திங்கள், 10 நவம்பர், 2014

காதல் காதல் காதல், காதல் போயின்..?

நான் இதை எழுதலாமா என்று தெரியவில்லை.. பல முறை யோசித்துவிட்டுப் பதிகிறேன். கொஞ்சநேரமாக எனக்கு நானே சிரித்துக் கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கை தினம் தினம் நமக்கு எத்தனை விசித்திரமான அனுபவங்களைத் தருகிறது.

சனிக்கிழமையன்று மகளுக்கு கேக் ஷாப்பில் சாப்பிட வாங்கித் தந்துவிட்டுக் கிளம்பும் போது எதிரில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். என்னைப் பார்த்துச் சிரித்தாள். எனக்கு ரொம்பக் குழப்பம், மறதி என் மகாப் பலவீனம். யோசித்து ஒரு நிமிடம் குழம்பினேன் யாரென்று ஞாபகம் வந்து விட்டது அதற்குள் அவளே "அண்ணா நல்லா இருக்கீங்களா , என்னை ஞாபகம் இருக்கிறதா , இது உங்க பொண்ணா" என்று கேட்டாள். "ஆம்" என்றேன், அவளது கன்னத்தைக் கிள்ளிவிட்டு, தான் இப்போது ஆசிரியராகப் பணிபுரிவதாகவும், தனக்கு ஆறு மாதத்துக்கு முன்னர் தான் திருமணமானதாகவும் சொன்னாள். பார்த்தாலே தெரிந்தது. போய் வருகிறேன் என்று சொல்லிக் கிளம்பிவிட்டேன்.

ஆம், இன்னும் எதற்குச் சிரித்துக் கொண்டிருக்கிறேன்...?

அதிகமில்லை இரண்டு வருடங்களுக்கு முன் தான் அவளைச் சந்தித்தேன். நன்றாகக் கவிதை எழுதுவாள், அழகாக ஓவியம் வரைவாள். ஒரே ஒரு முறை சந்திப்பு, பின்னர் இரண்டு முறை கவிதைகளாகக் கொஞ்சம் உரையாடல். நான்காம் முறை பேசியது அவள் என்னைப் பார்க்க வந்த போது. இந்தமுறை அவளிடம் ஒரு கடிதம் இருந்தது. என்னைப் பிடித்திருப்பதாக நேரடியாகவே சொல்லிவிட்டாள். நான் பதட்டப் படாமல் அவளிடம் செல்போனிலிருந்த எனது குழந்தையின் படத்தைக் காட்டிவிட்டு கொஞ்சம் தத்துவம் பேசினேன். தேம்பி அழுதாள். ரொம்பப் பாவமாக இருந்தது. நான் மிகப் பெரிய தவறு செய்ததைப் போல குற்ற உணர்ச்சி வந்தது. இரண்டு முறை பேசி இருக்கிறேன், இரண்டு முறையும் நான் கவிதைகளைப் பற்றியும், அவளது கல்லூரியைப் பற்றியும் மட்டுமே பேசினேன், வேறெதுவுமில்லை. அது கூடத் தவறுதானோ, அப்பொழுதே என் குடும்பத்தைப் பற்றி வலியச் சொல்லி இருக்க வேண்டுமோ என்று கூட நினைத்தேன். அந்தக் கடிதத்தில் நல்ல ஒரு கவிதை இருந்தது. இதுமாதிரியான கடிதங்களைப் பத்திரப்படுத்துவேன் ஏனோ இந்த முறை அவளிடமே கொடுத்து விட்டேன்.


அவள் அழுததற்கும், புலம்பியதற்கும் நான் ரொம்ப பயந்தேன். அடுத்த முறை அவளை நான் பார்க்கவே இல்லை. ஒரே முறை அழைத்து நன்றாக இருக்கிறீர்களா என்று கேட்டுவிட்டு வைத்துவிட்டாள். அதன்பிறகு இப்போதுதான் பார்க்கிறேன். நான் இல்லை என்றால், உலகமே இல்லை என்பது மாதிரிப் பேசியவள் இப்போது முதல் வார்த்தையிலேயே அண்ணா என்று அழைத்ததும் எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. இன்னும் சிரிப்பாக வருகிறது.

ஒன்றும் பெரிய விஷயமெல்லாம் இல்லை என்றாலும், எனக்கென்னவோ சிரிப்பாக வருகிறது.

நாகராஜ் எவ்வளவு பெரிய காதலன், ஏனோ அவனது நினைவு வருகிறது. அப்போது ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறோம், அடிக்கடி என் வீட்டுக்கு வருவான். அப்போது என் வீட்டில் தோழியின் பெயர் எழுதிய வாழ்த்து அட்டையைப் பார்த்துவிட்டான். அவள் என்னோடு ஏழாம் வகுப்பிலிருந்து படிக்கிறாள், எனக்கு நெருக்கமான தோழி. இவன் என்னோடு ஒன்பதாம் வகுப்பில் இணைந்து நெருக்கமானவன். அந்த அட்டையை நான் தர மறுத்தபோதும் ஆசை ஆசையாகக்கேட்டு வாங்கி வைத்துக் கொண்டான். உருகி உருகி இரண்டு வருடங்கள் அவளைக் காதலிப்பதாகக் கூறினான். அவளுக்கு பாசி, பொட்டு என நிறைய வாங்கிக் கொண்டு வந்து தருவான். அவளும் மறுப்பே சொல்லாமல் " தாங்க்யூ பாய்ஸ்" என்று சொல்லி வாங்கி வைத்துக் கொள்வாள். பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் கடைசி நாளில் எல்லோரும் பேசிக் கொண்டதோடு சரி, அவள் கிளம்பி விட்டாள். இரண்டொருமுறை இவன் அவளைப் பார்க்கப் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருப்பான் அதன் பின் அவ்வளவுதான். கல்லூரியில் படிக்கும்போது ஒருத்தியைக் காதலித்ததாகவும் ஏமாற்றி விட்டதாகவும் புலம்பியிருக்கிறான் பேருந்தில் சந்தித்த ஒரு மாலையில். பின்பும் வேலை கிடைக்கும் முன்னரே அவனது உறவுக்காரப் பெண்ணைக் காதலித்து வீட்டை விட்டு ஓடிப் போய்த் திருமணம் செய்து கொண்டான், ஒரு குழந்தை. வீடு சமாதானமாகி, மனைவியுடன் பிரச்சினையில் பிரிந்திருந்து சமாதானமாகி நல்ல வேலை கிடைத்து சில நாட்களில் பெருவிபத்தொன்றில் பறிபோய்விட்டான்.

கிரியும் இதே வகைதான், பத்தாம் வகுப்பில் எனக்கு ராக்கி கட்டிய தோழியை அவன் காதலித்துக் கொண்டிருந்தான், நண்பா என்று அழுத்தமாகக் அழைத்துக் கொண்டிருந்த நல்ல நண்பன், அதன் பின்பு மச்சான் என்று என்னை அழைக்கத் துவங்கியிருந்தது கொஞ்சம் அசெளகரியமாகவே இருந்தது. அவன், காம்பஸில் கையில் குத்தியே அவளது பெயரை ரத்தம் சொட்டச் சொட்ட ஒருமுறை எழுதி வைத்திருந்தான். இப்போதும் அவளை அவளது கணவனோடு அவ்வப்போது பார்க்கிறேன், பத்தாவதுக்குப் பின் கிரியைத்தான் பார்க்கவே இல்லை ஒருமுறை கூட. இப்போது ஐஸ்கிரீம் பார்லரும் மளிகைக் கடையும் வைத்திருக்கும் குடும்பஸ்தன் என்றும் இப்போதெல்லாம் கவிதைகள் எழுதுவதில்லை என்றும் கேள்விப்பட்டேன்.

கலாவைப் பற்றிச் சொல்ல வேண்டும், நான் ஏழாம் வகுப்பில் என்ன சொன்னாலும் கைதட்டுவாள், பேச்சுப் போட்டியில் பரிசு வாங்கும் போது கை குலுக்கி ( இது எனக்கு ஆச்சர்யம் அப்போது ) வாழ்த்துச் சொல்லுவாள். நான் தவறுதலாக வருகைப் பதிவேட்டில் சதீஸிற்கு ப்ரசன்ட் போட்டதற்கு ஊழல் செய்து விட்டதாகச் சொல்லி ரெப்ரசன்டேடிவ் பதவியைப் பறிக்க ஆசிரியர் திட்டியபோது , பூபாலன் அப்படிச் செய்ய மாட்டான் சார் என்று முதல் எதிர்க்குரல் கொடுத்தவள்.

பள்ளியில் ஆண்டுவிழா. நான் ஒரு நாடகத்தில் நடிக்க மீசையெல்லாம் வரைந்து மேடைக்குப் பின் நின்று கொண்டிருந்தேன். அப்போது அருகில் வந்து தன் கையைக் காட்டினாள், எனது பெயரைப் பச்சை குத்தியிருப்பதாக. அழுதுவிட்டேன் நிஜமாலுமே. ஏன் இப்படிச் செய்த உங்க அப்பாக்குத் தெரிஞ்சா எங்க அப்பாகிட்டச் சொல்லி பிரச்சினை ஆயிடும் என்று சொன்னேன். அவள் எதோ சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள். நான் பயந்து பயந்து நாடகத்தில் நடித்து விட்டு வீடு வந்தேன். இரவெல்லாம் அவளுடைய அப்பா பிரம்பால் என்னை அடிப்பது போலவே கனவு. இரண்டு நாட்கள் விடுமுறை. திங்கட்கிழமை பயந்து கொண்டே பள்ளிக்குப் போகிறேன். வழக்கம் போலவே அவள் வருகிறாள், மிகச் சாதாரணமாகப் பேசினாள். கையைப் பார்க்கிறேன் வழக்கம் போலவே வெள்ளையாய் இருக்கிறது. பச்சை எங்கே என்று கேட்டால், பச்சையா, அது கறுப்பு பேனாவில் எழுதினது, ராத்திரி நேரம் உனக்குக் கண்ணு தெரியாதுனு தெரியும் அதான் ஏமாற்றினேன் என்று பழிப்புக் காட்டினாள். அப்போது என் முகத்தில் இருந்தது அழுகையா, சிரிப்பா என்று தெரியவில்லை. அந்தப் பள்ளியிலேயே எட்டாம் வகுப்பு வரைக்கும் டவுசரில் போனது நான் ஒரே ஒருவன் தான். என் கிட்ட போய்....


கல்லூரி நாட்களில் இப்படி ஒரு சம்பவத்துக்கும் ஆட்பட்டது இல்லை, எங்களது வகுப்பில் மூன்றே முன்று பெண்கள். அவர்களுடன் நான் பேசியது இறுதியாண்டில் பிரிவுபசாரவிழாவில் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தபோது தான். கல்லூரியிலிருந்து திரும்பும் போது தினமும் ஒரு தனியார் பேருந்தில் தான் வருவோம், சக மாணவர்களும், சீனியர்களும் முன் இருக்கைகளில் தோழிகளுடன் பேருந்தே வேடிக்கை பார்க்கும் படிப் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் வருவார்கள், நானும் மோகனும் கட்டக் கடைசியில் ஆறு பேர் அமரும் இருக்கை இருக்குமே, அதில் சன்னலோரத்தில் அமர்ந்து கொண்டு கடலை உருண்டை சாப்பிட்டுக் கொண்டு ( இருவருக்கும் ரொம்பப் பிடித்தது; இப்போது வரைக்கும்) பேசிக் கொண்டு வருவோம் அல்லது தூங்கி விடுவோம். பிறகெங்கே...


அண்ணா என்றழைக்கும் தோழிகளும் சகோதரிகளும் நிறையவே இருக்கிறார்கள். தன்னந்தனியாகப் பிறந்த எனக்கு, யாராவது அதுவும் குறிப்பாக பெண்பிள்ளைகள் அண்ணா என்று அழைத்தால் பாசம் பொங்கிக் கொண்டு வந்துவிடும் நிஜமாலுமே. இனியும் அப்படியே என்னை வைத்திரு கடவுளே ...

( இதில் வரும் ஆண் நண்பர்களின் பெயரெல்லாம் உண்மைதான், பெண் தோழியின் பெயர்மட்டுமே கற்பனை.. பெயரையும் சொல்லியா மாட்டிக்கறது..? )


4 கருத்துகள்: