கவிதை ரசனை - இரா.பூபாலன்
கவிதையின் அழகியலை ஒரு முறை
சிலாகித்துப் பேசினால்,
அது தரும் அதிர்ச்சி வைத்தியத்தையும்
திடுக்கிட்டு ரசித்துக் கொண்டாட வேண்டும். இரண்டும்
கவிதையின் முகங்கள் தாம்.
அனைத்துமே கவிதையின் குரல்கள் தாம். கவிஞர்
சுகிர்தராணியின் கவிதைகள் இரண்டாம் வகை. இடமற்று நிற்கும்
/ கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க / பேருந்துக்கு வெளியே / பார்ப்பதாய் / பாசாங்கு செய்யும் நீ / என்னிடம் / எதை எதிர்பார்க்கிறாய் / காதலையா ? எனும்
சுகிர்தராணியின் கவிதையை இதுவரை எத்துணை மேடைகளில், எத்துணை
வகுப்புகளில் எத்துணை பேரிடம் பகிர்ந்திருப்பேன் எனத் தெரியவில்லை. இன்னும்
இன்னும் வாசிக்கும் கணமெல்லாம் அதிர்கிறேன். ஒவ்வொரு
பேருந்துப்பயணத்திலும் இந்தக் கவிதை எப்படியோ பயணச்சீட்டின்றி என்னுடன் வலிந்து வந்து
ஏறிக்கொள்கிறது.. அவரது சமீபத்திய தொகுப்பிலிருந்து அதே அதிர்ச்சியைத் தரும்
கவிதை...
எனதன்பு சகோதரி மணிஷா...
தீண்டத் தகாத சேரி
தீண்டத் தகாத தெரு
தீண்டத் தகாத குடிசை
தீண்டத் தகாத குளம்
தீண்டத் தகாத கிணறு
தீண்டத் தகாத குவளை
தீண்டத் தகாத பாதை
தீண்டத் தகாத சுடுகாடு
தீண்டத் தகாத சிலை
தீண்டத் தகாத நிலம்
தீண்டத் தகாத காற்று
தீண்டத் தகாத வானம்
தீண்டத் தகாத நெருப்பு
தீண்டத் தகாத கண்ணீர்
தீண்டத் தகாத தொழில்
தீண்டத் தகாத சுவர்
தீண்டத் தகாத மக்கள்
தீண்டத் தகாத உணவு
தீண்டத் தகாத ரத்தம்
தீண்டத் தகாத காதல்
தீண்டத் தகாத சாதி
தீண்டத்தகு நம் உடல்
-
சுகிர்தராணி
“நீர் வளர் ஆம்பல்” தொகுப்பு , காலச்சுவடு வெளியீடு-
04652 278525
கவிதைக்கென சில கட்டமைப்பு
விதிகள் இருக்கின்றன, சொற்கள் ஒரு தொடரெனெ, பட்டியலென
வருவது நவீன கவிதை விரும்பாத ஒன்று. அது ஒரு அயர்ச்சியைத் தரக் கூடிய
செயல். ஆனாலும், பொருளின் ஆழம் கருதி, சொல்
திரும்பத் திரும்ப இந்தக் கவிதையில் வந்து நிற்பது அவசியமாகிறது. திரும்பத்
திரும்ப வரும் சொற்கள் திரும்பத் திரும்ப நம்மை குற்றவுணர்ச்சிக்கு ஆட்படுத்துகின்றன. அந்தக்
கடைசிவரி தரும் அதிர்ச்சி நம் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டு அக்னிப் பார்வையால்
எரிக்கிறது. இது மணிஷாவின் மரணத் தருணத்தில் எழுந்த உணர்வலையின் ஓலமென்றாலும், இது
மணிஷாவுக்கான கவிதை மட்டுமா என்ன
? அந்தப் பெயரை இக்கவிதையிலிருந்து
நீக்கிவிட்டால் வன்புணர்வில் துன்புறுத்தப்படுகிற, கொல்லப்பட்ட
எல்லா சகோதரிகளுக்குமான கவிதையாகிறது. மேலும் தீண்டாமையின் கீழ்மைச் செயல்கள்
எல்லாவற்றுக்கும் எதிரான கவிதையாகவும் குரலுயர்த்திப் பாடுகிறது.
கவிதையின் குரல் மிகச் சிறியது
தான் ஆனால் அதனளவில் அது வலியது.
எதிர்க்கத் துணிந்துவிட்டால் மலை
கூட மலையல்ல. எந்த நம்பிக்கையில், எந்த
அறத்தில், எந்த தைரியத்தில் கவிதையின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. அது
காலத்தின் குரலாக எப்படி மாறுகிறது? கவிதை ஒரு தனிக்குரலன்று அது கூட்டு
மனசாட்சியின் ஒருமித்த குரல்.
ஒற்றைக் குரலிலிருந்து கிளம்பி
இந்த சமூகத்தின் சங்கமித்த குரலாக அது மாறுகிறது. அந்தக்
குரலை சிலிர்க்கச் சிலிக்க காட்சிப்படுத்தியிருக்கிறது கவிஞர் வெய்யிலின் கவிதை...
கவிதை நம்புகிறது
பெரும் பொய்களின் சூறாவளிக்கு நடுவே
ஓர் எளிய உண்மையை
அணைந்திடாமல் எப்படி ஏந்திச் செல்வது?
குழம்பி நிற்கும் ஒரு சிவப்பு
எறும்பைப்பார்த்தேன்
அது நசுக்கப்பட்டிருந்தது.
ஆனாலும்,
நகர்ந்தது.
தன் வேதியீரக் கோடுகளைச் சிந்தியபடி
மெல்லமெல்ல ஊர்ந்தது.
பின்னொரு எறும்பு
அக்கோட்டை அடையாளம் கண்டு கொதித்தது-அது
பார்ப்பதற்கு உங்களைப் போலவோ
என்னைப் போலவோ இருந்தது
‘யாவும் பொது!’
என அது முஷ்டியை உயர்த்தியபோது
உலகம் சிரித்தது.
ஆனாலும்
கவிதை நம்புகிறது.
சிறிய எறும்பின் முஷ்டியே என்றபோதும்
அது
அறத்தின் மாபெரும் செங்கோல்.
- வெய்யில்
கவிதையின் குரல் ஓர் எறும்பளவு
தானெனினும் அதனளவில் அது அர்த்தமுள்ளது. விளைவுகளை ஏற்படுத்த வல்லது. யானையின்
காதில் சென்றுவிடும் எறும்பின் வலிமை என்பது பழைய உவமை என்றாலும் இங்கு அது பொருந்திப்போகிறது. இந்தக்
கவிதையில் எறும்பு என்பது எதன் குறியீடு, அதுவும் சிவப்பெறும்பு என்பது எதன்
குறியீடு என்பதும் இந்தக் கவிதை வாசகனின் மனதில் விரிய வேண்டிய ஒன்று. யாவும்
பொது என ஒலிப்பது எறும்பின் குரலன்று. கவிஞனின் குரல். காலத்தின்
குரல். கவிதையின் கடைசி வரி கவிதையை உலகுக்கு உயர்த்திக்காட்டும்
வரி. சங்க காலத்திலிருந்து இன்றைக்கு வரைக்கும் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்
எல்லா வரிகளுக்கும் தலைப்பாகவும்,
உரையாகவும், அடிநாதமாகவும்
இருக்கக் கூடிய வரி இது.
கவிதை அறத்தின் மாபெரும்
செங்கோல்.
ஒவ்வொரு மாதமும் வாசித்த புத்தகங்களிலிருந்து நேசித்த சில கவிதைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் - இரா.பூபாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக