வியாழன், 28 ஆகஸ்ட், 2014

கதை சொல்லி அப்பத்தா சரஸ்வதி (எ) அழகம்மாளுக்கு ...

அன்பு அப்பத்தா,

நான் இங்கு மிகவும் நலமாகவே இருக்கிறேன். நீ நலமாக இருக்கிறாயா என்று கேட்க முடியாத தொலைவுக்கு நீ சென்றிருக்கிறாய் இந்த உலகத்துடனான எல்லாத் தொடர்புகளையும் முற்றிலுமாக அறுத்துக் கொண்டு.

எப்போதும் உன்னை நினைத்துக் கொண்டே இருக்கும் எனக்கு கொஞ்ச நாட்களாக உனது நினைப்பு அதிகமாகியிருக்கிறது.தினமும் இரவு தூங்குவதற்கு கதை சொல்லச் சொல்லிக் கேட்கும் பாரதிப் பாப்பாவுக்கு தினமும் ஒரு கதை சொல்ல வேண்டியிருக்கிறது. அல்லது கதை சொல்லாமல் தப்பிக்கவே ஒரு கதை சொல்ல வேண்டி இருக்கிறது. கதைகளைப் பற்றி நினைக்கும் போதே எனக்கு இயல்பாகவே உனது நினைவு வந்து விடுகிறது.உனது நினைவுகளை, உன்னுடன் நான் பேச விரும்புவதை, உனக்கு நான் சொல்ல விரும்புவதை வேறு யாருடன் சொல்ல.? உனக்கே சொல்லிவிட விருப்பம் இந்தக் கடிதம் மூலமாக.

எனது பால்யத்தை எத்தனை சுகமாக்கி வைத்திருந்தாய் உனது கதைகளால்.. அண்ணமார் கதை (பொன்னர் சங்கர் கதை),நள தமயந்தி கதை,நரி,சிங்கம்,புலிக் கதைகள் என நீ கட்டமைத்துக் கொடுத்த உலகம் அத்தனை சுவாரஸ்யமானது. உனக்கு அருகில் என்னையும், நித்யாவையும் படுக்க வைத்துக் கொண்டு ஒருக்களித்துப் படுத்தவாறு நீ சொல்லும் கதைகளும், நீ கதை சொல்லும் பாவமும், உனது மொழியும் நான் எங்குமே கேட்டிராதது இந்த வயது வரையிலும்.

யோசித்துக் கொண்டேயிருக்கிறேன், இப்போது எத்தனை குழந்தைகளுக்கு
உன்னைப் போல அப்பத்தாக்கள் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.? எத்தனை வியப்பான அந்த உலகம் இப்போது யாருக்குக் கிடைக்கிறது.?
கணிப்பொறியிலும், கார்ட்டூன் மொழியிலும் குழந்தைகள் இப்போதெல்லாம் பெட்டிக்கு முன்னால் கிடக்கிறார்கள் அல்லது புத்தகச் சுமைகளாலும் வீட்டுப் பாட நெருக்கடிகளாலும், போட்டி மனப்பான்மை உலகத்தில் தங்கள் பால்யத்தை, குழந்தைமையை இழந்து கொண்டே யிருக்கிறார்கள்.

உண்மையில், நீ சொல்லி நான் வியந்த அந்தக் கதைகள் தான் எனது தேடலுக்கு விதை விதைத்து நீர் வார்த்தது. உனது கதைகளை நூலகங்களில், புத்தகத்தின் பக்கங்களில் தேடலானேன். விக்ரமாதித்தன் கதைகள்,1001 அரேபிய இரவுக் கதைகள்,பீர்பால்,முல்லா,தெனாலிராமன்,ஈசாப் நீதிக் கதைகள் என எழுத்து வடிவில் கதைகள் எனக்கு அறிமுகமானதுக்கு நீயும் தான் காரணம். அந்தத் தேடலின் தொடர்ச்சி தான் காமிக்ஸ்,வார மாத இதழ்கள் என வளர்ந்து கவிதை வரைக்கும் வந்திருக்கிறது என்றே நினைக்கிறேன்.

மேலும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது முதன் முதலாக நான் மேடையேறிப் பேசியதும், அதற்கு மாவட்டக் கல்வி அலுவலர் பாராட்டியதும் வெறும் நிகழ்வு எனக்கு. ஆனால் அதை நீ எத்தனை முறை என்னைப் பேசச் சொல்லி பேசச் சொல்லிக் கேட்டிருக்கிறாய். பப்பாளி மரத்தின் மேல் நின்று, மாமரத்தின் மேல் அமர்ந்து, என என் அந்தப் பேச்சை உனக்காக எத்தனை முறை நான் பேசியிருக்கிறேன். வீட்டுக்கு யார் சொந்தக்காரர் வந்தாலும் அவர்களிடம் பெருமையாக என்னைப் பேசச்சொல்லிக் காட்டுவாய்.
இதோ அடுத்த மேடையில் எனது பேச்சு உன்னையும் உன் கதைகளையும் பற்றித்தான். நீ எப்படிக் கேட்பாய் அப்பத்தா..?

வேலை,பயணம்,என ஓட்டமாய் ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் பயணத்தில் இளைப்பாறுதலாக இப்போது நீயும் உனது கதைகளும் கிடைத்தால் எத்தனை ஆசுவாசமாய் இருக்கும்.

அப்பா அம்மா உன்னோடு சண்டை போட்டு யாரும் உன்னுடன் பேசாதிருந்த போதும் நீ ஒளித்து எடுத்து வந்து தரும் மாம்பழங்களின் சுவையை இப்போதெல்லாம் எந்த மாம்பழங்களும் தருவதேயில்லை.

நீ எப்போதும் என்னிடம் எதுவும் கேட்டதேயில்லை. நானாக எதாவது வேண்டுமாவெனக் கேட்டாலும் தலையசைப்பாய் வேண்டாமென்று. நானாக எதாவது வாங்கித் தந்தால் மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் கொள்வாய். மாத்திரையாக இருந்தாலும் நானாகத்தான் வாங்கி வரவேண்டும்.

ஆனால் என்னிடம் முதன் முறையாக ஒரு சுவர்க் கடிகாரம் கேட்டாய் பழையது பழுதாகி விட்டது என்று. அடுத்த ஞாயிற்றுக் கிழமை வாங்கி வருவதாகச் சொல்லிச் சென்றேன்.. முதன் முறையாக நீ கேட்டதுதான் கடைசி முறையென்று எனக்கு அப்போது தெரிந்திருந்தால் அப்போதே வாங்கி வந்திருப்பேனே. அடுத்த ஞாயிறு வரைக்கும் காத்திருக்கவேயில்லை நீ. அடுத்த ஞாயிறு உனக்கு வரவேயில்லை.

எனக்காக, இலவசத் தொலைக்காட்சி வாங்கி விட்டு வந்து வீட்டுக்குள் வைத்து விட்டு அப்பாடா என்று வாசலில் அமர்ந்தாயாம்... அப்படியே சாய்ந்தாயாம்... கடைசி நாள் வரைக்கும் திடமாய் அத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருந்த நீ இப்படித்தான் எழுதிக் கொண்டாய் உன் கடைசிப் பக்கத்தையும். நான் கேவிக் கேவி அழுத போது அத்தை சொன்னது நீ தூங்குவது போலவே படுத்திருக்கிறாய் என்று. நீ தூங்கிக் கொண்டுதான் இருக்கிறாயா எழுந்து விட்டால் எத்தனை நன்றாக இருக்கும் என்றே நினைத்தேன் சிறு பிள்ளையாக. உன் கடைசி ஆசையாக நீ கேட்ட சுவர்க் கடிகாரத்தை வாங்கி வரச் சொல்லி மாமா சொல்ல. உன் தலை மாட்டில் வாங்கி வந்து வைத்தேன் நீ முதலும் கடைசியாகக் கேட்ட அப்பொருளை.

அது ஓடிக் கொண்டேயிருந்தது. நீ தான் பார்க்கவேயில்லை உன் காலத்தை அந்தக் கடிகாரத்தில். அந்தக் கடிகாரம்தான் என் பொம்மைகளின் மொழியில் கவிதையானது என்பதும் உனக்குத் தெரியாது.

உன்னையும் உனது கதைகளையும் இந்த மனதில் சுமந்து கொண்டே பயணிக்கிறேன் எனவே எனது பயணத்தில் நீயும் இருக்கிறாய்.

இந்தக் கடிதத்தை இப்போது அந்த மாமரத்தின் மேலேறி நின்று கொண்டு உரக்கப் படித்துக் கொண்டிருக்கிறேன். என்னைப் பேசச்சொல்லி நீ கேட்டது போல. காற்றில் மிதந்து வரும் எனது சொற்களை இங்குதான் காற்றோடு எங்கோ இருக்கும் நீ மொழி பெயர்த்து படித்துக் கொள்வாய் என்ற நம்பிக்கையில்.....

- இரா.பூபாலன்


கடிதங்களால் பேசுவோம் நண்பர்கள் வட்டம் நடத்திய கடிதப் போட்டியில் ஆறுதல் பரிசுக்குத் தேர்வான கடிதம்.

நன்றி : கடிதங்களால் பேசுவோம் நண்பர்கள் வட்டம்
நண்பர் தாய் சுரேஷ்,

கடிதத்தைப் பிரசுரித்த ஆலம்பொழில் - கடித இலக்கிய இதழுக்கும் அதன் ஆசிரியர் வலம்புரி லேனா அவர்களுக்கும்...

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

கவிதைகளால் இணைவோம் நிகழ்வு - 24.08.2014

கவிதைகளால் இணைவோம் நிகழ்வு - 24.08.2014


புதுக்கோட்டையில் வைகறை ஒருங்கிணைத்திருந்த கவிதைகளால் இணைவோம் நிகழ்ச்சிக்குப் புதுக்கோட்டை போயிருந்தோம் நேற்று.
சனிக்கிழமை இரவு பத்தரைக்கு சிங்காநல்லூர் பேருந்து நிலையம் வந்தேன் யாழி, அனாமிகா, சோழநிலா, யோகா அனைவரும் எனக்கு முன்பாக வந்து காத்திருந்தனர். பேருந்தேறிக் கிளம்பியவுடன் ஆரம்பித்த பேச்சு விடிய விடிய பேசிக்கொண்டேயும், அங்கங்கு பேருந்து நின்ற இடங்களில் தேநீர் அருந்திவிட்டும் அந்த இரவைக் கொண்டாடினோம்.

காலை ஐந்தரைக்குப் புதுக்கோட்டை. வைகறை வண்டியில் இரண்டு முறையாக எங்களை அழைத்துச் சென்று அவர் வீட்டில் தங்க வைத்தார் மணிக்கு. விடிய விடியத் தூங்கவில்லை எனவே 9 மணிவரை நன்றாகத் தூங்க வேண்டும்  என நானும் யாழியும் சொல்லிவிட்டுப் படுத்தோம். தூக்கம் வருவதற்குள் தனது மஞ்சள் நிற ஸ்மைலி பந்துடன் வந்து விட்டார் ஜெய்குட்டி.எங்கே தூங்குவது. அவருடன் விளையாட்டு பின்பு அவசரமாகக் குளித்து, ரோஸ்லின் சகோதரியின் சுவையான காலை உணவுடன் திருப்தியாகக் கிளம்பி அரங்கம் வந்தோம்.

பத்து மணியிலிருந்து ஒவ்வொருவராக வரத் துவங்கினர். நண்பர்கள் பிராங்க்ளின் குமார், நந்தன் ஸ்ரீதரன், நாணற்காடன், சுரேஷ் மான்யா,அனைவரையும் பார்க்கிறேன். நந்தன் பிராங்க்ளினின் காமிராவுக்கு செமத்தியாக வேலை வைத்தார். நிறைய புகைப்படங்கள் அதில் பிரேம் செட்செய்வது முதல் நிறைய சொல்லிச் சொல்லி தன்னையும் நண்பர்களையும் புகைப்படமெடுக்கச் செய்தார்.

நிகழ்வைத் துவங்கிவிடலாம் என வைகறை சொல்ல, கூட்டம் வந்துவிட்டதைக் கவனித்து விட்ட நாங்கள் எங்கள் இருக்கைகளிலமர்ந்து கொள்ள, வைகறை நிகழ்ச்சி பற்றி அறிமுக உரையோடு வரவேற்புரையாற்றினார்.

தொடர்ந்து கவிதை வாசிக்கும் நிகழ்வை என்னை ஒருங்கிணைக்கச் சொன்னார். நான் ஒருங்கிணைக்க, முப்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் என்னுடையதும் சேர்த்து வாசிக்கப்பட்டன.

கனிமொழி ஜி, கந்தகப்பூக்கள் பூபதி, செ.சுவாதி, அருணா சுந்தரராசன்,சிமிழி அடங்காதவன், நாகரீகக் கோமாளி, தேவதா தமிழ்,முகேஷ், தமிழ்வரதன் அனைவரையும் முதன் முறையாகப் பார்க்கிறேன். அவர்களின் கவிதை வாசிப்பையும்.

இது ஒரு அற்புத அனுபவமாகவே பட்டது.

ஒவ்வொரு கவிதைக்கும் சிலர் விமர்சனம் சொன்னார்கள், பெரும்பாலும் அவை வழமையான வார்த்தைகளாக இருக்க. ஒரு குறிப்பிட்ட கவிதையில் ஒரு குறிப்பிட்ட இடத்தோடு கவிதை முடிந்து விட்டது என்று நுணுக்கமாக கவனித்துச் சொன்ன நந்தன் மகிழ்ச்சியுறச் செய்தார். நான் கவிதை வாசிக்கும் போது மட்டும் அவர் புகைக்கவோ, ஜெய்குட்டியுடன் விளையாடவோ வெளியில் போகாமல் இருந்திருக்கலாம். கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி ஒவ்வொரு கவிதைக்கும் கருத்துச் சொன்னது அவரது கூட்டங்களில் அவரது அனுபவத்தைக் காட்டியது.

சுமன் என்றொரு பாடகர், தனக்கு பேச வராது என்று திக்கித் திக்கிப் பேசினார் ஆனால் ஒரு பாடலை அவர் பாடியபோது எங்குமே பிசிர் தட்டவோ திக்கவோ இல்லாமல் அழகான நீரோட்டமாக அமைந்தது பேராச்சர்யம். அவர் குரல் மயக்கி விட்டது அனைவரையும். இந்தக் குரலுக்குச் சற்று முன்புதான் நாணற்காடனைக் கவிதை வாசிக்க அழைத்த போது, கவிதைக்கு பதிலாக உருகி உருகி ஒரு பாடலைப் பாடி ஆச்சர்யமளித்தவர், சுமனின் பாடலைக் கேட்டுவிட்டு நீங்கள் எனக்கு முன் பாடியிருந்தால் நான் பாடியே இருக்க மாட்டேன் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டார்.

இலக்கியக் கூட்டங்களின் நடைமுறைச் சிக்கல்களும் நாமறிந்ததே. பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதால் இதில் உள்ள சாத்தியங்களையும், சங்கடங்களையும் ஓரளவு புரிந்து வைத்திருக்கிறேன்.


முகநூலில் நிறைய நல்ல எழுத்தாளர்கள், கவிஞர்கள் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களில் பலர் தங்கள் ஊரிலோ அல்லது பக்கத்திலோ நடக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கு ஒருமுறை கூடப் போவதில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. ஒருமாதம் வேலை அல்லது சூழ்நிலை காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு முறையுமா?

நிகழ்வின் பதிவுகளைப்பார்த்து விட்டு அடடா நேற்று நிகழ்ச்சி நடந்ததா. பக்கத்திலேயே இருக்கிறேன் தகவலில்லையா என்று பதறுபவர்களும், வரணும் வரணும் னு நினைப்பேன் ஆனா வர முடியல என வருந்துபவர்களும், எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள். இன்னும் நிறையப் பேர் இருக்கிறார்கள். நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே அலைபேசியில் அழைத்து பக்கத்து வீட்டில் கறிவிருந்து வர முடியவில்லை என்பவர்கள், நிகழ்சியின் நடுவில் வந்து அவசர அவசரமாக நோட்டில் வருகைப் பதிவைப் பதிந்து விட்டு உடனே கிளம்பிவிடுகிற பெருவியாதிக்காரர்கள், நிகழ்ச்சிக்கே வராமல் நிகழ்ச்சியைப் பற்றியும் நிகழ்ச்சியில் பேசியதைப் பற்றியும் விமர்சிப்பவர்கள், ஒரு துரும்பைக் கூட நகர்த்த உதவாமல் குறை கண்டுபிடித்துச் சொல்பவர்கள், என்ன உதவினாலும் கேளுங்க என்று சொல்லிவிட்டு காணாமலே போய்விடுபவர்கள், மைக் கையில் கிடைத்தவுடன் சுற்றம் , சூழல் அனைத்தையும் மறந்து விட்டு, மைக்கோடு சேர்த்து நேர நிர்வாகத்தைத் தின்று விடும் படியாகப் பேசிக் கொண்டே இருப்பவர்கள்...இப்படி எத்தனை விதங்களில் மனிதர்கள் இலக்கியக் கூட்டங்களில். யாரையும் குறை சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் ஒவ்வொன்றும் நமக்கு ஒவ்வொரு அனுபவம்.


உள்ளூர்க் கவிஞர்கள் நிறையப் பேரை எதிர்பார்த்திருந்த வைகறை சற்று சோர்வாகவே இருந்தார். கவிதைகள் குறித்து ரத்தினச் சுருக்கமாக நந்தன் பேசிய பேச்சை அனைவரும் ரசித்தனர். நன்றியுரை சோலச்சி சொல்ல நிகழ்வு முடிந்தது. பின்பு கிளிக் கிளிக் சப்தங்கள் முடிய மேலும் அரை மணி நேரம் ஆனது.

பழனியப்பா மெஸ்ஸில் நல்ல மதிய உணவை முடித்துக் கொண்டு கிளம்பினோம். வீடு வரும் போது நள்ளிரவு 12 நல்லவேளை திருச்சி வரை கனிமொழி ஜி தனது காரில் டிராப் செய்தார்கள். இல்லை எனில் விடிந்திருக்கும்...


நேற்றைய நாளை அர்த்தமாக்கிய வைகறை, யாழி, நந்தன், கனிமொழி ஜி, சோ.ரவீந்திரன் உட்பட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி....


புதன், 20 ஆகஸ்ட், 2014

அன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது - கவிதைத் தொகுப்பு வாசிப்பனுபவம்

அன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது -  கவிதைத் தொகுப்பை முன்வைத்து.... -இரா.பூபாலன்
               

கவிதைகளின் ஊற்றுக்கண்ணை அடைத்து விட இதுவரையிலும் எந்த சக்திக்கும் திறன் இருந்திருக்கவில்லைநல்ல கவிதைகள் காலம் கடந்தும் வாழும்கவிஞனின் காலம் கடந்தும்.

அன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது " - கவித்துவமான இந்தத் தலைப்பைப் பார்த்ததும் நேரடியாக நான் கவிதைகளை வாசித்திருக்கலாம்அந்த முன்னுரையையை வாசித்தது கவிதைத் தொகுப்பை அணுகுவதற்கு ஏதுவாக அமையவில்லைஇந்த கவிதைகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் எழில் விபத்தொன்றில் பறிபோய்விட்டார் என்ற முன்னறிவிப்பை வாசித்து விட்டு கவிதைகளை வாசிக்கும்போது இழப்பின் வலிகள் தொண்டைக்குள் அமர்ந்து கொண்டு கவிதைகளை உட்செலுத்த மறுத்து விடுகின்றன.

முதல் இரன்டு நாட்கள் இப்படியே கழிய கொஞ்சம் இடைவெளிவிட்டு கவிதைப் பக்கங்களிலிருந்து வாசிக்கத்துவங்குகிறேன் மஞ்சள் வெயிலை.

எல்லா விதைகளையும் நாம் தெரிந்தே தான் விதைக்கிறோம்மகசூல் கொஞ்சம் அதிகம் என்றால் நாம் தயங்குவதே இல்லை பூச்செடிகளைக் களைந்துவிட்டு விருப்பமான காய்களையோ கீரையையோ பயிரிட.

நமது சுயலாப நோக்கத்தை நறுக்கெனக் கேட்கிறார் கவிஞர்
                                        …....................
ஆனால் அம்மா,
என்ன நிச்சயம்
மென்னுணர்வுகளை
நசுக்கியுருளும் காலச்சூழலில்
ஓர் நாள்
பூச்செடிகளைக் களைந்தெரிந்து
நீயும்
கீரைகளை விதையிட மாட்டாயென்பது ..?

சர்வ நிச்சயமாக இது காலச்சூழலின் மாற்றத்தில் மனிதம் இறுகிக் கொண்டிருக்கிற மக்களுக்கான ஒரு கவிஞனின் குரல் தான்இந்தக் குரல் தான் காலங்களனைத்திலும் மனிதர்களின் பிறழ்வுகளுக்குப் பின்னால் நின்று கூவிக் கொண்டேயிருக்கிறது.

காதலைக் கொண்டாடியிருக்கும் கவிதைகளிலும் அன்பு நிறைந்து கிடக்கின்றது.

உன் அன்பின் சிறகு
விரியாத வானத்தில்
நான் இறந்த நட்சத்திரமாகின்றேன்


இந்தக் கவிதை ஏதோவொன்றை அடிமனதில் கிளறிவிட்டு விட்டுப் போய்விடுகிறதுகண்சிமிட்ட இயலாமல் எரிபொருள் தீர்ந்த நட்சத்திரமாக ஆகிப்போனவனைக் கற்பனை செய்கிறேன்மீண்டும் அவ்வானத்தில் சிறகுகள் விரியுமா ?

நதியின் மீது தெரியும் நிலவின் பிம்பத்தை எல்லாக் கவிஞர்களுமே கவிதையாக்கிவிட்டிருக்கிறார்கள்தனது மொழியில் இவரது கவிதை அழகியலுடன் தன்னைத் தனித்து விருப்பக்கிறியிட வைக்கிறது

ஒருபோதும்
வரைந்து முடித்திடமுடியாத
உன் சித்திரத்தை
அலையும் நதியின் மீது
காலாதி காலமாய்
தீட்டிக் கொண்டிருக்கிறது நிலா.

நெளியும் நிலவின் பிம்பமெனக் காதலியின் பிம்பமும் கண்களுக்குள் சில விநாடிகள் கொண்டு வந்து சேர்க்கும் இந்தக் கவிதை காட்சிப் படிமமாக மனதினுள் நிறைகிறது.

சிலுவையின்
நெடுக்குச்சட்டம் நான்
குறுக்குச்சட்டம் நீ
கருணையின்
எந்தக் கரங்கள் அறைந்தன
இந்த வாழ்வை நம்மீது.

துன்பத்தில் உழலும் வாழ்வையும் ஆசுவாசமாக்கி விடுகிறது நமது இணைப்பின் கருணை என்பதான இந்தக் கவிதையும் சிலுவையும் புராதானத்து எச்சங்கள்.

ஒரு பறவை
நதியைக் கடப்பது போல
ஒரு நிலவு
இரவைக் கடப்பது போல
ஒரு மரம்
பருவங்களைக் கடப்பது போல
அல்லாமல்
ஒரு பள்ளிச் சிறுவன்
சாலையைக் கடப்பது போல்
இருக்கிறது
இவ்வாழ்வை
நாம் கடப்பது.

உண்மைதான்பறவையைப்போலநிலவைப்போலமரத்தைப்போல இயற்கையோடு இயல்பாக வாழப் பழகியிருக்கவில்லை இவ்வாழ்வை.ஆகவே இதைக் கடப்பது பயம் நிறைந்ததாகவும் யாருடைய கையையாவது பிடித்துக் கொண்டும் கடப்பதாக உள்ளது.

எழிலின் கவிதைகள் இயற்கையின் அழகைகாதலின் அழகை,வாழ்வின் அழகை அகத்தே கொண்டு வாசிப்பின் போது ஒரு புத்துணர்ச்சியைத் தருகின்றன.

இரை தேடி அலைந்த
பறவையின்
சோர்ந்த சிறகுகள் மீதமர்ந்து
கூடு திரும்புகிறது
மாலை நேரத்து வெயில்

இந்தக் கவிதை சிறு வயதில் வயல் வேலைக் களைப்புடன் மாலை வீடு வரும் அம்மாவின் சும்மாட்டுத்துணியில் இருந்த மஞ்சள் மாலை வெயிலை நினைவுக்குக் கொண்டு வருகிறது.

அருவி என்ற குழந்தையின் இழப்பை அக்டோபர் மாதத்தின் மழையிரவு கவிதையில் வலிமிகுந்த சொற்களால் எழுதியிருக்கும் இவர்,அருவியின் இழப்புக்குப் பின்னரான கவிதையொன்றில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

உனது மொழிமட்டுமே தெரிந்த
இந்த பொம்மைகளிடம்
யார்
எப்படிச் சொல்லிப் புரியவைப்பது
என்றென்றைக்குமாய்
நீ
திரும்பப் போவதில்லை யென்பதை...


இந்தக் கவிதை வாசித்தவுடன் தனித்து நிராதரவாக விடப்பட்ட பொம்மையாக ஒரு கணம் சலனமற்றுக் கெட்டிப்பட்டு விடுகிறது மனது.


எழிலின் கவிதைகளில் கையாடப்பட்டிருக்கும் சொல்லாடல்களும் கவிதை நேர்த்தியும் நம்மை ஆச்சர்யமூட்டுகின்றனஇவரின் கவிதைகளின் பிரத்யேகத்தன்மை இவை எழுதப்பட்ட காலத்திலிருந்து பதினைந்து வருடங்களின் பின்பு படிக்கும் நமக்கும் இவை புதிய வாசிப்பனுபங்களைத் தருவதுதான்.

யார் யார்க்கோ
என்னென்னவோ நிகழ்ந்துவிட்ட
அதே சாலையில்தான் செல்கிறேன்
எப்போதும்
எனக்கேதும் நிகழ்ந்து விடாதென்ற
குருட்டுத்தனத்துடன்

இந்தக்கவிதையை வாசித்து முடித்த கணம் கனம் கூடிப்போகிறது மனதில்யார் யார்க்கோ என்னென்னவோ ஆகிப்போன சாலைப்பயணத்தில் தான் அந்த யார் யாரோவென்ற பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்ட கவிஞரின் புகைப்படத்தை முன்பக்கம் ஒருமுறை திருப்பிப் பார்த்துக் கொள்கிறேன்.

கவிஞர் எழில் எங்கும் போய்விடவில்லைஇந்தக் கவிதைகளாக,அதன் அன்பும் ஆழமுமான சொற்களாக நம்மிடையே தான் உலவிக்கொண்டிருக்கிறார்அவருடன் கைகுலுக்கி வாழ்த்திக் கொள்கிறேன் அரூபமாக இத்தொகுப்பை முன்னிறுத்திகவிஞர் எழில் அவர்களின் சகோதரர் ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் எழிலின் கவிதைகளைத் தொகுப்பாக்கி நம் கைகளில் தவழ விட்டமைக்காக.

நன்றி.

விலை உரூ 100/-

வெளியீடு வம்ஸி புக்ஸ்,
19 , டி.எம்.சாரோன்,
திருவண்ணாமலை - 606 601
தொடர்புக்கு : +91 9444867023

ஆசிரியர் .எழில்

நன்றி :
நந்தலாலா இணைய இதழ்
http://www.nanthalaalaa.com/2014/08/17.html

நந்தலாலா இணைய இதழ் 19ல் எனது கவிதை

அந்த மழையில்...



அந்த மழைநாளில்
மிகப்பெரிய ஆச்சர்யமொன்று
நடந்தது.

மொட்டை மாடியில்
காய்ந்த துணிகளை
அவசர அவசரமாக
அள்ளியெடுக்க விரைந்தபோது
அவளைப் பார்க்க நேர்ந்தது.

எதிர் வீட்டின் மொட்டை
மாடியில் இரு கைகளையும்
அகல விரித்தபடி
வானம் பார்த்து 
நின்றிருந்தாள்.

அச்சிறுமியை இதற்கு
முன்னும் பார்த்திருக்கிறேன்
இன்றவள் புதிதாய்த் தெரிந்தாள்.

விரித்த இரு கைகளாலும்
ஏந்தி ஏந்தி எறிந்து
கொண்டிருந்தாள் மழைத்துளிகளை.

அவ்வப்போது ஒரு
அரை வட்டமடித்து
மழையின் அனைத்துத்
துளிகளையும்
மேனியெங்கும் வாங்கிக்
குதூகலித்தாள்.

இப்பெரு நகரத்தில்
இது பேராச்சர்யம் எனக்கு...

ஒரு கணம்
அவளாகியிருந்தேன் நான்.
என் பதினைந்து வருடங்களைப்
பின் தள்ளிவிட்டு.

மழை இரைந்துகொண்டே
இருந்தது.
குக்கர் விசில் சத்தம்
என்னைப் பதட்டப்படுத்த
அவசரமாகப் படியிறங்கினேன்.

அவளின் சிறு குழந்தைமையை
எக்கணத்திலும் நிராகரித்துவிடாத
புகுந்தவீடொன்று அமைய வேண்டுமென்ற
அவளுக்கான பிரார்த்தனைகளோடு...
- இரா.பூபாலன்,
சூலக்கல்.
98422 75662
இணைய இதழ் காண :