திங்கள், 1 ஜனவரி, 2018

சென்றுவா 2017



2017 நகர்ந்துவிட்டது 2018 பிறந்துவிட்டது

எத்தனை அனுபவங்கள், எத்தனை படிப்பினைகள், எத்தனை புன்னகைகள், எத்தனை கண்ணீர்த்துளிகள் என ஒவ்வொரு நாளையும் பரமபதமென விளையாடிப்போயிருக்கிறது இந்த ஆண்டு. சில ஏணிகள், சில பாம்புச் சறுக்கல்கள். ஆயினும் ஆட்டம் முடியவில்லை.

2017 பல மகிழ்ச்சிகரமான நாட்களை அளித்தது. ஆனால் அத்துணை மகிழ்ச்சியையும் துளியேனும் அனுபவிக்கவிடாத அளவுக்கு பேரிழப்பு ஒன்றையும் பெரும் மன வலிகளையும் நிறையத் தந்துவிட்டிருந்தது.

2016ல் வெளியான எனது கவிதைத் தொகுப்பான " ஆதிமுகத்தின் காலப்பிரதி " கவிதை நூலுக்காக மூன்று விருதுகளும் 2017ல் கிடைத்தன. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது, நாங்கள் இலக்கியகத்தின் விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் விருது ஆகிய விருதுகள் கிடைத்தன. தேனியில் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் வளரும் படைப்பாளருக்கான விருதும் கிடைத்தது.

இவற்றையெல்லாம் பெறுவது மகிழ்ச்சி ஆனால் கொண்டாடினேனா என்றால் இல்லை. சென்ற ஆண்டின் துவக்கத்திலேயே சற்றும் எதிர்பாராது எங்கள் குடும்பத்தின் ஆணிவேரான அப்பாவை இழந்துவிட்டேன். இன்று வரைக்கும் அதிலிருந்து முற்றிலும் வெளிவர இயலாமல் தவிக்கிறேன்.

நண்பர்களின் புரிதலின்மையால் விளைந்த பிரிவுகள், சச்சரவுகள் மனச் சங்கடங்களும் இன்னும் சேர்த்து அழுத்தின. யாருக்காக ஓடுகிறோமோ அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. யாரைப் பெரிதும் நம்புகிறோமோ அவர்கள் வேறு முகங்களைக் காட்டினர் இப்படி எல்லாமே இழப்பு. எல்லாமே வலி.

பெரிதாக எதுவும் எழுதவில்லை, எதுவும் வாசிக்கவில்லை. வேலைப்பளுவும், மனத்தடையும் வேதனைகளும் சேர்த்து அழுத்தின.

முகநூல் பக்கம் வருவதில்லை. எப்போதாவது வந்தாலும் நண்பர்களுக்குப் பிறந்தநாள் பதிவு போட்டுவிட்டு சென்றுவிடுவது. இப்படித்தான் கழிந்தது.
முகநூலில் என்னை விமர்சித்து வந்திருந்த பதிவுகளைக் கூட நான் பார்க்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து தோழர்கள் சொன்ன பிறகு பார்த்தேன். சிரிப்பு வந்தது. நான் நம்பிய, நான் உதவிய , நான் விரும்பிய நண்பர்கள் கூட என்னை இப்படி நினைக்க முடியுமா என்ற விரக்தி மட்டும் மிஞ்சியது. அது தொடர்கிறது. எனது எண் இருக்கிறது எப்போது அழைத்தாலும் எடுக்கிறேன். அழைத்துப் பேசியிருந்தால் உண்மை தெரிந்திருக்கும் என்பதை நினைக்காமல் நான் பிழை செய்திருக்கக் கூடும் என்ற தவறான அனுமானத்தில் என்னை விமர்சிக்கும் யாருக்கும் என்னிடம் எந்த பதிலும் இல்லை. அவர்களுக்கும் சேர்த்து தான் நான் அன்பு செய்கிறேன்.


எப்போதும் தனிமையை விரும்புபவன் நான். அது ஒரு சுகத்தைத் தந்து கொண்டிருந்தது. ஆனால் சமீப நாட்களாக தனிமைக்கு பயப்படுகிறேன். அது மேலும் என்னை வதைக்கிறது. அது என்னை என் நினைவுகளை வைத்தே அழுத்திக் கொல்கிறது.

நிறைய நல்ல நண்பர்களை விட்டு விலகி இருந்திருக்கிறேன். யாரிடமும் பேசுவதில்லை. ஒரு மாதிரியான அழுத்தங்களும் சதா சர்வகாலமும் ஊசிக் குத்தலாய்க் குத்தும் இழப்புகளின் நினைவுகளுமாகவே கழிந்தது இந்த ஆண்டு. ஆனாலும் என்னை, எனது நிலையைப் புரிந்து கொள்ளும் நண்பர்கள் எப்போதும் போலவே அணைத்துக்கொள்கிறார்கள்.

இத்தனை வலிகளிலும் இருந்து தப்பிக்கொள்ளவும் சதா சர்வ காலமும் ஒரே ஒருத்தியின் சின்னஞ்சிறு ஒளிநிழலில் குறுகிப் படுத்துக்கொண்டேன்.
அவளுடனே எனது பொழுதுகள் அதிகம் கழிந்தன. பேசுவது, கதை கேட்பது,பாடல் கேட்பது, வெளியில் எப்போதாவது செல்வது என்பது தான் எனக்குக் கிடைத்த ஆறுதல்கள்.

சென்ற ஆண்டின் நிறைய நேரம் குடும்பத்துடன் செலவு செய்ய முடிந்தது. இலக்கிய வட்டப் பணிகளில் தொடர்ந்து வேகம் குறையாமல் இருக்க முடிந்தது. அது தான் கொஞ்சம் நிம்மதி.

சென்ற ஆண்டின் மனத்தடைகளிலிருந்து வெளிவர வேண்டும். இன்னும் சிறப்பாக இயங்க வேண்டும். எழுதவும் வாசிக்கவும் வேண்டும்


நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்








4 கருத்துகள்:

  1. புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. இதுவும் கடந்து போகும்....

    மனத்தடைகள் நீங்கி மகிழ்வோடு இருக்க எனது வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. துன்பம் என்பதை அறிந்தால் மட்டுமே இன்பம் எத்தகைய சுவை என்பதை அறிய முடியும். அனைத்தும் நன்மைக்கே அண்ணா. உங்களால் முடியும் என்ற நம்பிக்கை அவனிடம் உள்ளது வாழ்வில் ஏற்படும் சோதனைகளை வேதனைகளாக நினைக்காமல் சாதனையாக மாற்றும் உங்கள் திறம் முளையிடும் கவிஞர்கள் பலருக்கு உரம்! உங்கள் உரத்தில் முளைக்க இருக்கும் மொட்டின் வணக்கங்களும் வாழ்த்துக்களும் இன்னும் பல சாதனைகளை படைக்க... சோதனைகளை உடைக்க...

    பதிலளிநீக்கு