புதன், 18 மே, 2022

கவிதை ரசனை - 4

கவிதை ரசனை - இரா.பூபாலன்

 

கவிதை, ரசனை வடிவத்தின் உச்சம். சொற்களில் நிகழும் ரசவாதம். எல்லோரும் கவனிக்கத் தவறிவிடுகின்ற சாதாரணங்களையும், அசாதாரணங்களையும் கவிதையின் கண்கள் உற்று நோக்குகின்றன. அதன் அழகின் மீதோ அழகின்மையின் மீதோ இன்னும் ஒரு துளி அழகையோ அழகின்மையையோ கூடச் சேர்த்து கவிதை தனக்குள் இருத்திக்கொள்கிறது. ஆகவே கவிதைகள் மொழியின் சிரசில் நட்சத்திரங்களென மிளிர்கின்றன. ஒளியினால் உண்டாகும் வெளிச்சத்தைப் போலவே கவிதையின் மீதும் பிரகாசம் படிவது அதன் கலைத்தன்மையால் தான்.

 

கவிதையின் கண்கள் என்றும் தனித்துவமானவை.  அவை ஒரு விசித்திரப் பிராணியின் கண்களைப் போன்றவை. அவற்றால் 360 டிகிரி கோணத்திலும் பார்க்க இயலும். தினமும் உதிக்கின்ற சூரியன் தான் , தினமும் கடக்கின்ற நகரச் சாலை தான், என்றாவது ஒரு நாள் தான் அதிசயம் நிகழ்கிறது. காரணம் என்றாவது ஒரு நாள் தான் கவிதையின் கண்களால் பார்க்கிறோம்.

 

கவிஞர் பொன் இளவேனிலின் நித்தில அணிகை கவிதைத் தொகுப்பின் மஞ்சள் நகரம் கவிதை நாம் தவறவிடுகிற அதிசயங்களின் ஒரு துளியை நமக்கு உணர்த்தி விடுகிறது.

 

மஞ்சள் நகரம்

 

காலைப் பொழுது

தங்க நிறமாய்ப் பொழிகிறது

 

இளமஞ்சளில் நகரம்

புதியதாய்ப் பொங்குகிறது

 

பச்சையும் மஞ்சளுமாய்

சிரிக்கும் சிறு இலைகளின் மேல்

நீர் மொட்டுகளின் அருகே

சூரியனும் அமர்ந்திருப்பது

இப்பொழுது தான் தெரிந்தது

 

அதிசயம் ஒன்றும் இல்லை

இப்பொழுது தான் கவனிக்க வாய்த்திருக்கிறது

 

- பொன் இளவேனில்

 

" நித்தில அணிகை " வெளியீடு : அகத்துறவு

தொடர்புக்கு : 9629646320

 

பூமியின் சகல இண்டு இணுக்குகளிலும் கவிதை நிறைந்துகிடக்கிறது. அதன் பேரொளியை தரிசிக்க நமக்கு வாய்ப்பது அரிதாக இருக்கிறது. கந்தல் சட்டைக்குள்ளிருந்து சிரிக்கும் கவிதையும், பட்டாடைக்குள் மறைந்திருக்கும் கவிதையுமாக வாழ்க்கை எல்லா மேல், கீழ் விகிதங்களில் கவிதைகளுக்கான கண்ணியை முடிச்சிட்டு வைத்திருக்கிறது.

இருளில் தங்களைப் பார்த்துக்கொண்ட ஒரு ஜோடி நட்சத்திரங்களின் ஒளி நூறு ஆண்டுகள் கழித்து மினுங்குகின்றன பூமியில். கொஞ்சம் அறிவியல் இருக்கிறது தான். என்றோ நட்சத்திரங்கள் உமிழ்ந்த ஒளி பூமியை வந்தடைய ஆண்டுகள் ஆகும் என்கிற அறிவியல். ஆனால் அதுவல்ல கவிதை. இஃதோர் அழகியல் கவிதை. இரு நட்சத்திரங்களின் பரவசம் அந்த நட்சத்திரங்களுக்கு வெவ்வேறு உருவத்தை வரைந்து கொள்ளச் செய்கின்றன. எதேச்சையாக வானத்தை நோக்கும் இரு ஜோடிக் கண்களின் இயற்கையிடமிருந்து கவிதையை காதலுக்குக் கடத்திச் செல்கின்றன. அவைகளுக்குள் பகிர்ந்துகொள்ளப்படும் இரகசியங்கள் கவிதையின் ரகசியமாகவும் இருக்கிறது. கவிஞர் க.மோகனரங்கனின் கல்லாப்பிழை தொகுப்பு சமீபத்தில் வாசித்த அழகான கவிதைத் தொகுப்பு.. அதில் நட்சத்திரமென மினுங்கிய ஒரு கவிதை...

 

 

ஓளியறிதல்

 

இருளில்

ஒன்றையொன்று

கண்டுகொண்ட

இரண்டு நட்சத்திரங்கள்

பரவசத்தில்

நடுங்க

பொலிகிறது

பாலன்ன ஒளி!

ஒரு நூறு வருடங்கள்

கடந்து

ஏதேச்சையாய் வானத்தை

ஏறிட்டு நோக்குகிற

இரு ஜோடிக் கண்கள்

அந்த இரகசியத்தைத்

தமக்குள் பகிர்ந்துகொள்கின்றன

 

 

- க.மோகனரங்கன்

 

"கல்லாப்பிழை" தொகுப்பிலிருந்து

வெளியீடு : தமிழினி

தொடர்புக்கு 8680844408

 

 

வானத்தில் என்றோ நிகழ்ந்த காதல், பூமியின் இன்று நிகழும் காதலோடு நேர் நிற்கிறது. நட்சத்திரங்களின்  பாலன்ன ஒளியென ஒரு பிரவாகம் நம் மீது கவிகையில் கவிதையின் ஒளி பட்டு நாம் பிரகாசமாகிறோம்.

 

ஏதேச்சையாய் வானத்தைப் பார்க்க, நிலவை, நட்சத்திரங்களை நோக்க, சிறு புல்லையும் பாட, கவிதையின் கண்கள் உற்று நோக்கியபடியிருக்கின்றன இயற்கையை. அள்ளக் குறையாது நிறைகின்றன யாவர்க்குமான கவிதைச் சொற்கள்...

 

ஒவ்வொரு மாதமும் வாசித்த புத்தகங்களிலிருந்து நேசித்த சில கவிதைகளை வாசகரகளுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் - இரா.பூபாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக