ஞாயிறு, 31 மார்ச், 2024

குமரகுரு கல்லூரியில் வாசகர் வட்டத் தொடக்கவிழா மற்றும் நூல்வெளியீட்டு விழா

கோவை - குமரகுரு கல்லூரியில் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டது. தொடக்க விழாவுக்கு நானும் கவிஞர் சுடர்விழியும் சிறப்பு அழைப்பாளர்கள். நான் கற்றனைத்தூறும் அறிவு எனும் தலைப்பிலும், கவிஞர் சுடர்விழி வாசிப்பை நேசிப்போம் எனும் தலைப்பிலும் உரையாற்றினோம்.


எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. நிகழ்வில் அவர் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வின் முத்தாய்ப்பாக இரண்டாமாண்டு காட்சித் தொடர்பியல் துறை மாணவர் மதி புகழேந்தியின் "வண்ணங்கள் வழியும் முள்நுனி" கவிதை நூல் வெளியிடப்பட்டது. நான் வெளியிட்டு உரையாற்றினேன்...


முன்பாக, நா.மகாலிங்கம் தமிழாய்வு மைய வாசகர்வட்டத்தை தொடங்க பெரும் முனைப்பும் சிரத்தையும் எடுத்த நண்பர், வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.சூர்யபிரகாஷ் புத்தகம் வெளியிடப்போவதாக சொல்லி இருந்தார். மாணவரின் புத்தகம் தானே கவிதைகள் வழக்கம் போலத்தான் இருக்கும் என எண்ணினேன். அடுத்த நாள் புத்தகம் வரத் தாமதமாவதால் பி.டி.எப் கோப்பாக அனுப்பியிருந்தார். வாசித்துப்பார்த்தேன். பல கவிதைகள் நம்பிக்கையளித்தன. பல கவிதைகள் பிடித்தமானதாக இருந்தன. 

கல்லூரி மாணவரின் கவிதைகள் போலல்லாது, ஒரு முதிர்ச்சி தெரிந்தது. வாசிப்பின் ருசியறிந்தவர் என்று புரிந்தது.


நிகழ்வன்று காலையில் முகநூலில் கவிஞர் சீரன் தாபா அவ்வழைப்பிதழைப் பகிர்ந்திருந்தார். தனது நண்பனுடைய மகனின் கவிதை நூல் வெளியாகிறது என. உடனே அவரை அழைக்கச் சொல்லி பேசினேன். பின்பு தான் தெரிந்தது அவர் திண்டுக்கல் கவிஞர் வேல்முருகன் அவர்களுடைய மகன் என்பது.


கவிஞர் வேல்முருகன் உதிரும் நிழல், எழுத்துகளால் அணைத்துக்கொள்கிறேன் உன்னை என இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். அவரது மகன் கல்லூரிக் காலத்திலேயே தொகுப்பு வெளியிட்டிருப்பது சிறப்பிலும் சிறப்பு,


இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று, தொகுப்பை கல்லூரியின் தமிழாய்வு மையத்தின் பொருட்செலவிலேயே சிறப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். இதைக் கேட்டவுடன் மிகுந்த நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்தேன். இதை முன்னெடுத்த சூர்யபிரகாஷ் அவர்களுக்கும், கல்லூரி நிர்வாகத்துக்கும் எனது மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துகளும். இந்த வாய்ப்புக்காக ஏராளமானோர் காத்திருக்கிறார்கள். புத்தகம் போட பணமும், உதவியுமின்றி நிறையப்பேர் காணாமல் போயிருக்கிறார்கள். இந்த வயிதில் மதி புகழேந்திக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு உண்மையில் மகத்தானது. அவர் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு இன்னும் இன்னும் உயரவேண்டும். மதிக்கு நவீன கவிதைகளையும், நவீன கவிஞர்களையும் அறிமுகம் செய்தது பேராசிரியர் சுடலைமணி என்று மதி தனது ஏற்புரையில் குறிப்பிட்டார். அவருக்கு என் வணக்கங்கள். ஒரு நல்ல ஆசிரியரால் நிச்சயமாக மகத்தான மாற்றங்களை நிகழ்த்த முடியும்.

மதி புகழேந்தியின் சில கவிதைகள் உங்கள் வாசிப்புக்கு :


@
வரிக்குதிரை
வரிகளின் மேல்
சாலை கடக்கும்
பொழுதெல்லாம்
பியானோ வாசிக்கும்
அவள் கால்கள்



@
முட்டை வடிவ
நிலவை
அடைகாக்கத்
துடிக்கின்றன
மேகங்கள்
பிடித்திருக்கிறது
இந்த
மொட்டை மாடித்தூக்கம்



@
துறவை நோக்கி
நடக்கிறேன்
குறையவேயில்லை
தூரம்



@

எவ்வளவு தூரம்
நீந்தி வந்திருக்கும்
இந்த அலை ?



@

யாரும் அழைக்கவில்லை
என்னை
நானாகத்தான் சென்றேன்
யாரும் துரத்தவில்லை
என்னை
நானாகத்தான் வந்தேன்



@

யாரோ ஒருவர்
யாருக்கும் தெரியாமல்
அழுவதற்குத் தான்
குளியலறையில்
இத்தனை குழாய்கள்
தண்ணீருடன்
காத்திருக்கின்றன


மதி புகழேந்தியைத் தொடர்புகொள்ள : 73055 58578









1 கருத்து:

  1. மிகவும் நன்றாக இருக்கிறது.கடைசி கவிதை மிக அற்புதம்.மேலும் தொடர்ந்து எழுதுங்கள்

    பதிலளிநீக்கு