புதன், 5 ஏப்ரல், 2017

வேரென நீயிருந்தாய் … ( அப்பாவின் நினைவுகள் )



“ அப்பா, கோவில் பாளையம் வந்துட்டேன், ஏதாவது வேணுமா ?,”
“ வந்துட்டயாப்பா , தக்காளி ஒரு கிலோ, பச்சை மிளகாய் ஒரு கிலோ வாங்கிட்டு வா "
வீட்டுக்குப் போனதும் எவ்வளவு என்று கேட்பார். "முப்பது ரூபாய் தான்பா.” பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து விடுவார்.
“ அப்பா, பொள்ளாச்சில இருக்கேன், ஏதாவது வேணுமா ? “ சாப்பிட ஏதாவது வாங்கி வரவா ? “
“ வேண்டாம் பா. சாப்பிட இருக்கு "
“ இல்லப்பா, நானும் பாப்பாவும் சாப்பிட வந்தோம். உங்க எல்லாருக்கும் வாங்கிட்டு வந்துடறேன் " வாங்கிக் கொண்டு போனால் அதற்கும் பணத்தைக் கொடுத்துவிடுவார்.
“ ஏன் பா, இப்படி எல்லாத்தையும் நீங்களே பாத்துட்டா நான் என்ன பண்றது ?”
“ இன்னும் இரண்டு வருஷம் இப்படி ஓடி ஓடி உழைப்பனா ? அப்புறம் என்னப்பா, சிவனேன்னு ஊர்ல போய் நல்லா ஓய்வெடுப்பேன்ல. அப்போ முடிஞ்சா நீ என்னை பாத்துக்க. அப்பவும் உங்களையெல்லாம் தொந்தரவு பண்ணவே மாட்டேன். என் ஆசையெல்லாம், இப்படி ஓடிட்டு இருக்கும் போதே போயிடனும் " என்பார்.

என்னை எந்தச் சூழ்நிலையிலும் முகம் வாடிக்கூடப் பார்த்துவிட விரும்பாத அப்பா இப்போது இல்லை. இன்றோடு ஒரு மாதம் ஆகிறது. கடந்த மார்ச் ஒன்றாம் தேதி வயிற்று வலி என பொள்ளாச்சியில் காட்டிவிட்டு அவர்களின் பரிந்துரையின் படி பிஎஸ்ஜி மருத்துவமனையில் சேர்த்தோம். குடல் இறக்கம் அறுவை சிகிச்சை 15 ஆண்டுகளுக்கு முன்னரே செய்திருந்தார். அந்தத் தையலில் குடல் ஒட்டி மீண்டும் இறங்கியிருக்கிறது. குடலில் அடைப்பு இருக்கிறது, மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். அன்றிரவு பத்துமணிக்குத் துவங்கி பன்னிரண்டு மணிக்கு அறுவை சிகிச்சை முடிந்தது. முடிந்து அரை மணி நேரத்திலேயே தீவிர சிகிச்சைப்பிரிவில் பார்த்துப் பேசினேன் அப்பாவிடம். அடுத்த நாள் இருந்துவிட்டு மறுநாள் அறைக்கு மாற்றிவிடலாம் என மருத்துவர் சொன்னதைச் சொன்னேன் . சரி என்றார்.

அடுத்த நாள் தீவிர சிகிச்சைப்பிரிவிலேயே இருந்தார் நன்றாகவே பேசினார். மறுநாள் அறைக்கு மாற்றினார்கள் நன்றாகத்தான் இருந்தார். நான்காம் தேதி தம்பியை அப்பாவுடன் இருக்கச் சொல்லிவிட்டு நான் வீட்டுக்கு வந்திருந்தேன். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அம்மாவை அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்லாலாம், திங்கட்கிழமை வீட்டுக்குக் கிளம்பிவிடலாம் என்று மருத்துவர்கள் சொல்லியிருந்தார்கள். மார்ச் 5 அதிகாலை 12.45க்கு தம்பியிடமிருந்து அவசர அழைப்பு அப்பாவுக்கு மூச்சுத் திணறல் இருப்பதாக. பதறியபடி மருத்துவமனைக்கு அடித்துப்பிடித்து ஓடினேன். நான் சென்று சேர்ந்த நேரம் 1.45 இருக்கும். வாசலிலேயே தம்பி இருந்தான். அண்ணா, பெரியப்பா நம்மள விட்டுப் போயிட்டார்ணா " என்றான்.
நள்ளிரவில் கழிவறைக்குச் சென்று திரும்பியவருக்கு Massive Cardiac Arrest என்று சொல்லக்கூடிய மாரடைப்பு என்று சொல்கிறார்கள். மருத்துவர்கள் நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என கை விரிக்கிறார்கள்.
ஒரு கணம் உலகம் ஸ்தம்பித்துவிட்டது. நம்ப முடியவில்லை. நாளை வீட்டுக்குக் கிளம்பிவிடலாம் என்று சொல்லி இருந்தேனே. நான்கு நாட்கள் சாப்பிட எதுவுமே கொடுக்கவில்லையே நாளை ஏதாவது தரலாமா என்று மருத்துவரிடம் கேட்டிருந்தேனே. எதுவுமே இனி இல்லையா ? அறைக்குச் சென்று பார்க்கிறேன். அப்பாவின் உடலை வெள்ளைத் துணியால் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். உடைந்துபோய் கதறுகிறேன்.

பயிற்சி மருத்துவர் கண் கலங்கி மன்னித்துவிடுங்கள் என்று சொல்லியபடி அப்பாவின் கடைசி நிலைகளை விலக்குகிறார். நான் என் வாழ்வின் கொடுங்கணத்தில் இருக்கிறேன். என்னால் கேட்க முடிகிறது ஆனால் மனம் மாரிலடித்துக்கொண்டு அழுதுகொண்டிருக்கிறது. அப்பாவின் நினைவுகளுடன் இப்போது அம்மாவை நினைத்துப்பார்த்தால் நெஞ்சு எனக்கு வலிக்கிறது. அய்யோ அம்மா ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருப்பாளே, அவளுக்குத் தெரிந்தால் என்ன ஆகும்.

மாமா வந்துவிட்டார், அம்மாவுக்குச் சொல்லவில்லை. மருத்துவமனையின் சம்பிரதாயங்களை முடித்துவிட்டு, அப்பாவை அமரர் ஊர்தியில் ஏற்றுகிறோம். அப்பாவின் காலருகில் அமர்ந்திருக்கிறேன் அவரது பாதங்களை வெறித்தபடி..
நினைவுகள் அப்பாவை சுற்றிச் சுழல்கின்றன. எவ்வளவு பெரிய பேரிழப்பு. இன்னும் பல ஆண்டுகள் என்னோடு இருப்பீர்கள் என்று நம்பினேனே அப்பா. எனக்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்று என் ஒவ்வொரு தோல்வியிலும் வெற்றியிலும் மகிழ்ச்சியிலும் வருத்தத்திலும் நம்பிக்கையாகவும் பெருமையாகவும் கர்வமாகவும் நினைத்திருந்தேனே அப்பா. இனி யார் இருக்கிறார்கள் ? யார் இருந்தாலும் அது நீங்கள் ஆகுமா ?

5 மார்ச் 2017 என்ற ஒரு நாள் என் நாட்காட்டியில் இல்லாமல் போயிருந்தால் எப்படி இருக்கும் ? இது ஒரு கெட்ட கனவாயிருக்கக் கூடாதா என்ற அபத்த ஆசையும் வந்து கொண்டேயிருந்தது.

அப்பா, எல்லா குழந்தைகளுக்கும் முதல் கதாநாயகன். எனக்கும் அப்படித்தான். என் கதாநாயகன், என் முன்னோடி, என் ரட்சகன். எல்லோரும் வாழ்க்கையை பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பித்ததாகச் சொல்வார்கள். அப்பா தன் வாழ்க்கையை மைனஸிலிருந்து ஆரம்பித்தவர்.
அப்பா பிறந்து சில வருடங்களிலேயே, அப்பாவின் அப்பா வேறொரு பெண்ணுடன் சென்றுவிட அப்பாவின் அம்மா இவரையும் இவரது தம்பியையும் விட்டுவிட்டு வேறொருவருடன் சென்றுவிட்டார். இன்று வரை அவரது அம்மா எங்கு என்று தெரியாது. அவரது அப்பா அவ்வப்போது வருவார் போவார். சில வருடங்களுக்கு முன்பு தான் அவரும் இறந்துவிட்டார். யாரிடமும் பெரிதாக சொல்லாமல் நாங்களே இறுதிக்கடன்களை நிறைவேற்றிவிட்டு வந்தோம்.

இப்படியாக ஐந்து வயதிலேயே நிராதரவான அப்பாவுக்கு பாட்டி தான் ஆதரவு. அம்மாவின் அம்மா. ஆதரவென்றால், அவரும் நான்கு பெண்களைப் பெற்றவர். அன்றாட வாழ்க்கைக்கே அல்லல் பட்டுக்கொண்டிருந்தவர். அப்பா, தனது ஏழு வயதிலேயே வீட்டு வேலைக்குச் சேர்ந்துவிட்டார். அன்றிலிருந்து கடைசி வரைக்கும் உழைத்தவர். ஆரம்ப நாட்களிலிருந்து அவர் பட்ட துன்பங்களை எப்போதாவது சொல்வார். மலைப்பாயிருக்கும், அவ்வளவு வலிகளையும் துன்பங்களையும் வறுமையையும் கடந்து வந்தவர். அவர் பட்ட துன்பங்களை நினைத்து அழுதிருக்கிறேன்.அதனாலேயே எப்போதும் தான் பட்ட துன்பங்களை நான் அனுபவிக்கக் கூடாது   என்பார். என்னை கஷ்டப்பட விடக்கூடாது என நினைப்பார்.

சிறு வயதில் ஒரே ஒரு முறை என்னை அடித்திருக்கிறார். அதன் பின்பு இன்று வரைக்கும் கை ஓங்கியதில்லை. ஆனால், கண்டிப்பானவர். அவர் பேச்சை மீறவும் மாட்டேன்.  எப்போதும் அப்பா அம்மாவுடன் அல்லது மாமாவுடன் மட்டுமே வெளியில் போகும் நான், முதன் முறையாக பத்தாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறைக்கு அவ்வை சண்முகி படத்துக்கு நண்பர்களுடன் போகிறேன் என்று கேட்ட போது மறுத்து விட்டார். இப்போதெல்லாம் நண்பர்களுடன் போகக் கூடாது என்றார். அதன் பின்பு எப்போதும் நான் கேட்டதில்லை. கல்லூரி இறுதியாண்டில் ஒரு முறை தொலைபேசியில் அழைத்து " அப்பா, கல்லூரி பாதி நேரம் விடுமுறை. பசங்க எல்லாரும் படத்துக்குக் கூப்பிடறாங்க போய்ட்டு வரட்டுமா ? “ என்று கேட்ட போது, “ சரிப்பா, மளிகைக் கடைக்கு போ, நான் சொல்லிடறேன், அவங்க பணம் தருவாங்க போய்ட்டு ஏதாவது சாப்பிட்டுட்டு வா " என்றார். தேவையான சமயங்களில் அளப்பரிய சுதந்திரத்தையும் நம்பிக்கையையும் தந்தவர்.

மாமா வீட்டுக்கு சிறு வயதில் வாரா வாரம் போய் விடுவோம். சனிக்கிழமை இரண்டாம் ஆட்டம், மாமா , அப்பத்தா அப்பா அம்மா என நிறையப் பேர் போவோம். வீட்டுக்கும் திரையரங்கத்துக்கும் இரண்டு கிலோமீட்டர் தூரம். நடக்க வேண்டும். நான் படத்தின் இறுதிக் காட்சி வரும் போதே தூங்கிவிட்டதைப் போல பாசாங்கு செய்வேன். படம் முடிந்ததும் பத்து வயதுப்பையனை தோளில் தூக்கிச் சுமந்தபடி வீட்டுக்கு வருவார். சிரித்தபடி இறங்கி ஓடிப் படுத்துக்கொள்வேன். ஒவ்வொரு வாரமும் இது நடந்திருக்கிறது. இப்போது வரைக்கும் என்னை அப்படித்தான் தூக்கிச் சுமக்கிறார்.

அப்பா முதன் முதலில் அழுது நான் பார்த்தது எனக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் கிடந்த அன்று. அதன் பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சைக்காக பதினைந்து வருடங்கள் முன் அறுவை அரங்குக்குப் போகும் முன் என்னைப்பார்த்து அழுதார். நானும் அழுதேன். அவ்வளவுதான். தைரியமும் பிடிவாதமும் தீர்க்கமும் கொண்டவர். இந்த முறை அவர் அறுவைக்குப் போகும் போது அழவில்லை. நானும் அவரது தலையைத் தடவி நம்பிக்கையாக அனுப்பி வைத்தேன்.

அப்பா ஒரு கேண்டீன் வைத்திருந்தார். தனது தொழிலில் நேர்மையாயிருக்கும் ஒருவருக்கு இருக்கும் மிகப்பெரிய தன்னம்பிக்கை , சற்றேயான கர்வம் அவருக்கு எப்போதும் இருக்கும். ஒரு போதும் தரத்தில் சமரசம் செய்து கொண்டதே இல்லை. நாங்கள் எங்களுக்கு என்ன சமைக்கிறோமோ அதே தான் அனைவருக்கும் . விலை குறைந்த பொருட்களையோ , காய்கறிகளையோ அவர் ஒரு போதும் பயன்படுத்த மாட்டார். நிறுவனத்துக்குள் இருக்கும் கேண்டீன் என்பதால் விலை குறைவாகவே இருக்கும். ஆனாலும் அதற்கும் மீறிய சுவையும் தரமும் அவருக்கு இருந்தாக வேண்டும். 24 ஆண்டுகள் அது தான் அவர் தொழில், அவர் உழைப்பு , அவர் சிந்தனை மட்டுமல்ல அவர் உயிரும் கூட அது தான். இறப்பதற்கு முந்தைய நாள் இரவு கூட தேங்காய்க்காரர், காய்கறிக்காரர் என அனைவருக்கும் அழைத்து திங்கட்கிழமை எல்லாம் சரியாக வந்து விட வேண்டும் என கட்டளையிடுகிறார். இப்போதும் நாங்கள் நம்பிக் கொண்டிருக்கிறோம். அந்தத் தொழிற்கூடத்தின் கேன்டீனில் தான் அவர் இருக்கிறார் நினைவுகளாக என்று. சதா சர்வகாலமும் அதே நினைவிலிருந்தவரல்லவா..

நான் காதலிப்பேன் என நானே நம்பவில்லை. அவரா நினைத்திருப்பார். என் விருப்பத்தை  காதலியிடம் சொல்லும் முன்னர் உங்களிடம் தான் முதலில் சொல்ல வேண்டும் என்று சொல்லி அவரிடம் சொன்னேன். “ எனக்கு ரத்னாவைப் பிடிச்சிருக்குப்பா உங்களுக்கு ? “ என்று கேட்டபோது , எங்களுக்கும் அதே எண்ணம் தான், உன் விருப்பம் தான் எங்கள் விருப்பமும் என்று எங்களுக்குத் திருமணம் செய்து வைத்து இன்று வரைக்கும் என் குடும்பத்தையும் சேர்த்து அவர் தான் கவனித்துக்கொள்கிறார். வீட்டைப் பற்றிய எந்தக் கவலையுமின்றி நீ ஜாலியா இரு எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்பார். மளிகை, காய்கறி முதல் கொண்டு எல்லாமே வீட்டுக்கு வந்து விடும். ஒரு முறை கூட நாங்கள் அலைந்ததில்லை எதற்கும்.

சென்ற வருடத்தில் ஒரு நாள் , கிராமத்தில் அம்மா பெயரில் இருக்கும் பூர்விக வீட்டை என் பெயருக்கு மாற்றிக்கொள்ளச் சொன்னார். நான் இப்போது என்ன அவசரம் மெதுவாகச் செய்யலாம் என்றேன். ஆனால், அவர் ஒன்று நினைத்தால் முடித்து விடுவார். அந்த வீட்டை என் பெயருக்கு மாற்றச் செய்தார். வீட்டு வரி, தண்ணீர் வரி, மின்சார இணைப்பு அனைத்தையும் என் பெயருக்கு மாற்றுவதை கண்காணித்து உறுதிப்படுத்திக் கொண்டார். என் காலத்துக்குப் பிறகு நீ எதற்கும் அலையக் கூடாதுப்பா என்றார். மனைவியை அவரது பெற்றோர் அழைப்பது போலவே பாப்பா என்று தான் அழைப்பார். மகள் அவருக்கு குட்டிமா. என்னிடம் பாப்பா வந்து விட்டாளா என்று கேட்டாள் மனைவியைக் கேட்பார். குட்டிப்பாப்பா என்று மகளைக் கேட்பார்.

அவர் என்னிடம் எப்போதும் ஒரு கண்டிப்பு முகத்தைத் தான் காட்டியிருப்பார். எத்தனை பாசமான முகத்தைக் காட்டினாலும் அதில் ஒரு கண்டிப்பு இருக்கும். ஆனால் பேத்தியிடம் அவர் காட்டிய முகம் வேறாக இருந்திருக்கிறது. அவர் இறந்த பிறகு என்னிடம் இருக்கும் அவரது கைபேசியில் பேத்தியும் தாத்தாவும் எடுத்துக்கொண்டிருக்கும் புகைப்படங்களைப் பார்த்து அழுதிருக்கிறேன். இப்படி ஒரு மலர்ந்த அப்பாவின் முகத்தை நான் அவ்வளவாகப் பார்த்ததே இல்லை. எப்போதும் வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருப்பவர். பாரதியுடன் அவ்வளவு நெருக்கமாக இருந்திருக்கிறார். அவள் பெரியவளாகி அவளுக்கும் ஒரு குழந்தை வரும் வரைக்கும் நீங்கள் இருப்பீர்கள் உங்கள் விருப்பப்படி தான் அனைத்தும் நடக்கும் என்று நான் மனைவியிடம் சொல்லியிருந்தேனே அப்பா. என் கனவுகளைப் பொய்யாக்கிவிட்டல்லவா போயிருக்கிறீர்கள்.

வண்டியில் அப்பாவின் உடலைக் கொண்டு வந்து கிராமத்து வீட்டில் வைத்திருக்கிறோம். அம்மாவுக்கு ஒன்றும் சொல்லாமல் தம்பியையும் ரத்னாவையும் அழைத்து வரச் செய்தோம். அவர் வந்த போது நான் முற்றிலும் உடைந்து விட்டேன். இருபத்தி நான்கு மணி நேரமும் அப்பாவுடன் அவர் தான் உலகம் என்றிருந்தவர். அம்மாவைக் காணச் சகிக்கவில்லை. இயலவில்லை. அம்மாவை இப்படி அழ வைத்ததற்காவும் இப்படி விட்டுப் போனதற்காகவும் அப்பா மீது ஆத்திரமாக வருகிறது.

அப்பாவின் உடலைச் சுற்றிச் சுற்றி வந்து அழுகிறேன். முதல் நாள் எனது கண்ணீரை அனுமதித்த பாரதி அவளும் அழுது தீர்த்தாள். அடுத்த நாள், நான் அவளுக்குத் தெரியாமல் போய் அழ வேண்டி இருந்தது. 180 டிகிரி பார்வையால் என்னைக் கண்காணித்தபடியே இருப்பாள். எப்போது அழுதாலும் ஓடி வந்து கட்டிக் கொண்டு அப்பா போதும் பா அழாதீர்கள் என்று அழுவாள். அவளுக்காக என் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொள்கிறேன். அவளுக்கு நான் அப்பா. என் அப்பா எனக்கு இருந்ததைப் போல அவளுக்காக நான் வாழ வேண்டும்.

அப்பாவின் இறுதிச் சடங்குக்கு வந்த தேங்காய்க்காரர் தம்பி அப்பா எனக்கு பத்தாயிரம் என் மருத்துவச் செலவுக்குத் தந்திருக்கிறார் திருப்பித் தந்துடறேன் என்கிறார். அப்பாவுக்கு காய்கறிகள் கொண்டு வரும் ஆட்டோக்கார அண்ணன் அப்பா என் பொண்ணு காது குத்துக்கு பதினைந்தாயிரம் தந்திருக்கிறார் தந்து விடுகிறேன் என்கிறார். இது தான் அப்பா. யாரிடமும் கடன் இல்லை. கஷ்ட காலத்திலும் கையேந்தாமல் வாழ்ந்தவர். தன்னைப்போல யாராவது கஷ்டப்படுவதைப் பார்த்தால் இருப்பதைத் தந்து விடுவார்.

மின்மயானத்தின் நகரும் உருளைகளுக்கு மேல் அப்பாவைக் கிடத்திவிட்டு அவரது நெஞ்சு மேல் சூடத்தைப் போட்டு என்னை நெருப்பு வைக்கச் சொல்கிறார்கள் என் கதாநாயகனுக்கு, என் கடவுளுக்கு, என் கண்டிப்பான நண்பனுக்கு நெஞ்சின் மேல் நெருப்பிட்டு உள்ளனுப்பி தீக்குத் தின்னக் கொடுத்துவிட்டேன் அப்பாவை.
என் காலாதி காலக் கண்ணீரை சிந்திக்கொண்டிருக்கிறேன். மறதியைப் போலொரு மாமருந்தில்லை என வைரமுத்துவின் வரிகள் ஒலிக்கின்றன. அந்த மாமருந்து எனக்கு வேண்டாம். என் நினைவுகளில் எப்போதும் இருக்கட்டும் வலியாகவும் கண்ணீராகவும்.

இனி அப்பா என்னுடன் தான் இருப்பார் என்று நான் நம்ப வேண்டும். ஒவ்வொரு கவளம் சோறு உண்ணும் போதும் அவரது முகம் வரும், காரின் இடது பக்க முன்னிருக்கையைக் கூர்ந்து கவனித்தால் உட்கார்ந்திருப்பார் பொறுமையா ஓட்டுப்பா என்று. எங்கு போவதாக இருந்தாலும் போய்ச் சேர்ந்த அடுத்த நொடி வழக்கம் போலவே அழைப்பார் பத்திரமா போய்ட்டயா என்று, எப்போது துவண்டு விட்டாலும் தோள் தடவுவார் நான் இருக்கிறேன் என்று. வீட்டுக்கு வர சற்று தாமதமானாலும் அழைப்பார் கண்டிப்பான குரலுடன். அந்த நம்பிக்கையைத் தான் அவர் தந்திருக்கிறார். அப்பா இருக்கிறார் என்ற நம்பிக்கை தான் என்னை வாழ வைக்கும். ...







11 கருத்துகள்:

  1. வார்த்தைகள் இல்லை தேத்திட...

    அப்பா இருக்கிறார் என்ற நம்பிக்கை வாழ வைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  2. அப்பாவோடு வாழ்ந்த
    வாழ்வின் அடையாளங்கள்
    உள்ளத்தில் இருந்து
    உங்களை வழிகாட்டுமே!

    பதிலளிநீக்கு
  3. மீண்டு வாருங்கள் பூபாலன் அப்பாக்கள் நம்மைப் பிரியமாட்டார்கள்

    பதிலளிநீக்கு
  4. ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பரே
    ஆழ்ந்தஇரங்கல்கள்
    மருத்துவ மனையில் இருந்தும், காப்பாற்ற முடியவில்லை என்றால்
    மருத்துவ மனைகள் இருந்து என்ன பிரயோசனம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "மருத்துவ மனையில் இருந்தும், காப்பாற்ற முடியவில்லை என்றால்
      மருத்துவ மனைகள் இருந்து என்ன பிரயோசனம்" மிகவும் சரி

      நீக்கு
  5. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இதுவே. நெஞ்சின் பாரத்தை எழுத்தில் இறக்கி வைத்தீர்கள். மன்னரகள் கல்லில் வடித்தார்கள். நாம் இணையத்தில் பொறிக்கிறோம். நினைவுகள் அங்கு நிரந்தரமாய் இருக்கும். உங்கள் தந்தையின் ஆன்மா சாந்தி அடைவதாக.

    இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  6. அழுதேவிட்டேன், என் தகப்பனின் நினைவுகளில். ஒவ்வொரு அப்பாவும் இப்படிதானோ. கண்டிப்பான முகத்தை வெளிகாட்டி உள்ளே நாம் உறங்க பஞ்சு மெத்தை இட்டு வைத்திருப்பார்களோ.

    என் அப்பா இறந்தபோது எனக்கு 25 வயது. என் தம்பி அப்போதுதான் கல்லூரி சேர்ந்திருந்தான். எல்லாவற்றையும் சமாளித்தாயிற்று வாழ்க்கையில்.

    இந்த வலியைத் தாங்குவது கடினம். இருந்தும் நாம் பயணிக்க இன்னும் வெகு தொலைவு இருக்கிறது. காலம் நம்மை கடத்தும் வெளி. அவ்வாறு இல்லையென்றால் என் செய்வோம்.

    வருத்தம் தேறி வர வேண்டுகிறேன் பூபாலன்.

    பதிலளிநீக்கு
  7. வருத்தம் மேலிட வரிகள் ஒவ்வொன்றிலும் என் தந்தையுடன் நான் வாழ்ந்த வாழ்க்கையினை மீட்ணகொணர்ந்தேன். நான் 8ம் வகுப்பு படித்தபோதே என் தந்தையினை இழந்துவிட்டேன் தோழர். அந்த வகையில் என்னைவிட நீங்கள் பாக்கியசாலி. மீண்டு வாருங்கள் உங்கள் தந்தை உங்கள் முன்னேற்றத்தை பார்த்துக்கொண்டிருப்பார் இவ்வுலகின் அனைத்து திசைகளிலும் உங்கள்மீதான நேசத்தின் கண்கள்கொண்டு.... மற்றும் உங்கள்மீது அன்பு கொண்டோர்களுக்காகவும்...

    பதிலளிநீக்கு
  8. சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை

    பதிலளிநீக்கு