நண்பர்களுக்கு நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமான வணக்கம்
மகள் பூ.தனிக்ஷா பாரதியின் "புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள்" ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை ஒரு திருவிழாவைப் போல நடந்தது. ஒரு நூறு பேராவது வருவார்கள் இடம் வசதியாக இருக்க வேண்டும் என்று தான் கல்லூரியில் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தோம். ஆனால் வந்தவர்கள் 200 பேர். கல்லூரி முதல்வர் நல்ல நிகழ்வு இதை நீங்கள் கண்டு ரசிக்க வேண்டும் எனக் கூறி விடுதி மாணவிகள் 30 பேரை வரச் சொல்லி இருந்தார். அவர்கள் வரும் போது அவர்களுக்கு அமர இடம் இல்லை என விடுதிக்கே திருப்பி அனுப்பியது மிக வருத்தமாக இருந்தது,. இதற்கும் உறவினர்கள் யாரையும் அழைக்கவில்லை, அலுவலக நண்பர்களுக்கு சொல்லவே இல்லை, பாரதியின் நண்பர்கள் பலரும் விடுமுறைக்கு வெளியூர் சென்றுவிட்டார்கள். தூரத்திலிருந்து இந்த ஒரு சிறு புத்தகத்துக்காக வருவது சிரமமாக இருக்குமே என்று எண்ணியே நான் திண்டுக்கல், தேனி, சென்னை உள்ளிட்ட தூரமிருக்கும் இலக்கிய நண்பர்களை அழைக்கவில்லை. ஆனாலும் இத்தனை நண்பர்கள், இலக்கிய உறவுகள் வந்திருந்து ஒரு ஒன்பதாம் வகுப்பு சிறுமியின் புத்தகத்தை உச்சி முகர்ந்து கொண்டாடியது பெருமிதமான மகிழ்வையும், மிகுந்த நம்பிக்கையையும் தருகிறது.
கணினியில், அலைபேசியில், வீதியில் விளையாடி, பொழுதுபோக்கிக் கொள்ள சகல வாய்ப்புகளும் கிடைக்கப்பெற்ற ஒரு சிறுமி வாசிப்புக்குள் நுழைந்து, எழுத்தை நம்பி இலக்கியத்துக்குள் காலடி எடுத்து வைக்கும் போது நாம் அனைவரும் தந்திருக்கும் இந்த உற்சாக வரவேற்பு அவளுக்குப் பெரும் ஊக்கமாக இருக்கும்... வாழ்த்துகள் தனிக்ஷா பாரதி. நெகிழ்ச்சியான நன்றியும் அன்பும் பொள்ளாச்சி இலக்கிய வட்ட குடும்பத்தினர் அனைவருக்கும்...
ஊரடங்கில் நிறைய வாசித்தேன். இரவு துவங்கி சில சமயங்களில் அதிகாலை வரை வாசித்தேன். அப்போதெல்லாம் என்னுடன் சேர்ந்து பாரதியும் நிறைய வாசித்தாள். சிறுவர் கதைகளில் ஒரு போதாமையை உணர்ந்தவள் பொன்னியின் செல்வன், வேள்பாரி எனத் தொடங்கி நான் வாசிக்கும் கவிதைத் தொகுப்புகளையெல்லாம் வாசிக்கத் தொடங்கிவிட்டாள். இப்போது தமிழாற்றுப்படையும் சில கவிதைத் தொகுப்புகளையும் வாசித்துக்கொண்டிருக்கிறாள். இவ்வளவு வாசித்தவள் சிறுகதைகள், கவிதைகள் எழுதத் தொடங்கினாள். ஆங்கிலத்தில் பத்துக்கும் மேற்பட்ட கதைகளை எழுதி வைத்திருந்தாள். சுமாராகத் தான் இருக்கிறது என்று மட்டும் சொன்னேன். பிறகு கொஞ்சம் மாற்றம் செய்யச் சொல்லலாம் என நினைத்து. ஆனால் அவள் அவை அனைத்தையும் கிழித்துப் போட்டுவிட்டு புதிதாக சில கதைகளை தமிழில் எழுதினாள். நன்றாக இருந்தது என போட்டிகளுக்கு அனுப்ப பரிசும் பெற்றது. இப்படியாக எழுதத் தொடங்கியவள் 300க்கும் மேற்பட்ட ஹைக்கூக்கள் எழுதினாள். அதிலிருந்து அன்பு நண்பர்கள் மு.முருகேஷ், கவின் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி தேர்வு செய்யப்பட்டு தொகுக்கப்பட்ட கவிதைகள் தான் " புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள்' தொகுப்பு...
நிகழ்ச்சி என்னவோ ஒரே ஒரு நூல் வெளியீடு தான் ஆனால் அதற்குக் கிட்டத் தட்ட ஒரு மாதம் உழைத்தோம். நிகழ்வு திட்டமிட்டது, சிறப்பு அழைப்பாளர்களை சந்தித்துப் பேசி தேதி வாங்கியது, கல்லூரி முதல்வரிடம் அனுமதி வாங்கியது, அழைப்பிதழ் தயாரித்தது, பதாகைகள் தயாரிப்பு, சிறப்பு விருந்தினருக்கான நினைவுப்பரிசு தயார் செய்தது, புத்தகங்கள் வடிவமைத்து நிகழ்வுக்குள் அச்சடித்துக் கொண்டு வந்தது, அரங்கத்தைத் தயார் செய்தது, வருபவர்களுக்கான சிற்றுண்டி தேநீர், உணவு தயார் செய்தது, அனைவருக்கும் புத்தகப் பரிசு தயார் செய்தது, நிகழ்ச்சி நிரல் தயாரித்தது, நிகழ்வைத் தொகுத்தது, செய்திமடல் தயாரித்தது,வந்தவர்களை வரவேற்று உபசரித்தது, நிகழ்ச்சி முடிந்ததும் செய்திகளை அனுப்பியது வரை வேலைகளின் பட்டியல் பெரியது.. இதில் பெரும்பாலான வேலைகளை எப்போதும் போல தனது தோள்களில் தூக்கி சுமந்தது கவிஞர் சோலைமாயவன் மற்றும் மாமா செந்தில்குமார் இருவரும் .. அவர்களின் இருப்பு பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் பெரும் பலம். கவிஞர் அம்சப்ரியா, புன்னகை ஜெயக்குமார் இருவரது ஆளுமையும் நிகழ்வின் பக்க பலம் எப்போதும். நினைவுப்பரிசு என்ன செய்யலாம் என்ற யோசனையிலும் தயக்கத்திலும் நண்பர் புன்னகை பூ ஜெயக்குமார் துணையிருந்து அதன் பெரும்பங்கை அவரே நிர்வகித்து தனது படிகள் படிப்பகத்தின் வாயிலாக அதைச் செய்து கொடுத்தார். பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் ஆலோசகர் , செயலில் இளைஞர் நாச்சிமுத்து ஐயா அவர்கள் இந்நிகழ்வின் பொருட்டு ஒரு வாரமாக பொள்ளாச்சியின் பல முக்கிய மனிதர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார், மேலும் பல கல்லூரி, பள்ளி மாணவர்களையும் சந்தித்து அழைப்பு விடுத்தார். விளைவு பல மாணவர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
நிகழ்வு தொடங்குகிறது..
படித்ததில் பிடித்தது வழக்கமான ஒவ்வொரு மாத முதல் அமர்வு. யார் வேண்டுமானாலும் பேசலாம். நிறைய மாணவர்கள், கவிஞர்கள், குழந்தைகள் என அனைவரும் பேசினர்.
நான் வரவேற்புரை வழங்கினேன்.
நூல்வெளியீடு தொடங்கியது... எம் மண்ணின் மகத்தான கவிஞர், அதனினும் மகத்தான வாசகர் பத்மஸ்ரீ சிற்பி அவர்கள் நூலை வெளியிட பொள்ளாச்சி தமிழிசைச் சங்க செயலாளர் ஜி.டி.கோபால கிருஷ்ணன் அவர்கள் பெற்றுக்கொண்டார். உடன் திருமதி மேனகா செந்தில், மற்றும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் இருந்தது.
கவிஞர் க.அம்சப்ரியா மகிழ்வுரை வழங்கி பாரதிக்கு ஒரு ரோஜா பூச்செண்டும் அழகிய புத்தர் சிலையும் பரிசாகக் கொடுத்து அசத்தினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் ரெ.முத்துக்குமரன், கவிஞர் புன்னகை பூ ஜெயக்குமார், கவிஞர் சோலைமாயவன், கவிஞர் கீதாப்ரகாஷ், தமிழிசைச் சங்க செயலாளர் ஜி.டி.கோபால கிருஷ்ணன், சாந்தி நிகேதன் மெட்ரிக் பள்ளி இணைச் செயலர் மேனகா செந்தில் , எழுத்தாளர் பொள்ளாச்சி நாச்சிமுத்து ஆகியோர் அழகிய வாழ்த்துரை வழங்கினர்.
பாரதியின் புத்தகங்களை கவிஞர் சோலைமாயவன், கவிஞர் கதிரவன், கவிஞர் இரா.பானுமதி, கவிஞர் செந்திரு, கவிஞர் சிவமணி, ஆசிரியர் பாலமுருகன், எழுத்தாளர் நாச்சிமுத்து, கவிஞர் சிவஞானம், ஆசிரியர் கீதா , பேராசிரியர் மாரியம்மாள், கவிஞர் புன்னகை இரமேஷ் குமார், கவிஞர் அன்றிலன் என அனைவரும் ஆளுக்கு பத்து, இருபது பிரதிகள் மேடையிலேயே பணம் கொடுத்துப் பெற்றுக்கொண்டனர். இவர்கள் அனைவரும் தங்களது மாணவர்களுக்கு, நண்பர்களுக்கு பாரதியின் புத்தகத்தைப் பரிசளிக்க விரும்புகின்றனர்.
புத்தனின் தலை பல மாணவர்களின் கைகளில் புன்னகைக்கப் போகிறது. மிக்க மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. எழுதி எதைச் சம்பாதித்தாய் என்று யாராவது கேட்டால் இதோ இவர்களைத்தான்; இந்த அன்பைத்தான் சம்பாதித்தேன் என்று சொல்லத் தோன்றுகிறது. இவர்கள் மட்டுமல்லாது புத்தகம் போடுகிறோம் என்று தெரிந்தவுடன் மகிழ்வுடன் பாரதிக்கு பரிசுகளாக தங்கள் அன்பை அள்ளித் தந்த வாமனன் ஐயா, உமாமகேஸ், கீதாப்ரகாஷ், செ.கார்த்திகா, ச.ப்ரியா, பரிமளம் அம்மா, மயிலவன் ஐயா, கே.எம்.சண்முகம் ஐயா, நாச்சிமுத்து ஐயாவும் அம்மாவும், ரத்னாவின் நண்பர்கள் என அனைவரும் ஒரு புத்தக வெளியீட்டு விழாவை மிகப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடினர்.
மீண்டும் நிகழ்வுக்கு ..
சிறப்புரையாற்றிய கவிஞர் சிற்பி... பாரதியிலிருந்து பாரதி வரை ஹைக்கூவின் வரலாறோடு துவங்கி , நூலிலுள்ள சில கவிதைகளை சிலாகித்து மிகச் சிறப்பாக உரையாற்றினார். கவிதைகளில் ஹைக்கூ எழுதுவது என்பது மிகவும் கடினமானது. அதுவும் ஒன்பதாம் வகுப்பு மாணவி எழுதி சிறப்பான முறையில் இவ்வளவு அருமையான நூலாக புத்தனின் தலையில் நூற்றியெட்டு நத்தைகள் கவிதை நூல் வெளியாகியுள்ளது. மிகச் சின்ன வயதிலேயே அறிவாற்றலையும் கவிதைத் திறமையையும் காட்டியவர்கள் அபூர்வமானவர்கள். பாரதியார் தான் தமிழுக்கு முதன்முதலில் ஹைக்கூ கவிதையையும் அறிமுகம் செய்தவர். தற்போது ஏராளமான ஹைக்கூ கவிதைகள் வெளியாகின்றன. ஹைக்கூ ஓர் இயக்கம் போல செயல்படுகிறது. தனிக்ஷா பாரதியின் கவிதைகள் இயற்கையைப் பாடுகின்றன. மிகவும் நுட்பமான கவிதைத் தன்மை கொண்டவையாகவும் இருக்கின்றன. என்று சில கவிதைகளைக் கோடிட்டுக் காட்டினார். எவ்வளவுக்கு எவ்வளவு மனம் எனும் கோப்பையை காலியாக வைத்திருக்கிறோமோ அவ்வளவுக்கு நாம் அதை மகிழ்ச்சியால், அன்பால் நிறைத்துக்கொள்ளலாம் என்று அவர் சொன்னபோது மனம் நிறைவாக இருந்தது. இவ்வளவு அழகான கவிதைகளை எழுதிய சிறுமி தனிக்ஷா பாரதி நாளை மிகச் சிறந்த கவிஞராக உருவாவார்கள் என வாழ்த்திப் பேசினார்.
ஒரு வாசகனாக எவ்வளவு அவரது கவிதைகளை விரும்பி வாசித்திருக்கிறேனோ அவ்வளவு ( இல்லை அதனினும் அதிகம்) அவரது உரையை மிக விரும்பிக் கேட்டிருக்கிறேன். நேர்ப் பேச்சிலும், அரங்க உரைகளிலும் எப்போதும் கருத்துச் செறிவு மிக்க சொற்களையே தருவார். பாரதிக்கு இதெல்லாம் காலத்தின் கொடை. அவளது வாழ்நாளுக்கும் மறக்கமுடியாத பெரும் பரிசு.
நூல் அறிமுகம் செய்து பேசிய கவிஞர் கு.இலக்கியனும் மிக மென்மையாக, மிக நுண்மையாக, சிறப்பாகப் பேசினார். பாரதி போன்ற இளம் எழுத்தாளர்களின் சமகாலத்தில் நாம் வாழ்வது நமக்கே பெருமை என அவர் பேசும் போது நிறைந்தேன்.
ஏற்புரை நிகழ்த்திய பாரதி எளிமையான, அழகான ஒரு உரையைத் தந்தார். முன்னரே என்ன பேசுவது என்று கேட்டார். இது உன் முதல் புத்தகம் நீயே பேசு. இந்தப் புத்தகம் உருவாகக் காரணமாயிருந்தவர்களுக்கு நன்றி சொல் என்று சொல்லி இருந்தேன். அதையும் சேர்த்துப் பேசினார்.
எப்போதும் போல பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நிறைவுப் பகுதியாக கவியரங்கம் இருக்கும். கவியரங்கத்தில் கார்த்திகா, லோகப்ரியா, ஜி.சிவக்குமார், மகுடபதி, சிவஞானம், மோனிஷ், திருப்பதி, ஜமுனா கனகராஜ் என பலர் கவிதை வாசித்தனர்.
நிறைவாக கவிஞர் அம்சப்ரியா அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.
நிகழ்விலேயே முந்நூறு பிரதிகள் தீர்ந்துவிட்டன. ஒரு வெளியீட்டு விழாவில் முந்நூறு பிரதிகள் கவிதைத் தொகுப்பு விற்பனையாகின்றதென்றால் அதைவிடவும் மகிழ்ச்சி ஏது.?
நூல் வேண்டுவோர் தொடர்பு கொள்ள
98422 75662நிகழ்வின் வீடியோக்களை இங்கு காணலாம் :
பத்மஸ்ரீ சிற்பி அவர்களது உரை :
கவிஞர் கு.இலக்கியன் அவர்களது உரை :
தனிக்ஷா பாரதி ஏற்புரை :
மேலும் அனைவரது உரைகளுக்கும்
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் அனைவருக்கும் வழங்கப்படும் செய்தி மடலை நண்பர்கள் இங்கு தரவிறக்கி வாசிக்கலாம்