேற்றது வெயில்நதி ஆசிரியர் இயற்கை சிவம். அவர்களிடம் அன்பைத் தெரிவித்துவிட்டு தாய் சுரேசிடம் நேரமே வர இயலாததற்கு மன்னிப்பைத் தெரிவித்துவிட்டு உள்ளே சென்றால், வா.மணிகண்டன் மற்றும் சங்கவி சதீஷ் அவர்களை முதன் முறையாகப் பார்க்கிறேன். அவர்களின் எழுத்துகளை வாசித்துவிடுவேன். நிஷப்தம் வலையை நேரம் கிடைக்கும் போது வாசித்து விடுவது வழக்கம். முதன் முறையாக மணிகண்டனுடன் பேசியது மகிழ்ச்சி.

அனைவரும் வந்து இருக்கைகள் நிறைந்தாயிற்று. நூல் வெளியீடு துவங்கவிருக்கிறது இப்போது கவிஞர் தியாகு கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் என்னைப் பார்த்து வரவேற்புரை நீதான் நண்பா என்றார். தயாராக வரவில்லை என்றேன், பரவாயில்லை வா என்றார். இன்னும் 30 நொடிகள் இருக்கின்றன.

இளஞ்சேரல் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார். நான் வரவேற்புரையாற்ற அடுத்த நிகழ்வாக நூல் வெளியீடு. அவைநாயகன் தலைமை வகிக்க, கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் நூலை வெளியிட கவிஞர் வா.மணிகண்டன் நூலைப் பெற்றுக் கொண்டார். கிளிக்.

அவைநாயகன் அவர்களைத் தலைமையுரையாற்ற அழைத்தார் இளஞ்சேரல் . தனக்குப் பிடித்த, தொகுப்பிலிருந்த நான்கு கவிதைகளைப் படித்துக் காட்டி ஒரு சிறு அறிமுகவுரையைத் தந்தார். அடுத்துப் பேசிய இளங்கோ கிருஷ்ணன் இத்தொகுப்பின் கவிதைகளைப் பற்றிப் பேசப் போவதில்லையெனச் சொல்லிவிட்டு இந்தத் தொகுப்புக்கான கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தந்த அனுபவத்தச் சொன்னார். 200 கவிதைகளிலிருந்து வடிகட்டி எண்பது கவிதைகளாக்கித் தந்ததாகச் சொன்னார். என் மனம் மீதமிருந்த 120 கவிதைகளை நினைத்துப் பதைபதைத்தது. ஒவ்வொரு தொகுப்பின் போதும் நிராகரிக்கப்பட்டுவிடும் கவிதைகள் என்ன ஆகின்றன?

அடுத்து வா.மணிகண்டனின் முறை, என்னைப் பேசச் சொல்ல மாட்டார்கள் என்று நினைத்தேன் என்று ஆரம்பித்தார். அப்படி எப்படி நீங்கள் நினைக்கலாம்.? வழக்கம் போலவே இத்தொகுப்பு இரண்டு நாட்களுக்கு முன்புதான் கிடைத்தது படிக்க முடியவில்லை, வரும் போது பேருந்தில் தான் படித்தேன் என்றார். இந்தக் குரல் என் காதுகளில் எண்பத்தியாறாவது முறையாய் விழுகிறது. OK. பின்பும் தேவதச்சன் சொன்ன ஒரு கூற்றைச் சொல்லி கவிதை என்பது ஒரு காட்சியை நான்காவது கோணத்திலிருந்து பார்ப்பது / பார்க்கச் செய்வது என சுவாரஸ்யம் குறையாமல் பேசினார். இதுவரை பேசிய யாருமே ஐந்து நிமிடத்துக்கும் மேல் பேசவில்லை. எதிர்பாராத ஆச்சரியமா இல்லை இது எதிர்பார்த்து இல்லாமல் போன ஏமாற்றமா.? இந்தக்குறையைத் தீர்த்தது இளஞ்சேரல் அவர்கள் தான் வழக்கம் போல தன் நான்கு பக்கத்தில் நுணுக்கிய எழுத்துருவுடன் அச்சிட்ட கட்டுரையுடன் தொகுப்பு குறித்துப் பேசினார். இடையில் அவரின் பிரத்யேகமான பேனர்கள் , விளம்பரங்கள் மற்றும் திறந்த நிலையில் பயணித்த மீன்கள் துள்ளும் மெட்டடோர் வேன் என்று கொஞ்சம் நீண்ட உரை.

இறுதியாக ப.தியாகு. கொஞ்சம் உணர்ச்சிவசப் படுவேன் என்று ஆரம்பித்து, தொகுப்பின் உருவாக்கம் குறித்து சொல்லிப் பின் அனைவருக்கும் தனது நன்றிகளைப் பதிவு செய்தார்.

இடையில், இயற்கை சிவம் பேசினார். தொகுப்பு வெயில் நதியின் முதல் வெளியீடு. எனவே இது ஒரு நூல் வெளியீடு மட்டுமல்ல, ஒரு பதிப்பகத்தின்
வெளியீடும் கூட என்றார்.

விழா நிறைவடைந்தது. வழக்கம் போல போடோ செஷன். அனைவரும் புகைப்படமெடுத்துக் கொண்டோம்

கிளிக்ஸ் ...

அனைவரிடமும் ஐந்தைந்து நிமிடம் அன்பைப் பகிர்ந்து கொண்டு கிளம்பிவிட்டோம். உக்கடத்தில் தேநீர். பேருந்து பொள்ளாச்சி வருவதற்குள் இளையராஜா தாலாட்டி தூங்கவைத்துவிட்டார். பின்பும் சோழநிலா, அமசப்ரியா, கனகராஜன் அனைவரையும் சந்தித்துவிட்டு வீடு வருகையில் நீயா நானா கோபிநாத் அதே கோட்டைப் போட்டுக் கொண்டு கன்னிராசிக்கு பலன் கேட்டுக் கொண்டிருந்தார். சாப்பிட்டு விட்டு இந்தக் கட்டுரையைத் தட்டிச்சிக் கொண்டே நினைத்தேன் இந்நேரம் இளஞ்சேரலும் , பொன் இளவேனுலும் பத்துப் பக்கத்துக்குத் தயார் செய்து பதிவேற்றியிருப்பார்களென. மணி பத்தரையான போது பொடணியில் அறைந்தது நாளை திங்கட்கிழமை என்ற நினைப்பு. பிறகென்ன குட் நைட்.


பின் குறிப்பு : புத்தாண்டிலிருந்து என் சோம்பேறித்தனங்களைப் புறந்தள்ளிவிட்டு இப்படி எல்லா நிகழ்வுகளையும் பதிந்து விடுவதாக இந்த ஆண்டும் (?) முடிவெடுத்துள்ளதால்.. பொறுத்துக் கொள்க... போகப் போக சரியாயிடும்...

எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை " அற்புதமான படைப்பு. தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்த கவிதை அனைவருக்கும் பிடித்திருந்தது. அனைவரும் அக்கவிதையை குறிப்பிட்டுப் பேசினார்கள். அந்தக் கவிதை.

கை கொள்ளுமளவு கற்கள்
தாக்கவென ஒரு கல்லை
மறு கையிலேந்தி
கண் சுருக்கி
குறி பார்த்து நிற்கும்
சிறுவனிடம்

ஒரேயொரு பாறை
ஓணானின் வசம்.

நான்கு காலிலும்
பற்றித்தூக்கி
அவனை நோக்கி
எப்படி எறியப் போகிறதென்றுதான்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.


அற்புதம் தியாகு. வாழ்த்துகளும் அன்பும்....

வியாழன், 31 ஜனவரி, 2013

பொங்கலோ பொங்கல்

"உழவையும் தொழிலையும் நிந்தனை செய்வோம் "

மறுபடியும் படிக்க வேண்டாம். சரியாகத்தான் எழுதப்பட்டுள்ளது . உலகின் மிகச் சிறந்த, ஆகத்தகுதியான விவசாய நாட்டின் இன்றைய நிலையைத் தான் இப்படி எழுதியுள்ளேன்.

விவசாயத்தில் தன்னிறைவு அடைந்ததோடு மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளின் பசிக்கு அட்சய பாத்திரமாய் இருந்த ஒரு தேசத்தின் இன்றைய நிலை என்ன.? விவசாயம் செழிப்பாக உள்ளதா.? விவசாயி சிறப்பாக வாழ்கிறானா.?

                              " இல்லை "

ஏன்.?

விவசாயம் செய்ய மழை இல்லை

விவசாயம் செய்ய நிலம் இல்லை

விவசாயம் செய்ய விவசாயி இல்லை

விவசாயிக்கு வருமானம் இல்லை

எல்லா இல்லைகளும் இறுக்கிப் பிடிக்க, இல்லையென்று ஆகிக் கொண்டிருக்கிறது விவசாயியின் வாழ்க்கை.

பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட இந்த தேசத்தின் பசுமை கருகி கான்கிரீட் காடுகளாக உருமாறிப் போக காரணம் / காரணங்கள் யாவை.?


  • மரங்களையும், காடுகளையும் பல்வேறு காரணங்களையும் காட்டி அழித்து அழித்து மழை வளத்தைக் குறைத்து விட்டோம்.

  • மழை குறைந்து , பயிர் கருகி விவசாயம் பொய்த்து, விவசாயியைப் பிழைக்க விடாது செய்து விட்டோம்.

  • விவசாய நிலங்களையெல்லாம் கூறு போட்டு அடுக்கு மாடிக் கட்டிடங்களாக உருமாற்றி விட்டோம்.

  • விவசாயிகளின் சந்ததியினர் கூட விவசாய நாட்டமில்லாத போது, மற்றவர்களும் அவ்வழியே வந்து விட்டோம்.

  • இடைத்தரகர்களும் , வியாபாரிகளும் கொழுத்த லாபம் பார்க்க, கொள்முதலையே திரும்ப எடுக்க முடியாமல் உழுபவனை வெறுங்கையுடன் நிற்க வைத்தோம்.

  • ஒரு விவசாய நாட்டில், விவசாயத்திற்கான தொலை நோக்குத்திட்டத்தை ( கண்துடைப்புக்குக் கொண்டு வரப் பட்டவை கணக்கிலில்லை ) வகுக்காமல் விட்டு விட்டோம்.

  • நியாயமாக, சரியாகக் கிடைக்க வேண்டிய நீரையே சகோதர முறை கூட தர மறுக்க, வேடிக்கை பார்த்தோம்.

  • காலத்திற்கேற்ப விவசாயத் துறையிலும் அறிவியல் நுட்பங்களைப் புகுத்தி உற்பத்தியைப் பெருக்கத் தவறி விட்டோம்.

  • சரியான திட்டமிடலோ , வழி நடத்துதலோ, ஒரு நிலைப் படுத்துதலோ என வேளாண் துறையை முறையாக கவனிக்காது விட்டு விட்டோம்.

  • சொல்லவே வேண்டாம், இருக்கும் சில திட்டங்களிலும் அரசியலையும் . ஊழல்களையும் உட்புகுத்தி வளர்ச்சியை மட்டுப் படுத்திவிட்டோம்.

  • மழை பெய்தாலும் , பெய்த நீர் வழிந்தோடுவது தார் சாலைகளிலும் சாக்கடை நதிகளிலுமே. மழை நீர்த் தேக்கங்களான குளம்,குட்டை, ஆறு யாவற்றையும் ஆக்கிரமித்து விட்டோம் நம் பேராசையின் பெரு வாழ்வுக்கு.

இவை நம் சிற்றறிவுக்கு எட்டிய, நமது வெறுங் கண்களுக்குப் புலப்பட்ட சில காரணங்கள். சூழலியல் ஆர்வலர்களையும், நிபுணர்களையும் கேட்போமானால் நமக்குக் கிடைப்பவை ஒரு புத்தகம் முழுக்கக் காரணங்களாயிருக்கும்.

எப்படியோ, இன்றைய நிலை.? நாளொரு விவசாயி, வாழ வழியின்றி தற்கொலை செய்து இந்த தேசத்தின் முகத்தில் ரத்தக் கறையைத் தோய்த்து விடும் பரிதாப நிலைக்குத் தௐள்ளப்பட்டுள்ளோம்.


குடும்பம் குடும்பமாக , குலத்தொழிலை விட்டு அடிமை வாழ்வு வாழவும் , பஞ்சம் பிழைக்கவும் தன் மண்ணை விட்டு புலம் பெயர்தல் இன்னும் நடப்பில் இருப்பது நமக்கெல்லாம் வேதனை.

மனம் முழுக்க பாறையின் கனத்துடனும், எதிர்காலம் குறித்த கவலையுடனும், அடுத்த தலை முறையின் வாழ்வு குறித்த அதீத மனக் குழப்பத்துடனுமே இக் கட்டுரை.

இப்படியான இறுக்கமான சூழ்நிலையில் வந்திருக்கிற உழவர் திருநாளில் யாருக்கு வாழ்த்து சொல்லுவது ? யார் கொண்டாடுவது ?

மிஞ்சியிருக்கும் உழவர்களான கடவுளர்களுக்கும் , அவர்கள் விளைவித்ததை உண்டுவிட்டு உழவர் திருநாளில் உலகத் தொலைக் காட்சி வரலாற்றில் முன்னூறாவது முறையாக தனது பண்டிகையை எந்தப் பிரக்ஞையுமற்று தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் கொண்டாடும் நம்மைப் போன்ற் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் , உழவர் திருநாள் நல்வழ்த்துக்கள்.


நன்றி : கருந்துளை சனவரி - பிப்ரவரி '2013